தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
85.ஜெயகாந்தனின்“ஊருக்கு நூறுபேர்” நாவலில் மனித உரிமைச் சிந்தனை
வீரா. முருகானந்தம்
உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை,
கே. எஸ். ஆர். கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), திருச்செங்கோடு.
முன்னுரை
இறைவனால் படைக்கப்பட்ட இவ்வுலகில் அனைவரும் சமமானவர்கள், இங்கு கிடைக்கின்ற அனைத்தும் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இதில் பாரபட்சம் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் மனிதர்கள் ஒன்று கூடி சமுதாயம் என்ற அமைப்பினையும் அதன் வழி அரசையும் அமைத்தனர். கடமை தவறிய சமுதாயத்தையும் அரசையும் தட்டிக் கேட்டும் போராடியும் தங்கள் உரிமைகளை ஒவ்வொரு மனிதனும் பெறலாம். இதற்காகத்தான் மனித உரிமை அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டன. ஆனால், இன்றைய சமுதாயத்தில் உரிமைகள் கிடைக்கப் பெறாமல் மறுக்கப்படுகின்றன. அதைச் சுட்டிக்காட்டும் நோக்கில் ஜெயகாந்தனின் ஊருக்கு நூறு பேர் நாவல் அமைந்துள்ளது. இந்நாவலின் முன்னுரையில்,
“இந்த ஊருக்கு நூறுபேர் கதையை நான் ஏதோ ஒரு மன அவசரத்தில் - அவசரத்தில் அல்ல எழுதினேன். இந்த சமூகத்தில் ஒரு சமதர்ம மாற்றம் உடனடியாக வேண்டும் என்ற லட்சியத்தில் மாறுபட்ட கொள்கையுடையோரை அறிவு பெற்ற பிரஜைகளாக்கக்கூட என்னால் சகிக்க முடியவில்லை இந்த உணர்ச்சியைத் தவிர நான் எழுதுவதற்கான உந்து சக்தி வேறொன்றில்லை என்று நான் வெகு நாட்களுக்கு முன்பே கண்டு கொண்டேன்”
என்று குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, மனித உரிமைகள் மறுக்கப்படுவது சமுதாயத்திற்கே அசிங்கம் என்றும், அது சமுதாய அக்கிரமம் என்றும், ஏன் மனித சமுதாயத்திற்கேப் பல அவலங்களைச் சேர்த்துவிடும் என்றும் அவர் உணர்த்தியிருப்பதை அறியலாம்.
கொலையும் தூக்குத்தண்டனையும்
“ஊருக்கு நூறு பேர்” கதையில் மலையாண்டி என்னும் தாழ்ந்த குலத்தைச் சார்ந்தவன், உலகளந்தான் பெருமாள் கோயிலில் நகைகளைத் திருட முயற்சித்த பொழுது, அக்கோயிலின் அர்ச்சகர் தடுத்தமையால் அவரைக் கொலை செய்து விடுகின்றான். அதனால் மலையாண்டி கொலைக் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு மலையாண்டிக்கு தூக்குத்தண்டணை நிறைவேற்றப்படுகிறது. ஒரு கொலைக்கு அரசே தூக்குத்தண்டணை என்னும் பெயரில் ஒரு கொலையை மனிதனுக்கு நிறைவேற்றுவது சமூகத்திற்குப் புறம்பானது ஆகும். இதனை,
“இரத்த வெறிகொண்ட ஒரு புலியைக் கூட மனிதர்கள் பிடித்தால் அதைக் கொன்றுவிடுவதை விரும்புவதில்லை. மனிதரைக் கொல்லும் கொடிய விலங்குகளைக் கூட அவை செய்த கொலைக்காக அவற்றை நாம் கொல்லாமல் கூண்டில் அடைத்து வைத்துக் காப்பாற்றுகின்றோம். நமக்கு நிச்சயம் புலியின் குணம் மாறாது, ஒருபோதும் தான் செய்த கொலைக்காக ஒரு புலி வருந்தாது, திருந்தாது என்று தெரிந்தும் அதைக் கூண்டில் அடைத்து நாம் நேசிக்கிறோம். கொலைக்குற்றம் செய்த ஒரு மனிதனை அவ்விதம் ஆயினும் நாம் காப்பாற்றி வைத்திருக்க வேண்டியது மனித தர்மம் அல்லவா? மேலும், அவன் ஒரு மனிதனாக இருப்பதால், அவன் குணம் மாறும் என்று நாம் நம்பவும் மாற்ற முடியும் என்று முயலவும் வேண்டாமா? அவனைப் பலி வாங்குவது கொலைக்குக் கொலை என்று நமது பாதுகாப்பில் இருப்பவனை தூக்கிடுவதும் எவ்விதத்தில் மனித அறிவுக்கு ஒத்துவரும்?”
என்று ஜெயகாந்தன் கதையின் ஊடாகக் குறிப்பிடுகின்றார். அதனால், தூக்குத்தண்டணை என்பது மறு பரிசீலனைக்குக்குரியது என்பது படைப்பாளரின் உரிமைக் குரலாக எதிரொலிப்பதை அறிய முடிகிறது.
கைதியின் கடிதம்
தூக்குக்கொட்டடியிலிருந்து பத்திரிகையாளர் ஆனந்தனுக்குக் கைதி மலையாண்டி ஒரு இரகசிய கடிதம் எழுதி அனுப்புகின்றான். மனிதனால் உருவாக்கப்பட்ட சட்டம் தெய்வத்தால் காப்பாற்றப்பட மாட்டாது என்பதை உறுதிபட எழுதி அதனால் என்னைப்போன்று இன்னொருவரைத் தான் சார்ந்திருக்கும் இயக்கத்திற்கு உறுப்பினராக்கும் முயற்சி எடுக்க வேண்டும் என்று ஆனந்தனுக்கு அக்கடிதத்தின் மூலம் உணர்த்துகின்றான். இதனை,
“கடவுள் இல்லை என்ற பிள்ளையார் சுழியுடன் என் அன்புள்ள ஐயா …என விளித்து மேலும் அந்த கடிதத்தின் இறுதியாக”, ஊருக்கு நூறுபேர் என்று அணிவகுத்து நிற்கிறது ஒரு சேனை. அது நம் சேனை. அதிலிருந்து ஒருவர் குறைகிற போது இன்னொருவரை ஏற்கனவே நாம் தீர்மானித்துள்ள ஒருவரைச் சேர்த்து விட வேண்டும் என்பது எங்கள் இயக்கத்தின் முக்கிய சபதங்களில் ஒன்று. எந்த நம்பிக்கையில் நாங்கள் உயிரைத் தூசாக மதிக்கிறோமோ அதே நம்பிக்கையுடன் -அது பொய்த்துப் போவதில்லை என்கிற நம்பிக்கையுடன் நான் தூக்கில் தொங்குவேன் -உங்கள் பெயரை நான்பிரேரேபித்துவிட்டேன்”
என்ற கைதியின் கூற்றாக ஜெயகாந்தன் காட்டுகின்றார்.
‘போராட்டம்’ - பத்திரிக்கையும் கையெழுத்து இயக்கமும்
இக்கதையில் ஆனந்தன் என்பவர் ‘போராட்டம்’ எனும் பத்திரிகை நடத்தும் ஆசிரியர் ஆவார். இவரது அலுவலகத்திற்கு தூக்குத் தண்டனை பெற்ற கைதியின் கைப்பட எழுதப்பட்ட கடிதம் இரகசியமாக வந்தடைகிறது. அதில் அக்கைதி மலையாண்டி என்பவன் தன் குடும்பச் சூழ்நிலைகளை விளக்கி எழுதியிருப்பது மனிதாபிமானம் கொண்ட யாவரும் அவனை காப்பாற்ற முயல்வர் இத்தகைய முயற்சியில் ஆனந்தன் செயல்படலானான். அதன் முதல் கட்டமாக கொலையுண்ட அர்ச்சகரின் குடும்பத்தை ஆனந்தன் சந்திக்கும் சந்திக்கின்ற அவரது மகன் திருமலச்சாரியின் வாக்கு முலத்திற்கு பிறகு மலையாண்டியை காப்பாற்றுவது தமது தலையாய பணி என்பதைச் சுட்டிக்காட்டும் முகமாக அவரது சந்திப்பு அமைகிறது. இதனை,
“மலையாண்டியை தூக்குத்தண்டனையிலிருந்து காப்பாற்றி ஆயுள் தண்டனையாக்க வேண்டும் என்பதற்கும் நமது சமூகத்தில் இருந்து மரண தண்டனையையே ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டம் இதழ் நடத்துகிற கருத்து இயக்கத்தைப் பற்றியும் ஆனந்தன் திருமலைச்சாரிக்கு எடுத்து விளக்கினார்”
என்பதிலிருந்து மரண தண்டணை மனித சமூகத்திற்கு எத்தகைய விளைவை ஏற்படுத்தக் கூடியது என்பதாகக் காட்டுகின்றார்.
தொகுப்புரை
சமூகத்தில் நிகழும் குற்றங்கள், கொலையாளிகளின் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அமைவதாகும். சட்டங்களினால் அவற்றைத் தடுக்க முயற்சிப்பது ஒருபுறம் இருந்தாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. குற்றவாளிகள் திருந்தவும் வருந்தவும் வாய்ப்புகள் தரப்பட வேண்டும். ஆகவே, மரணதண்டணையைச் சமுதாயக் கண்ணோட்டத்துடன் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது இந்நாவலால் அறியப்படும் செய்தியாகும்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.