தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
45. சங்க இலக்கியம் - பதினெண்கீழ்க்கணக்கு அறநெறிகள் - ஒப்பீடு
ப. சித்ரா
முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழாய்வுத்துறை,
பெரியார் ஈ. வெ. ரா. கல்லூரி (தன்னாட்சி), திருச்சி.
முன்னுரை
கி. மு. 300 க்கும் கி. பி. 200 க்கும் இடைப்பட்டது கடைச்சங்க காலமாகக் கருதப்படுகின்றது. அற இலக்கியக் காலமான சங்கமருவிய காலத்தை கி. பி. 200 முதல் கி. பி. 700 வரையிலான காலமாகக் கொள்ளலாம் இவ்விரு காலக்கட்டத்தில் வெளிவந்த நூல்கள், அக்காலச் சூழலுக்கேற்ற கருத்துக்களை எடுத்தியம்புகின்றன. சங்கப் பாக்கள் காதலையும் வீரத்தையும் இயற்கைப் பின்புலத்துடன் பாடுகின்றன; பதினெண் கீழ்க்கணக்கிலுள்ள அறநூல்களோ வாழ்வியல் அறங்களை முன்னிறுத்தி, சமூதாய வாழ்வியல் முறைகளைப் பேசுகின்றன. ஆயினும் சங்க நூல்கள், அவை அகமாயினும் புறமாயினும், அறக்கருத்துக்களை ஆங்காங்கே தூவிச் செல்கின்றன.
புறநானூற்றில் அறத்தை உணர்த்தும் பாடல்கள் மிகுதியாக உள்ளன. நானூறு பாடல்களில் நீதிக் கருத்துக்களைக் கூறும் 39 பாடல்களும், அறத்தின் ஆற்றலை விளக்கும் 33 பாடல்களும், நிலையாமையை உணர்த்தும் 40 பாடல்களும், ஆக நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் அறத்தை விளக்குகின்றன.
புறப்பாடல்களில் மட்டுமின்றி அகப்பாடல்களிலும் தோழி, செவிலி, பாங்கன் போன்ற மாந்தர்களின் வழி அறக்கருத்துக்கள் கூறப்படுகின்றன. சங்க இலக்கிய அறநெறிகள் சமயச் சார்புடையன அல்ல ஆனால் கீழ்க்கணக்கு நூல்கள் சமயச் சார்புடையன வைதீகம், பௌத்தம், சமணம் போன்றவற்றின் சமயக் கொள்கைகளை இந்நூல்கள் வலியுத்துகின்றன. இவற்றுள் கொல்லாமை, கள்ளுண்ணாமை, காமம் இன்மை, கள்ளாமை போன்ற அறக்கருத்துகள் சமயக் கருத்துக்களாகவே முன்வைக்கப் பெற்றுள்ளன.
சங்க இலக்கியங்களிலும், அறஇலக்கியங்களிலும் ஒருமித்த கருத்துக்களும், முரண்பட்ட கருத்துக்களும் விரவிக்கிடக்கின்றன. அவற்றை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஒற்றுமை
வாழ்வியல் அறங்கள்
பண்டைய தமிழர் அறத்தோடு பொருந்திய வாழ்வினை மேற்கொண்டனர். கணவனும், மனைவியும் இணைந்து இல்லத்தில் இருந்து அறங்கள் புரிவதே இல்லறம் ஆகும். இல்லறத்தில் இருவரும் இணைந்து ஆற்றவேண்டிய அறம் விரும்தோம்பல் ஆகும்.
தம்முடைய சுற்றத்தார்களுடன் விருந்து உண்டு எஞ்சிய உணவினைப் பெருந்தகுதிப்பாடு உடைய தலைவன் நீ இடுவதால் யான் உண்ணுதல் உயர்ந்தது என்ற கருத்தினை.
“விருந்துண் டெஞ்சிய மிச்சில் பெருந்தகை
நின்னோ டுண்டலும் புரைவ தென்றாங்கு”
என்ற குறிஞ்சிப்பாட்டு அடிகள் வழி அறியலாம்.
விருந்தாக வந்தவர்க்கு உணவளித்து எஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன் விளைநிலத்தில் விதைய விதைக்க வேண்டுமா? என்ற கருத்தை,
“வித்தும் இடல் வேண்டும கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்”
(குறள். 85)
என்று திருக்குறள் முன்வைக்கிறது.
“ஆற்றுதல் என்பதொன றலந்தவர்க் குதவுதல்”
(கலி, 133-6)
எனக் கலித்தொகை அடியும்,
“வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை”
(221)
என்ற குறளும்
“அலந்தார்க்கு ஒன்று ஈந்த புகழும்”
(திரி.41)
“இல்லார்க்கு ஒன்று ஈயும் உடைமையும்
(திரி.68)
என்ற திரிகடுக அடிகளும் வறியோர்க்கும், ஏழைகளுக்கும் வழங்கும் வள்ளன்மையே நல்லோரின் குணங்களாகக் கூறுகின்றன.
அரசியல் அறங்கள்
நாட்டு மக்களைத் துன்பமின்றிக் காப்பதையும், செங்கோன்மையுடன் அரசாட்சி செய்வதையும் தம் கடமையாகவும் அறமாகவும் கொள்வதே அரசியல் அறமாகும்.
முறை என்று சொல்வது ஒருவர் குற்றம் செய்யும் போது அவர் நமக்கு எத்தகையவர் என்று நோக்காது அவர் செய்த குற்றம் எது என்று ஆராய்ந்து தண்டனை வழங்குவதே ஆகும் (கலித்தொகை 133:13) இதே கருத்தினை பின்வரும் குறள் வழியும் அறிய முடிகிறது. தன் கீழ் வாழ்வார் ஏதேனும் குற்றம் செய்துவிட்டால் குற்றத்தின் தன்மையை ஒருபக்கம் சாராது நடுவு நிலைமையுடன் ஆராய்ந்து உரிய தண்டனையைத் தவறாது வழங்குதலே முறைமை ஆகும்.
“ஒர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை”
(குறள்.541)
இன்மொழி பேசி எங்களுக்கு இனியவனாக என்று அரசர்க்கு அறிவுறுத்தும் அறநெறியினை
“இன்சொலென் பதத்தை யாகுமதி பெரும” என்ற புறநானூறு 40-9 ஆம் பாடல் அடி விளக்குகின்றது.
“காட்சிக் எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்
(குறள்.386)
என்ற குறளும்
நிதி மற்றும் நீதி கேட்டு வருவாரும் நேரில் சந்திப்பதற்கு வாய்ப்பு அளிப்பவனாய் இனிமை அல்லாத சொற்களைப் பேசாதவனாய் உள்ள அரசனையே உலகம் உயர்த்திப் பேசும் என்று வலியுறுத்துகின்றது.
சமுதாய அறங்கள்
சமுதாய என்பது தனி மனிதர்கள் சேர்ந்து வாழும் கூட்டமைப்பாகும். தனி மனிதர்கள் செய்யும் அறங்கள் சமுதாய மேம்பாட்டை உருவாக்குகின்றன. சமுதாயத்தில் மக்களால் கடைபிடிக்கப்படும் அறங்கள் சமுதாய அறங்களாகும்.
செய்நன்றி கொன்றவர்கள் தப்ப வழியே இல்லை என்று புறநானூறு (34:6-7)எத்தகு உதவியை ஒருவர் மறந்தாலும் வாழ்வு உண்டு. ஆனால் ஒருவர் செய்த செய்ந்நன்றியை மறந்தவர்க்கு வாழ்வு இல்லை என்பதை.
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு” (குறள்.110)
என்று குறளும் வலியுறுத்துக்கின்றது. பிறர் செய்த நன்றியின் பயனை மறவாது இருத்தல் வேண்டும் என்ற அறத்தை இனியவை நாற்பது (30) அறிவுறுத்துகிறது.
கல்வி
வேறு வேறு வகையாக உள்ள நான்கு குல மக்களுக்குள்ளும். கீழ்ச் சாதிக்காரன் ஒருவன் கல்வி அறிவு உடையவனாய் இருந்தால், மேல் சாதியான் அவனிடம் சென்று பணிந்து கற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். எனவே இத்தகைய சிறப்புடைய கல்வியை கற்றுத் தெளிதல் வேண்டும் என புறம் (183:8-10) விளக்குகின்றது.
சமுதாயத்தின் கடைப் பிரிவில் பிறந்தவர் ஆயினும் நன்கு கற்றறிந்தவரை மேன்மையான இடத்தில் வைத்துப் போற்றுவர், என்பதை
“கடைநிலத் தோராயினுங் கற்றறிந் தோரைத்
தலைநிலத்து வைக்கப் படும” (குறள்.133)
என்று குறள் உரைக்கின்றது. எனவே ஒருவரது தகுதியை அவர் பிறந்த இடம் தீர்மானிக்காது என்பது உணர்த்தப்படுகின்றது.
ஒரே குடியில் பிறந்திருந்தாலும் மூத்தபிள்ளை என்று எண்ணி வருக என்று அழைக்காது, அக் குடும்பத்தில் கற்றறிந்த பிள்ளையையே அரசனும் விரும்புவான் என்பதை, புறம் 188 ஆவது பாடலிலும் படிக்காத மூத்தவனைப் பாராட்டாது படித்த இளையவனைப் பாராட்டுவர் என்று நான் மணிக்கடிகை 63 ஆம் பாடல் வழியும் அறியமுடிகிறது.
வேற்றுமை
போரும் வீரமும்
சங்க இலக்கியங்களில் புறப்பொருள் இலக்கியங்கள் போரையும், வீரத்தையும் போற்றி உரைக்கின்றன. சங்க இலக்கியங்களின் தொடர்ச்சியாக எழுந்த அற இலக்கியங்களில் முதலாவதாக வைக்கப்பட்டுள்ள திருக்குறளில் “விழுப்புண் படாத நாளெல்லாம்” என்ற குறள் (776) போரின் சிறப்பையும், வீரத்தையும் போற்றியுள்ளது. திருக்குறளை அடுத்து வந்த அறநூல்கள் போரைப் பாடாது வாழ்வியல் அறத்தையும் சமுதாய அறத்தையும் எடுத்துரைக்கின்றன. போர் பற்றிய பாடல்கள் சங்க இலக்கியத்தில் இடம்பெற அன்பு, அறம், இன்னா செய்யாமை போன்ற கருத்துக்கள் அறநூல்களில் காணப்படுகின்றன.
ஒழுக்கம்
சங்க காலத்தில் பரத்தமை ஒழுக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கருதமுடிகிறது. அதுபோல சூதாடுதலும் ஏற்கப்படுகிறது. அறநூல்கள் காலத்தில் பரத்தமை, சூதாடுதல் போன்றவை கண்டிக்கப்படுகின்றன.
‘வரைவின் மகளிர்’ எனும் அதிகாரம் (920) ஆவது குறளில் வேசையர், கள், சூது போன்றவற்றால் பொருளை இழக்க நேரிடும் என்று விவரிக்கப்படுகிறது.
ஆசாரக்கோவை ‘புகழ் வேண்டுவோர் வேசையர் அழகை நோக்கமாட்டார்’ (51) என்றும் நல்லோர் பரத்தையர் வாழும் சேரியில் அல்லது அவர்கள் இருக்கும் இல்லத்திற்கு அருகில் குடியிருக்கமாட்டார் (82) என்றும் கூறுகிறது.
திணை ஒழுக்கம்
சங்க இலக்கியங்களில் அன்பின் ஐந்தினை ஒழுக்கம் உயர்வாகப் போற்றப்பட்டது அறநூல்கள் காதல் ஒழுக்கத்தை நேரடியாகக் கண்டிக்கவில்லை இருப்பினும் “அறநூல்களின் பிரசாரம் ஐவகை நிலங்களின் வாழ்க்கை முறையைப் பாதித்து ஐந்தினை மரபைச் சிதைத்தது. ஆறலைத்தல். சூறையாடுதல் கண்டிக்கப்பட்டதால் மருத ஒழுக்கமும், பரத்தமை கண்டிக்கப்பட்டதால் மருத ஒழுக்கமும், உயிர்க் கொலையாகிய மீன் பிடித்தல் விலக்கப்பட்டதால் நெய்தல் ஒழுக்கமும், போர் ஒதுக்கப்பட்டதால் வினைவயிற் பிரிதலுக்கு இடமின்றி முல்லை ஒழுக்கமும் பாதிக்கப்பட்டன” என்பார் ஆ. வேலுப்பிள்ளை. பாலை, நெய்தல் நிலவாழ்க்கை முறைகளைக் குறை கூறுவனபோல, “சுரம் அரிய கானம் செலவு இன்னா”, “வலை சுமந்து உண்பான் பெருமிதம் இன்னா” என்று இன்னா நாற்பது குறிப்பிடுகின்றது.
ஊன் உண்ணல் - கள் உண்ணல்
சங்க காலத்தில் ஊன் உண்ணலும், கள் உண்ணலும் தவிர்க்க இயலாத நிலையில் இருந்தன, கள் நிறைய வழங்கியும் ஊன் உணவை அளித்தும் வீரரையும் புலவரையும் அரசர்கள் மகிழ்வித்தனர். இதனை,
“மட்டுவாய் திறப்பவும் மைவிடை வீழ்ப்பவும்
அட்டான் றானாக் கொழுந்துவை யூன்சோறும்” (புறம்.113)
என்று புறநானூறு கூறுகிறது.
திருவள்ளுவரோ ஊனுண்ணுதலைக் கண்டித்துப் ‘புலால் மறுத்தல்’ அதிகாரமும், கள்ளுண்ணாமைக்குத் தனி அதிகாரமும், வகுத்துள்ளார்.
இவ்வாறாக சங்க இலக்கியங்களில் போற்றப்பட்டவை அற இலக்கிஙங்களின் காலத்தில் போற்றப்படாது கண்டனத்திறகு உள்ளாகிய நிலையைக் காணமுடிகின்றது.
முடிவுகள்
* சங்க இலக்கியங்களில் அறம், புறத்தின் ஒரு கூறாக விளங்கியது, பதினென்கீழ்கணக்கு நூல்களில் அறம் ஒழுக்கமாக கொள்ளப்பட்டது.
* சங்க இலக்கியப் புறப்பாடல்களில் நேரடியாகவும், அகப்பாடல்களில் அகத்தினை மாந்தர்களின் வழியாகவும் அறநெறிக் கருத்துக்கள் கூறப்பெற்றன.
* சங்க இலக்கியங்கள் வீரத்தையும், காதலையும் போற்றியுள்ளன. பதினெண்கீழ்க் கணக்கில் உள்ள அறநூல்கள் வாழ்வியல் அறங்கள், சமுதாய அறங்கள் ஆகியவற்றை மிகுதியாக விளக்கியுள்ளன.
* அறநூல்களில் அன்பின் ஐந்திணை ஒழுக்கம் சிறப்பாகப் போற்றப்படவில்லை.
* சங்க காலத்தில் வழக்கில் இருந்த ஊன் உண்ணல், கள் உண்ணல், பரத்தமை போன்றவை அறநூல்களில் கடியப்பட்டுள்ளன.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.