தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
76.பாரதி மொழி
முனைவர் இரா. பூங்கோதை
தமிழ்த்துறைத் தலைவர், எஸ். ஆர். என். எம். கல்லூரி, சாத்தூர்.
முன்னுரை
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைச்சிறந்த கவிஞராகவும், அடிமைப்பட்டுக் கிடந்த மக்களைத் தம் கவித்திறத்தால் தட்டியெழுப்பி விடுதலை உணர்வை ஊட்டிச் சுதந்திரம் என்னும் தன்னுரிமையை பெறச் செய்தவராகவும் திகழ்ந்தவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆவார். கத்தி முனையால் சாதிக்க முடியாததைத் தன் எழுதுகோல் முனையால் சாதித்துக் காட்டியவர். மொழியின் துணை கொண்டு எதையும் சாதிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டிய பாரதியின் மொழி குறித்து ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
பாரதியும், மொழியும்
இயற்கையையும், காதலையும் கண்கண்ட காட்சிகளையும், மன்னன் தரும் பரிசிலுக்காகப் பாடாது மக்களையும் அவர்கள் படும் துன்பங்களையும் நாட்டு விடுதலையையும், பெண் விடுதலையையும், தமிழ்மொழியையும் தன் கவிதையில் வடித்தார்.
‘நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல்
இமைப்பொழுதுஞ் சோராதிருத்தல்”
என்று ஒரு போதும் சோர்ந்திருக்காது தன்னையும், தன் எழுத்தையும் நாட்டிற்காகத் தியாகம் செய்யத் தூண்டியது பாரதியின் மொழி ஆகும்.
சிறுமைகளைச் சிதறச் செய்தல்
சிறுமைத் தனங்கள் என்னும் கீழ்மைக் குணங்களைப் கொண்டு நாட்டில் சாதி, சமயம் என்றும் பல்வித பாகுபாடுகளை உட்புகுத்தி இன்னும் சிலர் நம்மை அடிமைபடுத்தி வருகின்றனர். இதனை முறியடிக்கும் விதமாக பாரதி,
“பண்டைச் சிறுமைகள் போக்கியென் னாவிற் பழுத்தசுவைத்
தெண்டமிழ்ப் பாட லொரு கோபி மேவிடச் செய்குவையே”
என்று தன் நாவில் பிறந்த தென்தமிழ்ப் பாடலால் மேன்மையுறச் செய்யும் விதமாகத் தன் தெய்வத்தை வாழ்த்திப் பாடுகிறார்.
வீரமொழி
தானும் தன் இனியமொழியும் பெரிய செயல்கள் செய்யாது இவ்வுலகை விட்டு நீங்க மாட்டோம் என்று சூளுரைத்த பாரதி தன் கவித்திறத்தால், தன்னைப் பற்றி எளிதாய் எண்ணிய பகைவரை நோக்கி வீரமாய்
“தேடிச் சோறு நிதந்தின்று - பல
சின்னச்சிறு கதைகள் பேசி - மனம்;
வாடித் துன்பமிகு வுழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்படுவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போல - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?”
என்று தன்னை இழிவாக எண்ணும் மடமையர்களுக்கு வீரமொழி ஆற்றுகிறார்.
மேலும்,
“மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்”
என்று விடாமுயற்சியையும், நல்லெண்ணங்களின் செயல்பாடுகளையும் எடுத்துக் காட்டுகிறார்.
தமிழைத் தழைக்கச் செய்யும் மொழி
தொன்மையான இலக்கண இலக்கியங்களை உடைய தமிழ்மொழியை மேன்மேலும் பெருமையுற வழி காட்டியவன் பாரதி எனில் அது மிகையாகாது.
“தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்
பிற நாட்டு சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்”
என்று தமிழ் மொழியைப் பாரறியச் செய்யும் பேருவகை கொண்டதாகத் திகழ்ந்தது பாரதியின் மொழி.
எதிர்காலம் குறித்த சிந்தனைகள்
கடந்த காலத்தையே எண்ணிக் கவலை கொள்ளாது நிகழ்காலத்தை மட்டும் கணக்கில் கொள்ளாது எதிர்கால எண்ணங்களையும், செயல்களையும் தம் கவித்திறத்தால் நாட்டு மக்களிடையே பரப்பச் செய்தவர் பாரதி. அனைத்து வகையிலும் நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில்,
“வெள்ளிப் பனிமலையின் மீது லாவுவோம் அடி
மேலைக் கடல் முழுதுங் கப்பல் விடுவோம்
சிங்களத் தீவினுக்கோர் பாலமைப்போம்
சேதுவை மேடுருத்தி வீதி சமைப்போம்”
என்றும்,
“காசி நகர்ப்புலவர் பேசுமுரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்”
என்று அறிவியல் குறித்த சிந்தனையையும் தன் மொழியில் எடுத்துரைத்தவர் பாரதி.
உணர்ச்சி மொழி
‘ஆத்திச்சூடி” என்னும் ஒற்றை வரியில் மக்களைக் கிளர்ந்தெழச் செய்யும் வல்லமை கொண்டது பாரதியின் மொழி. அச்சம் தவிர், ஆண்மை தவறேல், கீழோர்க் கஞ்சேல், கொடுமையை எதிர்த்து நில், சாவதற்கஞ்சேல், சீறுவோர்ச்சீறு, தீயோர்க் கஞ்சேல், நேர்படப்பேசு, நையப்புபடை, புதியன விரும்பு, மானம் போற்று, போர்த்தொழில் பழகு, ரௌத்திரம் பழகு, வெடிப்புறப் பேச்சு, வையத் தலைமை கொள் என்று உணர்ச்சி மொழிகளால் துவண்டிருந்த மக்களை உணர்ச்சி பெறச் செய்து அடிமைத் தளையிலிருந்து மீளச் செய்தது பாரதியின் மொழி ஆகும்.
உண்மையின் உரைகல்
“உள்ளத்தில் உண்மை உண்டாயின்
வாக்கிலே இனிமை யுண்டாகும் என்பதற்கேற்ப
சாதிகள் சேருது சண்டைகள் தொலையுது
தரித்திரம் போகுது செல்வம் வருகுது.
பசப்பு வளருது பாவம் தொலையுது
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான் போவான் ஐயோவென்று போவான்”
என உண்மையை உடைத்தெறிந்து பேசும் மொழியாகப் பாரதியின் பேச்சு அமைகிறது.
விடுதலை மொழி
சுதந்திரம் என்னும் வேள்வித்தீயில் தன் பேச்சாலும் எழுத்தாலும் நெருப்புக் கனலை மூட்டியவர் பாரதி
“விடுதலையைப் பெறடா - நீ வின்னவர்
நிலைபெறடா
கெடுதலை ஒன்றுமில்லை - உன் கீழ்மைகள்
உதறிடடா”
என்றும்
“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்சிமீது வான்இடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே”
என்று விடுதலைக் கனலை மூட்டியவர் பாரதி.
முடிவுரை
மொழியால் ஆளும் உலகை மாற்றியவர் பாரதி. உள்ளத்து உணர்ச்சிகளை மொழியில் காட்டி, பெண்ணடிமை, சாதிப்பாகுபாடு, தீண்டாமை, ஏற்றத்தாழ்வினைப் போக்கி, சுதந்திரம், விடுதலை, சுயமரியாதை, பெண் உயர்வு, மொழிப்பற்று போன்றவற்றை உருவாக்கி மக்களை மக்களாக வாழச் செய்தது பாரதியின் மொழி எனில் அது மிகையில்லை.
*****
 இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|