பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
முனைவர் சி. சேதுராமன்
3. மழை
மழை மண்ணுயிர்க்கெல்லாம் வாய்த்த நல் அமுது; அது உயிரின் ஊற்று; உலகின் இயக்கம்; அனைத்திற்கும் மூலகாரணம். அது இன்றேல் உலக இயக்கம் முற்றிலும் நின்றுவிடும். இதன் சிறப்பை உணர்ந்தே வள்ளுவர், ‘‘வான் சிறப்பு’’ என்ற அதிகாரத்தை வைத்துள்ளார். மழையின் சிறப்பையும் அதன் இன்றியமையாமையையும் உணராதவர்கள் உலகில் யாருமில்லை எனலாம்.
மழை பற்றிய கருத்துக்கள் நம் முன்னோர்களின் முதுமொழியாகிய பழமொழிகளில் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. மழையின் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைவரும் நடந்து கொள்ள வேண்டும் என்று இப்பழமொழிகளில் கூறியுள்ளனர்.
மழை பெய்யும் காலம்
இன்று வானிலை அறிக்கை கூறுவதற்கு என்று தனியாக அறிவியல் தொழில் நுட்பத்துறை இயங்கி வருகின்றது. இவ்வானிலை மையம் தட்ப வெட்ப நிலையை ஆராய்ந்து எப்போது மழைப் பருவம் தொடங்கும்? எப்போது சுழற்காற்று வீசும்? என்பன போன்ற பல்வேறு தகவல்களை அறிவிக்கின்றது. இவ்வறிவிப்புகள் பொய்ப்பதும் உண்டு. ஆனால் இன்றுள்ள தொழில் நுட்ப வசதிகள் இல்லாத காலத்தில் நமது முன்னோர்கள் மழை எப்போது நன்கு பெய்யும் என்பதையெல்லாம் இயற்கை நிகழ்வுகளை வைத்துக் கணித்தனர்.
மழை பெய்யப் போவதை துல்லியமாக யாரும் கணித்துக் கூற இயலாது. இயற்கையாக எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யும் என்பதை,
‘‘மழைப்பேறும் பிள்ளைப் பேறும் மகாதேவனுக்குக் கூடத் தெரியாது’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
மழை பெய்வதும், நிறைமாத கர்ப்பிணிக்கு எப்போது மகப்பேறு நிகழும் என்பதும் துல்லியமாகக் கணித்துக் கூற இயலாது என்ற கருத்தைத் தங்கள் அனுபவத்தின் மூலமாக நமது முன்னோர்கள் தெளிவுறுத்துகின்றனர். இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், இந்த நாளில் குழந்தை பிறக்கும் என்றும் கூறினாலும் அந்தத் தேதியில் அந்நிகழ்வு நிகழ்வதில்லை.
நமது முன்னோர்கள் மழையைப் பேறு என்று குறிப்பிடுவது நோக்கத்தக்கது. ‘பேறு’ என்பது செல்வத்தைக் குறிக்கும். குழந்தைச் செல்வம் போன்று மழையும் கிடைத்தற்கரிய செல்வமாகும். பேறு என்று மழையினைக் குறிப்பதால் மழையின் முக்கியத்துவம் புலப்பட்டு நிற்பதை நன்கு உணரலாம்.
இயற்கை நிகழ்வு
நமது முன்னோர்கள் இயற்கையாக நிகழும் நிகழ்வுகளை வைத்து மழை பெய்வதைக் கணித்தனர். அவர்களது கணிப்பு சரியாக இருந்தது. எறும்புகள், மாடுகள், பூனைகள் உள்ளிட்ட உயிரினங்களின் இயக்கங்களை வைத்தே மழை பெய்வதைக் கணித்தனர்.
எறும்புகள் நுட்பமானவை. சுறுசுறுப்பானவை. பள்ளப் பகுதியில் புற்றுக் கட்டியிருந்தால் திடீரென்று அங்கிருந்து மேட்டுப் பகுதியினை நோக்கித் தங்களது முட்டைகளை எடுத்துக் கொண்டு வரிசையாகச் சென்று நீர் புகாத இடத்தில் தங்களது இருப்பிடத்தை மாற்றிக் கொள்ளும். பள்ளமான பகுதியில் இருந்து மேட்டுப் பாங்கான பகுதிக்கு எறும்புகள் முட்டைகளைக் கொண்டு சென்றால் உடன் ஓரிரு நாட்களில் மழை பெய்யப் போகிறது என்று மக்கள் அறிந்து கொண்டனர். இவ்வாறு தாங்கள் அனுபவத்தால் கண்டுணர்ந்த உண்மையைப் பிறரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில்,
‘‘எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால் மழை பெய்யும்’’
என்ற பழமொழியில் புகுத்திக் கூறினர்.
இயற்கை நிகழ்வை உன்னிப்பாக நன்கு கவனித்தால் மட்டுமே மழை பெய்யப் போகும் அறிகுறிகளை உணர முடியும். ஆதனால் மனிதன் இயற்கையைத் தெளிவுற உணர்ந்து வாழ வேண்டும் என்ற பண்பாட்டுப் படிப்பினையையும் இப்பழமொழி வழங்குகின்றது.
அகல் வட்டம்
நிலவைச் சுற்றியோ அல்லது சூரியனைச் சுற்றியோ வெண்மையான வட்டம் போன்று காணப்படுவது அகல் வட்டம் என்று குறிப்பிடுவர். அகன்ற வட்டம் என்றும் இதனைக் கூறலாம். கிராமத்தில் இதனை, ‘‘கோட்டை கட்டுதல்’’ என்றும் கூறுவர். ‘நிலவைச் சுற்றி கோட்டை கட்டியிருக்கிறது, சூரியனைச் சுற்றிக் கோட்டை கட்டியிருக்கிறது என்பர். இவ்வட்டம் வெண்மையானதாகக் காணப்படும். இவ்வாறு கட்டியிருப்பது பகலில் மழை பெய்யப் போவதைக் காட்டும் அறிகுறியாகும். இதனை,
‘‘அகல் வட்டம் பகல் மழை’’
என்ற பழமொழி நமக்கு உணர்த்துகிறது.
மின்னல்
பகலில் திடீரென்று வானில் மின்னல் மின்னும். இம் மின்னல் தொடர்ந்து வானத்தில் நிகழ்ந்து கொண்டே இருக்கும். இவ்வாறு தொடர்ந்து மின்னல் மின்னினால் அதிக மழை பொழிய வாய்ப்பு உள்ளது என்பதை,
‘‘மின்னுக் கொலலாம் மழை’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
வானத்தில் நிகழும் மாற்றங்களைக் கண்டுணர்ந்து அதன் மூலம் கிடைத்த அனுபவத்தால் மழை பெய்வதை, நமது கணித்ததையே இப்பழமொழி நமக்கு உணர்த்துகின்றது எனலாம்.
காற்று
சித்திரை, ஆடி ஆகிய மாதங்களில் அதிக அளவு காற்றுச் சுழன்று சுழன்று அடிக்கும். சித்திரையில் காற்று வீசுவதைச் சித்திரைச் சுழி என்று வழக்கில் குறிப்பிடுவர். ஆடி மாதத்தில் வீசும் காற்றை ஆடிக்காற்று என்று கூறுவர். ஆடி மாதத்தில் அடிக்கும் காற்று மிக வேகமாகச் சுழற்காற்றைப் போல சுழன்று அடிக்கும். அங்ஙனம் காற்று ஆடி மாதத்தில் வேகமாக வீசினால் அடுத்து வரக்கூடிய ஐப்பசி மாதத்தில் கனமழை பொழியும். இவ்வாறு ஐப்பசியில் மழை பெய்யப் போவதை ஆடிக்காற்றை வைத்தே முன்னோர்கள் கணிப்பர் என்பதை,
‘‘ஆடியில் காத்தடிச்சா (காற்றடித்தால்)
ஐப்பசியில் மழை வரும்’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
மழை நிற்கும் காலம்
மழை பெய்யப் போவதை அறிந்ததைப் போன்று மழை நிற்கும் காலத்தையும் நமது முன்னோர்கள் அறிந்து அதனைப் பழமொழிகளில் பதிவு செய்து வைத்தனர். ஐப்பசியில் அடைமழை பொழியும். அதன் பின் மழையின் அளவு குறைந்து கொண்டே வந்து கார்த்திகை மாத இறுதிக்குள் மழை பெய்வது நின்றுவிடும். அதற்கு மேல் மழை பொழியாது. இத்தகைய மழை நிற்கும் காலதத்தை,
‘‘கர்ணனுக்கு மேலே கொடையும் இல்லை
கார்த்திகைக்கு மேல் மழையுமில்லை’’
என்ற பழமொழி தெளிவுறுத்துகின்றது.
உலகில் மிகச் சிறந்த கொடையாளி கர்ணனே ஆவான். அவனை மிஞ்சும் அளவிறகு யாரும் கொடையில் சிறந்து விளங்கவில்லை. அவனைப் போல் சிறந்த கொடையினை யாரும் அளிக்கவுமில்லை. அது போன்று கார்த்திகை மாதம் முடிந்து விட்டால் மழைக் காலம் முடிந்து விடும். மார்கழியில் பனிக்காலம் தொடங்கி விடும். இதனையே இப்பழமொழி எடுத்துரைக்கின்றது.
மழையின் தீமை
மழை கொடுக்கவும் செய்யும்; கெடுக்கவும் செய்யும். மழை அளவுடன் பெய்தால் உலகம் செழிக்கும். அனைத்து வகையான உயிரினங்களும் மிகழ்ச்சியாக வாழும். ஆனால் அளவுக்கு அதிகமாக மழை பொழிந்தால் பல உயிரினங்களும் துன்புறும். இதனையே,
‘‘கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை’’
என்ற குறளில் வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.
சில நேரங்களில் மழை பொழியாமல் போய் அனைத்து உயிரினங்களும் துன்புற நேரிடுவதும் உண்டு. மழை பொய்த்துப் போனால் உலக உயிரினங்கள் அனைத்தும் வாடிப் போய் இறப்பின் விளிம்பிற்குச் செல்வர். இதனை,
‘‘மழை பெய்தும் கெடுக்கும்
பெய்யாமலும் கெடுக்கும்’’
என்ற பழமொழி நமக்கு உணர்த்துகிறது.
மேலும் கோடை காலத்தில் வெயில் மக்களை வாட்டி வதைத்து விடும். அப்போது மழை தேவைப்பட்டாலும் பொழியாது. மழை பெய்யப்போகிறது போல் வானில் மின்னல், இடி தோன்றும். ஆனால் மழை பொழியாது. அனைவரது எதிர்பார்ப்பையும் கெடுக்கும். இத்தகைய இயற்கை நிகழ்வை,
‘‘கோடை குமுறிக் கெடுக்கும்’’
என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது.
கோடை காலத்தில் மழை பொழிவது போல் வானத்தில் அறிகுறிகள் ஏற்பட்டாலும் மழை பொழியாது என்ற முன்னோரின் அனுபவத்தை உள்ளீடாகக் கொண்டு இப்பழமொழி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மனிதன்-வானம்
வானத்திலிருந்து பொழியும் மழை கெடுத்தாலும் உலக உயிர்கள் அனைத்தின் வாழ்விற்கும் ஆதாரமாக விளங்குகின்றது. வானம் என்றும் பழி வாங்காது. ஆனால் மனிதன் பழிவாங்கும் குணம் உடையவன். ஆவன் சக மனிதனுக்குத் தீய வினைகளைச் செய்வான். ஆனால் இயற்கைக்கு மாறாக மனிதன் செயல்பட்டாலும் அதற்குப் பதிலாக வானம் மழையைத் தருகின்றது. வானத்தின் செயலையும் மனித குணத்தின் இயல்பையும் ஒப்பிட்டுக் கூறுவதாக,
‘‘வானம் நினைத்தால் மழை
மனிதன் நினைத்தால் வினை’’
என்ற பழமொழி அமைகிறது.
இயற்கையை உணர்ந்து மனிதன் வாழ்ந்தால் சிறப்பாக வாழலாம். இயற்கையே மனிதனுக்கு ஆசிரியனாக அமைந்து அனைத்தையும் தெரியப்படுத்துகின்றது. இயற்கையை உணர்ந்து வாழ்ந்து அதற்கேற்றாற் போன்று நமது வாழ்வை அமைத்துக் கொள்ள நமது முன்னோர்கள் கூறிய மழை பற்றிய பழமொழிகள் நமக்குப் பண்பாட்டுப் பெட்டகங்களாக பயன்படுகின்றன எனலாம்.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.