தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
77.தொல்காப்பியத்தில் பால்பாகுபாடு
முனைவர் க. மகேஸ்வரி
தமிழ்த்துறைப் பேராசிரியர், மேலாண்மையியல் துறை, எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகம், காட்டாங்குளத்தூர்
முன்னுரை
பொதுவாக இலக்கணம் என்பது சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதாகும். இலக்கண ஆசிரியர்கள் தங்கள் காலத்திற்கேற்ப இலக்கணக் கோட்பாடுகளை வகுத்துக் கூறியிருப்பார்கள். நூலாசிரியர்கள் காலத்திற்குப் பிறகு தோன்றிய உரையாசிரியர்கள் தங்கள் கால சமுதாய அடிப்படையிலும் உரை எழுதிச் செல்வார்கள். ஆண், பெண் பாகுபாடு என்பது பிறப்பால் தோன்றுவது. அவர்களது உறுப்பு வேறுபாடுகள்தான் ஆணாகவும் பெண்ணாகவும் வேறுபடுத்துகின்றன. இது இயற்கையின் அப்பாற்பட்டது. ஆனால் ஆணுக்கென்றும் பெண்ணுக்கென்றும் மனிதன் தனித்தனியாக தானே வகுத்துக்கொண்டது செயற்கையானது. பிறவியில் தோன்றும் வேறுபாட்டினைப் பால் வேறுபாடு (Sex difference) என்றும் மனிதன் தானே கற்பித்துக்கொண்ட வேறுபாடுகளை (Gender discrimination) பாலியப் பாகுபாடு என்றும் சமூகவியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அந்த அடிப்படையில் தொல்காப்பிய உரையாசிரியர்கள் எவ்வாறெல்லாம் உயர்திணை பாகுபாட்டில் அமைந்துள்ள உயிரினங்களைச் சமுதாயக்கண் கொண்டு விளக்குகிறார்கள் என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
1.0 பொதுவான பால்பாகுபாடு
உலகின் அனைத்து உயிர்ப்பொருட்களும் உயிரற்ற பொருட்களும் பற்றிய குறிப்புகள் அனைத்து இலக்கிய இலக்கணங்களிலும் பதிவாகி இருக்கின்றன. ஆனால் அறிவியல் அடிப்படையில் இப்பாகுபாடு அமைந்துள்ளதா என்பது ஆராய்ந்து பார்க்க வேண்டிய ஒன்றாகும்.
வடமொழியில் காணப்படும் பெண்பாற் சொற்களைச் சான்றுக்கு எடுத்துக்கொண்டு தமிழோடு ஒப்பிட்டுப் பார்த்தால் வடமொழிச் சொற்கள் அறிவியல் அடிப்படையில் அமையவில்லை என்றே கூற வேண்டும். பண்டையத் தமிழ் இலக்கியச் சான்றுகள் அனைத்தும் பெண்பாலையே உணர்த்தும் என்பதைப் பின்வருமாறு அறியலாம்.
அரிவை - அகம் (16:7 )
இல்லாள் - கலித் (131:27)
கிழத்தி - அகம் (275:4)
பெதும்பை - நற் (339:4)
பேதை - ஐங் (334:4)
மங்கையர் - அகம் (369:3)
மடந்தை - நற் (20:7)
ஆனால் பெண்பாலைக் குறிக்கும் சொற்கள் வெவ்வேறு பாலை உணர்த்துகின்றன என்பதைப் பின்வரும் சான்றுகளின் வாயிலாக அறியமுடிகின்றது.
பால் |
வடமொழி |
தமிழ் |
பெண்பால் |
பார்யா |
பெண் |
ஆண்பால் |
தாரம் |
பெண் |
ஒன்றன்பால் |
களத்ரம் |
பெண் |
பார்யா, தாரம், களத்ரம் என்ற இம்மூன்று சொற்களும் தமிழ் மொழியில் கடன் வாங்கப்பட்டு வழக்கில் பயன்படுத்தும் போது பெண்பாலாகவேக் கருதப்படுகின்றன. மேலும்,
“தமிழில் பெயரின் பால் பெரும்பாலும் அதன் பொருளாலே விளங்கும். வடமொழியில் பொருளுக்கும் சொல்லின் பாலுக்கும் சம்மந்தமே இன்று. அங்கு ஒரு சொல் ஆண் பாலாயிருக்க அதன் பொருள் அஃறிணையாகவும், ஒரு சொல் ஒன்றன் பாலாயிருக்க அதன் பொருள் ஆண்பாலாகவும் பெண்பாலாகவும், ஒரு சொல் ஆண்பாலாயிருக்க அதன் பொருள் பெண்பாலாகவும் இருக்கலாம்” (1)
என்று பி. எஸ். சுப்பிரமணிய சாஸ்திரி வடமொழியின் பால்பாகுபாட்டு நிலையைப் பற்றிக் கூறுவது குறிப்பிடத்தக்கதாகும்.
2.0 தொல்காப்பியத்தில் பாகுபாடு
தமிழுக்குக் கிடைத்துள்ள முதல் இலக்கண நூலாகத் தொல்காப்பியம் திகழ்கின்றது. தொல்காப்பியத்திற்கு முன்பு பல இலக்கண நூல்கள் தோன்றி அழிந்திருக்கலாம். ஆனால், ஒரு பண்பட்ட நல்ல சமுதாயச் சூழலில் தொல்காப்பியம் தோன்றியிருக்க வேண்டும். அதனால்தான் உலகின் அனைத்து மொழிகளிலும் தோன்றியுள்ள இலக்கண நூல்களை விட மிகவும் சிறப்புற்றுத் திகழ்கின்றது.
“உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே
ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே” (தொல்.சொல்.1)
என்னும் நூற்பாவில் உலகத்து உயிர்ப்பொருள்களையும் உயிரல்லாத பொருள்களையும் உயர்திணை, அஃறிணை என இரு வகையாகத் தொல்காப்பியர் பகுத்துள்ளார். மக்கள் உணர்வை உடைய உயிர்களை உயர்திணை என்றும், மக்கள் உணர்வில்லாதவற்றை அஃறிணை என்றும் சேனாவரையர் குறிப்பிடுகின்றார். (தொல்.சொல்.சேனா.உரை.1)
“மக்கள் தேவர் நரகர் உயர்திணை
மற்றுயிர் உள்ளவு மில்லவும் அஃறிணை” (நன் -261)
என்பது நன்னூல் நூற்பா
இவ்வாறு உயர்ந்த ஒழுக்கம் உடைய மக்களை உயர்திணை என்று இலக்கண நூலாரும், உரையாசிரியர்களும் குறிப்பிடுகின்றனர். அம்மக்களே ஆடவரும் மகளிரும் ஆகும்.
“முப்பத்திரண்டு அவயவத்தான் அளவிற்பட்டு அறிவொடு புணர்ந்த ஆடூஉ மகடூஉ மக்கள் எனப்படும். அவ்வாறு உணர்விலும் குறைவுபட்டாரைக் குறைந்த வகை அறிந்து முற்கூறிய சூத்திரங்களானே அவ்வப் பிறப்பினுள் சேர்த்துக் கொள்ள வேண்டும்” (2)
என்று பேராசிரியர் குறிப்பிடுகிறார்.
இவ்வாறு உரையாசிரியர்களின் விளக்கங்களில் இருந்து உயர்ந்த ஒழுக்கமும் அவற்றைப் பற்றிய அறிவும் நடத்தையும் உடைய மக்களை உயர்திணை என்று அறியமுடிகிறது.
“இவ்வாறு உலகமொழிகள் அனைத்தும் விளக்கும் பால்பாகுபாட்டை விடத் தமிழில் உள்ள பாகுபாடு பகுத்தறிவுச் சிந்தனை மிக்கது” (3)
என்று இராபர்ட் கால்டுவெல் குறிப்பிடுவது நோக்கத்தக்கது. இவ்வாறு தொல்காப்பியத்தில் சமுதாயத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழில் பால்பாகுபாடு அமைந்துள்ளது.
3.0 உயர்திணையில் ஆண்பால்
தொல்காப்பியர் ஐம்பாலையும் உணர்த்தக்கூடிய விகுதிகளைக் குறிப்பிடுகின்றார். பின்வரும் நூற்பாவில் ஆண்பாலை உணர்த்தும் ன கர ஒற்றைக் குறிப்பிடுகின்றார்.
“னஃகான் ஒற்றே ஆடூஉ அறிசொல்” (தொல்.சொல்.5)<br>
என்னும் நூற்பாவில் ன கர ஒற்று ஆண்பாலை உணர்த்தும் என்றும் வினையியலில் அன், ஆன் (தொல்.சொல்.202) என்பவை ஆண்பாலை உணர்த்தும் விகுதிகள் என்றும் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார்.
“ஆடூஉ அறிசொல் மகடூஉ அறிசொல்
பல்லோ ரறியுஞ் சொல்லொடு சிவணி
அம்முப் பாற்சொல் உயர்திணை யவ்வே” (தொல்.சொல்.2)
ஆடவருக்கும் மகளிருக்குமான ஒழுக்கங்கள், நடத்தைகள் வரையறுக்கப்பட்டு இருப்பதை உரையாசிரியர்கள் பின்வருமாறு விளக்கியுள்ளனர்.
“அறிவு முதலாயினவற்றான் ஆண்மகன் சிறந்தமையின் ஆடூஉ அறிசொல் முற்கூறப்பட்டது” (4)
“ஆடூஉ அறிசொல் என்பது ஆண்மகனை அறியுஞ்சொல் அறிவார்க்குக் கருவியாகிய
சொல் அறிசொல்லாயிற்று. மகடூஉ அறிசொல் என்பது பெண்டாட்டியை அறியுஞ்சொல்” (5)
இவ்வாறு தொல்காப்பியரும் தொல்காப்பிய உரையாசிரியர்களும் ஆடவரையே முதன்மைப்படுத்தியிருப்பதை நன்கு அறியலாம்.
3.1 நற்கதி
“எழுத்தெனப் படுவ
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப
சார்ந்துவரல் மரவின் மூன்றலங் கடையே “ (தொல்.எழுத்து.1)
என்னும் இந்த நூற்பாவில் தமிழ் எழுத்துக்களின் வகைப்பாட்டை முதல் எழுத்துக்கள் முப்பதைக் குறிப்பிடுகின்றார்.
“அகரம் தானும் இயங்கித் தனிமெய்களை இயக்குதல் சிறப்பான் முன் வைக்கப்பட்டது.
னகாரம் வீடு பேற்றிற்குரிய ஆண்பாலை உணர்த்துதற் சிறப்பான் பின் வைக்கப்பட்டது” (6)
என்று இளம்பூரணர் குறிப்பிடுகின்றார். இதேக் கருத்தை நச்சினார்க்கினியரும் விளக்குகின்றார். இவ்வாறு உரையாசிரியர்களின் உரை விளக்கத்தை நோக்கும் போது ஆடவர் வீடுபேற்றிற்கு உரியவர்களாகவும் மகளிர் மென்மையுடையவர்களாகவும் இருப்பதை அறியமுடிகின்றது. மேலும்,
“எல்லா வல்லெழுத்தும் மெல்லெழுத்தும் முறையாக அமைந்தால் வைப்புமுறைப்படி இடையெழுத்து இறுதியாக வந்து அமையும். அவ்விதம் அமையப்பெறுமானால் ‘ள்’ இறுதி எழுத்தாகிவிடும் ‘ள்’ பெண்பாலைக் குறிக்கும் விகுதியாகும். இதனை இறுதி எழுத்தாக வைப்பது சமணர்களின் தத்துவ முறைக்கு ஏற்புடையதன்று. ஆகையினால் ‘ப்’ மற்றும் ‘ம்’ வரை வல்லெழுத்து மெய்யெழுத்து வரிசைப்படுத்திவிட்டு அடுத்து இடையெழுத்தைப் புகுத்திவிட்டு ‘ற்’ ‘ன்’ எழுத்தை இறுதியாக்கி ‘ன்’ விகுதியை முடிவு செய்யுமாறு அமைத்திருக்கின்றனர்” (7)
என்று ப.சுசீலா கூறுவார்.
சமணர்களின் தத்துவத்தில் வீடுபேறு பெறும் தகுதி ஆண் பிறப்பிற்கு மட்டுமே உரிய சிறப்பு என்றும், மகளிர் வீடுபேறு அடையும் வாய்ப்பற்றவர்கள் என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிவும், ஆளும் தன்மையும், பெருமைக்குரிய செயலாகிய நற்கதி அடைதலும் ஆடவர்க்கே உரியதாக அன்றைய உரையாசிரியர்கள் கால சமுதாயம் ஆடவரை முன்னிறுத்தி ஆளுமை உடையவர்களாகக் காட்டுகிறது என்பதை அறியலாம். தொல்காப்பியர் ஆண்பாலை முதலில் குறிப்பிட்டாலும் வீடுபேறு பற்றிய கருத்து அவரிடம் காணப்படவில்லை.
3. 2 வினைமுற்று.
உரையாசிரியர்கள் தங்களது உரைகளில் விளக்கம் கூறும்போது ஆண்பாலை உணர்த்தும் சான்றுகளையே குறிப்பிடுகின்றார்கள். பொதுவாக, காலத்தைப் பற்றிக் கூறும் போது, காலம் என்பது ஐந்து பாலுக்கும் உரியது. இவற்றுள் இறந்த காலத்திற்கான சான்றாக வந்தான், வந்தாள், வந்தார், வந்தது, வந்தன என்று குறிப்பிடலாம். ஆனால் தொல்காப்பிய உரையாசிரியர்கள் அனைவரும் ‘னகர இறுதியாக உடைய ஆண்பால் உணர்த்தும் சொற்களையே சான்றாகக் குறிப்பிடுகின்றார்கள்.
இறப்பு : உண்டான்
நிகழ்வு : உண்ணா நின்றான்
எதிர்வு : உண்பான் (தொல்.சொல்.202.நச்சர்)
என உரையாசிரியர்கள் இவ்வாறு ஆண்பாலுக்குரிய சான்றுகளேயே கூறுகிறார்கள். தொல்காப்பியர் சொல்லதிகாரத்தில் ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் உணர்த்தும் விகுதிகளைத் தொகுத்துக் குறிப்பிட்டுள்ளார். அவற்றுள் சில பெயர்ச் சொற்களிலும் வரும், வினையிலும் வரும். ஆனால் பெயர்ச் சொற்களில் எந்த விதிவிலக்கும் இல்லை என்பதைத் தொல்காப்பியர்,
“இருதிணைப் பிரிந்த ஐம்பாற் கிளவிக்கும்
உரியவை உரிய பெயர் வயினான” (தொல்.சொல்.158)
என்னும் நூற்பாவை குறிப்பிடுகின்றார்.
இந்நூற்பாவின் உரைவிளக்கத்தில் சேனாவரையர் பின்வருமாறு சான்று கூறுகிறார்.
“நஞ்சுண்டான் சாம் என்பது ஒருபாற்குரிய சொல்லாயினும் நஞ்சுண்டாள் சாம், நஞ்சுண்டார் சாவர், நஞ்சுண்டது சாம், நஞ்சுண்டன சாம் என ஏனைப்பாற்கும் உரித்தாம்” (8)
இவ்வாறு தொல்காப்பிய உரையாசிரியர்கள் ஆடவரை முதன்மைபடுத்தியே சான்றுகளைக் கூறியுள்ளனர். எனவே தொல்காப்பியர் கால சமுதாயத்தில் ஆடவர் ஆளுமை மிக்கவராக இருந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது.
3.3 செய்யும் என்னும் வாய்பாடு
செய்யும் என்னும் வாய்பாட்டு முற்றுக்களைக் கொண்டு பாலை அறிந்து கொள்ளலாம்.
“நிகழூஉ நின்ற பால்வரை கிளவியின்
உயர்திணை ஒருமை தோன்றலும் உரித்தே
அன்ன மரபின் வினைவயி னான” (தொல்.சொல்.170)
மேற்குறிப்பிட்ட நூற்பாவின் உரை விளக்கத்தில் எழுவாயாக வரும் பெயர்கள் உயர்திணைக்கு உரியவை என்பதை உரையாசிரியர்கள் பின்வரும் சான்றுகளில் கூறுகின்றனர்.
“சாத்தன் யாழ் எழூஉம்
சாத்தி சாந்து அரைக்கும்”
என்று இளம்பூரணர் குறிப்பிடுகின்றார்.
“சாத்தன் குழல் ஊதும்
சாத்தி பூத்தொடுக்கும்”
என்பது நச்சினார்க்கினியர் கூறும் சான்றுகளாகும்.
எழுவாயாக வரும் சாத்தன் உயர்திணை. எனவே, யாழ் இசைப்பதும், குழல் ஊதுவதும் உயர்திணைக்கு உரியவையாகும். இவ்வாறே எழுவாயாக வரும் சாத்தி உயர்திணை என்றும் சாந்து அரைப்பதும், பூ தொடுப்பதும் உயர்திணைக்கு உரியவை என்பதை நன்கு உணர்ந்து கொள்ளலாம்.
இதுபோன்றே கையெழுதுதல், யாழிசைத்தல் முதலான கல்வி அறிவோடு தொடர்புடைய தொழில்கள், பொருளியல் சார்ந்த நிலைகள் அனைத்தும் ஆடவர்க்கு உரியதாகவும் சாந்து அரைத்தல், பூத்தொடுத்தல் முதலான வீட்டு வேலைகளும் அழகு தொடர்பான செயல்களும் மகளிர்க்கு உரியவையாகவும் உரையாசிரியர்கள் காலச் சமுதாயத்தில் இருந்து வந்துள்ள தொழில் வரையறைகளை அறியமுடிகின்றது.
இவ்வாறு ஆடவர்க்கே முதன்மைகொடுத்து தொல்காப்பியமும் தொல்காப்பிய உரைகளும் குறிப்பிடுகின்றன.
3. 4 சுட்டுப்பெயர்
“சுட்டு முதலாகிய காரணக் கிளவியும்
சுட்டுப்பெயர் இயற்கைச் செறியத் தோன்றும்” (தொல். சொல்.40)
இந்நூற்பாவின் உரை விளக்கத்தில் சேனாவரையர் சான்று கூறும் போது, ஆடவர்க்கு கல்வியறிவு தொடர்பாகவும், மகளிர்க்கு வீட்டு வேலைத் தொடர்பாகவும் குறிப்பிடுகின்றார்.
“சாத்தன் கை எழுதுமாறு வல்லன் அதனால் தந்தை உவக்கும் சாத்தி சாந்து அரைக்குமாறு வல்லள் அதனால் கொண்டான் உவக்கும்” (9)
அறிவு முதலியவற்றால் ஆண்மகன் சிறந்தமையின் ஆடூஉ அறிசொல் முற்கூறப்பட்டது (தொல்.சொல்.2) எனச் சேனாவரையர் குறிப்பிடுவதாலும், ஆளும் மகன் ஆண்மகன் என்று நச்சினார்க்கினியர் குறிப்பிடுவதாலும் அக்காலச் சமுதாயத்தில் ஆடவரின் நிலை எவ்வளவு உயர்வுடையதாகவும், ஆளுமை உடையதாகவும் இருந்துள்ளன என்பதை நன்கு அறியலாம்.
4. 0 உயர்திணையில் பெண்பால்
இந்திய மொழிக் குடும்பங்களில் ஒன்றாகத் திராவிட மொழிக் குடும்பமும் கருதப்படுகின்றது. இந்தியாவில் நூற்றுக்கணக்கான மொழிகள் பேசப்பட்டாலும், அவை அனைத்தும் பின்வரும் நான்கு மொழிக் குடும்பங்களில் வைக்கப்பட்டுள்ளன.
1. திராவிட மொழிக் குடும்பம் (Dravidian family)
2. இந்தோ-ஆரிய மொழிக் குடும்பம் (Indo - Aryan family)
3. முண்டா மொழிக் குடும்பம் (Munda family)
4. திபெத்தோ - பர்மிய மொழிக் குடும்பம் (Tibeto - Burmian family) (10)
இந்தியாவில் தெற்கு முதல் வடக்கு வரை இருபத்து நான்கிற்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இவற்றுள் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு தவிர மற்ற அனைத்து மொழிகளும் வழக்கில் உள்ள பேச்சு மொழியாகும். தெலுங்கு மற்றுமுள்ள பெரும்பாலான பேச்சு மொழிகளில் பொருளை அடிப்படையாகக் கொண்டுதான் பெண்பாலா, ஒன்றன்பாலா என்பதை அறியமுடியும். ஏனெனில் பெண்பாலும் ஒன்றன் பாலும் ஒன்றுபோலவே தோன்றும். அதாவது அம்மொழிகளில் பெண்பாலுக்கு என்று ஒரு தனியான பால்பாகுபாடு இல்லை.
அவள் வந்தாள்
ஆதிவச்சினிதி (11)
அது வந்தது
எனவரும். தொல்காப்பியர் ள கர ஒற்று பெண்பாலை உணர்த்தக்கூடியது என்பதை,
“ளஃகான் ஒற்றே மகடூஉ அறிசொல்” (தொல்.சொல்.6)
எனும் நூற்பாவிலும் வினையியலில் அள், ஆள் (தொல்.சொல்.202) என்பவை பெண்பாலை உணர்த்தக்கூடிய விகுதிகள் என்றும் குறிப்பிடுகின்றார். பெண்பால் என்பது தமிழில் உயர்திணையாகக் கொள்ளப்படும் என்றாலும் தொல்காப்பிய உரையாசிரியர்கள் தொழில் அடிப்படையில் பொதுவான சொல்லில் இருந்து பெண்ணைப் பகுத்தறிந்து கொள்ளும் நிலையில் சான்றுகளைக் கூறுகின்றார்கள்.
4.1 பெண்மகன்
பெண் என்பது பெண்பாலைக் குறிக்கும் சொல்லாகும். ஆண் என்பது ஆண்பாலைக் குறிக்கும் சொல்லாகும். இவ்விரண்டு சொற்களையும் சேர்த்துப் பெண்மகன் என்று தொல்காப்பியர் (தொல்.சொல்.161) குறிப்பிடுகின்றார். இந்நூற்பாவிற்கு உரை எழுதும் உரையாசிரியர்கள் அறியாப் பருவத்துப் பெண்ணை பெண்மகன் என்று கூறுகின்றார்கள்.
“புறத்துப் போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண்மகளை மாறோக்கத்தார் இக்காலத்தும் பெண்மகன் என்று வழங்குப” (12)
“நாணுவரை யிறந்து தன்மையளாகிப் புறத்துப் போய் விளையாடும் பெண்மகளைப் பெண்மகன்”
என்பது முற்காலத்து வழக்கம். அதனை இப்பொழுதும் மாறோக்கத்தார் வழங்குவர். மாறோக்கம் என்பது கொற்கை சூழ்ந்த நாடு (13)
பெண்மகன் என்பது விளையாட்டுப் பருவத்துப் பெண்ணைக் குறிக்கும் என்று தொல்காப்பிய உரையாசிரியர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்கின்றார்கள். மற்றொரு நிலையில் கொற்கை சார்ந்த மாறோக்கம் என்னும் பகுதியில் வட்டார வழக்காகப் பயன்படுவதைச் சேனாவரையரும் கல்லாடரும் குறிப்பிடுகின்றனர்.
அக்காலச் சமுதாயத்தில் மகளிர் வீட்டை விட்டு வெளியே சென்று விளையாடும் உரிமை கூட மறுக்கப்பட்டிருந்தது என்றும், பெண்களின் அறிவும் ஆற்றலும் வீட்டிற்கும் வீட்டின் எல்லைக்கும் உள்ளாகவே அமைந்திருந்த நிலையை (தொல்.சொல்.194) உணரமுடிகின்றது
“மகடூஉப் பொருண்மைக்கண் பால்திரிந்து வரும் பெண்மகன் என்னும் பெயர் வினைகொள்ளும் இடத்து மகடூஉவிற்குரிய வினை கொள்ளும்” (14)
பெண்மகன் வந்தாள் என்பது உரையாசிரியர்கள் தரும் சான்றாகும். பெண் தன்மை குறைந்து ஆண்தன்மை மிகுந்த பொருளுக்கு ஆண்பால் விகுதியைப் பெறாமல் பெண்பால் விகுதியைப் பெறுகின்றது.
5. 0 உயர்திணையில் பால் திரிபு
தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் போன்ற எந்த இலக்கிய இலக்கணமாக இருந்தாலும் மக்களுக்காகவும் அம்மக்களைச் சார்ந்தும் எழுதப்படும் போதுதான் அவ்விலக்கிய இலக்கணங்கள் காலம் கடந்தும் வாழும் நிலையுடையதாக இருக்க முடியும்.
“பிற மொழிகள் எழுத்திலக்கணமும் சொல்லிலக்கணமும் உடையனவேயன்றி, மக்களின் வாழ்வை ஆராய்ந்த பொருளிலக்கணம் கண்டவையல்ல. தமிழ் மொழியோ எனில் முவ்விலக்கணமும் நிறைந்தது” (15)
என வ. சுப மாணிக்கம் தொல்காப்பியத்தின் பெருமையை விளக்கியுள்ளார்.
தொல்காப்பியம் செய்யுள் மொழியையும் வழக்கு மொழியையும் கொண்டிருப்பதோடு பழந்தமிழக மக்களின் அகம், புறம் சார்ந்த வாழ்க்கை முறையையும் விளக்குவதால்தான் காலம் கடந்தும் நிலைபெற்றுள்ளன. இதை அடிப்படையாகக் கொண்டு ஆடவர், மகளிரின் தன்மையைக் குறிப்பிடுவது போலவே அவர்களுள் இயல்பு திரிந்தவர்களுக்கும் தொல்காப்பியம் இலக்கணம் கூறுவதைக் காணமுடிகிறது.
“பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
உயர்திணை மருங்கின் பால்பிரிந்து இசைக்கும்” (தொல்.சொல்.4)
எனும் நூற்பாவில் ஆண் தன்மை இழந்து பெண் தன்மை மிகுந்தவர்களுக்கும், பெண் தன்மை இழந்து ஆண் தன்மை மிகுந்தவர்களுக்கும் பால் காட்டும் விகுதியைப் பயன்படுத்துவது பற்றித் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். இந்நூற்பாவிற்கு உரை எழுதும் உரையாசிரியர்கள் பின்வருமாறு விளக்குகின்றார்கள்.
சேனாவரையர்
"பாலுள் அடங்காத பேடியையும் திணையுள் அடங்காத தெய்வத்தையும் பாலுள்ளும் திணையுள்ளும் அடக்கியவாறு" (16)
நச்சினார்க்கினியர்
"ஒருவன் உயர்திணை இடத்துப் பெண்பாற்குரிய அமைதித் தன்மையைக் கருதுதற்குக் காரணமான ஆண்பாற்குரிய ஆளும் தன்மை திரிந்த பெயர்ப்பொருளும் என்றும் ஆண்பாற்குரிய ஆளும் தன்மை முற்பிறப்பின் தான் செய்த தீவினையான் தன்னிடத்து இல்லையான பெயர்ப்பொருளென்க" (17)
இந்நூற்பாவிற்குச் சான்று தரும் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் பேடி வந்தாள், பேடியர் வந்தார் எனக் குறிப்பிடுவர். ஆனால் இளம்பூரணர் மட்டுமே பேடி வந்தான் எனக் குறிப்பிடுகின்றார். பெண்ணின் இயல்பான தன்மை குறைந்து ஆணின் தன்மை மிகுந்தாலும் ஆணின் தன்மை குறைந்து பெண்ணின் தன்மை மிகுந்தாலும் பேடி, பேடு என்று கூறுவர். அவர்களின் ஆடை அணிகலன்கள் அணியும் இயல்புக்கு ஏற்ப ஆண்பால், பெண்பால், வினைமுற்று விகுதியைப் பெறுவர்.
பேடு வந்தான்; பேடு வந்தாள்
பேடி வந்தான்; பேடி வந்தாள்
பேடர் வந்தார்; பேடியர் வந்தார்
இவ்வாறு பால்திரிந்து விளங்கக்கூடியதில் அலி என்ற மற்றொரு வகையும் உண்டு. பால் திரிந்த நிலை போன்றே தெய்வத்திற்கும் ஆண்பால், பெண்பால், பலர்பால் என்னும் பாகுபாடு உள்ளது தெய்வத்திற்கும் மக்களுக்குப் பயன்படுத்தும் வினைமுற்றையேப் பயன்படுத்த வேண்டும்.
தெய்வம்
ஆண்பால் : தேவு வந்தான்
பெண்பால் : தேவு வந்தாள்
பலர் பால் : தேவர் வந்தார்
தேவு என்னும் பெயர்ச் சொல் ஆண், பெண் என்னும் இரு தெய்வத்தையும் குறிக்கும் பொதுவானச் சொல்லாகும். (தொல்.சொல்.12) என்பதைச் சேனாவரையர் பின்வருமாறு விளக்குகின்றார்.
“ஆண்மை அறிசொற்கு ஆகிடன் இன்று என்ற விலக்கு ஆண்மையறி சொல்லோடு
புணர்தல் எய்தி நின்ற பேடிக்கு அல்லது ஏலாமையின் அலிமேற் செல்லாதென்க” (18)
ஆண்மை குறைந்து பெண்தன்மை மிக்கவர் பேடி என்னும் பெயரைப் பெறுவர்.
பெண்பால் : பேடி வந்தாள்
பெண் பலர்பால் : பேடியர் வந்தனர்
உயர்திணைக்கு உரிய ஆண், பெண் பால்திரிந்தாலும் அவர்கள் உயர்திணையில் இருந்து வேறுபடுத்தப்பட மாட்டார்கள் என்பது தொல்காப்பியரின் உயர்ந்த சிந்தனைக்குச் சான்றாக அமைகின்றது. ஆனால், தொல்காப்பியருக்குப் பின் தோன்றிய பவணந்தி முனிவர் பால் திரிந்து விளங்குபவர்களை அஃறிணையாகவே கருதுகின்றார் என்பதை,
“பெண்மைவிட்டு ஆண் அவாவுவ பேடு ஆண்பால்
ஆண்மைவிட்டு அல்லது அவாவுவ பெண்பால்
இருமையும் அஃறிணையும் அன்னவும் ஆகும்” (நன்.264)
என்ற நூற்பாவில் பெண் ஆணின் நிலைக்குத் திரிந்தாலும் ஆண் பெண்ணின் நிலைக்குத் திரிந்தாலும் பேடு என்றே கூறப்படும். உயர்திணை வினைமுற்று பெறும் என்று குறிப்பிடும் பவணந்தி முனிவர் அஃறிணை முடிவு பெறும் என்றும் குறிப்பிடுகின்றார்.
பேடு வந்தது
பேடி வந்தது
அலி வந்ததது
இவ்வாறு பால் திரிந்த மக்களை அஃறிணையாகக் கருதுவது பொருத்தமில்லாத கருத்தாகப்படுகிறது. பழந்தமிழக மக்கள் குழந்தை இறந்து பிறந்தாலும் உருவமில்லாத முண்டமாகப் பிறந்தாலும் உயர்திணை உயிர் என்றே கருதி வாளால் கிழித்து ஈமச்சடங்கு செய்வது வழக்கம் என்பதைப் பின்வரும் புறநானூற்று பாடலால் அறியலாம்.
“குழவி இறப்பினும் ஊண் தடி பிறப்பினும்
ஆளனறு என்று வாளின் தப்பார்”
இவ்வாறு பால் திரிந்து பிறந்தாலும் உயர்திணைக்கு உரியவர்களே என்றும் அமைதிப் பண்பு பெண்ணிற்கு உரியது. ஒருவன் அமைதித் தன்மையைக் கொண்டிருந்தால் ஆண் தன்மையை இழப்பான் என்றும் ஆடவர் பண்பிலிருந்து ஒருவனைப் பேடியாக்கிப் பெண்பாலாக்கும் என்றும் உரையாசிரியர்கள் நன்கு விளக்கியுள்ளனர். மேலும் அஞ்சாமையும், அறிவுத்திறன் மிகுதியும் ஆளும் தன்மையுமே ஆடவர்க்கு உரிய ஆளுமைப் பண்பாக தொல்காப்பியத்திலும் தொல்காப்பிய உரையாசிரியர்களின் உரை விளக்கங்களில் இருந்தும் அறியப் பெறுகிறது.
6. 0 பலர்பாலில் பாகுபாடு
தொல்காப்பியர் தொழில் அடிப்படையில் பெயர், வினையை அறிந்துகொள்ள வேண்டும் என்பதைக் (தொல்.சொல்.50) குறிப்பிடுகின்றார். சமுதாயத்தில் இத்தொழில்கள் இன்னார்க்கு என்று பாகுபடுத்தப்பட்டுள்ளன. ஆண்பலர்பால், பெண்பலர்பால் என்னும் பாகுபாடு இலக்கண அடிப்படையில் பாகுபடுத்தப்படவில்லை. எனினும், தொல்காப்பிய உரையாசிரியர்கள் தரும் சான்றுகள் குறிப்பிடத்தக்கது என்பதைப் பின்வருமாறு அறியலாம்.
6. 1 ஆண்பலர்பால்
இளம்பூரணர் : அரசர் ஆயிர மக்களொடு தாவடி போயினார்
சேனாவரையர் : வடுக அரசர் ஆயிர மக்களை உடையர்
நச்சினார்க்கினியர் : இவர் கட்டிலேறினார்
தமிழண்ணல் : கழலணிந்தார்,
மேற்குறிப்பிட்ட இச்சான்றுகளில் வரும் மக்கள், இவர் என்னும் பெயர்கள் பலர்பாலை உணர்த்தக்கூடியதாகும். ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனியே தொழிற் பாகுபாடுகள் இருப்பதால் பலர்பால் சொற்களாக இருப்பினும் அவை பலர்பாலில் ஆணா, பெண்ணா என்பதை அறிந்துகொள்ள முடியும்.
மக்கள் - என்னும் இச்சொல் பலர்பால் சொல் என்றாலும் போர் தொடர்புடையதாக இருப்பதால் இச்சொல் ஆண்பலர் பால் எனப்படுகின்றது.
இவர் - என்னும் இச்சொல் அரியணை ஏறுதல் தொடர்பாக இருப்பதால் ஆண்பலர்பால் (பெண்ணொழி மிகுசொல்) எனப்படுகின்றது.
இவ்வாறு சமுதாய நிகழ்வின் வாயிலாக ஆண்பலர்பால் பெண்பலர்பால் என்னும் பாகுபாட்டை அறிந்து கொள்ளலாம்.
6. 2 பெண்பலர்பால்
இளம்பூரணர் : பெருந்தேவி பொறை உயிர்த்த கட்டிற்கண் நால்வர் மக்கள்
சேனாவரையர் : தொடியோர் கொய்குழை அரும்பிய குமரி ஞாழல்
மேற்குறிப்பிட்ட இச்சான்றுகளில் வரும் மக்கள், தொடியோர் என்னும் இச்சொற்கள் பெண்பலர்பால் (ஆணொழி மிகுசொல்) எனப்படுகின்றது. தொல்காப்பியர் நூற்பாவைப் பொதுவாகக் குறிப்பிட்டாலும், அந்நூற்பாவிற்கு உரை எழுதும் உரையாசிரியர்கள் சமுதாய நிகழ்வினை அடிப்படையாகக் கொண்டே சான்றுகளைக் குறிப்பிடுகின்றார்கள்.
7. 0 தொகுப்புரை
உலகமொழிகள் அனைத்தும் விளக்கும் பால்பாகுபாட்டை விடத் தமிழில் உள்ள பாகுபாடு பகுத்தறிவுச் சிந்தனை மிக்கது என்பதை விளக்கும் வகையில் பால்திரிந்து விளங்குபவர்களை அஃறிணையாகக் கொள்ளலாமல், உயர்திணையில் இருந்து வேறுபடுத்தப்படமாட்டார்கள் என்ற தொல்காப்பிரின் உயரிய சிந்தனை அறியப்பெறுகிறது. மேலும், ஆண்களுக்கே அறிவும் ஆளும் தன்மையும் பெருமைக்குரிய செயலாகிய நற்கதி அடைதலும் உரையாசிரியர்கள் தரும் சான்றுகளும் அக்கால சமுதாயத்தில் ஆண்கள் முதன்மைப்படுத்தப்பட்டிருப்பதை அறியலாம்.
அடிக்குறிப்புகள்
1. பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரி, தொல்காப்பியம் சொல்லதிகாரம், ப. Xviii .
2. பேராசிரியர், தொல்காப்பியம் - பொருளதிகாரம் 588
3. இராபர்ட்டு கால்டுவெல், திராவிட ஒப்பியல் இலக்கணம், ப.20.
4. சேனாவரையர், தொல்காப்பியம் - சொல்லதிகதரம், 2.
5. தெய்வச்சிலையார், தொல்காப்பியம் - சொல்லதிகாரம், 2.
6. இளம்பூரணர், தொல்காப்பியம் - எழுத்ததிகாரம், 1.
7. ப.சுசீலா, எழுத்துக்களும் தத்துவங்களும், ப.1048.
8. சேனாவரையர், தொல்காப்பியம் - சொல்லதிகாரம்,161.
9. சேனாவரையர், தொல்காப்பியம் - சொல்லதிகாரம், 40.
10. ச.சுபாஸ்சந்திர போஸ், தமிழ் இலக்கிய வரலாறு, ப
11. கிருஸ்ணமூர்த்தி, தெலுங்குவினைச்சொல், ப.267.
12.. சேனாவரையர், தொல்காப்பியம் - சொல்லதிகாரம், 164.
13. கல்லாடர், தொல்காப்பியம் - சொல்லதிகாரம், 167.
14. சேனாவரையர், தொல்காப்பியம் - சொல்லதிகாரம்,194.
15. வ.சுப. மாணிக்கம், தமிழ்க்காதல், ப.217.
16. சேனாவரையர், தொல்காப்பியம் - சொல்லதிகாரம், 4.
17. நச்சினார்க்கினியர், தொல்காப்பியம் - சொல்லதிகாரம் 4.
18. சேனாவரையர், தொல்காப்பியம் - சொல்லதிகாரம், 2.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|