தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
78.பாவண்ணணின் ‘கல்’ சிறுகதை முன்வைக்கும் மானுட எதார்த்தம்
த. மங்கையர்கரசி
முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழாய்வுத்துறை,
பெரியார் ஈ. வெ. ரா. கல்லூரி (தன்னாட்சி), திருச்சிராப்பள்ளி
முன்னுரை
அன்றாடப் பிழைப்பிற்கு அல்லாடிக் கொண்டிருக்கும் மக்களின் ஏழ்மை நிலையை பாவண்ணன் அவர்கள் கல் என்ற சிறுகதையில் பதிவு செய்கின்றார். மேலும் சொந்த ஊரை விட்டுக் கொத்தடிமைகளாகவும், தினக்கூலிகளாகவும், ஒப்பந்த அடிப்படையிலும் வாழும் பாமர மக்களின் நிலையையும் சிறுகதையின் மூலம் ஆசிரியர் உணர்த்துகிறார்.
கதைச்சுருக்கம்
உழைக்கும் வர்க்கம் பல நிலைகளில் இருந்தாலும், ஒவ்வொரு வர்க்கமும் அதன் போக்கில் எண்ணற்ற இன்னல்களையும், சவால்களையும் சந்திக்க நேரிடுகிறது. அந்த வரிசையில் ‘கல் உடைக்கும் சமூகம்’ எதிர்கொள்ளும் துன்பமும், அவர்களின் துன்ப வாழ்க்கை எவ்வாறு அவர்களை நகர்த்துகின்றது என்பதை மையமிட்டு இச்சிறுகதை அமைகின்றது. நாளுக்கு நாள் உழைப்பினை உயர்த்திக் கொண்டே போகும் அவர்களுடைய வாழ்வியலை உழைப்பு உயர்த்தவில்லை என்பதுதான் யதார்த்தநிலை. இந்த எதார்த்த நிலையைத் தன் சிறுகதைக்கு களமாக்கியுள்ளார் பாவண்ணன்.
மானுட எதார்த்தம்
ஒரு நாள் உணவு முடிந்தபின் அடுத்த நாளின் பசியைப் போக்க வேலை தேடுதல், வேலையின் மூலம் வருமான எதிர்பார்ப்பு என்ற நிலையில் இச்சிறுகதை அமைகின்றது. ஆனாலும் வறுமைதான் அவர்களுக்கு எஞ்சியிருக்கிறது. வாழ்க்கையில் வரும் இன்னல்களை ஆற்றுப்படை நூலொன்று வறுமைபற்றி கூறும்போது,
“குப்பை வேளையுப் பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து
இரும்பே ரொக்கலொ டொருங்குடன் மிசையும்” (சிறுபாணாற்றுப்படை : 137 - 139)
என்று கூறுகின்றது. தன் வறுமையினை புறத்தார் காண விரும்பாத நிலையில் ஒழுகு பழங்கூரையுடைய வீட்டில் உப்பில்லாத வேளைக்கீரையை அவர்களுக்கு உணவாகின்றது. ஆனாலும் வறுமையிலும் செம்மை வாழ்க்கை அவர்கள் வாழ்வதாகச் சிறுபாணாற்றுப்படை சுட்டுகின்றது. கல் உடைத்தால் தான் உணவு என்ற நிலை ஒருபுறம். இன்னொருபுறம் கல் உடைக்கும் களத்தில் ஏற்படும் நிலையினை,
“வீனா கலாட்ட எதுக்கு மீனா என்
வார்த்தைக்கு ஒத்துக்க... ... ...”
என்ற விதமான பாலியல் சீண்டல்கள் ஆனாலும் வறுமையைக் காரணங்காட்டி பண்பினை விட்டுக் கொடுக்காத மீனாவின் உள்ள உறுதியையும் இச்சிறுகதையில் அறிய முடிகின்றது.
தன்னுடைய வறுமை வெளியே காட்ட விரும்பாத நிலையை சிறுகதைப் பாத்திரங்களின் வழி ஆசிரியர் விளக்க முற்படுகின்றார்.
புலம்பெயர்தல்
தன் இருப்பிடத்தை விட்டுப் புலம்பெயர்ந்து வேலைசெய்யும் இடத்தையே தன் இருப்பிடமாக எண்ணி வாழ்வது வாழ்வதற்கேற்ற குடிசை அமைத்தல், அந்த இடங்களில் இருந்து குவாரிகளில் வேலை செய்தல், பின் வேறொரு இடத்திற்குச் சென்று அங்கு வாழ்தல் இது போன்று நிரந்தரமற்ற இருப்பிடம் கல் உடைப்போரின் யதார்த்தமாகின்றது.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற புறப்பாடலுக்கேற்ப எல்லா ஊரும் கல்லுடைப்போரின் ஊராகின்றது. இந்தப் பொதுநல நோக்கை உற்றுநோக்கிய ஆசிரியர் தன்னுள்ளத்தில் வேர்விட்ட கருத்துக்களை கல் உடைப்போரின் வாழ்வியலாக முன் வைக்கின்றார். இதனால் இடம் மாறும் சூழலால் தன் பிள்ளைகளின் கல்வி, வாழ்வாதாரம் பாதிக்கிறது மட்டுமின்றி நிரந்தர குடியிருப்புகளையும் அமைத்துக் கொள்ள முடியாத தடுமாற்றத்தில் கல்லுடைப்போர் உள்ளனர்.
உணவு, உடை, உறையுள் என்ற மூன்றும் மனிதனின் அடிப்படைத் தேவைகள் ஆகும். இம்மூன்றையும் பெறுவதில் இவர்களுக்கு என்றுமே தடைதான். உழைப்பை விற்று வறுமையைப் பரிசாகப் பெறும் அவலம் கல் உடைப்போர் வாழ்க்கையையும் விட்டு வைக்கவில்லை.
கொத்தடிமைத்தனம்
கல் உடைப்பவர்களில் சிலர் கொத்தடிமைகளாக வாழ்கின்றனர். அடக்கு முறையில் அடிமைத்தனம் தலைத்தோங்கி முதலாளிகளின் ஆதிக்கப்பிடியில் சிக்கித்தவிக்கும் நிலையும் இருக்கிறது. குறைந்த கூலிக்கு வேலைசெய்ய வேண்டியதும் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் இல்லாமல் உழைக்க வேண்டிய சூழ்நிலையுமே உருவாகிறது. இதில் குடும்பம் குடும்பமாகக் கொத்தடிமைத் தொழிலில் ஈடுபடுத்துவது போலவே சிறுவயதில் வழிமாறிப் போகும் சிறுவயதினரையும் இக்கொத்தடிமைத் தனத்தில் தள்ளப்படுகிறார்கள்.
மீனாவும் ராஜலட்சுமியும் கல் உடைக்கும் பெண்கள் மீனாவின் கையில் அடிபட்டும் படுவம் (நகச்சுத்தி) வந்த கையோடு வேலைசெய்ய ராஜலட்சுமி உனக்கு ஏண்டி இந்த வேலையெல்லாம் என்று முனகிக் கொண்டே,
“என்னாடி மீனா இன்னும் சாப்பிடப் போவலியா?”
“போவனும் அத்த”
“ஒங்க அம்மா இன்னும் வரலியாஇ வருவா வருவா அதுவரைக்கும் இந்த நெலாவுலியே ஒக்காந்திரு”
வெயிலின் கொடுமையையும், உழைப்பிற்கு மத்தியில் என்று வெயிலைப் பொருட்படுத்தாத மீனாவின் உளப்பாங்கினையும் இதமாகக் காட்டுகிறார் ஆசிரியர். வேலைமுடித்த கையோடு சிறுது ஓய்வெடுக்க முடியாத நிலையையும் நிழலுக்குக்கூட ஒதுங்க முடியாதச் சூழலையும் சுட்டுகிறார்.
ஒப்பந்தக் கூலி
ஒரு புட்டி முப்பது தட்டு ஜல்லி, பத்து புட்டி ஒரு யூனிட். இரண்டு யூனிட் சேர்த்து ஒருலாரி லோடு என்பது கணக்கு, ஒரு லோடுக்கு லாரி வாடகை, ஆள் கூலி எல்லாம் போக முந்நூறு நானூறு ரூபாய் நிற்கும், ஆனால் கூலிக்காரர்களுக்கு கிடைப்பது ஒரு புட்டிக்கு 50 ரூபாய்தான் எத்தனையோ பேர் எத்தனை முறை கேட்ட பிறகும் கூட ஏஜென்டுகளே முதலாளியாகும் நிலையையும் இக்கதைச் சுட்டிச் செல்கின்றது.
பாறைகளை உடைக்கத் தேவைப்படும் வெடிமருந்து வாங்க வாடகைக்கு வரும் லாரிகூட, மேலதிகாரிகளுக்கு லஞ்சம் தர, ஆபீசருக்கு, இடைத்தரகர்களுக்கு என்ற பல்வேறு காரணங்களைக் கூறி ஏசென்டுகள் கூலி ஆள்களுக்கு கொடுக்கும் கூலியைக் குறைத்துக் கொடுப்பதும் வழக்கமான நடைமுறைகளில் ஒன்றாகத்தான் தெரிகிறது.
மீனாவின் உள்ள உறுதி
மூன்று வருடத்திற்கு முன்பு வெடியில் பிளந்த கல் ஒன்று மீனாவின் அம்மா முதுகில் வீழ்ந்ததில் குவாரி வேலை செய்ய முடியாமல் போயிற்று. மீனா குடும்பப் பாரம் சுமக்கக் கல் உடைக்க நேரிட்டது. பூங்கோதை அக்கா துணையோடு வேலைக்கு வரும் மீனா, பூங்கோதை அக்கா எட்டுமாதக் கர்ப்பிணியாக இருப்பதால் பூங்கோதையின் அக்கா கணவர் அவளை அழைத்துக் கொண்டு வற்புறுத்தலின் காரணமாகக் கூலி வேலை செய்து வந்தாள். மீனாவிற்கு இனி அவளுடைய துணையும் கிடையாது. இருந்தாலும் உள்ள உறுதியோடு தன்பணியைத் திறம்பட ஆற்றுகின்றாள் மீனா.
பெண்ணடிமை
பொதுவாக பெண்களை ஒரு சிலர் இன்னும் அடிமைகளாகத்தான் பார்க்கிறார்கள்.
“படிப் பெமக்கு வேண்டாவோ
பாமரராய்ப் பொங்கும்
அடுப்பங் கரைப் புகைக்கே
ஆளாய் மடிவோமா?” (பக். 23)
என்று பெண்ணின் குரலைச் சுத்தானந்த பாரதியார் ஓங்கி ஒலிக்கச் செய்கிறார்.
தூரத்தில் புழுதியைக் கிளப்பிக் கொண்டு ஒரு லாரி வருகிறது. ஏஜென்ட் மனோகரன் வெறியன் மாதிரி படிக்கட்டில் நின்று கொண்டு வருகின்றான். மீனாவை நெருங்க நெருங்க வண்டியின் ஹாரன் சத்தம் அதிகமாகிறது.
மனோகரன் அவளை அழைக்கக் காதில் விழாதவள் போல் குனிந்து வேலை செய்ய மறுபடியும் கூறுகின்றான். குவாரியில் நீ வேலையைச் செய்ய வேனாம் தெனம் மூனு புட்டின்னு கணக்குப்பண்ணி நான் உனக்கு பணம் தர்றேன். புதுத்துணி நகைங்க இப்படி நீ எதை கேட்டாலும் தான் என்று தவறான முறையில் கையால அவளுக்கு ஆசைவார்த்தை விடுத்தான். மீனா கூச்சலிட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவர பத்தினி மாதிரி நாடகம் ஆடறா என்று பிளேட்டையே திருப்பிப் போடுவேன் என்று மனோகரன் சொல்ல மனசு நடுங்கியது இவளுக்கு.
“இருக்கற சௌகர்யமே எனக்குப் போதும் பேசாம ஒன் வழிய பாத்துக்னுபோ”
“என் தலையெழுத்து எப்படியோ அப்பிடி நடக்கும். நீ எதுக்குய்யா கவலப்படற...?”
“நீ ஒருதரம் உம்…னு சொல்லு மீனா. நா ராணி மாதிரி வச்சிக் காப்பாத்தறன்”
“போடா பொறுக்கி”
“த்தூ” என்று துப்பிவிட்டு முறைத்தாள். இரண்டு மூன்று நாள்களில் கை சரியாவிட்டது. வயிற்றுப்பாட்டை எண்ணி வேலைக்குப் போவது அவசியமாக இருந்தாலும் கூட மீனாவுக்கு குவாரிப்பக்கம் போக இஷ்டம் இல்லை. தீராத ரணம் மாதிரி ‘சொல்லாம செஞ்சிக் காட்டறேன்’ என்ற மனோகரனின் வன்மம் மிக்க வார்த்தைகள் மனசுக்குள் இருந்து கொண்டு இம்சை கொடுத்தது. இவ்வாறாக அடித்தட்டு மக்கள் அன்றாடப் பிழைப்பிற்கே வழியின்றி தவித்து வருகின்றனர்.
மேல்தட்டு மக்கள் வசதியுடன் வாழ்வதும் கீழ்த்தட்டு மக்கள் அடிப்படை உரிமைகளைக்கூடப் போராடிப் பெறும் நிலையும் மாறவேண்டும். இயல்பாக எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் நிலை உருவானால் இச்சமுதாயம் மறுமலர்ச்சி பெறும் என்பதில் ஐயமில்லை.
சமூகச்சிந்தனை
“பல்வேறு நிலைகளில் உருவாகியுள்ள கொத்தடிமைகளை மீட்டு அவர்களுக்கு நிறுவனங்களும், நல்வாழ்க்கைக் காட்டியுள்ள தொண்டு நிறுவனங்களும், சமூகத் தன்னார்வலர்களும் இருப்பது ஆறுதலான ஒன்றாக உள்ளது”
கொத்தடிமைகளை மீட்கும் குழுவினர் N.G.O க்களால் பல ஆயிரக்கணக்கான கூலி ஆட்களை மீட்டுள்ளனர். இவ்வாறு பல இடங்களில் உள்ள குவாரியில் பல கொத்தடிமைகளை மீட்டுள்ளனர்.
முடிவுரை
கல் உடைக்கும் மக்களும் மனித உணர்வு பொருந்தியவர்கள் தான் என்பதை அதிகார வர்க்கத்தினர் உணரும் வரை இச்சமூகம் மாறாது என்ற உண்மையை இச்சிறுகதை முன்வைக்கிறது. பெண்ணடிமைத்தனம் அதிகார வர்க்கத்தினரின் அத்துமீறல், உழைப்பிற்கேற்ற ஊதியமில்லா நிலை, அடிப்படை உரிமைகளற்ற நிலை போன்ற உழைக்கும் மக்களுக்கு சாதகமற்ற சூழல் மாறவேண்டும். பலதரப்பட்ட சிந்தனைகளை உள்ளடக்குவதாக இச்சிறுகதை கட்டமைக்கப்பட்டுள்ளது.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.