தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
92.மலையாளி மக்களின் வரலாறும் குலமும்
இரா. ரஜினி
முழுநேர முனைவr பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி), சேலம் - 7.
முன்னுரை
உலகின் பெரும்பாலான நாடுகளில் நாகரீகம் அடைந்த மக்களிலிருந்து வேறுபட்டு, தனித்த வாழ்வியல் கூறுகளைக் கொண்டவர்களான பழங்குடியினர் பரவலாக வாழ்கின்றனர்.
“ஒரு பழங்குடியினம் என்பது ஒரு பொதுப்பெயரைக் கொண்டவர்களாலான குடும்பங்களின் தொகுப்பாகவோ, குடும்பங்களின் குழுவாகவோ இருப்பதாகும். பழங்குடியினர் குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில் வாழ்பவராகவும், ஒரே மொழியைப் பேசுபவராகவும், திருமணம், தொழில் முறை அல்லது வேலை முதலியவற்றில் சில வகை விலக்குகளைக் கடைப்பிடிப்பவராகவும் கொண்டு கொடுத்தல், அனுசரித்துப் போதல் ஆகியவற்றைப் பின்பற்றுபவராகவும் இருப்பர்”
என்பது பழங்குடி பற்றிய டி. என். மஜீம்தாரின் வரையறையாகும்.
இந்தியப் பழங்குடியினர்
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது நாடான இந்தியாவில் பழங்குடியினரும் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றனர்.
“இந்தியாவில் முதன்மையானவையாக 250 வகைப் பழங்குடி இனங்கள் அறியப்பட்டுள்ளன. ஆனால் கிளை இனங்களையும், துணை இனங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், இந்த எண்ணிக்கை இன்னும் கூடுதலாகும். உலகிலேயே ஆப்பிரிக்காவிற்கு அடுத்த நிலையில் இந்தியாவில் தான் பழங்குடியினர் அதிக அளவில் அடர்ந்து காணப்படுகின்றனர் என்று கூறப்படுகின்றது”
தமிழகப் பழங்குடியினர்
தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களில் பழங்குடியின மக்கள் அதிகமாகக் காணப்படுகின்றனர். அப்பழங்குடியினரில் அதிகமானோர் சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் வாழ்கின்றனர்.
“தமிழ்நாட்டின் அதிக அளவிலான பழங்குடியினர், ஏறத்தாழ 1. 2 இலட்சம் பேர் சேலம் மாவட்டத்தில் உள்ளனர். சேலம் மாவட்டத்தில் மட்டும் தமிழ்நாட்டின் மொத்தப் பழங்குடியினரில் ஐந்தில் ஒரு பங்கினர் வாழ்கின்றனர். இரண்டாவதாக, வடார்க்காடு மாவட்டத்தில் இவர்கள் அதிகஅளவில் வாழ்கின்றனர். இதையடுத்து தென்னார்க்காடு மாவட்டம் இடம் பெறுகிறது”
மலையாளிப் பழங்குடியினர்
தமிழ்நாட்டுப் பழங்குடியினரில் அதிக எண்ணிக்கையினர் ‘மலையாளிகள்’ என்பதும், அவர்கள் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களிலேயே வாழ்கின்றனர் என்பதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தெரியவருகிறது.
“1981 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டின் மொத்தப் பழங்குடி மக்கள் தொகையில் அதிக அளவில் உள்ள மலையாளிகளும் இருளரும் சேர்ந்து 60 விழுக்காட்டிற்கும் மேல் (3,14,796 நபர்கள்) காணப்படுகின்றனர். இவர்கள் சேலம், வடார்க்காடு, தென்னார்காடு, தருமபுரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர்”
மலையாளிகளின் வரலாறு
தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் வாழும் பழங்குடியினரான மலையாளிகளின் வரலாறு இன்னும் தெளிவுப்படுத்தப் பெறாததாகவே உள்ளது. எட்கர் தர்ஸ்டன் முதல் இன்று வரையிலான ஆய்வாளர் மட்டும் மலையாளிடையே வழங்கும் பரம்பரைக் கதைகளை மட்டுமே கூறி மன நிறைவு கொண்டவராகவே காணப்படுகின்றனர்.
மலையாளி மக்களின் வரலாற்றை ஆராயும் பொழுது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கதைகளைக் கூறுகின்றனர். அதில் பலர் கூறிய கதைகள் ஒத்துப்போகின்றன. சிலரின் கதைகள் சிறிது வேறுபடுகின்றன.
மலையாளி - பெயர்க்காரணம்
மலையாளி மக்கள் காடுகளிலும், மலைகளிலும், மலையடிவாரப் பகுதிகளிலும் வசித்து வருகின்றனர். இதனாலே இவ்வின மக்களை மலையாளி என்று கூறுவர். இவ்வினத்தைச் சார்ந்த முன்னோர்களும் தலைமுறை தலைமுறையாகவே மலைகளில் வாழ்ந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்று முதல் இன்று வரை இவ்வின மக்களில் பெரும்பாலானோர் மலையையே வாழ்விடமாக கொண்டுள்ளதால் “மலையாளி” என்றழைக்கப்படுகின்றனர்.
மலையாளிகளின் வாழ்க்கை
மலைகளில் வாழும் மலையின மக்களில் பெரும்பாலானோர் தனித்தனிக் குடும்பங்களாகப் பிரிந்து வாழ்கின்றனர். காலப்போக்கில் இம்மக்கள் தொகைப்பெருக்கத்தின் காரணமாக பல குடும்பங்கள் உருவாகின. ஆகக் குடும்பத்தினரிடையே ஒற்றுமையும் அரவணைப்பும் மிகுந்து காணப்படுகின்றன. அனைவரிடமும் அன்பாகவும், பண்புடனும் நடந்துக்கொள்வர். இவர்கள் தம் ‘குலத்திற்கு அதிக முக்கியத்துவம்’ கொடுக்கின்றனர்.
மலையாளி மக்களின் உட்பிரிவுகள்
மலையாளி பழங்குடியினரிடையே பல உட்பிரிவுகள் உள்ளது. அதனைக் ‘குலம்’ என்றும் கூறுவர். ‘குலம்’ என்பதை ‘வீடு’ என்றும் வழங்குவர். யார் யார் எந்தெந்தக் குலத்திற்கு பெண் கொடுக்க வேண்டும், பெண் எடுக்க வேண்டும் என்ற வரையறையுள்ளது. இதனைப் பெரியோர்கள் பரம்பரையாகக் கடைப்பிடித்து வருகின்றனர். அதனைப் பின்பற்றித் தான் சில குலங்கள் நிச்சயிக்கப்பட்டுள்ளன.
குல அமைப்பு, ஆரம்பத்தில் தந்தை வழி இரத்த உறவுமுறையை அடிப்படையாகக் கொண்டதாகும். ஒரு சில குடும்பத்தினர் தாய் வழி இரத்த உறவுமுறையையும் அடிப்படையாகக் கொண்டுள்ளனர். ஒரே குலத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பெண்கொடுப்பதுமில்லை, பெண் எடுப்பதுமில்லை. இன்றும் இவ்வின மக்கள் குலம் தோத்திரம் அறிந்தே தங்கள் உறவை வலுப்படுத்திக் கொள்கின்றனர்.
“குலம் பார்த்துப் பெண் கொடு
கோத்திரம் அறிந்து பெண்ணெடு”
என்பது இவ்வினத்தின் வழக்காகும். ஏனெனில், குலம் கோத்திரம் அறிந்த பின்னரும் மாமன் மச்சான் முறையா, அண்ணன் தம்பி முறையா என்பதை அறிந்த பின்னர் தான் திருமணத்திற்குப் பெண் பார்க்க முற்படுகின்றனர்.
மலையாளியின மக்களின் குலமும் குல தெய்வமும்
ஒவ்வொரு குலத்தினரும், ஒவ்வொரு வருடமும் தவறாமல் தன்னுடைய குலத்தெய்வத் திருவிழாக்களில் கலந்துக்கொள்ளும் பழக்கம் இன்றும் வழக்கத்தில் உள்ளது.
வ. எண் |
குலம் |
குல தெய்வம் |
1 |
செல்லக்குட்டி (அ) பூசிக்கண்ணான் |
கரியராமர் |
2 |
நாட்டான் |
1பச்சை நாச்சியம்மன் |
3 |
பில்லாங்காட்டான் |
கரியராமர் |
4 |
வாசான் |
திரௌபதி அம்மன் |
5 |
கருப்புக்குள்ளான் |
அண்ணாமலையார் |
6 |
தாதரியான் |
வரதய்யன் |
7 |
சோலவுட்டான் |
வெங்கட்ராமர் |
8 |
மதிக்கெட்டான் |
காளியம்மா |
9 |
கொத்திவுட்டான் |
காளியம்மா |
10 |
பாலவெள்ளையன் |
கோடிப்பர ராமர் |
11 |
கோல்காரவுட்டான் |
கரியராமர் |
12 |
கோமாளிவுட்டான் |
காளியம்மா |
குலத்தின் பெயர்க்காரணம்
மலையாளியின மக்கள் ஒவ்வொருவரும் அவரவர் செய்த தொழியின் அடிப்படையிலும், செயலின் அடிப்படையிலும் இக்குலப்பெயர் வழங்கப்படுகின்றன. இவ்வின மக்கள் சிலர், அறியாமையின் காரணமாகச் செய்த தவறினால் இவர்களுடைய மாமன் மச்சான்மார்கள் கேலியும், கிண்டலும் செய்ததின் அடிப்படையில் பிறந்ததே இக்குலப் பெயராகும். இங்கு சில குலங்களின் பெயர்க்காரணங்களைப் பார்ப்போம்
செல்லக்குட்டி (அ) பூசிக்கண்ணான்
இக்குலத்தைச் சார்தவர்கள் தம்முடைய மாமன் மச்சான்மார்கள் தம்மைக் கிண்டல் செய்வார்கள் என்பதால், அவர்களைக் கண்டதும் அருகிலிருந்த கண்ணாந்து அல்லது கண்ணாம்புல்லில் பூச்சிகள் மறைவதுபோல் இக்குலத்தினர் மறைந்து கொண்டனர். இதனால் இக்குலத்தினரை ‘பூசிக்கண்ணான்’ என்றழைத்தனர்.
நாட்டான் (அ) புழுத்த நாட்டான்
இக்குலத்தைச் சார்ந்த ஆடவர்கள் சிலர் மான் வேட்டைக்குச் சென்றனர். வேட்டையாடிய மானை உயிருடன் கொண்டு வந்து, குழி தோன்றி அக்குழிக்குள் மானின் உடல் முழுவதையும் மறைத்து, பாதிக்கு மேலே அதன் கோடு (கொம்பு) தெரியுமாறு புதைத்தனர். பூமிக்குள் புதைக்கப்பட்ட மான் உயிருடன் இருக்கிறதா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள ஒவ்வொரு நாளும் மானின் கொம்பினை ஆட்டிப்பார்த்துத் தெரிந்து கொள்வர். வெளியூரில் வசிக்கும் தம் மகள் வருவதை அறிந்த பெற்றோர். மக்களுக்கு மான் கறியோடு நல்ல சுவையான சாப்பாடும் இடுதல் வேண்டுமென நினைத்தனர். பிறகு, குழிக்குள் புதைக்கப்பட்ட மான் உயிரோடுதான் இருக்குமென நினைத்துக் கொண்டு குழியைத் தோண்டினர். அக்குழியினுள்ளே மான் அழுகிய நிலையில் புழுக்காளாக இருந்தது. இச்செய்தினை அறிந்த மாமன் மச்சான்மார்கள் அவர்களைப் பார்த்து “புழுத்த நாட்டான்” என்றுக்கூற அப்பெயரே வழங்கலாயிற்று.
பில்லாங்காட்டான்
இக்குலத்தைச் சார்ந்தவர்களை, அவர்களுடைய மாமன் மச்சான்மார்கள் துரத்தும்போது அவர்களுக்கு பயந்தோடி புல்லில் ஒழிந்து கொண்டனர். ஆகையால், இவ்வினத்தாரை ‘பில்லாங்காட்டான்’ என்றனர்.
ஒருசிலர், வேறொரு கதையும் சொல்கின்றனர். அதாவது, இக்குலத்தைச் சார்ந்தவர்கள் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போது அருகிலிருந்த ‘வைக்கோற் போரிலுள்ள எலிகளைத் துரத்தாவிட்டால் போரினை நாசம் செய்து விடும் என்றனர். இதனால் அப்போரினை வேறொரு இடத்திற்கு மாற்ற அப்புறப்படுத்திக் கொண்டிருப்பதைப் பார்த்த மாமன் மச்சான்மார்கள் வேண்டுமென்றே, இவ்வினத்தாரிடம் போருக்கு தீயைப் பற்றவை என்றுச் சொல்ல அவர்களும் வைக்கோற்போருக்குத் தீ மூட்டினர். இவ்வினத்தார் செய்த அறியாமையின் காரணமாக வைக்கோற்போர் முழுவதும் எறிந்து சாம்பல் ஆனது. இக்காரணத்தினாலே “பில்லாங்காட்டான்” என்றழைத்தனர்.
வாசான்
“வல்லக்கறி தின்ன வாசான்”
வாசான் குலத்தைச் சார்ந்த குடும்பத்தினரில் சிலர், ஒரு வல்லக்கறியும் உண்பார்கள். (மூன்று (அ) நான்கு கிலோ சோந்தது ஒரு வல்லம்) இதன் பொருட்டு, அம்மக்களை வல்லக்கறி தின்ன வாசான் என்றழைத்தனர்.
மதிகெட்டான்
இக்குலத்தைச் சார்தவர்கள், நன்கு முற்றிய அல்லது விளைந்த ஆமணக்குகாயின் விதையைக் கொண்டுவந்து களத்தில் போட்டு, அதன் மீது நான்கு அல்லது ஐந்து ஜோடி காளை மாடுகளைத் தாம்புக்கட்டினர். முற்றிய விதையிலிருந்து வெளிவந்த எண்ணெய் மண்ணோடு மண்ணாக கலந்தது. இச்செயலைப் பார்த்த, மாமன் மச்சான்மார்கள் ‘போடா மதிகெட்ட ஜென்மங்களே’ என்றனர். பிறகு இவ்வினத்தாரை ‘மதிகெட்டான்’ என்றே வழங்கினர்.
கோல்காரவுட்டான்
இக்குலத்தைச் சார்ந்தவர்களில் ஒரு சிலர் எப்பொழுதும் கையில் கோலினை (தடி) வைத்துக் கொண்டிருப்பர் அம்மக்களைக் கிண்டல் செய்யும் பொருட்டு, அவர்களுடைய மாமன் மச்சான் மார்கள் ஒரு சிறுவனிடம் கோலினைக் கொடுத்தனுப்பி, அக்கோலினை அவர்களிடம் கொடுத்துவிட்டு, அம்மக்களையும் அழைத்து வரும்படி கூறினர். அச்சிறுவனும் அவ்வாறே கோலினை அவர்களிடம் கொடுத்து அம்மக்களை அழைத்து வந்தான். அச்சிறுவனோடு அவ்வினத்தார் கோலுடன் வந்ததால் “கோல்காரவுட்டான்” என்றனர்.
கோமாளிவுட்டான்
இக்குலத்தைச் சார்ந்தவர்கள் திருவிழாக்காலங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் மற்றும் தெருக்கூத்து நிகழ்ச்சிகளிலும் பெரும்பாலும் ‘கோமாளி வேடம் அணிந்து, நிகழ்ச்சி காண்போரை உற்சாகப்படுத்துவர். அவ்வின மக்கள் கோமாளி வேடம் தவிர வேறெந்த வேடமும் அணிவதில்லை. அவ்வினத்தாரைப் பார்த்த மாமன்மச்சான் மார்கள் “போடா கோமாளிப் பயலே” என்றுச் சொல்ல, பிறகு ‘கோமாளிவுட்டான்’ என்ற பெயரே வழங்கலாயிற்று.
முடிவுரை
உலகம் முழுவதும் பழங்குடியின மக்கள் பரவலாக வாழ்கின்றனர். இப்பழங்குடியின மக்கள் பரம்பரை பரம்பரையாக அல்லது தலைமுறை தலைமுறையாக மலைகளிலும், காடுகளிலும் வசிக்கின்றனர். மேலும், இந்திய மற்றும் தமிழகப் பழங்குடியினரில் அதிகளவினர் ‘மலைகளிலேயே’ வாழ்கின்றனர்.
தமிழகத்திலுள்ள பழங்குடியின மக்களிலேயே குறிப்பாக, தருமபுரி மாவட்டத்தில் வசிக்கும் ‘மலையாளி’ இன மக்களின் வரலாறும், அவ்வரலாறு தோன்றியதற்காகக் கூறப்படும் ‘கதைகளும்’ இடத்திற்கு இடம் சற்று வேறுபடுகின்றன. எனவே, இவ்வின மக்களின் வாழ்க்கை முறை, நாகரீகம், பண்பாடு, பழக்க வழக்கங்கள் ஆகியன பற்றியும் குறிப்பிடப்படுகின்றன. இவ்வினத்தாரின் குல அமைப்பும், குலம் தோன்றியதற்கான காரணமும் அறியமுடிகின்றது.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.