தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை
40.நகுலன் கதைகளும் கட்டமைப்பும்
முனைவர் க. மாரியப்பன்
முன்னுரை
நவீன இலக்கிய உலகில் மறக்க முடியாத படைப்பாளி நகுலன். காலத்தால் நகுலன் மறக்கப்பட்டாலும் மறைக்கப்பட்டாலும் அவரின் படைப்புகளின் வழி அவர் வாழ்ந்து வருகிறார் என்பது தான் உண்மை. இலக்கிய உயர் விருதுகள் அவருக்கு வழங்கப்படவில்லை. விருதுகளால் அடையாளப்படுத்தப்படும் இலக்கியப் படைப்பாளிகளுக்கு மத்தியில் தன் எழுத்துக்களால் அடையாளப்படுத்தப்பட்ட உண்மையான இலக்கியவாதி நகுலன் என்பதில் ஐயமில்லை. கவிதைகளின், மொழிபெயர்ப்புகளின், சிறுகதைகளின், புதினங்களின் ஊடாக அவர் பயணம் அமைந்திருந்தது. இக்கட்டுரை நகுலனின் கதைக்களத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் ஒன்றையே அடையாளமாகக் கொண்டிருக்கிறது.
நகுலன் சிறுகதைகள்
காவ்யாவின் நகுலன் கதைகள் தொகுப்பின் படி, நகுலனின் கதைகளாகப் பதிப்பித்திருப்பன முப்பத்தொன்று ஆகும். அவை சாதனை, ஒரு நாள், தங்கக்குடம், அழைப்பு, என் பெயர் வைத்தியநாதன், ஒரு ராத்தல் இறைச்சி, கத்திரி, அயோத்தி, சிப்பி, கயிற்றரவு, மூன்று நொடிக்கதைகள், ஒரு கிழவன், வெயில் தெருமுனையில் ஒரு சிறு கடை, மயானத்தில் வைத்து, போஸ்ட் மாஸ்டர், பிரிவு, ஆட்டோ, சாயைகள், எட்டுவயது பெண்குழந்தையும் மலையாளக்கவிதையும், கண்ணன், தில்லைவெளி, காக்கை குருவி எங்கள் ஜாதி, நிலக்கடலையும் பீடித்துண்டுகளும், குழந்தைகள், யாத்திரை, காலி அறை, தெரு சொன்ன கதை, அசுவத்தம் என்றொரு மரம், குருடன் மீட்ட தனம், கடிதத்தில் ஒரு நாவல் என்பன.
நகுலன் என்றொரு நவீனன்
நகுலன் என்ற டி.கே. துரைசாமி வசதியும் செல்வாக்குமுள்ள குடும்பத்தில் பிறந்திருந்தாலும், சமூகத்தின் 'உயர்மட்டத்திற்கு'ச் செல்லும் வாய்ப்புப் பெற்றிருந்தும், அதிலிருந்து தன்னை அந்நியப்படுத்திக் கொண்டு, பூணூல் போடாத, தண்ணியடிக்கிற பிராமணராகவும் உலகாயதத் தேடல்களிலிருந்து தன்னை விலக்கியவராகவும் இருந்த அவரது முகத்தை அவரின் அனைத்துப் படைப்புகளிலும் நீங்கள் பார்க்க முடியும். அவரின் படைப்புகளில் அவரின் சொந்த முகத்தைத் தான் பார்க்க முடியும். வாசகனை மாயாஜால உலகத்திற்கு இவரின் எழுத்துக்கள் அழைத்து செல்லாது.
வாழக்கையைக் கட்டுக்கோப்பில்லாத இடியாப்பமாக அவரின் இலக்கியங்கள் பிரதிபலித்தன. அவரைப் புரிந்து கொள்ள அவரின் இலக்கியங்கள் வழியாக மட்டும் தான் முடியும். ஒரு போலி படைப்பாளியாக அவர் இருந்ததில்லை. தனிமை உலகில் தனித்து இருந்தவர். ஒரு சில நண்பர்கள் மட்டுமே அவருக்கு உறவாகவும், எழுத்தும் புத்தகங்களுமே மட்டுமே அவரின் படுக்கையில் பங்கெடுத்துக்கொண்டன என்பதும் பலரும் அறிந்த உண்மை.
சில கதைகளும் கருத்துக்களும்
'கத்திரி' என்னும் சிறுகதையில் ஒரு பிராமணன் சவரம் செய்யும் தொழிலை மேற்கொள்கிறான். அவனை நான்கு வருடத்திற்குப் பிறகு பார்க்கும் அவனது பால்ய காலத் தோழனுக்கு அவனது கிருதாவும் மீசையும் நெருடுகின்றன. 'இந்தத் தொழில்லே என் பிராம்மணத்துவம் என்னை விடவில்லையா?' என்று சீறுகிறான் அவன். 'நிழல்கள்' நாவலில் பிராமணன் சபிக்கப்பட்டவன் என்கிறார் நகுலன். நமக்குத் தெரிந்த பிராமணர்கள் யாரும் சவரத் தொழில் செய்வதில்லை. சுபிக்கப்பட்டவர்கள் பிராமணர்கள் மட்டுமில்லை என்பதுவும் நமக்குத் தெரியும். தனது கூட்டுக்குமான விமோசனத்தை எதிர் நோக்குகிறது இக்கதை.
சமூகம் என்பதையும் தனி மனித நேர்மை, அதன் சக்தி என்பதையும் கண்டுபிடிக்கும் முயற்சிகளுக்கு நகுலன் சிறுகதைகள் உதவுகின்றன. ரயில் பிராயணத்தில் பார்க்க நேரும் ஒரு படிப்பறிவில்லாத கிழவன், குருடராய், செவிடராய் ஊமையாய் வாழ்வதில் உள்ள சௌகரியத்தை நகுலனுக்கு உணர்த்துகிறான். 'என்ன படிப்புடா இது மயிரு படிப்பு' என்று அந்தக் கிழவன் நகுலன் கருத்தையே பிரதிபலிக்கிறான் (ஒரு கிழவன் - சிறுகதை) தனது கதைகளை அனுப்புவதையும் திருப்பிக் கொண்டு வந்து கொடுப்பதையும் தொழிலாகக் கொண்ட போஸ்ட் மாஸ்டர் உஸ்மானுக்கு வாழ்க்கை பீடி, குடும்பம் என அடங்கிருப்பது நகுலனுக்கு எந்த விதத்திலும் உறுத்துவதில்லை (போஸ்ட் மாஸ்டர்). மாறாக, வெள்ளக்காரனின் அகம்பாவம் சீற்றத்தை உண்டு பண்ணுகிறது.
இழந்து போன காதல், வறுமையின் கோரம், வாசலில் நிற்கும் மரணம் என்பவற்றை நொடிக் கதைகளிலும், இறைச்சிக்காகத் தன்மானத்தை இழந்து தனது காலை நக்கும் நாயைப் பார்க்கும் போது, அது கடித்தால் கூடத் தேவலை சோற்றுக்காக மானமிழக்க வேண்டாம் (ஒரு ராத்தல் இறைச்சி) என்ற தன்மானத்தையும், உயர்வர்க்கத்தைத் துச்சமாகப் பார்க்கும் அவரது பார்வை மரணம், பிரிவு போன்ற நிலைத்த பிரச்சனைகளை ஊடுருவிப் பார்ப்பதற்குச் சிறுகதைகள் உதவியிருக்கின்றன. 'ஒருநாள்' என்ற கதை பிரபஞ்சப் பொதுமை கொண்டது. அதன் காரணமாகத் தனித்து நிற்கின்றது. பெரும்பாலான கதைகளில் இறப்பு ஓர் அம்சமாக இருக்கிறது. 'கடைசி வரையில் வாழ்க்கையில் முற்றுப்புள்ளிகள் ஆட்சி செலுத்துவதில்லை' யாதலால் இறப்பு ஏற்படுத்தும் அதிர்வலைகள் நீண்ட தூரம் தாண்டிச் செல்கின்றன. 'செத்துப் பிறந்தவனுக்கு சாவேது வாழ்வேது' என்ற 'கயிற்றரவு' மனப்பான்மை கோடை மின்னலாகச் சிறுகதையில் வெளிப்படுகிறது.
'நகுலனின் எழுத்துக்கள் வாழ்க்கையைப் பற்றிய ஒரு வெள்ளை அறிக்கை' என்கிறார் ப. கிருஷ்ணசாமி. (நகுலனின் நண்பர்). கற்றலும் கற்றுக்கொடுத்தலுமான பேராசிரியப் பணியில் அவர் இருந்ததினாலும் அவரின் ஆளுமையில் எழுத்துக்களும் எழுத்தாளர்களுமே நிறைந்திருந்தது என்பதே உண்மை.
திட்டமிடாத கதைகள் அவருடையது. இளம் பிராயத்தில் ஒரு குழந்தையின் கையில் ஒரு பென்சில் கிடைத்தால் வெள்ளைச் சுவரும் கிடைத்தால் அக்குழந்தை கிறுக்கத் தொடங்கிவிடும். அக்கிறுக்குக் கோடுகளுக்கு அர்த்தம் புரியுமா நமக்கு, புரியாது. ஆனால் அக்குழந்தைக்கு அக்கோட்டின் அர்த்தம் நிச்சயம் புரிந்திருக்கும். நகுலனின் எழுத்துக்கள் பெரிய குழந்தையின் கிறுக்கல், அவை அர்த்தம் அற்றவை அல்ல. ஆத்மார்த்தமானவை அவை, அதன் நீள அகலத்தை நாம் தான் புரிந்துகொள்ள முயற்சி செய்யவேண்டும். ஆவரை சித்தருக்குள் அடக்குவதோ, மனநோயாளி எனக் கூறி நகையாடுவதோ, வெற்றுப் புலம்பல் என எண்ணுவதோ அவர் அவர் பார்வையைப் பொறுத்தே. திட்டமிடாத பயணமாக இருந்தாலும் போய்ச் சேருமிடத்தை அவர் நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார்.
இழப்பின் கையறு நிலைத்தன்மையை நவீன மொழி நடையில் அனுபவிப்பதற்கு 'காக்கை குருவி எங்கள் சாதி' உதவும். இதைப் படிக்கும் எவருக்கும்'காதல் உணர்வுகள்' வெளிறிப்போகும். ஆனால் கதையைப் புறக்கணித்த அனுபவம் தேவைப்படுகிறவர்களுக்கு 'சாயைகள்' மிகவும் உதவும். 43 வரிகள் மட்டுமே கொண்ட மிகச் சிறிய கதை. மௌனியின் கதை போன்ற தோற்றம் கொண்டது. ஆனால் மௌனிகதைகளின் அந்நியப்படுத்தும் தன்மை இதில் இல்லை.'எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?' என்ற மௌனியின் கேள்வியை வேறு நோக்கில் வேறு தளத்திலிருந்து கேட்பது முற்றிலும் தற்சார்புத் தன்மை கொண்டது. சாயைகளே நம்மை ஆட்டி வைக்கின்றன. எவ்வளவோ நிறபேதங்கள் கொண்ட சாயைகள் நமது காக்கும் தெய்வங்கள். சாயைகள் என்றால் என்ன அனுபவத்தின் சாயல்களைத்தான் சாயைகள் என்று சொல்கிறோமோ. இடைவெளியினூடே இருபொருட்கள் அவைகளுக்குள்ள உறவு அப்பாற்பட்டதா அல்லது பார்ப்பவன் மூலம் உருவாகும் கற்பனையின் சூழ்ச்சியா? கேள்விகள் கேட்டு பயன் இல்லை.
சுசீலாவுக்குச் சாவே இல்லை. செத்தது சுசீலாவும் இல்லை. புலன்களால் உணரப்பட்ட உலகத்திலிருந்து நகுலனால் ஒரு போதும் விடுபடமுடியவில்லை. கட்டுக்கடங்காத அமைதியும் தன்னம்பிக்கையும் இதன் மூலம் கிடைக்கின்றன. தனது வேர்களை மறக்காமல் அவற்றைத் தனது எழுத்துக்கிடையே போகும் ஊடுசரடாகப் பயன்படுத்திக் கொள்வதும் அவற்றை அதி தீவிர விமரிசனக் கண்ணோட்டத்தோடு பார்ப்பதும் இவர் எழுத்துக்களில் நிகழ்கின்றன.
நகுலனின் கதைகளைக் குறித்தும் நகுலனைப் பற்றி நிறையைச் சொல்லவும் இவ்வாய்வுக்கட்டுரையில் முழு இடம் இருக்கப் போவதில்லை. தனியாகவே நகுலனைப் பற்றி ஒரு புத்தகம் எழுத வேண்டும். நகுலன் என்றொரு மாயாவி உங்கள் கண்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். அவர் அற்புத விளக்கைத் தந்திருக்கிறார். அவர் அலாவூதினும் இல்லை. ஆனால் அற்புதங்கள் நிகழத்தியவர் எழுத்தில்... அவரின் படைப்புகளைப் படிப்பது அவருக்கு நாம் செலுத்தும் நன்றியாகும்.
நூற்றாண்டு காலத் தமிழ் வாழ்க்கையின் கண்ணி அறுபடாத தொடராக இவரது எழுத்துக்கள் தெரிகிறது. தொல்காப்பியர் முதல் தாண்டவராய சுவாமிகள் வரை வாழ்க்கையைப் பற்றிய திடகாத்திரமான சிந்தனை கொண்ட எல்லாத் தமிழ்ப் படைப்பாளிகளுக்கும் நகுலனின் வாழ்க்கை அனுபவ வெளிப்பாடாக அமைந்திருக்கிறது.
முடிவுரை
தமிழ் இலக்கியம் உள்ள வரை உயிர், மெய் எழுத்துக்களில் நகுலனின் சுவாசம் கலந்திருக்கும். எனக்குத் தெரிந்தவரை இலக்கியமே வாழக்கையாக, வாழ்க்கையே இலக்கியமாக வாழ்ந்தவர் அவர். அவரின் சிறுகதைகளைப் படித்தலும் புரிதலும் வாய்ப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே அமையும். சராசரி எழுத்துக்கள் அல்ல அவை. உயிர்த் துடிப்போடு உள்ளவை அவை.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.