தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
91.திருக்குர் ஆன் - திருக்குறள் ஒப்பீடு
பா. ரம்ஜான்
முனைவர் பட்ட ஆய்வாளர்,
பாத்திமா கல்லூரி (தன்னாட்சி), மதுரை - 18
முன்னுரை
வாழ்க்கை என்பது செயல் வடிவமாகும். எல்லாச் செயல்களும் வாழ்க்கைக்குப் பொருந்தி வருவதில்லை. அறிவின் வழியாகச் சிந்தித்துச் செயலாற்றும் செயல்கள்தான் நேர்மையான வாழ்வை உருவாக்குகின்றன. ஆனால், அறிவே பல நேரங்களில் வழி தவறிவிடுகின்றது. அறிவு, கல்வி, கலை ஆகியவற்றை வழி தவறாத நிலையில் வைத்து, நேர்வழியில் அமைத்து நிலைநிற்கச் செய்வதற்கு மெய்யறிவு இன்றியமையாத் தேவையாக உள்ளது.
பிரபஞ்சம், வாழ்வு இவற்றின் அடிப்படை உண்மைகள், பண்பின் உறுதியான மதிப்புகள், மனித நலன்கள் போன்றவற்றைப் பற்றிய தெளிவான கொள்கைகள் ஆகியவற்றைப் பற்றித் தன் தூதர்கள் வாயிலாக மனிதர்களுக்கு இறைவன் அருளிய ஞானம்தான் மெய்யறிவு என்று அழைக்கப்படுகின்றது. மனித வாழ்க்கைக்கு வெறும் அறிவு மட்டுமே போதாததால் மெய்யறிவின் துணை அவசியமாகின்றது.
மாபெரும் கோள்கள் முதல் சின்னஞ்சிறு அணுக்கள் வரை - கடல்கள், மலைகள் முதல் பனித்துளிகள் வரை - மிகப் பெரிய மரங்கள் முதல் சிறு புற்கள் வரை - பொருத்தமான இடங்களில் சரியான முறையில் அமைக்கப்பட்ட மனித அங்கங்கள் முதல் தோலின் வியர்வைத் துவாரங்கள் வரை - ஆண், பெண் படைப்பு முதல் இனப்பெருக்க ஏற்பாடு வரை - அறிவாற்றல் முதல் ஐம்புலன்களின் இயக்கம் வரை அனைத்தும் இவற்றைப் படைத்த வல்லமை மிக்க ஒருவன் இருப்பதை நமது பகுத்தறிவும் ஏற்றுக் கொள்கிறது.
இஸ்லாம் - இலக்கியம் எனும் சொல்லின் பொருள்
“இஸ்லாம்” என்ற அரபிச் சொல்லிற்குக் “கீழ்ப்படிதல், கட்டளைகளை நிறைவேற்றுதல்” என்பது பொருளாகும். இறைவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து, அவனுடைய ஏவல்களை நிறைவேற்ற வேண்டிய கட்டளைகள் நிரம்பி இருப்பதால் இதற்கு “இஸ்லாம்” என்று பெயரிடப்பட்டுள்ளது.
இலக்கியம் என்ற சொல் பிற்காலத்தில் தோன்றியதாகும். “எல்லே இலக்கம்”
(தொல்: 745) என்ற நூற்பாவிலுள்ள ‘இலக்கம்’ என்ற சொல்லை, இலக்கு + அம் எனப் பிரித்து, ‘நோக்கத்தை உடையது’ என்று பொருள் கொள்ளலாம். பின்னர், இலக்கு + இயம் = இலக்கியம் ஆகின்றது. இது நோக்கத்தை இயம்புவது, கூறுவது, ஒலிப்பது என்று பொருள் கொள்ளப்படுகின்றது.
உலகில் எத்தனை பொருட்கள் உள்ளனவோ அத்தனையும் ஒரு நியதிக்கு - ஒரு சட்டத்திற்கு உட்பட்டிருக்கின்றன என்பதனை நம்மால் உணர இயலுகின்றது. மனிதனின் நிலையைப் பற்றிச் சிந்தித்தாலும் அவனும் இயற்கைச் சட்டங்களுக்கு உட்பட்டிருக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகின்றது. பெரிய பெரிய கோள்கள் முதல் சின்னஞ்சிறு அணுக்கள் வரையிலான அனைத்தையும் தன் பிடியில் வைத்துள்ள வல்லமை வாய்ந்த சட்டம், ஒரு பெரிய ஆணையாளனால் இயற்றப்பட்ட சட்டமாகும். இவ்வாறு அவனால் இயற்றப்பட்ட சட்டத்துக்கு மட்டும் கீழ்படிந்து அதை நிறைவேற்றுவதால் “இஸ்லாம்” என்று அழைக்கப்படுகின்றது.
இலக்கியம் மனித இலட்சியத்தின் உயிர்நாடி; இலக்கை உடையது இலக்கியம்; வாழ்க்கையின் எதிரொளிகளாகவும், சமுதாயத்தின் வளர்ச்சியைக் காட்டும் மைல் கற்களாகவும் இலக்கியம் திகழ்கின்றது. இலட்சியத்தை உடையதும் உரைப்பதும் இலக்கியம் ஆகும். இலக்கியம் ஒரு நுண்கலை; அதற்கென ஒரு தனித்தன்மை உண்டு; அஃது ஒரு நிறுவனம் போலவும் அமைப்பு போலவும் இயங்குகின்றது எனவும், பயிரினம் போல் வளர்கின்றது எனவும் ஒப்பியலார் விவாதிப்பர்.
திருக்குர்ஆனும் - திருக்குறளும்
அல் குர்ஆன் என்பது இஸ்லாமியத் திருவேதமாகும். இது வழக்கத்தில் குர்ஆன் என்று அழைக்கப்படுகின்றது. இவ்வேத நூல் உலக மக்கள் அனைவருக்காகவும் இறைவனால் அவனுடைய திருத்தூதர் முஹம்மது நபி வழியாகவும் அருளப்பட்டது. இப்புனித நூலில் உள்ளவை நபி பெருமானாருடைய கருத்துக்களோ வாசகங்களோ அல்ல, இறைவனின் வேத வசனங்கள்; அனைத்தும் அவனால் அறிவிக்கப்பட்டவையாகும்.
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த நமது திருநாட்டில் நல்லறங்கள் அழியத் தொடங்கிய காலத்தில் அறங்களை உலகிற்கு எடுத்துரைக்கத் தோன்றிய பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று திருக்குறள் ஆகும். திரு + குறள் = திருக்குறள். குறுகிய வடிவினை உடையது; முதல் அடியில் நான்கு சீர்களும் இரண்டாம் அடியில் மூன்று சீர்களும் பெற்று குறுகிய வடிவினைக் கொண்டு இருப்பதால் “குறள்” எனப்படுகிறது. இதனை இயற்றியவர் திருவள்ளுவர் ஆவார்.
மனித வாழ்க்கையில் எதிர்ப்படும் முக்கிய பிரச்சினைகளை எல்லாம் விளக்கும் வேதநூல் திருக்குர்ஆன். சிறிதும் பெரிதுமாக 114 அத்தியாயங்கள் கொண்ட இவ்வேதத்தை குர்ஆன் என்று சாதாரணமாகக் குறிப்பிட்டாலும், அஷ்ஷிபா (அருமருந்து), அந்நூர் (போரொளி), அர் ரஹ்மத் (அருட்கொடை) போன்ற பெயர்களாலும் இது குர்ஆன் என்ற சொல்லால் வருணிக்கப்படுகின்றது. இது ஒரு நாட்டிற்கோ ஒரு காலத்துக்கு மட்டுமோ ஒரு மொழியினருக்கோ ஒரு இனத்தவருக்கோ உரியதல்ல. உலகம் முழுமைக்கும் பொது உடைமை இப்பெரு நூல்.
திருக்குறள் 133 அதிகாரங்களுடன் எல்லாச் சமயங்கட்கும் பொதுவாக நின்று அறம் உரைத்த நூல். தமிழர் தம் பொதுமைப் பண்பையும் எதிர்கால உணர்வையும் ஞால மேம்பாட்டையும் கருத்தில் கொண்டு இயற்றப்பட்டுள்ளது. வருங்காலத்தில் நிகழவிருக்கும் ஊழிகளுக்கெல்லாம் வையகத்து வாழ்நெறி இது எனக் கற்பிக்கின்றது. திருக்குறளின் பல சிறப்புகளில் ஒன்று எச்சமயத்தையும் சாராதது என்பதாகும்.
அன்பும் அன்புடைமையும்
அன்பு என்பது நுண்பொருள். அதைக் காட்டுவது இயலாதது; உணர்த்த இயலும். ஒருவரது உள்ளத்தில் இருக்கும் அன்பை வெளிக்காட்ட குர்ஆனும் குறளும் கருத்துக்களை உரைக்கின்றன.
“மேலும், அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு உபகாரம் செய்யுங்கள்; (அவ்வாறே) உறவினருக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், உறவினரான அண்டை வீட்டினருக்கும், அந்நியரான அண்டை வீட்டினருக்கும் (எப்பொழுதும்) உங்களுடன் இருக்கக்கூடிய நண்பர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களுக்கும் (அன்புடன் உபகாரம் செய்யுங்கள்.) கர்வங் கொண்டவனாக, பெருமையாளனாக இருப்பவரை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்” (திருக்குர் ஆன் - 4: 36)
இவ்வாறு கூறியவாறு மனிதன் அன்புடன் நடந்து கொண்டால் இறைவனின் நேசத்திற்கு உட்பட்டவனாகத் திகழமுடியும் என்பதை இவ்வசனம் உணர்த்துகிறது. இச் செய்தியானது;
“அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்” (குறள் - 71)
“அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் தமக்கு” (குறள் - 72)
என்ற குறள்களுடன் ஒப்பு நோக்கத்தக்கது.
உள்ளத்தில் உள்ள அன்பைப் பிறர் அறியாமல் தாழ்ப்பாள் இட்டுப் பூட்ட முடியாது. மெய்யன்புடையவரின் மன நெகிழ்ச்சியாகிய அன்பை அவர் சிந்தும் சிறிதளவாகிய கண்ணீரே வெளிப்படுத்தும். அன்பு இல்லாதவர் தம் உடைமைகள் எல்லாவற்றையும் பிறர்க்கு உதவாமல் தாமே வைத்துக் கொள்வர். ஆனால், அன்புடையவர் அவசியம் ஏற்பட்டால் தம் எலும்பையும் பிறருக்கு உரிமையாக்கி உதவுவர் என்று திருக்குறளின் அன்புடைமை என்ற அதிகாரம் முழுவதும் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள அன்பிற்கு ஒப்பாக அமைந்துள்ளது.
நன்றியும் செய்ந்நன்றி அறிதலும்
“இறைவன் எத்தகையவனென்றால், அவன்தான் வானங்களையும் பூமியையும் படைத்தான்; அவனே வானத்திலிருந்து மழை பொழியச் செய்து பின்னர், அதைக் கொண்டு உங்களுக்கு உணவாக (ப் பற்பல) கனிவர்க்கங்களையும் வெளிப்படுத்தினான்; மேலும், (நீங்கள் பிரயாணம் செய்வதற்காகக்) கப்பலை தன் கட்டளைப்படி கடலில் அது செல்வதற்காக உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தான்; மேலும், ஆறுகளையும் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தான்”
“சூரியனையும், சந்திரனையும் (முறைப்படுத்தித் தம் வழிகளில்) அவ்விரண்டும் சென்று கொண்டேயிருக்க, அவன் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். மேலும், (மாறிமாறி வரும்) இரவையும், பகலையும் உங்களுக்கு அவன் வசப்படுத்தித் தந்தான்”
“(இவையன்றி) மேலும், எவற்றை நீங்கள் அவனிடம் கேட்டீர்களோ அவற்றில் ஒவ்வொன்றிலிருந்தும் அவன் உங்களுக்குக் கொடுத்தான்; ஆகவே, அல்லாஹ்வுடைய அருட்கொடைகளை நீங்கள் எண்ணுவீர்களாயின் அவற்றை நீங்கள் கணக்கிட்டு (எண்ணி வரையறுத்து) விட மாட்டீர்கள்; நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரன்; மிக்க நன்றி கெட்டவன்” (திருக்குர்ஆன் - 14: 32 - 34)
இத்தகைய குர்ஆன் வசனங்கள், இறைவன் உலகிற்கு அளிக்கப்பட்ட நன்மைகளையும் மனிதன் நன்றியுள்ளம் கொண்டவனாகத் திகழ வேண்டும் என்பதனையும் வலியுறுத்திக் கூறுவனவாக அமைந்துள்ளன. இக்கருத்தானது வள்ளுவரின் செய்ந்நன்றி அறிதல் என்னும் அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளன.
“செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது” (குறள் - 101)
“தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரிவார்” (குறள் - 104)
என்ற குறள் கருத்துக்களுடன் ஒப்பு நோக்கத்தக்கது.
நாம் ஓர் உதவியும் செய்யாத போது, பிறர் நமக்குச் செய்த உதவிக்கு இம்மண்ணுலகமும் விண்ணுலகமும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடாகாது. பயன் தெரிந்த பண்பாளர் தமக்குச் செய்யப்பட்ட உதவி தினையளவு சிறிதானாலும் அதனைப் பனையளவு பெரிதாகவே மதிப்பர். இவ்வாறு நன்றியுணர்வை வெளிப்படுத்தும் பாங்கினைத் திருக்குறள் நயம்பட எடுத்துரைக்கின்றது.
புறங்கூறலும் புறங்கூறாமையும்
“விசுவாசிகளே! (தவறான) எண்ணத்தில் பெரும்பாலானவற்றை நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள். (ஏனெனில்) நிச்சயமாக எண்ணத்தில் சில பாவமாகும்; (எவருடைய குறைகளையும்) நீங்கள் துருவித்துருவி விசாரித்துக் கொண்டிருக்க வேண்டாம்; உங்களில் சிலர் சிலரைப் புறம் பேசவும் வேண்டாம்; உங்களில் ஒருவர், தன்னுடைய சகோதரரின் மாமிசத்தை (அவர் இறந்து) சவமாயிருக்கும் நிலையில் புசிக்க விரும்புவாரா? அப்போது, அதனை வெறுத்து விடுவீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ், (பாவத்திலிருந்து தவ்பாச் செய்து மீள்வோரின்) பாவ மீட்சியை மிகுதியாக ஏற்பவன்; மிகக் கிருபையுடையவன்” (திருக்குர்ஆன் - 49: 12)
மேற்கூறிய திருமறை வசனமானது மனிதர்கள் புறம்பேசுதல் கூடாது என்பதையும் புறம்பேசினால் அதற்கான கைம்மாறையும் இறைக்கருத்தின் வாயிலாக உணர்த்துகின்றது.
“கண்நின்று கண்ணாச் சொல்லினும் சொல்லற்க
முன்இன்று பின்னோக்கிச் சொல்” (குறள் - 184)
எனும் குறட்பாவில் ஒருவர் கண்ணின் முன்பு நின்று கடுஞ்சொல் சொல்வதில் கூட தவறில்லை. அவன் இல்லா இடத்துப் பின்விளைவு கருதாது பழிப்புரை கூறுதல் தகாது என்ற கூற்றிற்கிணங்க புறங்கூறுதல் தவறு என்று வள்ளுவர் எடுத்தியம்பியுள்ளார்.
முடிவுரை
பிரபஞ்சத்தின் ஒவ்வொரு பொருளையும் படைத்தவன் ஒருவன் இருக்க வேண்டும் என அறிவானது கூறுகின்றது. உலகின் திட்டமிட்ட அமைப்பு, ஒழுங்கான இயக்கம், இணக்கமான செயல்பாடு, அதன் எண்ணற்ற நன்மைகள் ஆகிய அனைத்தும் படைத்தவன் ஒருவனாக இருக்கின்றான், அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று அறிந்து இறைவனைத் தொழ வேண்டும் என்பதைத் திருக்குர்ஆன் உணர்த்துகின்றது.
“இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு” (குறள் - 5)
இறைவனுடைய மெய்யான புகழை உணர்ந்து வணங்கினால் நல்வினை, தீவினை ஆகிய இருவினைகளும் தொடர்வதில்லை என்பதனைத் தமிழ்மறையாகிய திருக்குறளின் வாயிலாக அறிந்து கொள்ள இயலுகின்றது.
பார்வை நூல்கள்
1. மௌலானா சையித் அபுல்அஃலா மௌதூதி - RISALA - E - DINIYAT PART - 1 (TAMIL) இதுதான் இஸ்லாம்
2. தமிழண்ணல் - புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு.
3. மௌலானா அப்துல் ஹபீஸ் ரஹ்மானி - ISLAMIC TEACHINGS - 1 (Tamil) இஸ்லாமியக் கொள்கை விளக்கம்.
4. முனைவர் ச. வே. சுப்பிரமணியன் - தமிழ் இலக்கிய வரலாறு.
5. தொகுப்பு Dr. K.V.S. ஹபீப் முஹம்மத் - வேத வரிகளும் தூதர் மொழிகளும்.
6. முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியன் - திருக்குறள் பேரொளி.
7. சிற்பி பாலசுப்பிரமணியம் (உ.ஆ.) - திருக்குறள்.
8. தமிழண்ணல் - வாழ்க்கைக்கு ஒளிதரும் வள்ளுவம்.
9. தொகுத்தவர் எம். அப்துல் வஹ்ஹாப் - பொன்மொழி வரிசை - 4 திருக்குர்ஆன் பொன்மொழிகள்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.