பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
முனைவர் சி. சேதுராமன்
1. சிரிப்பு
உலகில் உள்ள உயிரினங்களில் மிகச் சிறந்த படைப்பு மனிதனே ஆவான். உலக உயினங்களில் மகிழ்ச்சியைச் சிரிப்பின் மூலம் வெளிப்படுத்தும் ஒரே உயிரினம் மனிதனே ஆவான். அதனால் தான் “சிரிப்பு ஒன்றுதான் மனிதனை விலங்கினத்திடமிருந்து பிரித்துக் காட்டுகின்றது” என்று அறிஞர் இங்கர்சால் குறிப்பிடுகின்றார். மகிழ்வு, துன்பம் உள்ளிட்ட உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் உன்னதமான உயிரினமும் மனிதனே ஆவான்.
சிரித்து மகிழ்ந்து வாழவே ஒவ்வொரு மனிதனும் விரும்புகின்றான். தானும் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துதல் வேண்டும். அதுவே மனித வாழ்க்கையின் குறிக்கோளாகும். சிரித்து வாழ் வேண்டுமே தவிர, பிறர் சிரிக்கும்படியான வாழ்க்கையினை வாழ்வது கூடாது. இதனை நமது முன்னோர்கள் தங்களது அனுபவத்தால் கண்டுணர்ந்து பழமொழிகளில் அவற்றைப் பொதிந்து வைத்து அவற்றை நமக்காக விட்டுச் சென்றுள்ளனர்.
சிரிப்பும்-முகமும்
சிரிப்பு முகத்தில் மலர்ச்சியை ஏற்படுத்துகின்றது. அம்மலர்ச்சி முகத்திற்கு அழகு தருகின்றது. நாம் சிரிக்கின்ற போது முகத்தில் உள்ள 17 நரம்புகள் செய்ல்படுகின்றது. அதனால் இரத்த ஓட்டம் சீரடைந்து முகம் பொலிவு பெறுகின்றது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இன்றையச் சூழலில் பலர் சிரிப்பதையே மறந்து எப்போதும் இயந்திரம் போன்று முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு வாழ்கின்றார்கள். இவர்கள் சிரிப்பின் மகத்துவத்தை அறியாதவர்களாவர். வாழ்க்கையை அனுபவித்து வாழத் தெரியாதவர்கள் என்றும் இவர்களைக் குறிப்பிடலாம்.
சிரித்துக் கொண்டு வாழ்பவர் வீட்டில் மகிழ்ச்சி தங்கும் என்பர். எப்போதும் சிடுமூஞ்சியாக இருப்பவர் தாமும் மகிழாது, மற்றவரையும் மகிழ்ச்சியாக இருக்க விடாது செய்வர். இவர்கள் பிறரது துன்பத்தை ரசிப்பவர்கள் எனலாம். சிரிப்புடன் களித்து வாழ்வோர் வீட்டில் செல்வத்திற்கு அதிபதியாக விளங்கும் திருமகள் வீற்றிருப்பாள் என்று வழக்கத்தில் கூறுவர். சிரிப்பவர் முகம் லெட்சுமி கடாட்சம் (திருமகள் அருள்) நிறைந்து விளங்கும். இதனை,
“சிரித்த முகமும் சீதேவியுமா இருக்க வேண்டும்”
என்ற பழமொழித் தொடர் நமக்கு எடுத்துரைக்கின்றது. திருமகளின் மறுபெயர் ஸ்ரீதேவி. இதுவே பேச்சு வழக்கில் சீதேவி என மருவி வழங்கிற்று எனலாம். எதனைக் கண்டும் கலங்காது சிரிப்புடன் எதிர் கொண்டு வாழ வெண்டும் எனபதையே இப்பழமொழி எடுத்துரைக்கின்றது. சிரிப்பு முகத்தில் பொலிவைத் தருகின்றது. அதனால் கவலைகளை மறைக்கின்றது. அதனாலேயே இப்பழமொழியை நமது முன்னோர்கள் நமக்குத் தெளிவுறுத்தியுள்ளனர் எனலாம்.
நோய் தீர்க்கும் மருந்து
சிரிப்பு அரிய மருந்தாகும். இதனை ஒவ்வொருவரும் உணர்ந்து சிறிது நேரமாவது சிரித்தல் வேண்டும். இன்று நகரங்களிலும், கிராமங்களிலும் வாழ்வோர் பலர் மன அழுத்த நோய்க்கு ஆளாகின்றனர். இந்த மன அழுத்த நோய் பல நோய்களுக்கும் மூல காரணமாக அமைந்து விடுகின்றது. இத்தகைய மனநோயை விரட்டுவதற்காகவே இன்று பல நகரங்களில் நகைச்சுவை மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டு அங்கு அனைவரும் கூடிச் சிரித்து மகிழ்கின்றனர். சிரிப்பு என்பது ஒருவித மருத்துவச் சிகிச்சை முறையாகும். பரபரப்பான சூழலில் அனைவரும் சிரிக்க மறந்து வாழ்க்கையைத் தொலைத்து விட்டுக் கவலையுடன் அலைகின்றோம். இத்தைகைய சூழலிலிருந்து நம்மை விடுவித்து நமக்கு உடல் நலத்தை வழங்குவது சிரிப்பு ஒன்றே ஆகும்.
ஒருமுறை சேலத்தில் தனது நாடகக் குழுவை வைத்து நாடகம் நடத்திக் கொண்டிருந்தார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.
சேலத்தில் நிலவிய தட்பவெட்பநிலை சரியில்லாததால் கலைவாணருக்கு வயிற்றுவலி ஏற்பட்டது.
கலைவாணர் வயிற்று வலியைப் போக்க மருத்துவரை நாடிச் சென்றார்.
அந்த மருத்துவர் கலைவாணரைப் பரிசோதித்து விட்டு, அவரிடம் நாடகம் பார்ப்பதற்கான அனுமதிச் சீட்டைக் கொடுத்து “உங்களுக்கு மருந்து தேவையில்லை. நீங்கள் கலைவாணர் என்பவரின் நாடகத்திற்குச் சென்று அந்த நாடகத்தைப் பாருங்கள். உங்களுக்கு வயிற்று வலி உடனே பறந்துவிடும். இன்றே போய்ப்பாருங்கள்” என்று கூறினார்.
இவற்றைப் பொறுமையாகக் கேட்ட கலைவாணர், “நீங்கள் கலைவாணரைப் பார்த்திருக்கின்றீர்களா?” என்று கேட்டார்.
அதற்கு அந்த மருத்துவர், “இல்லை. இன்றுதான் நான் நடகத்திற்குச் சென்று அவரையும் அவரது நாடகத்தையும் பார்க்கப் போகின்றேன். நான் எனக்கும் எனது நண்பருக்கும் உள்ள நாடக அனுமதிச் சீட்டில் ஒன்றினைத்தான் உங்களுக்கு ஒன்று கொடுத்தேன்“ என்றார்.
அதனைக் கேட்ட கலைவாணர் மருத்துவரிடம், “ஐயா நான்தான் அந்தக் கலைவாணர்” என்றார்.
மருத்துவர் வியந்து போனார். இது கலைவாணர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவமாகும்.
வெளிநாடுகளில் சிரிப்பின் மூலம் சிகிச்சை அளிப்பதை மருந்தில்லா மருத்துவமாக மருத்துவர்கள் செய்து வருகின்றார்கள். சிரித்தால் நோய் போகும் என்பதை உணர்ந்து தான் நமது முன்னோர்கள்,
“வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்”
என்ற முதுமொழியை நமக்கு வழங்கினார்கள் எனலாம். சிரிப்பு பல நோய்களில் இருந்து நம்மை விடுவிக்கும் அரிய மருந்து என்பதை இப்பழமொழி நமக்கு நன்கு தெளிவுறுத்துகின்றது.
சிரிப்பும் அழுகையும்
அனைவரும் சிரிக்கலாம். ஆனால் சிரிப்பதற்கு இடம், பொருள், காலம் என எல்லாவற்றையும் அறிந்து கொண்டு அதற்கேற்பச் சிரித்தல் வேண்டும். ஒருவர் தேவையின்றிச் சிரிப்பது பலரது கேலிக்கு ஆளாக்கும். எதற்கெடுத்தாலும் சிரித்துக் கொண்டிருப்பதும் பொருத்தமாக இராது. தனியாக இருந்து ஒருவன் அழுதால் அவனை ஏதும் தவறாகக் கூறமாட்டார்கள். அவனைப் பார்த்து இரக்கப்படுவார்கள். ஆனால், சிரிப்பு அப்படி அல்ல. தனியாக இருக்கும் போது ஒருவன் சிரித்தால் அவனுக்கு என்னமோ ஆகிவிட்டது மனக்கோளாறு உடையவன் என்று கூறிவிடுவர். இதனை உணர்ந்தே,
“சிரிக்கும்போது சேர்ந்து சிரிக்க வேண்டும்.
அழும்போது தனியாக அழ வேண்டும்”
என்று நமது முன்னோர்கள் தெளிவுறுத்தினர்.
சிரிப்பும் பெண்களும்
ஆண்கள் எப்பொழுது வேண்டுமென்றாலும், எந்த இடத்தில் வேண்டுமென்றாலும் சிரிக்கலாம். அவர்களை என்னவென்று யாரும் கேட்பதில்லை. ஆனால் ஆணாதிக்க சமுதாயம் பெண்களுக்கென்று பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர் என்பதைப் பழமொழிகள் தெளிவுறுத்துகின்றன. பெண் சிரித்தால் அவள் கற்புப் பிறழ்ந்தவள் என்று கூறினர். அதற்குப் புகையிலையை உவமை கூறியிருப்பது நோக்கத்தக்கது.
புகையிலை விரித்து வைத்திருப்பின் அதன் காரத்தன்மை குறைந்து விடும். அதுபோல் ஒரு பெண் ஒருவரைப் பார்த்து இயல்பாகச் சிரித்தால் அவள் கற்பு நெறியில்லாதவள் என்று கூறிப் பெண்கள் சிரிக்கக் கூடாது என்று கூறினர். இதனை,
“பொம்பளை(பெண்பிள்ளை) சிரித்தால் போச்சு.
புகையிலை விரித்தால் போச்சு”
என்ற பழமொழி விளக்குகின்றது.
சிரிக்கின்ற பெண் ஆபத்தானவள். அவளை நம்புவது கூடாது என்ற கருத்து சமுதாயத்தில் இன்றும் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. சிரிக்கின்ற ஆணையும், கொடிய விடமுள்ள பாம்பையும் நம்பலாம். ஆனால் சிரிக்கின்ற பெண்ணிடம் நம்பிக்கை வைத்தல் கூடாது என்பதை,
“சீறிவரும் பாம்பை நம்பினாலும்
சிரித்து வரும் பெண்ணை நம்பாதே”
இத்தகைய நம்பிக்கை ஏன் வந்தது? இத்தகைய பழமொழி இராமாயணத்தில் கைகேயி பாத்திரத்தை அடிப்படையாக வைத்துத் தோன்றியிருக்கலாமோ? என்று கருதவும் இடமிருக்கின்றது.
நமது சமுதாயத்தில் மகாபாரதமும், இராமயணமும் மிகுந்த செல்வாக்குப் பெற்றுள்ளமை நோக்கத்தக்கது. இவ்விலக்கியங்களில் இடம் பெறும் கதைமாந்தர்களும் சமுதாயத்தில் மக்கள் மனதில் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாகவே இதுபோன்ற பழமொழிகள் தோன்றியிருக்க வேண்டும் என்று கருத இடமிருக்கின்றது.
இழிவுபடுத்தும் சிரிப்பு
நாம் சிரிக்கின்ற சிரிப்பு மற்றவர்கள் மனதைப் புண்படுத்துவதாக இருத்தல் கூடாது. அவ்வாறு புண்படுத்துவது நேர்மையான செயலாக அமையாது. முதுமையின் காரணமாகவோ, செல்வ வளமையின் காரணமாகவோ பெரியோரை இழிவுபடுத்தும் நோக்கிலோ நமது சிரிப்பு இருத்தல் கூடாது. இது தீமையை விளைவிக்கும். இதனை,
“பழுப்போலையைப் பார்த்து குருத்தோலை சிரித்ததாம்”
“தங்கத்தைப் பார்த்து பித்தளை சிரித்ததாம்”
என்ற பழமொழிகள் விளக்குகின்றன.
வயது முதிர்ந்தவர்களைப் பார்த்தோ, உயர்வான நிலையில் உள்ள பெரியோர்களைப் பார்த்தோ நாம் இழிவுபடுத்தும் வகையில் சிரிக்கக் கூடாது. அவர்களது மனம் இதனால் புண்படும். மேலும் இளமை போய் நமக்கும் முதுமை வரும். நாம் உயர்ந்த இடத்தில் இருக்கின்ற போது பிறர் நம்மைப் பார்த்துச் சிரிப்பர். அதனால் இத்தகைய செயல்களில் ஈடுபடக்கூடாது என்ற அனைவருக்கும் ஏற்ற வாழ்வியற் பண்புகளை இப்பழமொழிகள் விளக்கி உரைக்கின்றன.
சிரிப்புக்குப் பல்வேறு பொருள்கள் உண்டு. அது நோயற்ற வாழ்க்கை வாழ உதவுகின்றது. நாம் சிரிப்பது மற்றவர்களைப் புண்படுத்துவது போல் இருக்கக் கூடாது என்பன போன்ற பல்வேறு வாழ்வியல் சிந்தனைகளை வழங்கி வாழ்க்கையைச் செம்மைப் படுத்தும் பண்பாட்டுப் பெட்டகங்களாகப் பழமொழிகள் விளங்குகின்றன எனலாம்.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.