தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை
39.ந. பிச்சமூர்த்தியின் வேப்பமரம் கதையும் ஆக்கமும்
முனைவர் த. கார்த்திகேயன்
இலக்கியத் தோன்றங்களில் பல மாற்றங்கள் இலக்கியங்களில் பதிவு செய்யப்படுகின்றன. இலக்கியம் என்பது சமூக வாழ்வியலின் பிரதி என்றால் மிகையாகாது. இலக்கிய வகைமைகளில் சிறுகதை மிகவும் வலிமையானதாகும். அவற்றை ஆராய்வது அவசியமானதாகிறது.
சிறுகதை
மக்களின் வாழ்வியலை அழகாகப் பதிவு செய்ய சிறுகதை வடிவம் மிகவும் வசதியானதாகும். அதன் மூலம் விரைவாகச் சுருக்கமாக, அதே சமயம் தெளிவாகக் கூற முடியும். சிறிய கதை என்பதாக மட்டுமல்லாமல், பெரிய பெரிய சமூக ஆக்கங்களையும் மக்களிடம் சேர்க்க முடியும். வ. வே. சு. ஐயரில் தொடங்கிய கதை மரபு இன்றும் வளரக் காரணம் அதன் உள்ளடக்கமும் அமைப்புமே ஆகும்.
வேப்பமரம்
கவிஞராக, கதாசிரியராகத் தமிழ் இலக்கிய உலகின் மிகச்சிறந்த படைப்பாளியாக இருந்தவர் ந.பிச்சமூர்த்தி. இவர் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் பிறந்தவர். பதினான்கு ஆண்டுகள் கும்பகோணத்தில் வழக்கறிஞர் தொழில் நடத்தினார். பதினாறு ஆண்டுகள் தமிழகத்தில் பல பெரிய கோயில்களில் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி 1954இல் ஓய்வுபெற்றார். கும்பகோணத்தில் இருந்த காலத்தில் காந்திய நிர்மாணத் திட்டங்களைப் பரப்புவதில் ஈடுபட்டார். 4-12-1976ல் சென்னையில் அமரரானார்.
பாரதியாருக்குப் பிறகு கவிதையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்திய பிச்சமூர்த்தி தமிழ்ச் சிறுகதைத் துறை முன்னோடிகளில் ஒருவராகவும் மதிக்கப்படுகிறார். 127 சிறுகதைகளும், 83 நாடகங்களும் ஏராளமான இலக்கியக் கட்டுரைகளும் இவரது சாதனைகளைப் பறைசாற்றுகின்றன. (க. கோ. வேங்கடராமன், 2006, 317)
ந. பிச்சமூர்த்தி எழுதிய வேப்பமரம் எனும் கதை பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மக்களுக்கும் இயற்கைக்குமான முரண்பாட்டை அழகான கதையாகப் படைத்துள்ளார்.
கதை உத்தி
மரம் பேசுவது போன்று ஒரு கதையை அமைத்து அதை அழகாக நகர்த்திச் செல்கிறார். சமூக வாழ்வியலின் இயக்கத்தை, போராட்டங்களை, முரண்களைச் சொல்லிக் கதையை முடிக்கிறார். கதைத் தொடங்கும் போதே, ”நான் வெறும் வேப்பமரம் தானே” எனத் தொடங்கி எள்ளல் பாணியில் தொடர்கிறார்.
நான் என்னவோ வேப்பமரந்தான். முன்பெல்லாம் காற்று அடிக்கும், என் கிளைகள் பேயாடும், மழை பெய்யும், வாசனை ஒன்றை விசிறுவேன். சித்திரை பிறக்கும், என் மலர்கள் தேனீக்களை அழைக்கும். நான் வெறும் வேப்பமரமாகத்தான் இருந்தேன்.
ஆனால் இப்பொழுது யோகம் அடிக்கிறது. நான் தெய்வமாகிவிட்டேன். எனக்கு வந்திருக்கும் பெருமையை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. நாள் தவறாமல் யாராவது இங்கு வருகிறார்கள். மரக்கடை வியாபாரி ஒருவன் மட்டும் என்னை முறையாக அறுத்துப் பலகையாக்கினால் 20 பலகையாகும், வியாபாரத்துக்கு அறுத்தால் 25 ஆகும் என்று சொல்லிக் கொண்டிருந்தான். இப்பொழுது வருபவர்கள் எல்லாம் என் உடம்பைச் சுற்றி மஞ்சள் பூசிக் குங்குமம் இடுகிறார்கள். சாம்பிராணிப் புகை போடுகிறார்கள். அகலில் நெய்விளக்கு வைக்கிறார்கள். வெற்றிலை பாக்குத் தேங்காய் பழம் வைத்துக் கும்பிடுகிறார்கள். வெள்ளிக்கிழமைதான் கூட்டம் தாங்கவில்லை. ஏராளமாக மாவிளக்குப் படைக்கிறார்கள். (தங்க செந்தில்குமார், 2013, 39) என்பதாக கதையை மக்களிடம் சொல்ல வேப்பமரத்தைப் பேச வைக்கிறார்.
மரமும் மக்களும்
மனிதன் இயற்கையோடு இயைந்து வாழ வேண்டும். இயற்கை மனிதர்களுக்குப் பயன்பட வேண்டும் என்பது உலக நியதி. இயற்கை தெரிந்தோ தெரியாமலோ மனிதர்களுக்காகவே வாழ்கிறது. மனிதர்களாகிய நாம் இயற்கையை நம்முடைய தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொள்கிறோம். பயன் கருதி அழித்தும் வருகின்றோம். பேசத் தெரியாத இயற்கை நம்மிடம் பேசினால் என்ன நடக்கும் என்பதைத் தமது கதையின் வாயிலாக அழகாகப் பதிவு செய்கிறார். அதில் ஒரு இடத்தில்,
ஆறு மாதத்துக்கு முன்பு மற்றொரு சங்கடம் முளைத்தது. எனக்கு அது சங்கடமாகத் தெரியவில்லை. ஆனால் மற்றவர்கள் அப்படி நினைத்தால் தானே? முளைப்பதும், இலை விடுவதும், கிளையாவதும், மலர்வதும் நாமாகச் செய்கிற காரியமா? அவை எல்லாம் தாமாக நடக்கின்றன. விரும்பினால்கூட, நம்மால் தடைப்படுத்த முழயாது. ரோட்டுப் புறமாகப் போகாதே என்று ஒரு கிளைக்குச் சொல்லிக் கொண்டே இருந்தேன். அது கேட்கவே இல்லை. அந்தக் கிளை பழுக்க ஆரம்பித்ததும் கவலையாகத்தான் இருந்தது. ஆனால் கவலைப்பட்டு என்ன பயன்? நாளடைவில் கிளை பட்டுப்போய்விட்டது.
ஒரு நாள் யாரோ பிச்சைக்காரன் மரத்தடியில் தகரக் குவளையையும் கழியையும் வைத்துக் கொண்டு படுத்துக் கொண்டிருந்தான். நல்ல வெயில் வேளை! பலமான காற்று ஒன்று அடித்தது. மளமளவென்ற ஓசையுடன் பட்டுப்போன கிளை.
திடீரென்று முறிந்து விழுந்தது. கிளை விழுந்த ஒரு நிமிசத்துக்குள் அங்கே பெரிய கும்பலும் கூக்குரலும் ஆகிவிட்டன. அந்தக் கலவரத்தில் முதலில் ஒன்றுமே தெரியவில்லை. பிறகு தலையில் காயம்பட்ட ஓர் இளைஞனைத் தூக்கி ரிக்சாவில் ஏற்றிக்கொண்டு சிலர் சென்ற பொழுதுதான் விசயம் புரிந்தது. கீழே ஆபத்தை உண்டாக்கிவிட்டது! ஆனால் நான் பிறந்து வளர்ந்ததற்கோ, தெருப்புறம் கிளை நீண்டு சென்றதற்கோ நானா பொறுப்பு? இந்தச் சின்ன விசயம் அந்த கும்பலுக்குத் தெரியவில்லை. அடுத்தாற்போலப் பக்கத்தில் படுத்துக்கொண்டிருந்த பிச்சைக்காரனுக்கு ஒன்றும் நேரவில்லையே என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? (தங்க செந்தில்குமார், 2013, 40) என்று காட்சியாக்கிக் கதையை விளக்குகிறார்.
முரண்
முரண் என்பது நம் வாழ்வியலோடு கலந்தது. எல்லா வகையிலும் தொடர்புடையது. வாழ்விற்கும் அதன் எதிர்ப்பார்ப்பிற்கும் இடையே முரண் என முரண்பாடுகள் வாழ்க்கையாகி பழகிவிட்டன. பொருளாதாரம், சாதி, பாலினம், நன்மை, தீமை, இயற்கை என்பதாக முரண்பாடுகள் தொடர்பாகின்றன. அவற்றை சில இடங்களில் அழகாகக் கதையாக்குகிறார் ந. பிச்சமூர்த்தி.
இயற்கையும் மனிதனும் இயைந்து வாழ வேண்டியவர்கள். அவர்கள் முரண்படும் போது பல சிக்கல்கள் எழுகின்றன. அவற்றைப் போக்க இயற்கையின் குறிப்பாக மரத்தின் சார்பில் பேசுகிறார். உங்களின் எல்லா செயல்களையும் நான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன், என்னால் என்ன செய்ய முடியும் “நான் வெறும் மரம்தானே” என நக்கல் செய்கிறது மரம்.
கிராம மக்களும் பண்ணையாரும் மோதிக் கொள்வது மரத்தை முன்னிட்டா என்பதை நமக்கே விட்டுவிடுகிறார். மக்கள் மரத்தை வெட்டக் கோருவது அவர் அதை வெட்டாமல் இருக்கப் போராடுவதும் சமூக இலக்கியல் முரண். அதிகாரம் செயல்படும் அத்தகைய சூழலில் மரம் தன்னைப் பதிவு செய்கிறது.
மக்களின் மூடநம்பிக்கைக்கும் அதனெதிரான அறிவியல் பார்வைக்குமான முரண் கதையின் அடிக் கருவாகும். மரத்தின் இரத்தம் போன்ற பால் இறைச் சக்தியாக மாறுவது என்பது கவனிக்கத்தக்கது.
மூடநம்பிக்கையும் அறிவியலும்
மரம் வளர்கிறது. எப்போதும் மரத்தின் அடியில் தூங்கும் பிச்சைக்காரனுக்கு எந்த தீங்கையும் அந்த மரம் இழைத்ததில்லை. அந்த வழியாக சென்ற ஒருவர் மீது எதிர்பாராதவிதமாக விழுந்த மரத்தின் கிளைக்காக மரத்தை வெட்ட சொல்லி மக்கள் வற்புறுத்துகிறார்கள். எல்லாம் தெரிந்த மரம் “நான் வெறும் மரம்தானே எனக்கு என்ன தெரியும்” என்று பேசுகிறது. அம்மரத்தின் மீது பேருந்து மோதி பால் வருகையில் அம்மரத்தைத் தெய்வம் என புகழும் போதும் மரம் அதையே திரும்பச் சொல்கிறது.
ஆனால், இவ்வளவு குழப்பத்துக்கும் முடிவு ஏற்பட்டதே, அதுதான் அதிசயமாக இருக்கிறது. பஸ் வந்து மோதிய மூன்றாம் நாள் மற்றொரு கிளையின் அடிப்புறத்திலிருந்து பால் விடாமல் வடிய ஆரம்பித்தது. இதை யார் கவனித்தார்களோ, எப்படித்தான் இந்த விசயம் ஜனங்களிடையே பரவிற்றோ தெரியவில்லை - அன்று முதல் தெய்வமாகிவிட்டேன்! தேங்காய் உடைத்துக் கற்பூரம் ஏற்றும் பெருமை எனக்கு உண்டாகிவிட்டது. வெகுபக்தியுடன், வடிகிற பாலைப் பிடித்துக் கொண்டு போகிறார்கள். பல நோய்கள் குணமாவதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். பங்களாக்காரர் இதுவும் ஆச்சரியமா என்று பார்த்துக் கொண்டிருக்கிறார். நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
(தங்க செந்தில்குமார், 2013, 41)
மூடநம்பிக்கையைப் பதிவுசெய்யும் அதே இடத்தில் அறிவியல் செய்திகளையும் மரம் பேசுகிறது. அறிவியல் பேராசிரியர் ஒருவரின் கூற்றாக அதை,
ஆனால் ஒரு விசயம்; இன்று உச்சிப்பொழுதுக்குப் பிறகு ஒரு விஞ்ஞானி இங்கு வந்தார். அவருடன் ஒரு மாணவனும் வந்திருந்தான். மரத்தில் பால் வடிவதை ஊன்றிப் பார்த்தார்கள்.
உடம்பில் உள்ள ரத்தக் குழாயில் ரத்தம் பாய்ந்து செல்வதைப் போல மரத்திலும் செடியிலும் ஜீவரசம் ஏறுவது இயற்கை. சிரங்கு வந்தால் சரீரம் பொத்துக் கொண்டு, ரத்தம் முதலியன வடிகின்றனவே, அதைப் போலவே மரத்தில் பொத்துக்கொண்டு ஜீவரசம் வெளியே வந்து கொண்டிருக்கிறது. அவ்வளவுதான் விசயம் - என்று விஞ்ஞானி மாணவருக்கு விளக்கிக் கொண்டிருந்தார்.
விஞ்ஞானி சொன்னது சரியா? ஜனங்கள் சொல்வது சரியா? எனக்குத் தெரியாது. நான் வெறும் வேப்பமரந்தானே?
(தங்க செந்தில்குமார், 2013, 41) என்று பதிவு செய்கிறார். மூடநம்பிக்கையோ, அறிவியலோ மரத்தை மரம் வழியான இயற்கையைக் காக்க விரும்பி இக்கதையை முடிக்கிறார் ந. பிச்சமூர்த்தி.
முடிவுரை
மனித வாழ்விலிருந்து முகிழும் கதைக் கருவை அழகான கதையாக ஆக்கித்தந்துள்ளார் ந. பிச்சமூர்த்தி. மரத்திற்கும், மனிதர்களுக்கும் உள்ள தொடர்பை மரம் பேசுவதாக பல செய்திகளைத் தருகிறார். மரம் மனிதர்களுக்கு உதவுகிறது. ஆனால் மனிதர்களோ மரத்தை அழிக்க நினைக்கிறார்கள் என்று கூறி புதிய முறையில் காட்சியாக்கிச் சிறப்பிக்கிறார் ந. பிச்சமூர்த்தி.
துணைநூற் பட்டியல்
1. க. கோ. வேங்கடராமன், தமிழ் இலக்கிய வரலாறு, 2006, கலையக வெளியீடு, பரமத்தி வேலூர்.
2. தங்க செந்தில்குமார், ஒளிச்சேர்க்கை, 2013, அய்யா நிலையம், தஞ்சாவூர்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.