தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
93.புறநானூற்றில் அறம் சார்ந்த மரபு சிந்தனைகள்
முனைவர் பா. ரேணுகாதேவி
கௌரவ விரிவுரையாளர்,
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளைஅரசினர் மகளிர் கல்லூரி, நாமக்கல்-- 637002.
முன்னுரை
அறக்கோட்பாட்டிற்கு அடிப்படையாக அமைவது மனிதன் சிந்திக்கும் ஆற்றல் ஆகும். அவ்வாற்றலே அறம் பிறப்பதற்கு அடிப்படையாக அமையும் எனலாம். எனவே தான் க. பா. அறவாணன் அவர்கள், “மனிதனிடம் இருக்கும் மனம், அதனால் அவன் செய்யும் சிந்தனை, அவன் பேசும் பேச்சு, அவற்றால் விளையும் செயல் ஆகியவையே மனிதனை விலங்கு நிலையிலிருந்து மனித நிலைக்குப் பிரித்துக் காட்டுகின்றன. உயர்த்திக் காட்டுகின்றன” என்கிறார். எனவே, புறநானூற்றில் உள்ள அறச் சிந்தனைகளை வெளிக்கொண்டு வருவது சிறப்பிற்குரியது.
நட்பறம்
புறநானூற்றில் நட்பறத்தை மூன்றாக வகைப்படுத்தலாம். அவை;
1. நன்றி அறிதல்
2. ஈகைப் பண்பு
3. நட்பு
என்பன.
நன்றி அறிதல் தொடர்பான செய்தியினைப் புறநானூறு (34) சுட்டிக்காட்டுகிறது.
பசுவினது மடியினை அறுத்த தீவினையாளருக்கும், பெண்டிரதுகர்ப்பத்தை அழித்தோருக்கும், அந்தணருக்குத் தவறு செய்த கொடியோருக்கும் தாம் செய்த பாவத்தினைப் போக்குவதற்கு வழி உண்டு என்றும், உலகம் தலைகீழாக மாறும் காலம் தோன்றினும் ஒருவன் செய்த நன்றியைச் சிதைத்தோர்க்கு நரகத்தினின்று தப்பமுடியாது என ஆலத்தூர் கிழார் கூறுவதைக் காணமுடிகிறது. இதனை,
“ஆன்முலைஅறுத்தஅறனிலோர்க்கும்
மாண்இழைமகளிர் கருச்சிதைத்தோர்க்கும்
குரவர்த்தப்பியகொடுமையோர்க்கும்
வழுவாய் மருங்கின் கழுவாயும் உளஎன
நிலம்புடைபெயர்வதாயினும் ஒருவன்
செய்திகொன்றோர்க்குஉய்திஇல்என”
(புறம்.34 1-6)
என்னும் பாடலடிகளில் மூலம் தெளியலாம்.
அதாவது, செய்நன்றி மறத்தல் மிகக் கொடிய பாவம் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது. எனவே தான் வள்ளுவப் பெருந்தகை
“நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று”
(குறள்.108)
கூறுவதும் குறிப்பிடத்தக்கது.
ஈகை என்பது ஒருவன் தான் படைக்கும் செல்வத்தால் பெறும் பயன் மற்றவர்க்குக் கொடுத்தலாகும். நக்கீரர் மக்களின் பொதுவியல் நோக்காக ஈகை என்பதற்கு,
“உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓரொக்கும்மே
செல்வத்துப் பயனேஈதல்”
(புறம்.89, 5-7)
என்னும் பாடலடிகளில் மூலம் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்ணப்படும் பொருள் நாழி அளவு ஆகும் என்பதும், உடுக்கப்படும் உடை மேலே ஒன்றும், இடையிலே ஒன்றுமாக ஆகிய இரண்டும். இவைகளைத் தவிர மனிதனுக்குக் கிடைக்கக் கூடிய எல்லாப் பொருளையும் கொடுக்க வேண்டும் என்கிறார்.
புறநானூற்றில் நட்பு என்ற நீதிக்கோட்பாடு காணப்படுகின்றது. நல்ல நட்பினைப் பெறுவது பெறுவதற்கரிய பேறாகும் என்பர். நல்ல நட்பினைப் பெற்றுவிட்டால், அதை பாதுகாப்பானது எதுவும் இல்லை என்பதை,
“செயற்கரியயாவுள நட்பினது போல்
வினைக்கரியயாவுளகாப்பு”
(குறள்.781)
என்ற நூற்பா வாயிலாக அறியலாம். சான்றாக,
1. கபிலர் - வேள்பாரி நட்பு
2. பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன்
3. ஔவையார் -அதியமான் நட்பு
என்பன.
வாழ்வியற் அறம்
வாழ்வியற் அறங்களாக ஏழைகளுக்கு உணவினை அளித்தல், மக்களின் விருந்தோம்பல் நிலை போன்றவற்றை உணர்த்துகின்றார். புறநானூற்றில் வாழ்வியற் அறமாக உணவினைக் கொடுத்தல் முக்கியத்துவம் பெறுகின்றது. நீரை முக்கியமாகக் கொண்டுள்ள உடம்புக்கெல்லாம், உணவைக் கொடுத்தவர் உயிரைக் கொடுத்தவர் ஆவர். உடம்பு உணவை முதலாக உடையது. எனவே உணவு என்று சொல்லப்படுவது நிலத்துடன் கூடிய நீராகும். அந்த நீரையும் நிலத்தையும் ஒன்றாகச் சேர்த்தவர் இவ்வுலகத்தில் உடலையும் உயிரையும் படைத்தவர் ஆவார் என்பதை,
“நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவெனப்படுவது நிலத்தோடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே” (புறம்.18. 18-23)
என்னும் பாடலடிகள் உணர்த்துகின்றன.
விருந்தோம்பலைப் பற்றிக் கூறும் போது, தம்மை நாடிவரும் விருந்தினரை இன்முகத்தோடு வரவேற்ற உண்டி முதலியவைகளை அளித்து மிக்க அன்போடும், ஆர்வத்தோடும் அவர்களை உபசரிப்பது இல்வாழ்வார்க்குரிய தலைச்சிறந்த பண்பாடாகப் பழந்தமிழகம் போற்றுகிறது. புறநானூற்றில் ஔவையார் அதியமான் நெடுமான் அஞ்சியைச் சிறப்பிக்கும் போது, ஒரு நாள் மட்டும் செல்லவில்லை. இரு நாள்கள் மட்டும் செல்லவில்லை. புல நாள்களிலும் நெருங்கிப் பலருடன் கூடிச் சென்றாலும் முதல் நாளில் காட்டிய விருப்பத்தைப் போல காட்டுவான் என்பதும், மேலும், வரும் விருந்தினருக்குச் சுவையான உணவளித்து விருந்தோம்புவதே பழியற்ற வாழ்க்கை என்பதை,
“வருநர்க்குவரையாவசையில் வாழ்க்கை” (புறம்.1-.8)
என்ற வரியில் ஊன் பொதி பசுங்குடையார் என்ற புலவர் சோழன் இளஞ்சேட்சென்னி எப்பொழுதும் விருந்தினராய் வருபவர்க்கு வேண்டியதைக் குறைவுபடாமல் வழங்கும் குற்றமற்ற வாழ்க்கையாகும் என்கிறார். மேலும்,
“விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கைப்” (புறம். 266, 10)
என்ற நூற்பாவில் விருந்து கண்டு ஒளிக்கும் தம் வாழ்க்கை நன்மையில்லாத இல்வாழ்க்கை என்பதைச் சோழன் இளஞ்சேட் சென்னியிடம் கூறுகின்றார்.
மனிதநேயஅறம்
மனிதநேயஅறம் எனும் அறக் கோட்பாடுகளில்,
“யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா”
(புறம் 192, 1-2)
“பெரியோரைவியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே”
(புறம் 192, 12-13)
என்னும் பாடலடிகள் மனிதநேயத்தை உணர்த்துகிறது.
வள்ளுவப் பெருந்தகை,
“பகுத்துண்டுபல்உயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை”
(குறள்.322)
என்ற குறளின் கருத்திற்கேற்ப புறநானூற்றில் பெருஞ்சித்திரனார் தம் மனைவியிடம் குமணன் கொடுத்த செல்வத்தைப் பகிர்ந்து கொடுக்க வேண்டும் எனபதை,
“இன்னோர்க்கு என்னாது என்னோடும் சூழாது
வல்லார்க்கு வாழ்தும் என்னாது நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி மனைகிழவோயே”
(புறம்.163, 5-7)
என்னும் பாடலடிகளின் மூலம் கிடைத்த செல்வத்தை மற்றும் பொருளைப் பிறருக்குப் பகுத்துக் கொடுப்பது மனிதநேயப் பாங்காகும்.
பிறருக்கு உதவும் கோட்பாடு புறநானூற்றில் மிகுந்துள்ளது. மக்களில் நல்லவர், தீயவர் என்ற வேறுபாடு அவர்களின் செயல்களிலே வெளிப்படுகின்றது.
இதனை நரிவெரூத்தலையார்,
“நல்லதுசெய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லதுசெய்தல் ஓம்புமின்”
(புறம்.195, 6-7)
என்னும் பாடலடிகளில் ஒருவருக்கு நன்மை செய்யாவிட்டாலும், பிறருக்குத் தீமை செய்யக் கூடாது என்பதாகும். அதாவது மனிதனை நல்லநெறியில் செலுத்தும் வழிமுறையாகும். பிறருக்கு உதவவேண்டும் என்றாகும்.
அஞ்சாதஅறம்
புறநானூற்றில் அஞ்சாதஅறம் உள்ளது.
“வள்ளியோர் செவிமுதல் வயங்கு மொழிவித்துத்தாம்
உள்ளியதுமுடிக்கும் உரனுடைய உள்ளத்து
வரிசைக்குவருந்தும் இப்பரிசில் வாழ்க்கை
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தக் அறியலன் கொல்? என்அறியலன் கொல்?” (புறம்.206, 2-7)
என்னும் பாடலடிகளின் மூலம் ஔவையார் பாட்டுப்பாடி பரிசு பெறும் நிலையில் இருந்தாலும், தன்மானம் இழக்கவில்லை என்றும், பொருளுக்காக ஒருவரையும் சார்ந்து வாழவில்லை என்பதும், இக்காலப் புலவர்கள் போலன்றி நிலத்தில் எவருக்கும் அஞ்சாது வாழ்ந்து மானிடரைப் போற்றும் விதமாக உள்ளதைக் கூறுகின்றார்.
வாழ்வியற் அறம்
புறநானூற்றில் அதியமான் நெடுமான் அஞ்சியை வாழ்த்தும் செய்திகள் உள்ளன. உதாரணமாக,
“பால்புரைபிறைநுதல் பொலிந்தசென்னி
நீலமணிமிடற்றுஒருவன் போல
மன்னுகபெருமநீயே…”
(புறம்.91, 5-7)
என்னும் பாடலடிகளில் ஔவையார் அதியமான் நெடுமான் அஞ்சியை நீ பால் போன்ற பிறைச் சந்திரன் நெற்றி போல விளங்கும் திருமுடியையும் நீலமணி போன்ற கரிய கழுத்தையும் உடைய சிவபெருமானைப் போல நிலைபெற்று வாழ்வாயாக என்றும் கூறுகின்றார். அதாவது சிவபெருமான் விசத்தை உண்ட பிறகும் உயிர்பெற்று நிலைத்து வாழ்ந்தான். அது போல அதியமானும் எந்த விதமான துன்பமும், கரணமும் வராமல் வாழவேண்டும் என்றும் வாழ்த்துகின்றார். மேலும்,
“... ... ... ... ... ... இவ்வேவானத்து
வயங்கித் தோன்றும் மீனினும் இம்மென
இயங்கும் மாமழைஉறையினும்
உயர்ந்துசமந்தோன்றிப் பொலிகநும்நாளே”
(புறம்.369, 15-18)
என்னும் பாடலடிகளின் மூலம் சேரமான் மாவெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராச்சியம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒன்றாக அமர்ந்து இருந்த போது ஔவையார் இவர்களைப் பார்த்து, வானத்தில் விளங்கும் விண்மீன்களை விடவும், இடியுடன் முழங்கிப் பெய்கின்ற மழைத்துளியை விடவும் மிகுதியான நாட்கள் பெற்று வாழ்க என வாழ்த்துவதை உணரமுடிகிறது. இவ்வாறு வாழ்த்துவதே நீதிக் கோட்பாடாகும்.
புறநானூற்றில் அறநெறி உணர்த்தவும், அறிவூட்டிநெறிப்படுத்தவும் சமூகநோக்கில் பல்வேறு புலவர்கள் முயன்றுள்ளனர். சங்ககால மக்கள் மிகவும் நேர்மையாகவும், உன்னத தன்மையுடனும் வாழ்ந்து வந்துள்ளனர். நெறி தவறாமல் வாழ்வதற்கு அறம் முக்கியமானதாகும். மேலும், புறநானூற்றில தமிழர்கள் வளர்த்த நட்பறமும் வாழ்வியல் அறமும் அஞ்சாத அறமும் ஆகியன அறநெறி அடிப்படையிலே இயங்கியுள்ளன என்பதையும் சுட்டிக்காட்டுகின்றன.
1. புலவர் அ. மாணிக்கனார், புறநானூறு மூலமும் உரையும், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை-17.
2. ச. வே. சுப்பிரமணியம்,தொல்காப்பியம் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108.
3. அ. மாணிக்கம், திருக்குறள் தெளிவுரை, தென்றல் நிலையம், சிதம்பரம்-1.