தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
46. வண்ணங்கள் குறித்த மனித சிந்தனை வளர்ச்சி
முனைவர் ப. சிலம்பரசன்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
கே. எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), திருச்செங்கோடு.
முன்னுரை
வண்ணங்கள் நம் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து அமைந்திருக்கின்றன. ஆதிகாலந்தொட்டே மனிதன் இயற்கையில் காணப்படும் வண்ணங்களால் கவரப்பட்டு அதை ரசித்தும், அவற்றை இனங்கண்டு பயன்படுத்தியும் வந்துள்ளான். பண்டைக் குடிகள் வண்ணங்களால் ஈர்க்கப்பட்ட தன்மையினை ஓவியங்கள், சங்கச் செய்யுள்கள், சாயக்கலை ஆடை, அணிவகைகளின் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். மாதர்கள் வண்ணங்களுக்குச் சில மதிப்பீடுகளை ஏற்றி வைத்து, அவற்றுக்கான பண்புக் கூறுகளை குறியீடாக வைத்திருப்பதை இலக்கியங்களின் வாயிலாகக் காண முடிகிறது.
வண்ணம் - பெயராய்வு
வண்ணம் எனும் இச்சொல் தொல்காப்பியர் காலம் முதற்கொண்டே பயின்று வந்துள்ளது. தொல்காப்பியர் இச்சொல்லைப் பொருண்மை அடிப்படையில்,
1. இசைத் தொடர்பான குறிப்புகளை வெளிப்படுத்துதல்
2. நிறம் பற்றிய குறிப்புகளை வெளிப்படுத்துதல்
என இருவகை வண்ணங்கள் பற்றிக் குறிப்பிடுகிறார்.
நிறம்
வண்ணத்தைக் குறிக்கும் சொற்களுள் ‘நிறம்’ என்பது முக்கியமான ஒன்றாகும். தொல்காப்பியக் காலத்தில் ‘நிறன்’ என்ற சொல் மிக அருகியே பயன்பட்டுள்ளது.
“பசப்பு நிறனாகும்” (தொல்.உரி.10)
எனும் நூற்பாவின் மூலம் இச்செய்தியை அறியலாம்.
வண்ணம், நிறம் என்னும் இரு சொற்களும் ஒத்த பொருள் உணர்த்தும் வகையில் வழங்கப்பட்டு வந்துள்ளது. இருப்பினும், வண்ணம் எனும் சொல்லாட்சியே தொன்மை நிலையில் தொல்காப்பியம் தொடங்கி இன்றுவரை வழங்கப்பட்டு வரும் சிறப்பை உணரமுடிகிறது.
வண்ணம் அறியப்படுதல்
வண்ணம் என்பது ஒளியோடு தொடர்புடைய அறிவியலாகும். ஒளியின் வேறுபாடுகளே வண்ணம் என்று வடிவெடுக்கின்றன. இந்த வண்ணங்கள் இல்லாவிடில் ஒளியை அடையாளம் காண இயலாது. வண்ணங்களைப் பற்றி ஆராயும் இயலை ‘Chromatics’ என்பர். தமிழில் இதனை ‘வண்ணவியல்’ எனலாம்.
ஐம்புலன்களுள் ஒன்றான கண்ணிலுள்ள ஒளியுணர் நரம்புகளில் ஒளி விழும்போது உண்டாகும் ஒருவகையான உணர்வே வண்ணத்தை அடையாளப்படுத்துகிறது. இயற்கையாகவே படைப்பில் உள்ள வண்ணங்கள் மற்றும் சாயமிடல் (Dyeing), ஓவியந்தீட்டல் அல்லது அச்சிடல்மூலம் நிறமிகளைக் (Pigments) கொண்டு உருவாக்கப்படும் வண்ணங்கள் அனைத்தும் கண்ணில் விழும் ஒளியின் தன்மையினால் உருவாக்கப்படுகின்றன.
வண்ணங்களும் குறியீடுகளும்
மனிதன் தனது கருத்துகளைப் பிறரிடம் பரிமாறிக் கொள்ளும் கருவியாக மொழியைப் பயன்படுத்துகிறான். இம்மொழியினை இருவகையாகப் பகுக்கலாம். ஒன்று சைகைமொழி அல்லது குறியீட்டு மொழி; மற்றொன்று பேச்சுமொழி. மேற்கூறியவற்றுள் குறியீட்டு மொழிகளின் வகைகளுள் ஒன்றாக நிறத்தைக் குறிப்பிடலாம். நிறத்திற்கும் மனிதனுக்குமான உறவு ஆதிகாலம் முதல் இன்று வரை மிக நெருக்கமான ஒன்றாகத் திகழ்கிறது. இலக்கியங்களில் இந்நிறங்களைக் குறயீடாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
‘நிறம் என்ற சொல் தொடக்கக் காலத்தில் பொதுத்தன்மையில்லாமல் சிவப்பை மட்டுமே பொருளாகக் கொண்ட இரத்தத்தின் நிறத்தையே குறித்தது’ என்று கோசம்பி குறிப்பிட்டுள்ளார். சங்க இலக்கியத்தில் செந்நிறம் குறித்த பதிவுகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. சங்க அக இலக்கியத்தில் மகளிர்தம் பாலியல் உணர்வை வெளிப்படுத்த ‘செந்நிறக் குறியீடு’ பயன்படுத்தப்பட்டுள்ளது.
செவ்வணி குறியீடு
தலைவன் பரத்தையர் காரணமாகப் பிரிந்த பிரிவின்கண் தலைவிக்குப் பூப்புத் தோன்றிய பன்னிரு நாட்களும் தலைவியை விட்டுப் பிரிந்துய்தலும் கூடாது என்கிறது தொல்காப்பியம்.
“பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும்
நீத்தகன் றுரையார் என்மனார் புலவர்
பரத்தையிற் பிரிந்த காலையான”
(தொல்.கற்.46)
மேற்கண்ட நூற்பாவிற்கு; ‘தலைவிக்குப் பூத்தோன்றி மூன்று நாள் கழித்த பின்பு பன்னிரண்டு நாளும் நீங்குதல் அறமன்று. இதனாற் பயன் என்னயெனின் அது கருத்தோன்றுங்காலம்’என்று உரை வகுத்துள்ளார் இளம்பூரனார்.
தலைவி பூப்பெய்திய செய்தியைத் தலைவனுக்கு உணர்த்த சேடியர் கோலங்கொண்டு பரத்தையர் மனைகட் செல்வாள். இத்தகைய சேடியர் கோலம் தான் செவ்வணி. இக்குறியீடுகள் தான் தலைவி பூப்பெய்திய செய்தியைத் தலைவனுக்கு உணர்த்தும். மேலும் பரத்தையற் பிரிவின் வகையில் உணர்த்தி உணரும் ஊடற்குரிய கிளவிகள் பதினொன்றில்.
“செவ்வணி யணிந்து சேவடியை விடும்புகழி”
(நம்பி.205:7)
எனும் பாடலடியின் மூலம் செவ்வணி குறியீடு நிகழ்வு புலப்படுத்தப்படுகிறது. எனவே பூப்புச் செய்தியை அறிவிக்க ‘சிவப்பு நிறம்’ பயன்படுத்தியிருப்பது இலக்கணத்தின் வாயிலாகத் தெளிவாகிறது.
சங்க இலக்கியத்தில் செவ்வணிக் குறியீட்டு நிகழ்வு கற்புக்கால ஊடலில் பரத்தையர் பிரிவின்கண் தோன்றியதை,
“தோள்புதிய உண்ட பரத்தை இல்சிவப்புற
நாள்அணிந்து உவக்கும் சுணங்கறை யதுவை”
(பரி.9:19-20)
என்று பரிபாடல் உணர்த்துகிறது. தலைவி பூப்பெய்திய செய்தியைப் பெண்கள் வண்ண நடையில் நாகரிகமாக வெளிப்படுத்த சிவந்த அனிகலன்களையும் சிவந்த ஆடையையும் தோழியை அணியச் செய்து தலைவனிடம் பரத்தைச்சேரி வழியே அனுப்பினாள் என்று பாடப்பட்டுள்ளது. இத்தகைய செயலில் ‘செவ்வணி நிகழ்வு’ குறிப்பாகப் பதிவாகியுள்ளது.
மேற்கூறிய கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் நற்றிணைப் பாடலில்,
“எம் நயந்து உறைவி ஆயின் யாம் நயந்து
... ... ... ... ... ஒண்செங் காந்தள்
வாழை அம்சிலம்பின் உம்பு படக்குவை,
யாழ் ஓர்த்தன்ன இன்குரல் இனவண்டு”
என்ற பாடலில் தலைவி பூப்பு நீராடிய செய்தியைப் பரத்தையர் உடனிருக்கும் தலைவனுக்கு உணர்த்தும் வகையில் தனது தோழிக்குச் செந்நிற ஆடை, அணிகலன்கள், மலர்கள் ஆகியவற்றால் ஒப்பனை செய்து அவளைப் பரத்தையர் வீதியின் வழியே செல்லச் செய்கிறாள். தோழியின் இச்செவ்வணி அடையாளத்தைக் கண்ட தலைவன் காலம் தாழ்த்தாது தலைவியுடன் வந்து சேர்ந்து மகிழ்வான் என்பது செவ்வணிக் குறியீடு மூலம் புலனாகிறது. மாதவிலக்குக் காலங்களில் பெண்கள் சிவப்பு நிறத்தை அணிந்து கொள்வது மேற்கண்ட செய்திகளின் மூலம் அறியமுடிகிறது. இதுபோன்ற வழக்கம் பழங்குடி இன மக்களிடமும் இருந்தமையை அறியமுடிகிறது.
“ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பல பழங்குடி மக்கள் மாதவிலக்கு காலத்தின்கண் பெண்களுக்குச் சிவப்பு நிறத்தைப் பூசிவிட்டார்கள். கபிர் பெண்களும் அப்படியே. இந்தியாவில் மாதவிலக்கு கண்ட பெண்கள் அந்த இரத்தத்தில் தோய்ந்த கைக்குட்டையைக் கழுத்தில் கட்டிக் கொண்டார்கள்”
என்ற இக்கருத்தின் மூலம் புலவர்கள் தாம் கூறவந்த செய்தியைச் சிவப்பு நிறக் குறியீட்டின் வழி வெளிப்படுத்தியுள்ளனர் என்பதை அறியலாம்.
பொன்மை நிறக் குறியீடு
சங்க இலக்கியத்தில் பசலை நோய் பெரும்பாலும் களவொழுக்கத்தில் தலைவியின்பால் நிகழ்வதாகும். இதற்கென ஒரு தனி நிறம் இல்லை. தலைவியின் இயல்பான நிறத்தில் காணப்படும் மாற்றமே பசப்பு நிறமாகும். களவொழுக்கத்தில் தலைவன் பிரிவிற்கு ஆற்றாத தலைவி அவன் வரையாது விடுவானோ என்னும் அச்சமிகுதியும் அவள் உடல்நிற வேறுபாட்டிற்குக் காரணம் எனக் கூறலாம். தலைவன் தான் சென்ற பருவத்தே வராமையால் வருந்திய தலைவி, தான் பசலையுற்ற நிலையையும் பருவம் வந்தமையையும் யாரேனும் தலைவனிடம் கூறினால் நலமாகும் என்று தோழிக்குக் கூறுகிறாள்.
“நீர்வார் பைம்புதர் கலித்த
மாரிப் பீரத்து அலர்சில கொண்டே”
எனும் இவ்வடிகள் மூலம் தலைவியின் பாலியல் உணர்ச்சிப் புறநிலைக் குறியீடுகளின் வாயிலாக வெளிப்படுத்துகிறது. இவ்வாறு குறியீடுகளின் வாயிலாக வெளிப்படுத்துவதற்கு இங்கு பொன்மை நிறம் பயின்று வந்துள்ளது. தலைவன் பிரிவால் தலைவிக்குப் பசலை நோய் வந்துவிட்டது. இதைத் தலைவனிடம் சென்று தோழியை உணர்த்தச் செய்வதன் பொருட்டு பீர்க்க மலரைக் காட்ட வேண்டும். இத்தகைய பீர்க்க மலரின் நிறம் தலைவனுக்குப் பசலை நோயின் நிறத்தை உணர்த்தும். எனவே இங்கு தலைவியின் பாலியல் உணர்வைப் புறநிலைப் பொருள்கள் வழி அதாவது பொன்மை நிறக் குறியீடு வழி தலைவனுக்கு உணர்த்தும் நோக்கு அறியமுடிகிறது.
வண்ணங்களும் ஓவியக் கலையும்
மனித இனம் தோன்றிய காலத்திலிருந்து அவர்கள் வளர்த்தெடுத்த ஒவ்வொரு நாகரிகத்திலும் வண்ணங்கள் ஏதோவொரு வகையில் இணைந்து வந்துள்ளன. ஆதிமனிதன் தான் வரைந்த குகை ஓவியங்களுக்கு வண்ணங்கள் தீட்டப் பச்சிலை சாறுகளைப் பயன்படுத்தத் தொடங்கிய காலத்திலிருந்தே மனித வாழ்வில் வண்ணங்கள் பற்றிய சிந்தனை வளரத் தொடங்கியது.
மக்கள் வாழும் உறைவிடங்கள் மன்குடிசையாயினும் மாளிகையாயினும் கலை உணர்வோடு வண்ணங்கள் பூசப்பட்டு வெண்கோலமிட்டுச் செம்மண் பூசி, எழிலுற வாழ்ந்து வந்தனர். சங்க இலக்கியக் காலத்தில் வண்ணம் தீட்டப்பெற்ற ஓவியங்கள் வரையப்பட்டிருந்ததை,
“ஓவத்தன்ன வினைபுனை நல்லில்”
(அகம் .98:11)
“புனைவினை நல்லில்”
(அகம்.141:3)
“ஓவு கண்டன்ன இல்வரை”
(நற்.268:4)
எனும் சங்க அக இலக்கியப் பாடலடிகள் எடுத்தியம்புகின்றன.
இறைக்கோவில்களின் சுவர்கள் மீது பூக்கள் மலர்ந்த கொடிகளும் அழகிய பாவைகளும் வண்ண ஓவியங்களாகத் தீட்டப் பெற்றிருந்ததை
“... ... ... ... ... கேழ்கொளக்
காழ் புனைந்து இயற்றிய வனப்பமை நோள் சுவர்ப்
பாவையும் பலியெனப் பெறா”
(அகம்.369:6-8)
“புனைகவர்ப் பாவை”
(நற்.252:6-7)
சங்க அக இல்கியங்கள் சான்று காட்டுகின்றன.
வண்ண ஓவியங்களை வரைவதற்குத் துணியில் வண்ணந் தோய்ந்த எழுதுகோலினைப் பயன்படுத்தினர். இதனை,
“ஓவமாக்கள் ஒள்ளரக்கு ஊட்டிய துகிலிகை”
(நற்.118;7)
என்று நற்றிணையில் பாலைபாடிய பெருங்கடுங்கோ குறிப்பிடுகிறார். இக்கருத்தினை ஒட்டியே, சிலப்பதிகாரத்தில் தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற கோவலனுக்குத் தாழை மடலில் பூவரும்பின் முனை கொண்டுச் செம்பஞ்சுக் குழம்பால் தோய்த்து மாதவி வண்ண மடல் வரைந்தாள். இதனை இளங்கோவடிகள் பின்வருமாறு காட்டுகிறார்.
“சண்பகம், மாதவி, தமாலம், கருமுகை
வெண்பூ மல்லிகை வேருட் மிடைந்த
அம்செங்கழுநீர், ஆய் இதழ்க் கத்திகை
எதிர்பூழ் தாழை முடங்கல் வெண்கோட்டு
விரைமலர் வாளியின் வியன்நிலம் சூண்ட
ஒருதனிச் செங்கோல் ஒருமகன் ஆணையின்
ஒருமுகம் அன்றி உலகு தொழுது இறைஞ்சும்
திருமுகம் போக்கும் செவியற் ஆகி
அலத்தகக் கொழுஞ்சேறு அளைஇ அயலது
பித்திதைக் கொழுமுகை அணி கைக்கொண்டு
... ... ... ... ... ... ... ... ... ... ”
(சிலம்பு.வேற்.45-55)
இதுவே காப்பிய இலக்கியத்தில் முதல் வண்ணக் கடிதமாகும்.
முடிவுரை
வண்ணங்களுக்கும் சமூகங்களுக்கும் தொடர்பு இருப்பதை வண்ணங்களுக்குப் பல சொற்கள் இருப்பதைக் கொண்டு அறிந்து கொள்ளலாம். வண்ணங்கள் சமூகத்தோடு கலந்திருப்பது போல் தனிமனிதனோடும் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளன. வண்ணங்கள் தமக்குரிய சமூக மதிப்பீடுகளாலும் சமூகம் சாற்றி வைத்துள்ள பண்புக்குறியீடுகளாலும், மனிதர்களுக்கு பல்வேறு மன உணர்வுகளைத் தூண்ட வைக்கும் உந்துசக்திகளாக அமைந்துள்ளது என்பதை அறிய முடிகிறது..
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.