பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
முனைவர் சி. சேதுராமன்
2. களவு
ஒருவரது பொருளை அவரும், பிறரும் அறியாமல் தன்னுடையதாக ஆக்கிக் கொள்வதனைக் களவு என்று குறிப்பிடலாம். இதனைத் திருடுதல், கன்னக்கோல் வைப்பது, கன்னமிடுவது, வரண்டுவது, அபகரிப்பது என்று வழக்கில் வழங்குவர். இக்களவு பழங்காலத்தில் இருந்து இன்றுவரை தொடர்ந்து விதவிதமாக நடந்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.
பொருளில்லா நிலையில், வாழ்வதற்குரிய ஆதாரமில்லா நிலையில் பொருளையோ, தேவையானவற்றையோ திருடுவது நிகழ்கின்றது. முற்காலத்தில் வறுமையிலிருந்து துன்புற்றோர் அதிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ளத் திருடினர். இக்களவு, களவு செய்வோர் ஆகியோரைப் பற்றிய, பழமொழிகள் மக்களிடையே வழங்கப்பட்டு வருகின்றன.
களவு
களவினை திருட்டு என்று கூறுவது போல் களவு செய்பவனைத் திருடன், கள்வன், கள்ளன், என்று குறிப்பிடுவர். பேச்சு வழக்கில் திருடுபவனை களவாணி, மொள்ளமாறி, முடிச்சவிக்கி, சேப்பு மாறி, திருட்டுப்பயல் என்று பல்வேறுவிதமாக அழைக்கின்றனர். இக்கள்வரை இலக்கியங்கள் ஆறலைக் கள்வர், ஆறலைத்து உண்போர், வழிப்பறி செய்துண்போர் என்று குறிப்பிடுகின்றன.
ஆய கலைகள் அறுபத்து நான்கனுள் களவும் ஒன்று என்று குறிப்பிடுவர். இதனைக் கற்று மறந்துவிட வேண்டும். அதனைக் கைக்கொண்டு வாழ்தல் கூடாது. இதனை,
‘‘களவும் கற்று மற’’
என்ற பழமொழி குறிப்பிடுகின்றது. இதற்குப் பல்வேறு விதங்களில் விளக்கம் கூறுவர்.
சிலர் இக்களவினை அக இலக்கண மரபுக்குள் கொண்டு சென்று களக் காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை (தலைவியைக் காதலித்தபோது) கற்புக் காலத்தில் (திருமணம் ஆன பின்னர்) மறந்துவிட வேண்டும். இதனையே, ‘‘களவும் கற்று மற’’ என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது என்பர்.
களவு என்பது தலைவனும், தலைவியும் தங்களது உள்ளத்தைத் தங்களுள் யாரொருவரும் அறியாது கவர்ந்து கொள்ளுதலைக் குறிக்கும் என்பர். இவ்விளக்கம் இப்பழமொழிக்குப் பொருத்தமாக அமையவில்லை என்பது நோக்கத்தக்கது. ஏனெனில் களவு என்பதனைப் பிறர் அறியாது கவரும் கலை எனக் கொண்டு இப்பழமொழிக்குப் பொருள் கொள்வதே மிகவும் பொருத்தமானதாக அமையும்.
களவு செய்பவனும் உறவும்
களவு செய்பவனை, களவானி, கள்ளன், கள்வன் என்று பழமொழிகள் குறிப்பிடுவது நோக்கத்தக்கது. இவ்வாறு களவு செய்து வாழ்பவருடன் உறவு வைத்துக் கொள்ளுதல் கூடாது. அவ்வாறு உறவு வைத்துக் கொண்டால் பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடும். களவானியுடன் நட்பு வைத்தவனையும் உலகோர் களவானி என்றே கருதுவர். கள்வனுடன் நட்புறவு கொண்டால் அவரது பழக்கம் நட்புக் கொண்டவரையும் பற்றிக் கொள்ளும்.அதனால்தான் மக்களிடையே,
‘‘பன்றியோட சேர்ந்த கன்றும் பீ தின்னும்’’
என்ற பழமொழி வழங்கப்பட்டு வருகின்றது.
பன்றியின் குணம் வேறு. பசுங்கன்றின் குணம் வேறு. ஆனால் பன்றியுடன் நட்புக் கொண்ட பசுங்கன்றும் புல்லைத் தின்னாது பன்றியைப் பின்பற்றி மலத்தையே தின்னும். பன்றியின் குணம் கன்றுக்கும் தொற்றிக் கொள்ளும். அதுபோன்றே களவு என்ற தீய பழக்கமுடையவருடன் நட்புக் கொள்ளும் நல்லவரும் அவரது இயல்பில் மாறி களவு செய்வோரின் குணத்திற்கு மாறிவிடுவர். அதனால் அவருடன் நட்புக் கொள்ளக் கூடாது என்பதனை இப்பழமொழி தெளிவுறுத்துகின்றது.
கள்வருடைய உறவு நிலைத்து நிற்காது. குறுகிய காலம்வரைதான் நீடிக்கும். வாழ்நாள் முழுதும் நீடிக்காது. இதனை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என்ற வாழ்வியலறத்தை,
‘‘கள்ளன் உறவு காடுமறையற வரைக்கும்’’
என்ற பழமொழி வாயிலாக நமது முன்னோர்கள் தெளிவுறுத்துகின்றனர்.
யாருமற்ற காடு கள்வருடைய உறைவிடம்.
கள்வர் குணம்
கள்வர் யாருடைய பொருளையாவது திருட வேண்டும் என்ற எண்ணங் கொண்டவர், உற்றார் உறவினர் என்று அவர்கள் பாரார் பிறர் பொருளை அபகரிப்பதே அவர்களது நோக்கமாக இருக்கும். மேலும் அவர்களது குணம் எப்போதும் மாறாது. எப்படித்தான் அவர்கள் வாழ்ந்தாலும், அவர்கள் பிறர் பொருளைக் கவர்வதிலேயே குறியாக இருப்பர் இதனை,
‘‘களவாணிக்குப் போகுமா திருட்டுப்புத்தி’’
என்ற பழமொழி குறிப்பிடுகின்றது.
திருட்டுக் குணம் உள்ளவர் எப்போதும் எதையாவது திருடிக் கொண்டே இருப்பர். அவர்களுடன் சேர்ந்து குடியிருக்க முடியாது. ஏனெனில் அவர்கள் பொருளைத் திருடிக் கொண்டே இருப்பதால் அவர்களுடன் சண்டை சச்சரவு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும் என்பதை,
‘‘அவுசாரியோட(பரத்தை)குடியிருக்கலாம்,
களவாணியோட குடியிருக்க முடியுமா?’’
என்ற பழமொழி விளக்குகின்றது.
தவறான ஒழுக்கமுடையவளுடன் (அவுசாரி) சேர்ந்து குடியிருக்கலாம். அவர்களிடம் குறைந்த அளவு நியாயம் இருக்கும். ஆனால் கள்வர்களிடம் அதுகூட இருக்காது. அவர்கள் பிறரது வீட்டில் உள்ளவற்றைக் கவர்வதிலேயே கண்ணுங் கருத்துமாக இருப்பர். அதனாலேயே அவர்கள் குடியிருக்கும் இடத்தில் சேர்ந்து குடி இருக்க முடியாது. மேலும் இவர்கள் வெளியில் சென்று பிறரது வீட்டில் திருடிவிட்டு வந்து விட்டால் களவாணியுடன் சேர்ந்து இருப்போரையும் காவல் துறையினர் அழைத்துச் சென்று விசாரணை செய்வர். இதனைக் கருத்தில் கொண்டே இப்பழமொழி வழக்கத்தில் வழங்கப்பட்டு வருகின்றது.
நடத்தை கெட்ட பெண்ணைத் திருத்தி நல்லவளாக மாற்றலாம். ஆனால் களவு செய்வோரைத் திருத்தலாம் எனினும் அவர்களது இயல்பை மாற்ற முடியாது என்ற கருத்தையும் இப்பழமொழி நமக்குத் தெளிவுறுத்துவது நோக்கத்தக்கது.
நம்பிக்கை
அருகில் ஒரே இடத்தில் சேர்ந்து வாழ்வோர் ஒருவரை ஒருவர் நம்பி வாழ வேண்டும். பிறரை வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் நம்பி வாழ வேண்டிய சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் சிலர் யார் மீதும் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். அவர்கள் தங்களைத் தாங்களே நம்பாமல் இருப்பர். அதிலும் திருடும் குணமுள்ளவர்கள் தங்களைப் போல மற்றவர்களையும் திருடர்களாகவே கருதிப் பார்ப்பர். மற்றவர்களை நல்லவர்கள் என நம்ப மாட்டார்கள். இதனை,
‘‘தான் திருடி பிறரை நம்பாது’’
என்ற பழமொழி எடுத்துரைகின்றது.
கள்வனும் காப்பானும்
பொருள்களைத் திருடுவோர், பொருள் உடையோர் இவர்களுள் யார் பெரியவர். அதாவது திறமையானவர் எனில் கள்வரே எனலாம். பொருள் உடையவன் எத்தகைய திறப்பாட்டுடன் உடைமைகளைக் காத்தாலும், அதைக் கவர நினைக்கும் கள்வர்கள் தங்களது திறமையால் அவர்களது உடைமைகளைக் கைப்பற்றுவார்கள். கள்வர்களின் இத்தகைய திறமையான செயலை,
‘‘ஈரக்குலைக்குள்ளே வைத்திருந்தாலும் எடுத்து விடுவான்’’
(ஈரல்குலை - நுரையீரல்)
என்ற வழக்குத் தொடர் எடுத்துரைக்கின்றது.
மேலும் பொருளைக் காப்பவரின் திறத்தை விட அதிகத் திறம் படைத்தவர் கள்வரே ஆவர் என்பதை,
‘‘கள்ளன் பெரிசா? காப்பான் பெரிசா?’’
என்ற பழமொழி தெளிவுறுத்துகின்றது.
களவு செய்வோரில் இழிந்த, ஒன்றுக்கும் உதவாத பொருளைத் திருடுவோரும் உண்டு. அத்தகைய திருடர்களின் செயலை,
‘‘களவாங்கத் தெரியாதவன் கந்தையைக்
களவாண்ட கதைதான்’’
‘‘ஒழியத் தெரியாதவன் தலையாரி வீட்டில்
ஒழிஞ்ச கதைதான்’’
என்ற பழமொழிகள் எடுத்துரைக்கின்றன.
பழந்துணி, அதிலும் கிழிந்து நைந்த கந்தைத் துணி; ஒன்றுக்கு உதவாதது; அதனை யாரும் எடுக்க மாட்டார்கள். அதைப் போய்த் திருடிவிட்டு, தப்பித்து ஓடுபவன் தன்னைத் துரத்துபவர்களிடமிருந்து தப்பிக்கப் பாதுகாப்பான இடத்திற்குச் சென்று மறைந்து கொள்ளாமல் திருடர்களைப் பிடித்துக் கொடுக்கும் தலையாரி வீட்டிற்குச் சென்று ஒழிந்து கொண்டால் அகப்பட்டு விடுவான். திருடர்களின் செயல்பாடுகளைக் குறிப்பதாக இப்பழமொழிகள் அமைந்துள்ளன.
திருடாதே
பல நாள்களாக ஒருவன் திருடிக் கொண்டே இருக்கின்றான். அவன் எப்போதும் திறமையானவனாக இருந்து விட முடியுமா? முடியாது. புதிது புதிதாகத் திருடுவதில் ஒருவன் திறமை காட்டித் திருடினாலும் என்றாவது ஒரு நாள் அவனைப் பிடித்து விடுவர் என்பதனை,
‘‘பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. திருடுவது குற்றம். ஒருநாள் அனைத்திற்கும் சேர்த்து தண்டனை கிடைக்கும்; அது துன்பத்தில் ஆழ்த்தும் என்பதை உணர்ந்து திருட்டுப் பழக்கத்தைக் கைவிட்டுத் திருந்தி வாழ வேண்டும் என்ற அறநெறிக் கருத்தினையும் இப்பழமொழி எடுத்துரைப்பது நோக்கத்தக்கது.
ஏழ்மை நிலையிலோ, பொருள் இல்லாத நிலையிலோ மட்டும் ஒருவன் திருடுவதில்லை. உழைக்கின்ற நோக்கம் இல்லாத போதும் திருட முயற்சிக்கின்றான். உழைக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் உருவாகி விட்டால் திருட வேண்டும் என்ற நோக்கம் மனதில் எழாது. மேலும் பிறர் பொருளைக் கவர்ந்து சேர்த்தால் அது வளராது. வளர்வது போன்று இருந்தாலும் அதில் உண்மையில்லை. அது தன்னிடம் உள்ள பொருள் அத்தனையையும் அழித்து விடும். அதனால் பிறர் பொருளைக் களவு செய்தல் கூடாது. இதனை ஒவ்வொருவரும் மனதில் வைத்து வாழ வேண்டும். பிறரை ஏமாற்றித் திருடிச் சேர்த்த பொருள் நிலைக்காது. அது எவ்வாறு தீயவழியில் வந்ததோ அது போன்றே போய்விடும். அதனால் பிறர் பொருளைக் கவர்ந்து தனக்காகச் சேர்த்து வைப்பது கூடாது. அது வாழ்க்கையில் துன்பத்தை ஏற்படுத்துவதோடு அழிந்து போய்விடும். அதனால் பிறர் பொருளைத் திருடக் கூடாது என்ற பண்பாட்டு நெறிகளை,
‘‘களவு அளவைக் குறைக்கும்’’
‘‘கபடால் வந்த சொத்து மோட்டு (முகடு) வழியாப் போயிரும்’’
என்ற பழமொழிகள் எடுத்துரைக்கின்றது.
இதில் கபடு என்பது தீய வழி என்று பொருள்படும். அவ்வாறு தவறான வழியில் சேர்த்த சொத்து எப்படி வந்ததோ அப்படியே போய்விடும் என்பதால் நேரிய வழியிலேயே பொருள்களை, உடைமைகளைச் சேர்க்க வேண்டும். அதுவே வாழ்வில் மனநிறைவைத் தரும் என்பதை அறிவுறுத்தித் திருடாதே என்ற பண்பாட்டுக் கருத்தினை நமது மனதில் இப்பழமொழி பதிய வைக்கின்றது. களவை ஒழித்து, உயர்வை, மனதில் வைத்து உழைத்தால் உழைப்பவருடைய வாழ்வு மட்டுமல்லாது சமுதாயமும் உழைக்கின்ற உயர்ந்த சமுதாயமாக மாறும் என்ற பண்பாட்டுச் சிந்தனையைக் களவு பற்றிய பழமொழிகள் நமக்கு வழங்குகின்றன.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.