தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
51. இருபத்தோராம் நூற்றாண்டுக் கவிதைகளில் பெண்களின் உறவுகளும் சிக்கல்களும்
சே. சுபலட்சுமி
பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளர்,
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், கொடைக்கானல்.
முன்னுரை
கவிஞர்கள் தமது கவிதைகளில் பெண்களின் மனப்பேராட்டத்தினை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களது உணர்வுகளும் எண்ணங்களும் புதைந்துவிடாமல் அவற்றை மொழிப்படுத்தியுள்ளனர். கருப்பை முதல் கல்லறை வரைஅவளது மனமொழிகளைக் கவிதைகளில் வடித்துக் காட்டியுள்ளனர். பெண் குழந்தையாய்ப் பிறப்பதிலிருந்து பல்வேறு வளர்நிலைகளைஅடைந்து பெண்ணாய்ப் பரிணாமம் அடைகிறாள். அத்தகைய ஒவ்வொரு நிலைகளிலும் எண்ணங்கள், வாழ்வியல் செயல்பாடுகள் ஆகியவற்றின் வாயிலாக அவளது வாழ்வு முறை அமைகிறது. தனி மனித நடத்தையை வெளிப்படுத்துவதாய் ஒருவருடைய உளவியல் செயல்பாடு அமைகின்றது. எனவே தனி மனுசி என்ற நிலையில் பெண்களைச் சார்ந்து விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், அவர்களைப் பெரிதும் பாதிப்படையச் செய்கின்றன. தனது உறவுகளால் பெண் எத்தகைய சிக்கல்களை எதிர்கொள்கிறாள் என்பதனை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பெண்ணின் தனிமைநிலை
பெண்ணின் தனிமை நிலை, வாழ்வின் வெறுமையை அவளுக்குள் ஏற்படுத்துகிறது. உறவுகளுடன் வாழ்ந்த பெண் தனித்து விடப்படும் பொழுது, உலகியலின் இயக்கத்தில் இருந்தேதான் புறக்கணிக்கப்பட்டதாக எண்ணுகிறாள். அந்த எண்ணம் பெண்ணின் மனநிலையைப் பாதிக்கக்கூடியதாக அமைந்துவிடுகிறது. பெண் தன் ஆண் துணையை விட்டுப் பிரிவுக்கு உள்ளாகும் நிலையில் அல்லதுஅவனால் புறக்கணிக்கப்பட்ட நிலையை அடையும் பொழுது தனிமையை எண்ணித் துயரம் கொள்கிறாள். ‘அவர்களுக்கேயான ரகசியங்கள், சமிக்ஞைகள், கண்ணசைவுக் காப்பியங்கள், மௌன உரையாடல்கள், ஸ்பரிசசொர்க்கங்கள், சுவாச நெருக்கங்கள், அவனின் வியர்வை வாசம், அவளின் சுகந்த நேசம், அவளின் புடவை ஈரம், அவனின் வேட்டி ஓரம் இருவருக்குமான இளமைச் சமபந்திதான், அவனின் காட்டிலும், அவளின் காட்டிலும் பரஸ்பரமாய்த் தங்களைத் தொலைக்க வேண்டிய பயணம் தனித்தனியே நீள்கிறது. தனிமை கொல்கிறது” (ஆண்டாள் பிரிதர்ஷிணி, பெண் வாசனை, பக்.25-26) என வரும் ஆண்டாள் பிரியதர்ஷினியின் கூற்று தனிமைத் துயரத்தில் இருக்கும் பெண்ணின் நிலையைப் புலப்படுத்துகிறது.
பெண் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் யாரிடமும் சொல்லாமலே தன் நிலையை உடல் மேல் தீப்படுவது போல் உணர்ந்து மனதிற்குள்ளேயே வெதும்புகின்றாள். இதனைக் கவிஞர் அனார் கீழ்வரும் கவிதையின் மூலம் புலப்படுத்துகிறார்.
“நடுப்பகலில் என் வெறுமையுள்
வெயில் எரிந்து கொண்டிருக்கின்றது
சாந்தமாகவும்
அதேநேரம் கனன்றபடியும்
பகல்நேரஆசுவாசத்தின் மறைவில்
தனிமைதன் தந்திரங்களுடன் ஊடுருவுகின்றது
வெயில் வீட்டிற்குள் வருகின்றது
அதன் விருப்பப்படி உட்கார்ந்திருக்கிறது”
(அனார், எனக்குக் கவிதை முகம், ப.33)
இவ்வரிகள் வெறுமை நிலையில் தனிமையை உணரும் பெண்ணின் நிலையைக் காட்டுகின்றன. உறவுகளால் புறக்கணிக்கப்படும் பெண் வாழ்வின் வெறுமையை உணர்ந்து வெயிலின் உக்கிரத்தை உணருகிறாள். நெருப்புப் போன்ற சமுதாயக் கரங்களால் தாக்கப்படும் பொழுது தனிமை அவளை மிகவும் பாதிப்படையச் செய்கிறது. தனிமைப்படுத்தப்பட்டவரின் மனச்சிக்கல்களுக்குத் தீர்வாகச் சமூகத்தின் மீதான பார்வையை மாற்றியமைத்துத் தங்களாலும் எதையும் சாதிக்கமுடியும் என்ற நம்பிக்கையைப் பெண்களுக்கு ஊட்ட வேண்டும் என்பதனைக் கவிதைகள் வழி காணமுடிகிறது.
பெண்ணுரிமை மறுக்கப்பட்ட பெண்ணின் மனநிலை
பெண்களுக்கான உரிமைகள் காலங்காலமாக மறுக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதர்களாலும் ஏதோ ஒரு நிலையில் காயப்படுத்தப்படுகிறார்கள். தொடர்ந்து பெண்ணுரிமை மறுக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் வருகிறது. பெண் என்றால் எந்தவித உரிமையும் இயல்பாகக் கிடைக்கக் கூடாது என்று கருதும் போக்குப் பரவலாக நிலவுகிறது. பெண்கள் தங்களுக்கான உடைமைகளை உருவாக்கும் வாய்ப்பும் குறைவு. தங்களுக்கான உரிமைகளைப் பெற அவள் எவ்வளவு போராடினாலும் கீழே சரிந்து விழுந்து கொண்டேதான் இருக்கிறாள்.
‘துன்பங்களையும், அவமானங்களையும் சகித்துக் கொண்டு குடும்பத்தின் மிதியடியாய் வாழ்வதே பெண்மையின் இயல்பு; லட்சணம். மனித உரிமை ஆணுக்கு மட்டுமே; பெண்ணுரிமை மட்டுமே பெண்ணுக்கு. இதுதான் இன்றுவரை உள்ள நடைமுறைச் சமூகநீதி” (மைதிலி சிவராமன்,பெண்ணுரிமை - சிலபார்வைகள், ப.13.) என்பது பெண்ணுரிமை குறித்து உருவாக்கப்பட்ட வரையறையாகும்.
கவிஞர் வைத்தீஸ்வரன் பெண் காலந்தோறும் அனைவரது ஆளுமையின் கீழும் வாழ்ந்து அடங்கியவளாக வாழ்ந்து வருகின்ற நிலையை,
“குழந்தைஅழும் போதெல்லாம்
நான் குதிரை ஆக வேண்டியிருக்கிறது
இம்மண்ணில்
என்னைசவாரியாக்கி
கைகொட்டிசிரிக்க
குழந்தைக்குமாஆனந்தம்” (வைத்தீஸ்வரன், கால்-மனிதன், ப.13)
என்ற கவிதை வரிகளில் வெளிக்காட்டியிருக்கிறார். இம்மண்ணில் பிறந்தது முதல் எல்லோராலும் காயம்பட்ட பெண், தன் குழந்தையின் ஆசைக்காகத் தான் சவாரி செய்தாலும், தன் மேல் உலகமே சவாரி செய்வதாக எண்ணித் தனது தாழ்ந்த நிலையைப் புலப்படுத்துகிறாள். பெண் பாரத்தைச் சுமப்பவளாக மட்டுமே சமூகத்தில் காட்சியளிக்கிறாள். பெண்ணைச் சுமைதாங்கியாகவே இச்சமூகம் மாற்றம் செய்துள்ளது. பல்வேறு அடிமைக்கரங்களால் பெண்ணின் உள்ளம் பல கேள்விகளைச் சுமந்து கொண்டே விடை காணாத நிலையில் வாழ்ந்து வருகிறது.
திருமணச் சிக்கல்களால் சமூகத்தை வெறுத்தல்
திருமண வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு சிக்கல்களால் தன் வாழ்வையும் சமூகத்தையும் வெறுத்து ஒதுக்கும் மனநிலையைப் பெண்களிடம் காணமுடிகிறது. கனவுகளுடன் திருமண வாழ்க்கையில் நுழைந்தவளுக்குப் பலவிதமான சிக்கல்கள் ஏற்படுகின்றன. சிக்கல்களைத் தீர்க்க இயலாத நிலையில் பெண் கடும் மனப் போராட்டத்திற்கு ஆளாகிறாள். அதனால் அவளதுஉள்ளம் பெரிதும் பாதிக்கப்படுகின்றது.
கணவனது துரோகத்தால் மனம் பாதிப்படையும் பெண்ணின் நிலையைக் கவிஞர் பெருந்தேவி,
“கனவற்ற வனாந்தரமாகட்டுமே துயில்
என்று ஆதங்கிக்க
துயிலும் அற்றுப்போச்சு.
வேறொருத்தர் கனாக்காண
கருவிழி குதித்தோடிட
வெள்ளை மேகமாய்
மரம் நீங்கிய வனம் மேலே
பார்வை போலொன்று நகரலாச்சு” (பெருந்தேவி, இக்கடல் இச்சுவை, ப.61)
எனப் பெண்ணின் உள்ளப் போராட்டத்தினை வெளிப்படுத்தியிருக்கிறார். தூக்கம் மறந்து வாழ்வையும் தொலைத்து விட்டதாய் அவளது மனம் போராட்ட மயமானதாகி விடுகிறது. இத்தகைய சூழலில் பெண் தனது உறவுகளையும், சமூகத்தையும் வெறுக்கத் தொடங்குகிறாள். மணவாழ்வு மரணவாழ்வாய் இத்தகைய பெண்களுக்கு மாறிப்போய் விடுகிறது.
கணவனைப் புறக்கணிக்கும் பெண்ணின் மனநிலை
கணவனால் புறக்கணிக்கப்பட்டபெண்கள் சமூகத்தில் வேறு திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து வருகின்றனர். ஆனால், கணவன் மனைவியை விட்டுப் பிரிந்த பின்பு வேறு திருமணம் செய்து கொள்கிறான். இதற்கு மிக முக்கியக் காரணம் ஆண்களின் ஆளுமைக்குச் சமூகப் பண்பாட்டு விழுமியங்கள் கற்பித்திருக்கும் அர்த்தத்தினின்றும், பெண்ணின் ஆளுமைக்கான அர்த்தம் வேறுதளத்தில் இயங்குவதாகும். ஆணிற்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்காத சமூகம் பெண்களுக்குச் சில கட்டுப்பாடுகளை விதித்து அவளை அடக்கி ஆள நினைக்கிறது. அடக்குமுறைகளின் காரணமாகவும் பெண் மனரீதியாகப் பாதிக்கப்படுகிறாள். சில நேரங்களில் தீர்க்கமான சில முடிவுகளையும் அவள் எடுக்கிறாள்.
கணவன் எத்தகைய கொடுங்கோலனாக இருப்பினும் ‘தற்போதைய திருமண ஒப்பந்தங்கள்படி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, விட்டுக் கொடுத்து வாழவேண்டும். இங்கு ஆணாதிக்கத்திற்கோ, பெண்ணாதிக்கத்திற்கோ இடமில்லை. காயப்பட்டுப் போக இருவரும் விரும்புவது இல்லை. தன் பெண்மை சிறுமைப்படுத்தப்படுவதைப் பெண்கள் ஏற்பது இல்லை. காரணம், இன்றையப் பெண்களுக்கு உள்ள பொருளாதாரச் சுதந்திரம் தான். கணவன் என்ன கொடுமை செய்தாலும், பொறுத்துக் கொண்டு அவனே கதி என்று வாழ்ந்தாக வேண்டிய அவசியமில்லை. முடியுமட்டும் பொறுத்திருப்பாள். பொறுத்தது போதும் பொங்கிஎழு என்னும் வசனம் போல் பொறுமையின் எல்லை கடந்ததும் ‘போய்யா நீயும் உன் வாழ்க்கையும் என்று வந்து விடுகிறாள். குடும்ப கௌரவத்தை உத்தேசித்து உறவை அறுத்துக் கொள்ளாமல் தாமரை இலைத் தண்ணீர் போல வாழ்பவர்களும் உண்டு”
(வெ. இன்சுவை, நதியின் பிழையன்று, ப. 25)
குடும்பத்தில் பெண்ணின் உடல் மட்டுமே ஆணுக்குரிய வசதிகளைத் தரும் இயந்திரமாக மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. நிரந்தர நோயாளிகளாக அப்பெண் மாறிவிட்டால் அல்லது குடும்பச்சுமைகளைச் சுமக்க வேண்டியதாகி விட்டால் மனைவியைப் புறக்கணித்துவிட்டு வேறொரு திருமணத்திற்குக் கூட கணவன் சில நேரங்களில் தயாராகி விடுகிறான்.
கவிஞர் அனிச்சம் தம் கவிதையில்,
“மனசும் செத்துப்போச்சு
பிள்ளைகளுக்கும் புரிஞ்சுபோச்சு
உன் நம்பிக்கை துரோகம்
பித்துபிடிக்க வச்சு
பேயாய் அலைய
வச்சவனோடு உடல் சேரும்
வாழ்க்கை இல்லை
இனி...
ஒதுக்கி வச்சேன்”
(அனிச்சம், சிறகு களைத்தா, ப.71)
என்ற வரிகளில் கணவனால் பெண் அடைந்தது ரோகத்தையும் அவனுடன் வாழமறுக்கும் சூழலையும் காணமுடிகிறது. ஊருக்கும் உறவுக்கும் தெரியாமல் தனது யோனியைக் கொள்ளிக்கட்டையால் சுட்டுக் கொள்கிறாள். அவனுடன் தான் உறவு வைத்துக் கொள்ளவே கூடாது என்ற முடிவினை அவள் எடுத்திருப்பதை இது உணர்த்துகின்றது. இது அவளை மீறி நடந்து விடக் கூடாது என்பதற்காக இவ்வாறு தன்னைத்தானே சுட்டுக் கொண்டாள்.
இருபத்தோராம் நூற்றாண்டின் சிந்தனைகளில் பலமாற்றம் ஏற்பட்டு நவீனத்துவத்துள் பெண்ணியச் சிந்தனைகளின் தாக்கம் மேலோங்கி நிற்கிறது. பெண்ணினது சுயத்தை, இருப்பை உலகவெளிக்குப் பறை சாற்றுவதாய் இத்தகைய கவிதைகள் அமைந்திருக்கின்றன என்றால் மிகையாகாது. பெண்களுக்கான இயங்குதளத்தில் ஏட்டளவில் மட்டும் இருப்பவை ஏராளம். பேச்சுரிமை,சொத்துரிமை போன்றவை வழங்கப்பட்டிருக்கின்றன என்றாலும் பெண் சுதந்திரம் முழுமையாகப் பெறமுடியாது போனதற்குச் சமூகக் கற்பிதங்களும் கட்டமைப்பும் என்றால் அது மறுத்தற்கியலாது. பெண் முன்னேற்றத்திற்கு முழு மனத்துடன் கரம்நீட்டச் சமூகம் முன் வரவேண்டும்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.