தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை
44.டி. செல்வராஜ் சிறுகதைகளில் கதாப்பாத்திரங்கள் ஏற்படுத்திய தாக்கங்கள்
சா. தங்கமாரியப்பன்
முன்னுரை
பொதுவாக எவ்வகையான படைப்பாளர்களாக இருந்தாலும் தாம் வளர்ந்த, வாழ்ந்த சூழல்களையும் பின்புலத்தையும் தமது படைப்புகளில் வெளிப்படுத்தும் தன்மை என்பது படைப்பாளர்களின் இயல்புதான். அந்த வகையில் சிறுகதை என்பது படைப்பாளர்களின் அனுபவங்களை, கண்கூடாகக் காண்பவைகளை, மாற்றத் தகுந்த சமுதாய நடைமுறைகளை, அவலங்களை வெளிப்படுத்த ஏற்ற இலக்கிய வகையாகும். இக்கட்டுரையானது டி.செல்வராஜ் எழுதிய 'நோன்பு' எனும் தொகுப்பு நூலிலுள்ள சிறுகதைகளின் கதாப்பாத்திரங்கள் ஏற்படுத்திய தாக்கங்களைப் பற்றி ஆராய்கிறது.
டி. செல்வராஜ்
1958-இல் எழுதப்பட்ட ‘நோன்பு’ எனும் சிறுகதைகளின் தொகுப்பு டி. செல்வராஜ் அவர்களின் படைப்பாகும். இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மானூருக்கு அருகே அமைந்துள்ள மாவடி எனும் சிற்றூரில் பிறந்தவர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கிராமங்களை புதுமைப்பித்தன், ரகுநாதன் வழியில் உயிர்ப்புடன் கதைகளுக்குள் கொண்டு வந்தவர். ஏழு நாவல்களையும் இருபதிற்கும் மேற்பட்ட நாடகங்களையும் படைத்துள்ள இவர் சுமார் நூற்றிற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரின் படைப்புகள் செம்மலர், சரஸ்வதி, சாந்தி மற்றும் தாமரை போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. சாகித்ய அகாதமி ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகப் பணியாற்றிய இவர், தோல் எனும் நாவலிற்காக 2010-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் சிறந்த நாவல் விருதைப் பெற்றுள்ளார். இவரின் படைப்புகள் அனைத்தும் திருநெல்வேலி மாவட்ட கிராமங்களில் நிகழ்ந்த சமூக மாற்றங்களையும் அவற்றின் விளைவுகளையும் மனிதநேயத்துடன் காட்டுகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் அவலங்களை எடுத்துரைத்து அவர்களின் விடுதலைக்குக் குரல் கொடுக்கிறது.
எழுத்தாளர் ஏகாம்பரம்
“இதுவும் ஒரு சரஸ்வதி பூஜை” எனும் தலைப்பில் அமைந்துள்ள சிறுகதையின் நாயகனாகவுள்ள எழுத்தாளர் ஏகாம்பரத்தின் பாத்திரமானது படிப்போர் மனத்தில் பெரும் தாக்கத்தினையே ஏற்படுத்துகின்றது. இந்த எழுத்திருக்கிறதே, இது ஒரு மோகினிப் பேய் மாதிரி யாரையும் பிடிக்காது, பிடிச்சா லேசில விடாது என்று இப்பாத்திரத்திற்கு ஓர் அழுத்தம் தந்தே படைத்துள்ளார் டி.செல்வராஜ்.
தரமான படைப்புகளைத் தரவேண்டுமென்ற எண்ணத்தோடு எழுதியும் சம்பாதிக்காமல் மனைவியின் ஏசாலுக்கும் கோபத்திற்கும் ஆளாகின்றவராகக் காட்டப்படுகின்ற எழுத்தாளர் ஏகாம்பரத்தின் அறிமுகம் படித்த மாத்திரத்திலேயே அவரின் தன்மையும் நிலையும் விளங்கிடும் வண்ணம் அமைந்துள்ளது.
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற சொல்லிற்கேற்ப கதையின் இறுதியில் சம்பளம் கேட்டு வந்த தன்னை உதாசினப்படுத்திய நேரத்தில் பிள்ளை பெருமாளைக் கோபத்தோடு அயோக்கத்தனம் பண்ணுவதிற்கு ஓங்கிட்ட பணம் இருக்கும் எனக்குக் கொடுக்க இல்லையோ எனக் கண்கள் சிவக்கக் கத்திட, கணக்குப்பிள்ளை ஐயரும் பதறிட, கொடுத்த சம்பளத்தைக் கிழித்துப் போட்டுவிட்டுத் தன்மானத்தோடு குடையை இடுக்கிக் கொண்டும் அறுந்துபோன செருப்பை எடுத்துக் கொண்டும் திரும்பிச் செல்லும் ஏகாம்பரத்திற்குப் பயணக் கட்டணம் கூட கையில் இல்லை என்ற நிலையைப் பார்க்கும் போது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது உண்மையான படைப்பாளியின் வாழ்வு என்னவாகும் என்பதை விளக்கும் விதமாக அமைந்துள்ளது.
தொண்டன் ஆறுமுகம்
“தொண்டன்” எனும் தலைப்பில் அமைந்துள்ள கதையின் நாயகனான ஆறுமுகத்தின் பாத்திரத்தை அறிமுகம் செய்யும் போதும் தாக்கம் ஏற்படுகிறது. நாட்டிற்காக உண்மையாக உழைத்து மக்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்து மனைவி பிள்ளையை இழந்து தனித்து வாழும் ஆறுமுகம் ஒரு சிறந்த காந்தியவாதி. தேங்காய் வியாபாரியாக இவர் இருந்தபோது தெருத்தெருவாக முறுக்கு விற்றலைந்த பழனியப்பப் பிள்ளையோ, இன்று பெரும் பணக்காரர்களில் ஒருவர், ஆனால் ஆறுமுகமோ தேசத்திற்காக தனதத்தனையும் இழந்து நிற்பவர். இப்படிப்பட்ட உத்தமனான தொண்டரைப் பார்த்துப் பழனியப்பப்பிள்ளை இவ்வளவு காலமா உழைச்சு நீ சாதிச்சதுதான் என்ன? எனக் கேட்கும்போது ஆடிப்போனதாகக் ஆறுமுகம் காட்டப்படுகிறார்.
சேரிப் பிள்ளைகளுக்காகப் பள்ளிக் கூடத்தைக் கொண்டுவர பாடுபட்ட, எத்தனையோ பிள்ளைகளுக்குக் கட்டணமில்லா இலவசக் கல்வியைக் கொடுக்கப் பாடுபட்ட தன்னைப் பார்த்து, பிறர் தனத்தைச் சுரண்டும் பழனியப்பன் இப்படிக் கேட்டு விட்டானேயென டி.செல்வராஜ் எடுத்துரைக்கும் முறை அந்த ஆறுமுகப் பாத்திரத்தின் மீது பெரும் அனுதாபத்தை ஏற்படுத்துகிறது.
இறுதியில் தன் மகனின் வேலைக்கும் முன்னேற்றத்திற்கும் தாங்கள்தான் காரணமென்று இசக்கி எனும் பெண் வந்து பட்டு வேட்டியும் சட்டையும் தந்து செவ்வந்திப் பூ மாலை கழுத்தில் அணிவித்து சாமி என்று சொல்லி தன் மகனோடு நிற்கின்ற நிலையில் பரசவத்தில் ஆடிப் போய் நிற்கின்ற ஆறுமுகம் காந்தியைப் பார்த்து கண்கலங்கி நின்று போலோ மகாத்மா காந்திக்கு ஜே எனக் கோசமிடுகின்ற நிலையிலும் இப்பாத்திரம் வாசகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தொண்டு என்பது புகழ் சேர்ப்பதன்று என்று இப்பாத்திரம் புலப்படுத்துகிறது.
தாழம்பூ நித்தியானந்தம்
அக்கூ...... அக்கூ..... அம்மா எனக் கமறல் எடுத்து இரத்தம் கலந்த காறல் துணுக்குகளைத் துப்பிப் புலம்புகின்ற பாத்திரமாகப் படைக்கப்பட்டுள்ள நித்தியானந்தம் எனும் பாத்திரம் அனுதாபமிக்கதாகும்.
பிச்சிப் பூவைப் பார்க்கையில், நாம விழுந்த மண்கூட அடுத்தவாளுக்குப் பிரயோஜனப் படணுண்டா என்ற அன்னையின் ஞாபகத்தையும் தாழம்பூவைப் பார்க்கையில் தன்னைப் பிரிந்து வேறொருவனை மணந்து பிறந்த பிள்ளைக்குத் தனது பெயரையேயிட்டுக் கணவனை இழந்து நிற்கின்ற காதலி கல்பனாவின் ஞாபகத்தையும் நினைத்துப் பார்க்கின்றதாகப் படைக்கப்பட்டுள்ளது இப்பாத்திரம். இப்பாத்திரமும் தேசத்திற்காகவும் தொழிலாளர்களுக்காகவும் தன் குடும்பத்தையும் தன் காதலையும் இழந்து நிற்கின்ற தன்மையில் உள்ளது.
அதாவது, தேச விடுதலைக்கான காந்தியின் இயக்கத்தில் சேர்ந்து கதர்க்கொடியை எடுத்துச் செல்வதும் சேரிக்குச் சென்று அப்பகுதி மக்களோடு சேர்ந்து இருப்பதும் தெரிந்ததால் தடுத்தும் கேட்காமல் செயல்பட்டு சிறை சென்ற நிலையில் தாய் இறந்து விடுகிறாள். தொழிலாளர்களின் நலம் காக்கும் பொருட்டு செயல்பட்ட நிலையில் காதலி கல்பனாவின் பேச்சைக் கேளாததால் அதையும் இழந்து விடுகிறார். இறுதியில் கல்பா என உரைத்து, அவளின் கரத்தைப் பிடித்த நிலையில் இறந்து விடுகிறார். கதையின் தொடக்கம் முதல் இறுதி வரை இந்த நித்தியானந்தம் எனும் பாத்திரம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பொதுநலம் என்பது சுயநல இழப்பே என நினைக்கவைக்கிறது.
தேவாசீர்வாதம்
அதோ கழுத்துப்பட்டை கிழிந்து தொங்கும் கருப்புக் கோட்டணிந்து வேதாகமத்தை ஏந்திய வண்ணம் நிலத்தின் ஆழத்தையே கிழித்துப் பார்ப்பதுபோல் குனிந்த தலை நிமிராமல் வறுமையின் திருக்கோமாய் போய்க் கொண்டிருக்கிறாரே இவர்தான் உபதேசியார் தேவாசீர்வாதம் என்று “பணமும் குலமும்” எனும் கதையின் கதாநாயகப் பாத்திரத்தை அறிமுகம் செய்கின்ற உத்தி முறையில் தனித்து நிற்கிறார் டி.செல்வராஜ் அவர்கள்.
தனது மூத்த மகள் அற்புதமணியை விட, ஏழு வயது இளையவளான பாதிரியார் மகளுக்குக் கல்யாணம். ஆறு பெண் பிள்ளைகளைப் பெற்று இன்னமும் மூத்தபிள்ளைக்கு மணம் முடிக்காமலிருக்கின்ற நிலையில் திண்டாடுகின்ற இந்த தேவாசீர்வாதத்தின் பாத்திரமானது வாசகர்களின் கண்ணீரையே பெற்றுவிடும் அளவிற்குத் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது.
மாடசாமியின் மகனான மூக்கன் என்ற பெரிய கருப்பனைக் கிறித்துவ மதத்திற்கு மாற்றி யோசேப்பு எனப் பெயரிட்டு பிஷப்பிடம் சொல்லி இலவசப் படிப்பிற்கு ஏற்பாடு செய்கிறார் தேவாசீர்வாதம். இவனும் இவரின் மூத்த பெண் பிள்ளையான அற்புதமணியும் ஒன்றாக சேர்ந்து பள்ளிக்குப் போய் வருவதும் ஒருவருக்கொருவர் அன்பாயிருப்பதும் பின்னாளில் காதலை உண்டாக்கி விடுகிறது. இந்த நிலையில் குலம் வேறென்று தடுத்து விடுகிறார் தேவாசீர்வாதம். பின்னர் அந்தப்பையன் நன்றாகப் படித்து திருநெல்வேலி ஜில்லாவின் சப் கலக்டராக வரும்போது தனது மகளுக்கும் அவனுக்குமிருந்த பழைய காதல் மலராதா வளராதா என்று ஏங்குகின்ற நிலையில் காட்டப்படுகிறார். இவர் நினைத்தது போல பல நிகழ்வுகள் நடைபெற்றாலும், இறுதியில் மூக்கன் என்கிற பெரிய கருப்பன் நீதிபதி கோபால் பணிக்கர் மகள் மாதவிக்குட்டியை மணக்கப் போவதாக பத்திரிக்கை தந்திருப்பதைக் கண்டு கலங்கிப்போகின்ற இப்பாத்திரத்தின் நிலை வாசகர்களையும் கலங்கடிக்கப்பதாக உள்ளது. மேலும் சாதி வேறுபாட்டைப் பதவியும் பணமும் உடைத்தெறியும் என்கின்ற புதுக்கருத்தையும் வலியுறுத்துகிறது.
அன்னம்மா
அணை கட்டுகின்ற பணியின் போது பெருமழைக்கு உடையவிருந்த, பாதிகட்டிய அணையைக் காக்கச் சென்று பாறை விழுந்து இறந்தவர்களில் ஒருவனான வைரவனின் மனைவியாக வரும் பாத்திரம்தான் அன்னம்மா எனும் பாத்திரம். “அனாதைகள்” எனும் கதையில் அனுதாபம் மிக்கப் பாத்திரம் அது.
அம்மா அப்பா எங்கேம்மா? என மகன் கேட்பதைக் கூட கவனிக்காமல் அணையின் விளிம்புச் சுவரில் சாய்ந்த வண்ணம் நிற்கின்ற அன்னம்மாளின் மனதில் கணவன் வைரவனின் நினைவு வர தன்னையே மறந்து நிற்கின்ற தன்மையில் குழந்தையை அடிக்கின்றாள். பின்பு, குழந்தையை அணைத்துக்கொண்டு அழுகின்றாள்.
இஞ்சினியர் பார்த்தசாரதி தன் மனைவியுடன் வண்டியில் வந்து இறங்கிச் செல்லும்போது, அருகில் சென்று வணக்கம் சொல்ல இஞ்சினியரும் தனக்கு நன்றாகத் தெரிந்திருந்த சூழலிலும் கண்டு கொள்ளாமலிருக்க, அன்னமாளே நான் வைரவரின் பொஞ்சாதியென்று கூறியதையும் கேளாமல் செல்கின்றார்.
உண்மையில் அந்த அணைக்கட்டில் நான் உயிரிழந்தால் என் பெயரைக் கல்வெட்டில் பொறிப்பார்கள் என் மனைவி உனக்குச் சன்மாணம் கிடைக்கும் என்றெல்லாம் வைரவன் முன்கூட்டியே சொல்லி வைத்திருந்தான். ஆனால் அணைகட்டி முடிந்து திறப்பு நாளில் இஞ்சினியருக்கே பாராட்டுக்கள் அனைத்தும் கிடைத்ததே தவிர, உடையவிருந்த அணையைக் காப்பாற்றிய வைரவனின் பெயர் சொல்லப்படவேயில்லை. இந்த விரக்தியால் மனம் நொந்து கைக்குழந்தையோடு அவ்விடத்தைவிட்டுச் சென்ற அன்னம்மாள் தற்பொழுது அவ்விடம் வந்து கலங்கி நிற்கின்றாள். இஞ்சினியரும் கண்டுகொள்ளாது போகின்றார்.
இப்பெரும் துன்பத்தைத் தாங்கிக்கொள்ளும் பாத்திரமாகப் படைக்கப்பட்டுள்ள அன்னம்மாளைப் பார்க்கும் போது அனுதாபமே ஏற்படுகின்றது. பணமும் பதவியும் மேலென்று எண்ணப்படும் உலகில் ஓர் உண்மையான உழைப்பாளி உதாசினப்படுத்தப்படுவான் என்பதை இக்கதை விளக்குகின்றது.
முடிவுரை
இதுமட்டுமின்றி சுயேட்சை சுந்தரலிங்கம் எனும் சிறுகதையில் ஊருக்காகப் பிராது எழுதி சேரி மக்களைக் காத்த சுந்தரலிங்கம் இறுதியில் பைத்தியம் பிடித்துப்போய் நிற்கும் சூழலாகக் காட்டப்படும் அப்பாத்திரமும் பேராசை பெருங்கஷ்டம் என்பதை விளக்குவதாக அமைந்துள்ளது. மேலும் கிணறு எனும் கதையில் காக்கையன் எனும் பாத்திரத்தின் மூலமாக அரசு என்னதான் சலுகைகளை விவசாயிகளுக்குக் கொடுத்தாலும் அவை முறையாக, முழுமையாக அடித்தட்டு மக்களுக்குக் கிடைக்காது என்பதைப் புலப்படுத்துகிறார். இப்படி, தான் படைத்துள்ள ஒவ்வொரு கதையிலும் ஏதாவதொரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற கதாப் பாத்திரங்களைப் படைத்து முற்போக்குக் சிந்தனைக்கு வழிவகுத்துள்ளார் டி. செல்வராஜ் அவர்கள்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.