இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

      

94.பத்துப்பாட்டில் உணவும் விருந்தோம்பல் பண்பும்


வே. ராசாம்பாள்
முனைவர் பட்ட ஆய்வாளர்,
கந்தசாமி கண்டர் கல்லூரி, பரமத்தி வேலூர் நாமக்கல் மாவட்டம்.

முன்னுரை

சங்க நூல்களாக எட்டுத்தொகையையும், பத்துப்பாட்டையும் கூறுவர். பாட்டும் தொகையும் என்று கூறும் மரபும் உண்டு. பாட்டு என்றாலே பத்துப்பாட்டைத்தான் குறிக்கும். பத்துப்பாட்டு ஒரு பண்பாட்டுச் சுரங்கம், வரலாற்றுப் பெட்டகம், கலைகளின் இருப்பிடம், தமிழர் வாழ்க்கையைக் காட்டும் ஓவியம். பத்துப்பாட்டை நினைவில் கொள்ள ஒரு வெண்பா பாடல் உள்ளது.

“முருகு பொருநாறு பாண்இரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து”

1. திருமுருகாற்றுப்படை

2. பொருநராற்றுப்படை

3. சிறுபாணாற்றுப்படை

4. பெரும்பாணாற்றுப்படை

5. முல்லைப்பாட்டு

6. மதுரைக்காஞ்சி

7. நெடுநல்வாடை

8. குறிஞ்சிப்பாட்டு

9. பட்டினப்பாலை

10. மலைபடுகடாம்

என்பன.

இதில் ஆற்றுப்படை நூல்கள் - ஐந்து, அக நூல்கள் - மூன்று, புற நூல்கள் - ஆறு

பிற்காலத்தில் இதன் சிறப்பினை உணர்த்தப் பல வெண்பாக்களை எழுதியள்ளனர்.

“பாடியருள் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்
கேடில் பதினெட்டுக் கீழ்க் கணக்கும்” (தமிழ் விடு தூது)

“பண்டை இயற்கை வளங்கள் எல்லாம் - பத்துப்
பாட்டின் வளத்திற் கண்டறிந்து
மண்டல மெங்கும் புகழும் அருந்தமிழ் - வாசம்
நுகர்ந்து மகிழ்வோமே” (கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை)

தமிழகத்தின் பழங்கால வரலாற்றை அறிவதற்கு இப்பத்துப் பாடல்கள் மிகுதியாகத் துணை புரிகின்றன. தொல்காப்பியத்தின் அடிப்படையில் ஐவகை நிலங்களாகிய குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை இவற்றின் வருணனைகளைப் பெரும்பாலும் எல்லாப் பாடல்களும் தருகின்றன.பத்துப்பாட்டில் ஐந்து ஆற்றுப்படைப் பாடல்கள் ஆற்றுப்படைக்கு இலக்கணம் தொல்காப்பியம் கூறியுள்ளது.

“கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறுவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்” (தொல்காப்பியம் -1037)

உணவு

மனித வாழ்க்கைக்கு மிக இன்றியமையாதது உணவு. உணவின்றி உயிர் வாழ்வது மிகக் கடினம். உடையின்றி உயிர் வாழலாம். இக்காலத்தில் கூட உலகில் சில பகுதிகளில் உடையின்றியோ குறைந்த உடையுடனோ மக்கள் வாழ்வதை அறிகிறோம்.

தமிழர் நிலத்தைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்தாகப் பகுத்தனர். இது இயற்கையான பகுப்பு. மலையும் மலைசார்ந்த இடத்தையும் குறிஞ்சி என்று கூறுவர். காடும் காடுசார்ந்த இடத்தையும் முல்லை என்றனர். வயலும் வயல்சார்ந்த இடத்தை மருதம் என்று அழைத்தனர். கடலும் கடல்சார்ந்த இடத்தை நெய்தல் என்றனர். மலைப்பகுதியும் காட்டுப்பகுதியும் திரிந்த போது வளமில்லாமல் பாலையாயிற்று. அதைப் பாலை நிலம் என்றனர். பொது நிலையில் மலையில் தேன் கிழங்கு போன்றவைகள் மிகுதியாகக் கிடைக்கும். நெய்தல் நிலப்பகுதியில் மீன் மிகுதியாகக் கிடைக்கும். கருவாடு கிடைக்கும். பெரிய நண்டுகளின் இறைச்சி கிடைக்கும். முல்லை நிலத்தில் ஆடு மாடுகள் வளர்ப்பதால் ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி, பால், தயிர் போன்றவை மிகுதியாகக் கிடைக்கும். மருத நிலத்தில் நெல்லும் நெல்சோறும் காய்கறிகளும் மிகுதியாக உள்ளன.

பண்டமாற்று முறை பழங்காலத்தில் இருந்தது. குறிஞ்சி நிலத்தார் நெய்தல் நிலத்தாருக்குத் தேனைக் கொடுத்து மீனைப் பெற்றுக் கொண்டனர்.

“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” (மணிமேகலை)

பசித்த ஒருவனுக்கு உணவு அளித்தால் அவ்வுணவு அவனுக்கு உயிர் கொடுத்தலுக்குச் சமம் என்கிறது மணிமேகலை.

குறிஞ்சி நில உணவு

நன்னனுக்குரிய சவ்வாது மலையின் அடிவாரத்தில் இருந்த சிற்றூர்களில் வாழ்ந்த மக்கள் தினைச் சோற்றையும், நெய்யில் வெந்த இறைச்சியையும் உண்டார்கள். அதை விருந்தினருக்கும் கொடுத்தனர். இதனை,

‘பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு
குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவிர்’ (மலைபடுகடாம்168 - 169)

என்று கூறுகிறார். அத்துடன் நன்னனது மலையில் மூங்கில் அரிசிச் சோற்றையும் பலாக்கொட்டை, மா, புளிநீர், மோர் ஆகியவற்றோடு கலந்து தயாரித்த குழம்பையும், மானின் இறைச்சியையும், பன்றியின் இறைச்சியையும் சேர்த்து உண்டனர். அத்துடன் கிழங்கையும் வேகவைத்து உண்டனர். குறிஞ்சி நிலத்து மலைவழிச் செல்லும் கூத்தர், தினைப்புனத்துக் காவலரால் கொல்லப்பட்ட காட்டுப்பன்றியின் மயிரை நீக்கி மூங்கில் பற்றி எரியும் நெருப்பில் அதனை வாட்டி அவ்விறைச்சியைத் தின்றனர். மீதத்தை இலையில் கட்டி வழிக்கு உணவாகக் கொண்டு சென்றனர்.முல்லை நில உணவு

முல்லை நிலச் சிற்றூர்களில் தினையரிசிச் சோற்றையும், வரகரிசிச் சோற்றையும், அவரைப் பருப்பையும் கலந்து செய்த உணவை உண்டனர். நன்னனது மலைநாட்டு முல்லை நிலத்தில் சிவந்த அவரை விதைகளையும், மூங்கில் அரிசியையும் மேட்டு நிலத்தில் விளைந்த நெல் அரிசியையும் புளி கரைக்கப்பட்ட உலையில் குழைத்துக் கூழாக்கி உட்கொண்டனர் என்பதை;

“செவ்வீ வேங்கைப் புவின் அன்ன
வேய்கொள் அரிசி மிதவை சொரிந்த
சுவல்விளை நெல்லின் அவரையும் புளிங்கூழ்’’ (மலைபடுகடாம் 434- 436)

மலைபடுகடாம் எடுத்துரைக்கின்றது. மேலும், பொன்னை நறுக்கினாற் போன்ற ஒரே அளவுடைய நுண்ணிய அரிசியை வெள்ளாட்டு இறைச்சியுடன் கூட்டி ஆக்கிய சோற்றையும் தினைமாவையும் உண்டனர்.

மருத நில உணவு

சோழவளநாடு சோறுடைத்து என்பது பழங்காலப் பழமொழி. காவிரி பாய்வதால் எப்போதும் வளமுடையதாக இருக்கும். சோழநாட்டு மருத நிலத்தில் கரும்பும் நெல்லும் மிகுதியாக உள்ளன. கரும்பையும் அவலையும் கொடுத்து, மானின் தசையையும் கள்ளையும் பெற்றுக் கொள்கின்றனர். ஓய்மாநாட்டு மருத நிலத்தார் வெண் சோற்றையும் நண்டும் பீர்க்கங்காயும் கலந்த கூட்டையும் சேர்த்துக் கொண்டனர். தொண்டை நாட்டு மருதநிலத்தில் சிறுபிள்ளைகள் காலையில் பழைய சோற்றை உண்டனர். பழைய சோற்றின் மேல் வெறுப்பு ஏற்பட்டால் அவலை இடித்து உண்டனர். இதனைப் பெரும்பாணாற்றுப்படை;

“கருங்கை வினைஞர் காதல் அம்சிறாஅர்
பழஞ்சோற்று அமலை முனைஇ, வரம்பில்
புதுவை வேய்ந்த கவிகுடில் முன்றில்
அவல்எறி உலக்கைப் பாடுவிறந்து” (பெரும்பாணாற்றுப்படை 223 - 226)

என எடுத்துரைக்கின்றது. அது மட்டுமல்லாது, நெல் சோற்றைப் பெட்டைக் கோழிப் பொரியலோடு உண்டனர். அந்நாட்டுத் தோப்பில் வாழும் மருதநில உழவர் சோற்றோடு பலாப்பழம், இளநீர், வாழைப்பழம், நுங்கு, வள்ளிக்கிழங்கு போன்றவற்றையும் சேர்த்து உண்டனர்.நெய்தல் நில உணவு

பழங்கால சோழநாட்டின் தலைநகராகிய காவிரிப்பும்பட்டினத்தின் நெய்தல் நிலத்தார் கடலில் பெற்ற இறால் மீனையும், வயல் ஆமையையும் பக்குவம் செய்து உண்டனர். பனங்கள்ளைக் குடித்தனர். கள்ளுக்கடைகளில் மீன் இறைச்சியும், விலங்கு இறைச்சியும் பொரித்து விற்கப்பட்டன. ஓய்மா நாட்டு நெய்தல் நிலத்தார் நெய்தல் நில மகளிராகிய நுளைச்சியர் அரித்த கள்ளையும், உலர்ந்த குழல் மீனின் சூட்டு இறைச்சியையும் உண்டனர். தொண்டை நாட்டுக் கடற்கரைப் பட்டினத்தில் அதாவது இக்கால மாமல்லபுரத்தில் நெல்லை இடித்த மாவாகிய உணவை ஆண் பன்றிக்கு இட்டுக் கொழுக்க வைத்து, கொழுத்த பன்றியின் இறைச்சியைச் சமைத்து உண்டனர் என்ற செய்தியை,

“கள்அடு மகளிர் வள்ளம் நுடக்கிய
வார்ந்துஉகு சில்நீர்வழிந்த குழம்பின்
ஈர்ஞ்சேறு ஆடிய இரும்பல் குட்டிப்
பல்மயிர்ப் பிணவொடு பாயம் போகாது
நெல்மா வல்சி தீற்றி பல்நாள்
குழிநிறுத்து ஓம்பிய குந்தாள் எற்றைக்
கொழுநிணத் தடியொடு கூர்நறாப் பெறுகுவிர்” (பெரும்பாணாற்றுப்படை 339 - 345)

என்று பெரும்பாணாற்றுப்படை இவ்வரிகளின் வாயிலாக விளக்குகின்றது.பாலை நில உணவு

ஓய்மாநாட்டுப் பாலை நில மக்களாகிய வேட்டுவர் இனிய புளிக்கறி இடப்பட்ட சோற்றை உண்டனர். தொண்டைநாட்டுப் பாலை நில மக்கள் புல் அரிசியைச் சேர்த்து நிலத்தில் உள்ள உரலில் குற்றிச் சமைத்த உணவை உப்புக்கண்டத்தோடு உண்டனர். விருந்தினருக்குத் தேக்கிலையில் உணவு கொடுத்தனர். விருந்தினரை உபசரிப்பதில் பாலை நிலத்தார் உயர்ந்தவராகக் கருதப்படுவர். இதனையே வள்ளுவரும்

“செல்விருந்தது ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு” (குறள்-86)

என்றார். வந்த விருந்தினரைப் பேணி வர இருக்கிற விருந்தினரைப் பேணக் காத்திருப்பவன் உயர்ந்தோரின் விருந்தாளியாக இருப்பான் என்று விருந்தின் மேன்மையை எடுத்துரைக்கின்றார். மேட்டு நிலத்தில் விளைந்த நெல் அரிசிச் சோற்றையும் நாய் பிடித்து வந்த உடும்பின் இறைச்சியையும் பாலை நிலத்தார் உண்டனர்.

அரண்மனைகளில் உணவும் விருந்தும்

சங்ககாலத்தில் மன்னர்கள் விருந்து படைத்தனர். அத்தகைய விருந்தோம்பலின் தன்மையை வள்ளுவம் எடுத்துரைத்துள்ளது.

“பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்”(குறள் 88)

விருந்தோம்பல் எனும் அறச்செயலில் ஈடுபடாதவர் தமது செல்வத்தை முயன்று காத்து அதனை நாடி வருவார் எவரும் இலர் என்பர். சோழநாட்டு மன்னனான கரிகாலன் தன்னைத் தேடி நாடி வந்த பொருநனுக்கும் அவன் சுற்றத்தினருக்கும் முதலில் நடந்த களைப்பு தீர பொற்கலங்களில் அரண்மனைப் பெண்கள் கள்ளைக் கொடுக்கின்றனர். அதனை உண்டு வந்த களைப்பைப் போக்கிக் கொள்கின்றனர். அடுத்து கொழுத்த செம்மறிக்கிடாயின் இறைச்சித் துண்டங்களை இரும்புக் கம்பியில் கோர்த்துச் சுட்டுத் தருகின்றனர். பல வடிவங்களில் பல சுவைகளில் பணியாரங்கள் தரப்படுகின்றன.முல்லை அரும்பை ஒத்த மெல்லிய அரிசிச் சோறும் கொடுக்கப் பெற்றது.

கரிகாலன் தந்த மிகுதியான இறைச்சி உணவால் பொருநன் அவன் சுற்றத்தினர் ஆகியோருக்கு கொல்லையை உழுத கொழுப்போன்று பற்கள் மழுங்கி விட்டன. அதனால் ஊன் உணவையே வெறுக்கின்ற நிலை ஏற்படுகின்றது.

“கொல்லை உழுகொழு ஏய்ப்பப் பல்லே
எல்லையும் இரவும் ஊண்தின்று மழுங்கி
உயிர்ப்பிடம் பெறாது ஊண்முனிந்து ஒருநாள்” (பொருநர் ஆற்றுப்படை117-119)

சுற்றத்தாரை உபசரித்ததோடு மட்டுமல்லாமல் ஏழு அடி தூரம் நடந்து சென்று அவர்களை வழியனுப்பினான். விருந்தினரை உபசரிப்பதில் கரிகாலன் சிறந்தவனாகக் கருதப்படுகிறான். வள்ளுவமும்

“மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து” (குறள் 90)

மென்மையான தன்மையுடைய அனிச்ச மலர் முகர்ந்த அளவில்தான் வாடும். மானம் உடைய விருந்தினரின் முகமோ மாறுபடப் பார்த்த அளவிலேயே வாடிவிடும் என விருந்து உபசரித்தலை எடுத்துரைக்கின்றது. வள்ளுவரின் வாக்கினை மிஞ்சிய அளவில் கரிகாலனின் விருந்தோம்பல் பண்பு அளவிடற்கரியது.புலால் அற்ற உணவு

சங்க காலத்தில் பெரும்பாலோர் புலால் உணவையே உண்டனர். வேதியர் புலால் அற்ற உணவையே உண்டனர். இராசன்னம் என்ற ஒரு வகை நெல்லில் செய்த சோற்றோடு மாதுளம் பிஞ்சைப் பிளந்து மிளகுப்பொடியும் கறிவேப்பிலையும் கலந்து பசு வெண்ணெயிலே வேகவைத்த பொரியலோடு உண்டுள்ளனர். உழவர் வீடுகளில் பலாப்பழம், வாழைப்பழம், இளநீர், நுங்கு போன்றவைகள் இருந்த செய்தி குறிப்படப்பட்டுள்ளன.

சிற்றுண்டி

மதுரைக் கடைத் தெருக்களில் சிற்றுண்டிக் கடைகள் இருந்தன. அங்கு பாகில் சமைத்த மெல்லிய அடைகள் செய்யப் பெற்றன. பருப்பையும் தேங்காயையும் உள்ளீடாகக் கொண்ட சுண்ட சருக்கரை கூட்டிப்பிடித்த ‘மோதகம்”என்ற ஒருவகைத் திண்பண்டம் செய்யப்பெற்றது. அப்ப வாணிகர் பாகொடு சேர்த்துக் கரைத்த பல சிற்றுண்டிகளை செய்தனர் எனப் பெரும்பாணாற்றுப்படை கூறுகின்றது.

தேறல் வகைகள்

சங்க காலத்தில் கொடுப்பவனாகிய அரசன் முதல் பெறுபவனாகிய புலவன் வரை தேறல் உண்ணும் பழக்கம் உடையவர்களாக இருந்தனர். தென்னங்கள், பனங்கள், அரிசிக்கள் என்று பல வகையாகக் கள் வகைகள் இருந்தன. குறிஞ்சி நில மக்கள் அங்கு கிடைக்கும் மூங்கில் அரிசியைக் கொண்டு, அத்துடன் தேனையும் கலந்து கள் தெளிவைத் தயாரித்தனர். அதை மூங்கில் குழாய்களில் வைத்திருந்தனர். அது “தேக்கள் தேறல்” என்று அழைக்கப்பெற்றது (முருகு-195)

கள் எவ்வாறு தயாரிக்கப் பெறுகிறது எனப் பெரும்பாணாற்றுப்படை கூறுகின்றது. இன்று தென்னை, பனை இவைகளில் இருந்து எடுக்கும் பதநீர் போன்று பழங்காலத்தில் இக்குடிவகைகள் அமைந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

சங்க காலத்தில் உணவே மருந்தாகப் பயன்பட்டது. சங்ககால உணவுமுறை உடலைச் சீரமைக்கும் வகையிலும் ஆரோக்கிய உணவாகவும் இருந்தது. விருந்தோம்பல் பண்பும் சிறப்புடையதாகச் செயல்பட்டது. தன் வாழ்நாள் எப்பொழுது வேண்டுமானாலும் முடிந்து விடும் என்ற தருவாயில், ஒவ்வொரு மனிதனும் செயல்பட்டு வருகின்ற வேளையில் சாகா வரம் பெற்ற அரிய வகை நெல்லிக்கனியைக் கொடுத்தான் ஒரு மன்னன். அக்காலத்தில் உள்ள விருந்தும் விருந்தோம்பலும் உணவும் சிறப்பாகக் கருதப்பட்டது. இக்கால உணவு முறையில் மருந்தையே உணவாக உட்கொண்டு வாழும் சூழ்நிலையில் இன்றைய நடைமுறை வாழ்க்கை உள்ளது.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s3/p94.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License