தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
17. திருவெம்பாவை காட்டும் ஆன்மீகப் பண்பாடு
மு. கல்பனா
ஆய்வியல் நிறைஞர்,
கந்தசாமிக் கண்டர் கல்லூரி, வேலூர், நாமக்கல் மாவட்டம்.
முன்னுரை
ஆன்மீகம் என்ற சொல், தத்துவ நூலாசிரியர்களிடையே ஆன்மாவின் உயிரின் ஈடேற்றம் குறித்த ஒருகோட்பாடு என்ற பொருளிலேயே பெரும்பாலும் வழங்கப்பெற்று வருகிறது. இவ்வழியில் தேவாரம் பாடிய மூவருக்குப் பின் மணிவாசகர் ஆன்மீக வடிவத்தில் பண்பாட்டுக் கூறுகளைத் திருவெம்பாவையில் அருமையாகப் பதித்து வைத்துள்ளார். வைணவ இலக்கியத்தில் ஆண்டாளின் திருப்பாவையும் இதுபோல் ஒப்பிடும் வகையில் சிறப்பாய் போற்றப்படுகிறது. தொன்மையான தமிழரின் பண்பாட்டு நெறிகளை இயற்கை, மனைவளம், மக்கள் மனவளம் என்ற மூன்று நிலைகளில் திருவெம்பாவை புலப்படுத்துகிறது. அவை எள்ளளவேணும் பண்பாட்டுச் சரிவுகள் இல்லாது சிறப்பிடம் பெறுகின்றன.
“பாவை பாடிய வாயால் கோவை பாடுக! என்று மணிவாசகரிடம் இறைவன் கேட்டார் என்பர். எனவே, திருவாசகத்துக்குள்ளே திருவாசகத்தின் உயிர்ப்பாய்த் திருவெம்பாவை விளங்குகிறது. இந்தப்பாவை சைவத்தின் உயிர்ப்பும் கூட! திருவெம்பாவையின் திருவுள்ளக்கிடை “சக்தியை வியந்தது” சக்திகளாவர்: அம்பிகை, கணாம்பிகை கெளரொ, கங்கை உமை, பராசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி என ஒன்பதின்பர் ‘தெசசக்திகளையும் வியந்தது’ என்றெல்லாம் திருவாசகத்தின் திருவுள்ளக்கிடக்கை புகழ்கிறது.
‘மல இருளுற்று உறங்காமல் மன்னுபரி பாகர் அருள் செலமுழுக வருக எனச் செப்பால் திருவெம்பாவை’ என்பது திருவாசக உண்மை. ‘மார்கழி மாதம் சிருஷ்டிக் காலத்துக்கு உதயகாலம் சிருஷ்டி’ சிருஷ் - பிரபஞ்ச என்பது திருவெம்பாவையின் கருத்து.
இவ்வாறு திருவெம்பாவையின் தத்துவப் பின்புலங்களைச் சைவ நூல்கள் உலகு கடந்ததாய் விவரிப்பினும், ‘வானக வாழ்வு மண்ணில் தெரியுது’ எனும் உட்கிடக்கையாகவே உலக தரிசனமாகவே மாணிக்க வாசகர் பாடுகிறார். உறக்கத்தை விட்டு பெண்களைப் பெண்களால் எழுப்பி, பெண்களின் வழியாகப் புதிய ஆன்மீகப் பண்பாடுகள் நிறைந்த உலகை மாணிக்கவாசகர் பாடுகிறார் என்பதுதான் திருவாசக உண்மை. புதியதோர் ஆன்மீக உலகினை மானுடசக்திகள் - மாதர்கள் சிறிய பெண்கள் உருவாக்க விரும்பும் இலட்சியம் திருவெம்பாவையின் அடிநாதம். இந்தவகையில் “மாதர்சக்தியை வியந்தது” என்பதில் யதார்த்தமும் உள்ளது. சைவ மேன்மையும் உள்ளது.
‘மாதே உறங்குதியோ? வன்செவியா உன்செவி? மாதேவனின் திருவடி வாழ்த்துதல்கள் ஆகாயம் பூமி, எங்கும் அவள் தேசன் அவன் சிவலோகன் சிற்றம்பலத்தார் ஈசன்! வா! வந்து வாழ்த்து! ஈசன் பழ அடியார்களோடு, புத்தடியோகமாப் புறப்படுவோம். நம் சித்தம் அழகியவர்கள் சிவனை பாடுபவர்கள் வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வரட்டும்: புதிய புதுமைக்கும் புதியன்: சிவனைப் பிரானாகப் பெற்ற சீரடியோம்: சிவனடியார் தாள் பணிவோம்: அவர்க்கே பாங்காவோம்: அன்னவரே நம் எனவர் சிவனுக்கு ஏது ஊர்? சிவனுக்கு என்று ஏது பேர்? அவனுக்கு யார் உற்றார்? யார் அயலார்? அவனைப் பாடும் பரிசே பரிசு! பாவையீர் வாருங்கள்! என்று அழைக்கும் ஒரு சைவ அண்டம், ஒரு சைவப் புத்துலகம் இளைய பெண்களால் சிருஷ்டிக்கப்படுகிறது. மாணிக்க வாசகரின் வாசக வெற்றி இதுதான்! திருவெம்பாவையின் அடிநாதமும் இதுதான்.
இதனை இயற்கையோடு இயந்த வாழ்வில், பெறும் மனவளத்தின் மூலம் அவர்கள் சாதிக்கிறார்கள். உறக்க அறைகளை உதறி எறிந்துவிட்டுப் புதிய சொர்க்கத்தை வானகத்தை வாசலில், குளத்தில், நீராட்டில், புதிய பூமியில் படைக்கிறார்கள். இதில் சைவத்தின் ஆன்மீக தேசியம் திருவாசக உயிர்ப்பாய் விளங்குவதைக் காண முயல்கிறது இக்கட்டுரை.
இயற்கையின் வளம் இறைநெறி காட்டும் பண்பாடு
இயற்கையின் வளமையில் இறைவனைத் தரிசனம் செய்கின்ற பண்பாட்டு பூமி நம்பூமி, தலந்தோறும் சென்று பாடிய அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோர் இயற்கை வளமையை வியந்துபாடி, அங்கிருக்கும் இறைவனே எனப் போற்றப்படுவதைக் காணலாம்.
“காலையிற் கதிர் செய்மேனி கங்குலிற் கறுத்த கண்டர்
மாலையில் மதியஞ்சேர்ந்த மகுடத்தர் மதுவும் பாலும்
ஆலையிற் பாகும்போல அண்ணித்திட் டடியார்க் கென்று
வேலையின் அமுதர் விழி மழலையுள் விகிர்த னுரே”
என்னும் பாடலில் பகலோன் நிறத்தைச் சிவனின் திருமேனியாகவும், இரவின் நிறத்தை கறுத்த கண்டமாகவும், மாலையில் உள்ள வெண்ணிலாவைத் தலையில் உள்ள மகுடமாகவும், உருவகப்படுத்தியுள்ளார்.
சைவ சமய இயற்கையோடு இணைந்த வாழ்க்கையைப் போற்றுவது. மணிவாசகரும் புனல் பொங்கி வெளியேறும் மடுவினில், குவளை மலரும், செங்கமல மொட்டும், குருகினம் போன்ற மென்மையான திருமேனியையும், நீர்நிலையில் வசிக்கும் பாம்புகளையும், வெளியில் இருந்து நீர் வருதலையும் குறித்து எழுதுமிடத்துப் பிராட்டியும், சிவபெருமானும் போல் உள்ளனவாக மணிவாசகர் திருவெம்பாவையில் குறிப்பிடுகிறார்.
“பைங்குவளைக் கார்மலராய் செங்கமலப் பைம்போதல்
அங்கங் குறுகினத்தால் மின்னு மரவத்தால்
தங்கண் மலங்கழுவுவார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றி சைந்த”
இயற்கையை முன்னிறுத்திய ஆன்மீகப் பண்பாட்டைக் காட்டுவதாக இது அமைகின்றது. மேலும் உமையவளைக் குறிக்குமிடத்து,
“முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள்
என்னத் திகழ்ந் தெம்மை யாளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தோம் பிராட்டி திருவடி”
இயற்கையின் வளர் நிலைகளுக்குள் இறைவனைக் காண்கிற தமிழர் பண்பாட்டு நிலை இவற்றால் வெளிப்படுகின்றது.
நிலவளம்: ஆன்மீகப் பண்பாடு
அறம் வளர்க்கும் வளமையுடைய நிலத்தை அடிப்படையாக வைத்துதான் மனித மனம் செம்மைப்படும் நாடானாலும், காடானாலும், மேடானாலும், பள்ளமானாலும்,
“எவ்வழி நல்லவ ராடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே”
என்பார் ஔவையார்.
மணிவாசகர் திருவெம்பாவையில் மருத நில மக்களின் மன இயல்பையும், பசியின்றி வாழும் நிலையையும், இறைவழி நாட்டத்தையும் திருவெம்பாவையில் அழகாக விரித்துரைக்கின்றார். பசியின் கொடுமையினின்று தப்பித்தவர்களால்தான் தெய்வத்தின் மீது நாட்டத்தைக் கொள்ள முடியும். இக்கருத்துக்கு அரண் சேர்க்கும் வகையில்,
“மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரன்ன”
என்றும்,
“பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடே லோரெம்பாவாய்”
என்றும்,
“வண்டார்ப்பப் பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தியிருஞ்சுனை நீராடேலோ ரெம்பாவாய்”
என்றும் நிலவளம் முன்னிறுத்திய ஆன்மீகத்தை, பெண்மையினைப் போற்றி வழங்கும் சைவ சமய அறத்தைத் திருவெம்பாவையில் காண முடிகின்றது.
மனவளம்: ஆன்மீகப் பண்பாடு
வாய்மை ஒரு சிறந்த அறம், ஒருவன் பொய் பேசாமையாகிய அறத்தை இடைவிடாமல் எப்பொழுதும் செய்து வந்தால் அவன் மற்ற அறங்களைச் செய்ய வேண்டியதில்லை என்பார் வள்ளுவர். சுயநலம் சார்ந்த, பிறர் நலம் போற்றாதவர்கள், பொய் பேசுவதனால் மனம் மாசுபடுகின்றது. இவர்களின் மனத்தில் இறைவன் புக மாட்டார் என்பதனை,
“பொய்யார் மனத்துப் புறம்பாவான் காண்”
பொய் சேர்ந்த சிற்தை புகாதாய் போற்றி”
என்று உணர்த்துகின்றார் நாவுக்கரசர்.
மணிவாசகரும் மனவளம் மூலமாக நன்னெறி உய்யும் சமயத்தை, நானிலம் மகிழும் அறநெறியை, உயிராய்திகழும் தமிழர் பண்பாட்டைத் திருவெம்பாவையில் உணர்த்துகின்றார்.
பிறரையும், பக்தியின்பால் ஈர்க்கும் நிலையை, அடுத்தவர்க்கு அருள்தன்மை கிடைக்க வேண்டும் என முயலும் முயற்சியைத் தமது முதல் பாடலிலேயே பதியமிடுகிறார். மணிவாசகர் ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியை யாம் பாடக் கேட்டு, நீயும் எழுந்துபாடவேண்டும் என வேண்டுமிடத்து,
“மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்”
என்ற வரிகளில் பிறர் நலம் போற்றும் மனவளம் வெளிப்படுகிறது.
ஒரு பெண்ணைக் கூட விட்டுவிடாமல் அழைக்கும் அன்புப் பேருள்ளத்தில் பாவைப் பெண்களின் மார்கழி தரிசனம் தெரிகிறது. ஒருத்தி பெறும் சைவப் பேற்றை வண்ணக்கிளிமொழியார் அத்தனை பேருக்கும் வழங்குவதில்,வழங்க முயல்வதில், தான் பெற்ற பேற்றை வையகமும் பெற வேண்டும் எனும் ஆன்மநேயத் துடிப்பு எல்லை கடந்ததாய் விளங்குகிறது. சிவனுக்கு ஏது ஊர்? ஏது பேர்? யார் உற்றார்? யார் அயலார் என்பதன் மூலம் திருவெம்பாவைப் பெண்களுக்கும் தனித்த ஊரில்லை. தனித்த பேரில்லை. அவர்களுக்கும் உற்றவர்கள் இல்லை. அயலவர்கள் இல்லை. ஒரு பொது உலகம் சைவ உலகம்! பாவை சக்திகள் சாதி மதம் கடந்த உற்றவர் அயலவர் என்னும் பேதங்கள் கடந்த மேன்மைமிக்கவர்கள்! இத்தகைய உலக சிருஷ்டிகளை மணிவாசகர் தாம் கண்ட பாவையர் மூலம் ஏற்படுத்தி அந்த சக்திகளை வியக்கிறார். அந்தப் பாவைகளைப் பாடுகின்றார். சித்தம் அழகியார்க்கே இது புரியும்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.