தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை
32.ஈழத்துச் சிறுகதைகளில் மனித உறவுகள்
முனைவர் இரா. விஜயராணி
இலங்கையை ஆள்வது இனநாயகமா? அல்லது ஜனநாயகமா? இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் சொந்த நாட்டிலேயே தங்கள் உடமைகளையும், உரிமைகளையும் இழந்து அகதிகளாக வாழும் அவல நிலையை ஈழத்துச் சிறுகதைகளில் காணமுடிகிறது. இங்கு ஞானம் இதழ் 2014ல் ஆறு சிறுகதைகள் மட்டும் ஆய்வு எல்லையாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
உறவினை இழந்து தவிக்கும் உள்ளங்களின் ரணங்கள் பல கதைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
1. குழந்தைகளை இழந்து தவிக்கும் தந்தை
2. இளைஞனின் (உறவு) தேடல் உணர்வு
3. பல திறப்பட்ட பெண்கள் நிலை
4. நல்லிணக்க உறவு
ஆகிய நான்கு கோணங்களில் இக்கட்டுரை அமைந்துள்ளது.
குழந்தைகளை இழந்து தவிக்கும் தந்தை
நண்பனைச் சந்தித்து விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்று இன்று வரை எந்தத் தகவலும் இல்லாமல் திரும்பி வராத நிலையில் ஒரு மகன்... ... ... தன் பாதையைத் தானே தேர்ந்தெடுத்துக் கொண்டு எந்தத் திசையில் எந்தக் காட்டுக்குள் இருக்கின்றானோ என்ற நிலையில் ஒரு மகன்... ஒரு தந்தையின் தவிப்போடு இவர்களைப் பற்றிய தகவல்களைத் தேடும் சவரி முத்துக் கிழவர், வருடக்கணக்கில் தேடியும், அறுந்த தொடர்புகள் மீண்டும் இணையவேயில்லை. திடமாய் இருந்த கிழவரின் நம்பிக்கை பொடிப்பொடியாய் நொறுங்குகிறது. கிழவரைத் தேற்ற ஒரு குருவிக் கதை குறியீடாக விரிகிறது.
கடலோர மரத்தின் கூட்டிலிருந்து குருவி முட்டைகள் எழும்பி அலைகளால் வீழ்கின்றன. கடலை இறைத்து முட்டைகளைக் கண்டுபிடிக்க அக்குருவிகள் இரவு பகலாய்த் தண்ணீரைக் கொத்திக்கொத்தி மறுபக்கம் சேர்க்கின்றன. பறவைகளின் முயற்சியை மனக்கண்ணில் உணர்ந்த ஞானி ஒருவர் தன் சக்தியால் முட்டைகளை எடுத்துக் கடலோர மண்ணில் பறவைகளின் பார்வைக்குப் படுகிற மாதிரி வைக்கிறார். தங்கள் முயற்சிக்குப் பலன் கிட்டியதாய் எண்ணிப் பறவைகளும் மகிழ்ச்சியால் எடுத்துச் செல்கின்றன. இப்படித்தான் மகன்களைத் தேடும் பாச முயற்சியும், மகன்களைத் தேடும் இலட்சிய முயற்சியும் வெல்லும் என்ற நம்பிக்கையை கடற்குருவிகள் என்று தலைப்பு வழியாகவே உணர்த்தி விடுகிறார் ஆசிரியர்.
இளைஞனின் தேடல் உணர்வு
‘புழுதி’ என்ற கதையில் மரண வாயிலில் போராடும் ஓர் இளைஞனின் கடைசி நிமிடங்களின் மன உணர்வுகளை அதர்ம மகாராஜன் வெளிப்படுத்தியுள்ளார். “இன்றைக்கு ஊர் நிலவரம் அவ்வளவு நல்லாயில்லை சற்று பொறுத்துப் போ" என்ற அம்மாவின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் தோட்டத்திற்கு அவசியமான பசளையை வாங்க அவசரமாகப் புறப்படுகிறான். வழியில் இராணுவத் துப்பாக்கியிலிருந்து வந்த தோட்டா இவன் விலாவில் பாய்ந்து புழுதியில் சரிகிறான். உயிர்போகும் தருவாயிலும் அந்த இளைஞன் தாயைக் காக்கவேண்டிய பொறுப்புகளை, தங்கைகளைக் கட்டிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு என்று தன் பொறுப்புகளை நினைத்துப் பார்க்கிறான். தன்னை யாராவது காப்பாற்ற மாட்டார்களா? என ஏங்குகிறான். ஒரு குடும்பத்தைக் காக்க வேண்டும் என்பதற்காகத் தான் காப்பாற்றப்பட வேண்டும் என நினைக்கும் அந்த இளைஞனின் கடமையுணர்வு கதையில் வெளிப்படுகிறது.
பலதரப்பட்ட பெண்கள் நிலை
இனக்கலவரத்தில் கோரப்பிடிக்குள் சிக்கித் தவிக்கும் சூழலில் இலங்கைத் தமிழர்கள் படும் அவஸ்தைகள் வார்த்தையில் அடங்காது. குடும்ப அமைப்பிற்குள் பலவகையான பெண்களின் வாழ்க்கைப் போக்கு இங்கு சுட்டப்படுகின்றன.
புதுமைப் பெண்
மீண்டும் நளாயினி என்ற கதையில் புரட்சிகர மனைவியை ராணிசீதரன் படைத்துக் காட்டியுள்ளார். கதைத் தலைவி நளாயினி தன் கணவன் தன் தோழி ரம்யாவின் மீது மையல் கொண்டதை அறிந்து, அவன் எண்ணத்திற்குக் குறுக்கே நிற்காமல் அவனுக்கு ஆதரவாக இருப்பதாய்ச் செயல்பட்டு அவனுக்குப் பாடம் புகட்டுவதே இக்கதை “உங்களுக்குப் பிடிச்சது, பிடிக்காதது, விரும்பியது, விரும்பாதது, எல்லாம் எனக்குத் தெரியும். உங்களுக்கு ரம்யாவை மிகவும் பிடிச்சிருக்கு என்பதும் எனக்குத் தெரியும். அதனால் உங்களுக்கு விருப்பமான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருவது நல்லது என நினைச்சேன்" என்று கூறுகிறான். புராணகாலத்து நளாயினி புருஷனை அவன் விரும்பும் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். இந்த நளாயினி புருஷன் விரும்பும் ரம்யாவை அழைத்து வந்து தன் புருஷனிடம் பரிசாகத் தருகிறார் “நாளைக்குத் தன் மனைவி வேற்றொருவருடன் வந்து எனக்கு இவரை மிகவும் பிடிச்சிருக்கு என்று சொன்னால் அதைத் தாங்கும் மனப்பக்குவம் தனக்கு இருக்குமா என்று சிந்தித்துத் திருந்துகிறான்.
பெண்ணும் பிறந்த மண் பாசமும்
பிறந்த மண்ணில் வாழ வேண்டும், சுற்றங்களைக் காண வேண்டும் என்ற பிரியமுடன் தொட்டில் மண் தேடி வந்த பாக்கியம் துப்பாக்கிக்குப் பலியாகி செவ்வரத்தை மரத்தடியில் அனாதைப் பிணமாய் கிடந்த காட்சியை ராணி சீதரன் - “பிறந்த மண்ணில்" கண்ணீர் மல்க சித்தரித்துள்ளார். “பின் பக்கத்தில் யாரோ திடும் திடும் என ஓடி வரும் சத்தம் கேட்டுப் பின்னால் திரும்பிப் பார்த்த போது டுமீல் டுமீல் ... துப்பாக்கி வேட்டுகள் பாக்யத்தின் உடலைச் சல்லடை ஆக்கியது. ஒரு கணம் துடித்த உடலிலிருந்தும் உயிர் பிரிந்து விட உடல் நிலத்தில் சாய்ந்த, பிறந்த மண்ணில் இறந்து கிடப்பதும் சுகமே என்பது போல ஒரு திருப்தியும் நிறைவும் உயிரற்ற உடலிற்குப் புதுப்பொலிவைக் கொடுத்தன.
பெண்ணும், குடும்பப் பொறுப்பும்
எம் சுஹாதபீ எழுதிய “பொம்பளப்புள்ள" கதையில் ஒருத்தி பெண்ணாகப் பிறந்து விட்டாள் என்பதற்காகவே ஒடுக்கப்படுகிற சோகம் சித்தரிக்கப்பட்டுள்ளது. பிள்ளைப் பிராயத்திலிருந்து உரிமைகளும் சுதந்திரமும் பறிக்கப்பட்டுச் சமையலறைக் கைதியாக வாழ்ந்த ஒரு பெண்ணை, தந்தையின் திடீர் மரணமும் மாற்றியமைக்கிறது. தன் தாய், தம்பி, தங்கையைக் காப்பாற்றப் பணிக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு இக்கதைத் தலைவி ஆளாகிறாள். “அடைமானம்" என்ற கதையில் ஏழை ஆசிரியை சர்மிளாவின் பணி அவஸ்தைகள் சுட்டப்பட்டுள்ளன.
பெண்களும் குடும்ப உறவுகளும்
குடும்ப அமைப்பைச் சிதைக்கத் தூண்டும் எந்தக் கோட்பாடும் உயர்திணையை அஃறிணையாக்கும் அவலத்தையே ஏற்படுத்தும். குடும்ப வட்டத்துக்குள் இருந்தவாறே ஆணும், பெண்ணும் இன்ப துன்பங்களைச் சம விகிதத்தில் பங்கிட்டுக் கொள்வதே காலத்திற்கேற்ற கருத்தாக இருக்க முடியும். ஒரே படைப்பாசிரியர் குடும்ப உறவுகள் குறித்த இருவேறு முரண் நிலைகளை முன் வைத்துள்ளார். “ஸ்திரி லட்சணம்" என்ற கதையில் குடும்ப உறவு போற்றப்படுகிறது. இதன் தலைவி குடும்ப உறவுகள் கொட்டும் பாசத்தின் அரவணைப்பில் தன் உத்யோக ஆசைகளை உதிர்த்துக் கொள்கிறாள். குடும்பப் பணிகளில் இன்னும் கூடுதலான உற்சாகத்தோடு ஈடுபட்டுத் தன்னை உன்னதத் தாயாய் உயர்த்திக் கொள்கிறாள். “படர் கம்பு" என்ற கதையில் பெற்றோரை எதிர்த்துப் பேசுகிற பிள்ளைகளின் மனோபாங்கு விஸ்வரூபமாய் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
கலாச்சாரம் காக்கும் மனோகரி, மகாதேவன், பொறுமையின் எல்லையை புரிய வைக்கும் கண்ணம்மா, இன்னல்களைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு வெற்றி கொள்ளும் ஜெயந்தி என குடும்ப உறவுகளின் வார்ப்புகளாக பல மாந்தர்களை இனம் காண முடிகிறது.
நல்லிணக்க உறவு
இனக்கலவரத்தின் அசுரத்தன்மையால் சிறுபான்மையினர் அல்லல்பட்ட போதிலும் கூட மனிதாபிமானம் மரத்துப் போகாமல் தான் இருக்கிறது. தமிழ்க்குடும்பம் வசிக்கும் ஒரு வீட்டிற்குள் இராணுவ உடையில் திருடர்கள் புகுந்து விடுகின்றனர். பக்கத்தில் வாழக்கூடிய சிங்களவர்கள் தமிழ்க்குடும்ப வீட்டிற்குத் தடுப்புச் சுவர் இல்லாத காரணத்தால் வந்திருப்போர் திருடர்கள் என்பதை அறிந்து போலீசுக்குத் தகவல் தெரிவித்துத் திருடர்களைப் பிடித்துக் கொடுக்கின்றனர். இப்படிச் சிங்களவர், தமிழர் என்ற பேதமின்றி ஒற்றுமையாக வாழ்வதைத் தெளிவத்தை ஜோசப் “சுவர்" என்ற கதையில் கூறியுள்ளார்.
நிழல் என்ற சிறுகதையில் தமிழர்கள் சிலர் சிங்களவர்களுக்கு ஆதரவாக இருந்து, அவர்கள் துன்பத்தில் பங்கு கொள்பவர்களாக இருக்கும் நிலை சுட்டப்பட்டுள்ளது. இன முரண்பாடுகளுக்கு அப்பால் ஓர் இனம் மற்றொரு இனத்திற்கு நிழலாக இருக்கும் உயர்ந்த நிலையை இக்கதையில், காணமுடிகிறது. புழுதி கதையில் சுடப்பட்டு இறக்கும் தருவாயிலும் அந்த இளைஞன் தன் பால்ய கால சிங்கள நண்பனை எண்ணி மகிழ்ந்து உயிர்விடும் செய்தி கூறப்பட்டுள்ளது. “எச்சம்" என்ற கதையில் வரும் பாட்டி இந்து, கிறிஸ்தவ சமய நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் கதை மாந்தராக இடம்பெற்றுள்ளார். முரண்களை மையப்படுத்தும் இன ஒற்றுமை இக்கதைகளில் இடம் பெற்றுள்ளதை உணர முடிகிறது.
முடிவுரை
வாழ்வியலைப் படைப்பின் வழியாக வடித்தெடுப்பதே படைப்பாளியின் முதன்மை நோக்கமாகும். ஒரு காலத்தில் சுவர்க்க பூமியாகத் திகழ்ந்து இன்று இனக்கலவரத்தின் கொடூரப் பிடியில் சிக்கித் தவிக்கிற இலங்கை சிறுகதைப் படைப்பாசிரியர்களில் இம்மண்ணின் மணம்கமழும் மனித உறவுகளை மேற்கண்டவாறு பலகோணங்களில் பதிவு செய்துள்ளனர். சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதமின்றி இனங்களுக்கிடையில் இணக்கமான சூழல் உருவாகும் நாள் எந்நாளோ! இனத்தைத் தாண்டி, மொழியைத் தாண்டி மனித உறவுகள் இணைந்து நிற்கும் போது இன ஒற்றுமை சாத்யமாகும்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.