சமுதாயம் மேம்பாடு அடைவதற்கான வழிமுறைகளும் அணுகுமுறைகளும், நிறை, குறைகளும் சமுதாய முன்னேற்றம் அடையத் தடையாக இருப்பனவற்றையும் சமுதாய மக்களின் வாழ்க்கை முறைகளையும் கண்டறியப்பட வேண்டியது இன்றைய காலக்கட்டத்தின் தேவையாகும்.
திருவள்ளுவர் தாம் வாழும் உலகத்தைத் தம்முள் கொண்டு இந்த உலகுக்காகத் தம் வாழ்வையே ஒப்படைத்த பெருமகனார் ஆவர்.
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்”
உலகத்தில் எவர் ஒருவர் அறநெறியில் நின்று வாழ்கின்றாரோ அவர் வானுலகத்தில் உள்ள தேவர்களொடு ஒப்பிடப்படுவர்.
சான்றோர்க்கு எந்நாடும் தம் நாடே என்றும், எவ்வூரும் தம் ஊரே என்றும் அறிவார்ந்த நன் மக்கட்பேறு பெற்றோர் பெற்றிடினும் அவை இப்பேருலகுக்கும் பெருநலம் செய்யுமென்றும் உலகளாவிய பெருநெறி காட்டியவர் வள்ளுவர்.
திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் எல்லாச் சமயத்திற்க்கும் பொதுவான கருத்துக்களை எடுத்துரைத்துள்ளார். தனியொரு சமயத்தையுஞ் சாராத அவரைச் சமயத்துக்குள் அடக்க ஒவ்வொரு சமயத்தாரும் முனைந்து உள்ளனர். சமய நூலான நீலகேசிக்கு உரை எழுதிய சமய திவாகரவாமண முனிவர் தம் உரையில் திருக்குறளை எடுத்துக்காட்டி
“இது எம் ஒத்து ஆதலின்”
எனத் திருவள்ளுவரைச் சமணர் என்று மொழிகின்றார். இவரைப் பலறும் பலசமயத்தினராக கூறுகின்றனர்.
ஆண்டவனையும் அரசர்களையும் புலவர் பாடிக் கொண்டிருந்த காலத்தில் மக்களைப் பற்றி பாடிய ஒரே புலவர் வான் புகழை எய்தியுள்ள வள்ளுவப் பெருந்தகையரே என்று புத்தர், இயேசு, நபிகள் நாயகம் தத்தமது நிலையில் நின்றவாறு கருத்துக்களைக் கூறியுள்ளார்கள்.
“வள்ளுவன் தன்னை உலகினுக்கேதந்த வான்புகழ்
கொண்ட தமிழ்நாடு”
என்று வள்ளுவரின் புகழைப் பறைச் சாற்றுகின்றார் பாரதி. வள்ளுவரை உலகினுக்கே அறிமுகப்படுத்தியது தமிழ்நாடு. அத்தகைய வள்ளுவரால் தமிழ் நாட்டிற்கும் பெருமை, தமிழ் மொழிக்கும் பெருமை.
சமுதாயச் சிந்தனை
சமூகம் என்பது மக்கள் ஒரு குழுவாகவும், கூட்டமாகவும் ஒன்றிணைந்து கூடி வாழ்பவர்களைக் குறிப்பதாகும். உணவு, உடை, இருப்பிடம், வாழ்க்கைமுறை, பண்பாடு, கலாச்சாரம், தொழில், திருமணம், விழாக்கள் போன்றவைகள் நிறைந்து ஒருங்கே பெற்று மக்கள் வாழ்வதே சமுதாயம் என்று அழைக்கலாம்.
வள்ளுவரின் சமுதாயப் புரட்சி
மனித குலத்தைப் பற்றிப் பாட வேண்டுமென்று கருதியவர் திருவள்ளுவர். ஒன்றே முக்கால் அடியில் ஏழு சீரில், குறளை வெண்பாவடியில் வடித்துத் தந்து பெரும் புரட்சியை விளைவித்தார். ஓலைச் சுவடியில் எழுதியமையாலும் தமிழ் மொழியில் தந்தமையாலும் வள்ளுவப் பெருந்தகையாரை வண்டமிழ் மக்கள் உரிமையுடன் சொந்தம் கொண்டாடினர்.
ஆயிரத்து முந்நூற்று முப்பது குறளிலும் எங்கேனும் ஓரிடத்திலும், தமிழ் இனத்தைப் பற்றியோ, தமிழ்மொழியைப் பற்றியோ, தமிழ் பண்பாட்டைப் பற்றியோ எங்குமே சிறப்பித்துக் கூறவில்லை. சமுதாயம், மக்கள், உலகம் என்றே கூறுகின்றார். புத்தருக்கு அடுத்ததாக அவர் நெறியில் சீர்திருத்தக் கருத்தைக் கொண்ட சமுதாயப் புரட்சியை மனிதனுக்காகச் செய்தவர் திருவள்ளுவர்.
வாழ்க்கை
மனித வாழ்க்கை என்பது இயற்கையோடும், சமுதாயத்தோடும், குடும்பத்தோடும் ஒன்றி வாழ்தல் ஆகும். மனிதவாழ்க்கை இன்பமும், துன்பமுமும் நிறைந்தது. அத்தகைய வாழ்க்கை குறித்து வள்ளுவர் திருக்குறளில்,
“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது”
அறநெறி கண்டுணர்த்திய வாழ்வியல் நெறியில் இல்லற நெறி தலையாயது. அன்பின் விரிவுக்கும் சமூக வரலாற்றின் நீட்சிக்கும் துணை செய்யக் கூடியது இல்வாழ்க்கையேயாம்.
அரசியல்
ஜனநாயகம் அல்லது மக்களாட்சி எனும் அரசாங்கம் மக்களுக்காக மக்களால் நடத்தப்படுவது மக்களாட்சி என்று அமெரிக்கா முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் குறிப்பிட்டுள்ளார். இன்றைய ஜனநாயகம் என நாம் குறிப்பிடுவது அரசாங்கத்தைத்தான். சாதாரணக் குடிமகன் ஒரு பிரதிநிதிக்கோ அல்லது ஒரு கட்சியின் கொள்கைக்கோ சாதகமாகத் தனது வாக்கை அளிக்கும் போது ஜனநாயக அமைப்பில அவன் ஐக்கியமாகிறான். ஆரசியல் குறித்து சிலப்பதிகாரத்தில்,
“அரைசுகோல் கோடினும் அறங்கூறு அவையத்து
உரைநூல் கோடி ஒரு திறம் பற்றினும்”
அரசவையில் பொறுப்புடையவர் தம் செங்கோலாட்சியிலே நீதி நெறி தவறி நடப்பினும் அறம் கூறுகின்ற நியாயமான சபைகளிலுள்ளவர்கள் அறநூல்களுக்கு மாறுபட்டு ஒரு பக்கமாக சார்ந்து நீதி வழங்குதல் தவறு என் அரசியல் குறித்து சிலப்பதிகாரம் உணர்த்துகிறது.
சமயச்சிந்தனை
சமயம் என்பது மக்களின் நாகரீகம், பண்பாடு, பழக்கவழக்கம் போன்றவற்றோடு நெருங்கிய தொடர்புடையது ஆகும். மனித வாழ்வின் ஓர் அங்கமாகும். மக்களின் இறையுணர்வை வெளிப்படுத்துகின்றன. மக்கள் இறையுணர்வுடனும், வழிபாட்டுடனும், ஒற்றுமையுடனும் வாழ்வதற்குச் சமயங்கள் வழிவகுக்கின்றன.
இந்தியாவில் வாழும் மக்கள் பின்பற்றும் சமயங்கள் பல இருப்பினும் அதில் மிக முக்கியமாக இந்து, பௌத்தம், சமணம், கிறித்துவம், இஸ்லாம் ஆகிய சமயங்களே நடைமுறையில் உள்ளன.
இந்து
இந்திய மக்கள் பெரும்பான்மையினர் பின்பற்றும் தொன்மைச் சமயமான இந்து சமய நான்கு வேதங்களையும், உபநிடதங்களையும், நாயன்மார்கள், ஆழ்வார்கள் போன்றோர் அருளிய பக்தி பாடல்களையும் ஆதாரமாகக் கொண்டது.
சிவன். திருமால், காளி முதலிய பல தெய்வங்களை வழிபட்டாலும் இப்பெயர்கள் யாவம் ஒரே பரம்பொருளைக் குறிக்கின்றன என்பர். இந்து சமயம் பின்னாளில் தோன்றிய நல்ல புதிய கொள்கைகளை விளக்கிப் புதுப்பொலிவோடு வளர்ந்து வரும் இயல்புடையது. எனவேதான் தத்துவ மேதை டாக்டர் இராதாகிருஷ்ணன், ‘இந்து சமயம் தொடர்ந்து நீடிக்கும் ஓர் இயக்கம்’ என்றார்.
பௌத்தம்
புத்தரால் தோற்றுவிக்கப்பட்ட பௌத்தம், உலகம் துன்பமயமானது. துன்பத்திற்கு காரணம், துன்ப நிவாரணம், துன்ப நிவாரண மார்க்கம் ஆகியவற்றைப் பற்றி கூறுகிறது. கொல்லாமை முதலிய பஞ்சசீலத்தை வலியுறுத்துகிறது. துன்ப நீக்கமே இச்சமயத்தின் குறிக்கோளாகும்.
சமணம்
பௌத்த சமயம் போலச் சமணமும் பழமையானது. 24 தீர்த்தங்கரர்களால் வளர்க்கப்பட்ட இச்சமயத்தின் உருவாக்கத்தில், மகாவீரர் முதலிடம் பெறுகிறார். நற்கதியடைய நன்னம்பிக்கை நல்லறிவு, நற்செயல் ஆகிய மும்மணிகளைப் போற்றி நடக்க வேண்டும். எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யக் கூடாது என்பது இச்சமயத்தின் உயர்ந்த நிலையாகும்.
கிறித்துவம்
விவிலியத்தைத் தனக்குரிய வேதமாய்க் கொண்ட கிறித்துவ சமயம், இயேசுபிரானால் தோற்றுவிக்கப்பட்டதாகும். விவிலியத்தின் ஒரு பகுதியான புதிய ஏற்பாட்டில் அவரின் வாழ்வும், வாக்கும் இடம் பெற்றுள்ளன. இறைவனிடமும், பிற மனிதர்களிடமும் அன்பு கொள்ள வேண்டும்.
“பகைவரையும் நேசி, தீமை செய்தவர்க்கும் நன்மை செய்க”
என்று கிறித்துவம் விளக்குகிறது.
இஸ்லாம்
இஸ்லாம் என்னும் அரபிச்சொல் சாந்தி, அடிபணிதல், ஈடேற்றல் எனப்பொருள் தரும். ஆதி மனிதர் ஆதாம் நபி முதலாக வலியறியா மயங்கிய மக்கள் வரை பலருக்கும் இறைவனின் தூதர்கள் பல்வேறு காலக்கட்டங்களில் தோன்றி வழிகாட்டிச் சென்றுள்ளனர். அவர்களுள் இறுதித் தூதரான முகம்மது நபி கால மாற்றத்தால் சீர்குலைந்திருந்த இசுலாமியத்திற்கு நிறைவான வடிவம் தந்தார் என்பர்.
“வேண்டுதல் வேண்டாமை இலான் அடிசேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல”
என்ற வள்ளுவப் பெருந்தகையின் குறளுக்கேற்ப விருப்பு, வெறுப்பில்லாத இறைவன், அடி சேர்ந்தார்க்கு எப்போதும் துன்பம் என்ற ஒன்று நெருங்குவதில்லை.
விருப்பு, வெறுப்பு, துன்பங்களின் வாயில்கள் தவிர்க்க இயலாதது. வேண்டாதது வந்தடைவதாலும், வெறுப்பதனாலும், வெறுக்கப்படுவர் வெகுண்டு எழுவதாலும் துன்பம் வரலாம். விருப்பு, வெறுப்பு இல்லாத இறைவனைத் தொழுது வருவதன் வாயிலாகத் துன்பத்தை விரட்டி விடலாம். அதுவே இறைவனின் தன்மைகள் என்று கூறியுள்ளார்.
சங்க காலம் தொட்டு இன்று வரை சமயக் கொள்கையில் அதிக வேறுபாடுகளைக் காணுதல் அரிதேயாகும். மற்ற நாடுகளைப் போன்றல்லாது தத்துவக் கருத்துகளும், இலக்கியங்களும், கட்டிடக்கலையும், சிற்பக்கலையும், ஓவியக்கலையும், சமயத்தை மையமாகக் கொண்டே வரையப்பட்டன. பொது வாழ்க்கைக்கும், சமயக் கருத்துக்கள் பயன்பட்டன.
முடிவுரை
திருக்குறள் அறநூல் மட்டுமின்றி வாழ்க்கைக்குத் தேவையான அறநெறிக் கருத்துக்கள் நிறைந்த சிறந்த இலக்கிய நூலாகவும் விளங்குகின்றது. தமிழிலக்கியங்களில் ஒப்பற்ற ஓர் முழுமணியாய், மணி மகுடமாய் விளங்குவது திருக்குறள் ஆகும்.
சமுதாயச் சிந்தனை என்ற தலைப்பில சமுதாயம் குறித்த விளக்கமும், இலக்கியத்திற்கும் சமுதாயத்திற்கும் உள் வேறுபாடு, அரசியல் வாழ்க்கை போன்றவற்றைப் பற்றிக் கூறப்படுகின்றது.
சமயச் சிந்தனையில் இந்து, சமணம், பௌத்தம், கிறுத்துவம், இஸ்லாம் போன்ற சமயத்தையும் விளக்குன்றது.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.