தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை
43.கீற்று வலைத்தள சிறுகதைகள் காட்டும் இன்றைய வாழ்வியல் சிந்தனை
சு. ரம்யா
முன்னுரை
தமிழ் நவீனப் படைப்புலகில் சிறுகதை ஒரு அற்புதக் களஞ்சியம். படிக்கச் சிறிது நேரமே ஆவதால் நிறைய வாசகர்களைத் தன்பால் ஈர்த்துள்ளது. வ.வே.சு ஐயர் தொடங்கி இன்று பல பெரும் பத்திரிகை, சிறு பத்திரிக்கை, இணையப் பத்திரிக்கை என்று பல வடிவங்களில் சிறுகதைகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. ‘கீற்று’ வலைத்தளம் வெளியிட்ட சிறுகதையில் இன்றைய வாழ்வியல் சிந்தனையை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
கீற்று வலைத்தளம்
கீற்று என்பது ஒரு இணைய இதழ். இந்த இதழ் ‘ஜூலை 2005’ அன்று தொடங்கப்பட்டு, இன்று வரைச் சிறப்பாக இயங்கி வருகிறது. கீற்று இணையதளத்தினை நந்தன் என்பவர் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார்.
ஆய்வு எல்லை
கீற்று இதழில் வெளிவந்த சூரியா என்ற படைப்பாளரின் சில சிறுகதைகளை மட்டும் இக்கட்டுரைக்கான ஆய்வு எல்லைகளாகக் கொண்டிருக்கிறது.
மேலை நாட்டு மோகம்
இன்றைய சமுதாயத்தில் இளஞர்கள் இடையே மிக முக்கியமான பிரச்சனை வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் மேல் நாட்டு மோகத்தால் தன் சொந்த ஊரில் பணி புரியாமல், வெளி ஊரில் சென்று பணியாற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை நான்கு கேங்ஸ்டர்ஸ் என்ற சிறுகதையில் ‘எந்த ஒரு இளஞனுக்கும் சொந்த ஊரில் பிழைப்பு என்பது பெரும்பாலும் எட்டாக்கனியாகவே போய்விடுகிறது.அவன் பிறந்த ஊரைவிட்டு வேறு ஒரு ஊருக்குப் பிழைப்புக்காகப் போக வேண்டிய கட்டாயமாகி விடுகிறது. சொந்த ஊரில் வேலை செய்து பிழைப்பதை எது தடுக்கிறது என்றுதான் புரியவில்லை. ஒருவன் திக்கற்று விடப்படும் போதுதான் பிழைத்துக் கொள்வதற்கு எதையேனும் பற்றிக் கொள்வான் போல... எந்த ஒரு இளைஞனும் திக்கற்ற ஊரில் எவ்வாறேனும் பிழைத்துக் கொள்கிறான்’ என்று குறிப்பிட்ட கதாசிரியர், என்னுடன் மூக்கில் சளி வடிய ஊலைமூக்கனாகச் சுற்றிக்கொண்டிருந்தவன் எல்லாம் துபாய்க்குச் சென்று விட்டானாம். கால்ச்சட்டைக்கு ஜிப்போடாமல் சுற்றியவனெல்லாம் குவைத்துக்கு சென்றுவிட்டானாம். அவ்வளவு ஏன், பால்பாண்டி வாத்தியாரின் பல்லை உடைத்துவிட்டு சின்ன வயதிலேயே ஊரைவிட்டு ஓடிப்போன செந்தில் இலங்கையில் டீக்கடை வைத்திருக்கிறானாம். அப்பா இல்லாத கைலாசம் சவுத் ஆப்பரிக்கா சென்று, அங்குள்ள இந்தியர்களிடம் பனாரஸ் சேலை விற்றுக் கொண்டிருக்கிறானாம்’ என்று இந்த இளஞர் வேறு ஊரில் வேலை செய்வதைக் குறிப்பிடுகிறார். இன்றைய உலகில் படிக்காத இளஞர் மட்டும் அல்லாமல் படித்த பட்டதாரிகளும் வெளிநாடு செல்லவே விரும்புகின்றனர்.
ரசிகர் மன்றம்
இன்றைய இளஞர்கள் தங்களுக்குப் பிடித்த நடிகர், நடிகை, பாடகர், பாடகி போன்றவருக்கு ரசிகர் மன்றம் வைத்துச் சுவரொட்டி ஒட்டுவது, சிலை அல்லது படம் வைத்து விழா கொண்டாடுவது போன்றவற்றில் தங்கள் பெரும்பாலான பணத்தை மட்டும் அல்லாமல் நேரத்தையும் செலவிடுகின்றனர். இதைப்போன்று இளையராஜா vs ஏ.ஆர். ரஹ்மான் என்ற சிறுகதையில் ‘நேத்து வந்து பொடிப்பயனுக்கெல்லாம் ஆஸ்கார் அவார்டு கொடுக்குறானுக, ஏன் இளையராஜா அய்யாவுக்கெல்லாம் கொடுக்கு மாட்டாங்கலாம்மா?யாரு சார் அது ஏ.ஆர். ரகுமான் நேத்து மொலச்ச காளான்’ என்ற கதாசிரியரின் கூற்றின் மூலம் ஒரு ரசிகனின் அறியாமை புலப்படுகிறது.
உடல் பருமன் தொல்லை
நம் பாரம்பரிய சத்தான உணவை மறந்து, நாகரிக உணவு என்று வெளிநாட்டுப் பீசா, பர்கர், நூடுல்ஸ், பரோட்டா, என்றெல்லாம் சாப்பிட்டு இன்றைய இளஞன் தன் உடலைப் பருமனாக்கி அவதிப்படுகிறான். இந்தக் கருத்தை 6 பேக்ஸ் எனும் சிறுகதையில் காணலாம். ‘தேனிர் கடையில் அனைவரும் இரண்டு போண்டா சாப்பிட்டு விட்டுப் பசியாறும் நிலையில் அவர் ஐந்து போண்டாவை இரைப்பைக்குள் இறக்கிவிட்டு ஆறாவது போண்டாவுக்குத் தட்டை நீட்டுவார்’ என்று அளவுக்கு மீறிய உணவுப் பழக்கவழக்கத்தைக் குறிப்பிட்ட கதாசிரியர், அதனால் ஏற்படும் விளைவையும் கூறுகிறார். ‘அவருக்குக் கழுத்துக்குக் கிழ் நேரடியாக வயிறு ஆரம்பித்து விடுகிறது. ’….. ‘அவர் தன் கால் கட்டைவிரலைப் பார்க்க வேண்டும் என்றால் இரண்டு அடிமுன்னே குனிய வேன்டும்’ ...... ‘அவரால் படுத்துக்கொண்டு வயிற்றுக்கு அந்தப் பக்கமாக இருக்கும் டிவியைப் பார்க்க முடியாத ஒரே காரணத்தால், தினசரி உட்கார்ந்து தொலைக்காட்சி பார்க்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்படுகிறார்’ என்று கூறிய கதாசிரியர் பிறகு அவர் ஜிம்மில் தன் நேரத்தையும் பணத்தையும் செலவிடுவதாகக் காட்டுகிறார்.
சின்னத்திரை ஆதிக்கம்
வீட்டுக்குள் திருடன் புகுந்து கொள்ளையடித்துப் போவது கூட தெரியாது, சீரியல் பாக்கும் நம் நாட்டு பெண்மனியைச் ‘சீரியல்’ என்ற சிறுகதையில் காட்டுகிறார். அந்தச் சீரியலின் கதாநாயகனைத் தன் புருசனோடு ஒப்பிட்டுச் சண்டையிடுவதாக ‘உன்னோட புருசனையும் அந்தச் செல்வத்தை மாதிரி விட்டிறாதடி புவனா... அவர்கள் திருமதி செல்வம் சீரியலைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். இப்படியாகத் தன் கணவன் குழந்தை போன்றவற்றை மறந்து சீரியலிள் மூழ்கும் பெண்களை எடுத்துக் காட்டுகிறார்.
தரை விமானம்
இன்றைய இளைஞர் தன் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது, தரை விமானத்தில் போவதாகவே நினைத்துக் கொள்கின்றனர். அதனால்தான் அதிகம் விபத்து நடைபெறுகிறது. இத்தகையக் கருத்தை விபத்து என்னும் சிறுகதையில் ‘வண்டியில் போகும் போதுதான் பாடல் கேட்கத் தோன்றும், தோழியுடன் நட்பு பாராட்டத் தோன்றும், எச்சில் துப்பத் தோன்றும், பாட்டுப்பாடத் தோன்றும், சிகரெட் பிடிக்கத் தோன்றும், பயபக்தியுடன் சாமி கும்பிடத் தோன்றும்’ என்று நம் இளைஞரின் செயல்களை படம்பிடித்துக் காட்டுகிறார். அவ்வாறு செல்லும் போது, ஒரு விபத்துக்கு ஆளாகித் தன் வாழ்க்கையைத் தொலைக்கும் மனிதர்களும் உள்ளனர். இதை ‘ஏற்கெனவே பிளேட் வைக்கப்பட்டுயிருந்த கையில் மீண்டும் பீராட்சர் ஆனதால் என்ன செய்வது என்ற யோசனையில் ஆழ்ந்திருந்தார்கள் மருத்துவர்கள். இன்னோரு கையிலும் பிலேட் வைக்கப்பட்டுயிருந்தது போல எக்ஸ்ரேயில் தெரியவந்தது..... அது இருசக்கர வாகனத்தின் போட்ஸ்கம்பி’ இதனால் விபத்தின் கொடுரத்தைக் கதாசிரியர் எடுத்துச் சொல்கின்றார்.
முடிவுரை
காசு, பணம், ஆடம்பரம், பதவி, அந்தஸ்து, நாகரிகம் என்றெல்லாம் நாம் நம் வாழ்க்கையைத் தொலைத்துக் கொன்டுதான் இருக்கிறோம். இந்த அவசர உலகில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளைப் படைப்பாளர் சிறுகதை தெளிவாகப் புலப்படுத்துகிறது.
குறிப்புகள்
1. 4 கேன்ஸ்டர்ஸ் சிறுகதை 02.12.2013 அன்று வெளியிடப்பட்டது.
2. இளையராஜா vs. ஏ.ஆர். ரகுமான் சிறுகதை. 02.12.2014 அன்று வெளியிடப்பட்டது.
3. 6 பேக்ஸ் சிறுகதை 13.5.2013 அன்று வெளியிடப்பட்டது.
4. சீரியல் சிறுகதை 28.3.2013 அன்று வெளியிடப்பட்டது.
5. விபத்து சிறுகதை 16.8.2012 அன்று வெளியிடப்பட்டது
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.