பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
முனைவர் சி. சேதுராமன்
37. கிழமைகள்
ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு பெயர்கள் உண்டு. இந்நாள்களைக் கிழமை என்பர். கிழமை என்றால் உறவு என்றும் பொருள் வழங்குவர். நாள்கள் ஒவ்வொரு கடவுளுடனும் தொடர்புடையது. அந்நாளுக்கு அதிபதியாக, ஆதிக்க ஆற்றலாக அக்கடவுள் விளங்குகின்றார். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்று ஏழு நாள்களுக்கும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. புதனுக்கு அறிவன் என்றும், சனிக்கு காரி என்றும் வேறு பெயர்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இக்கிழமைகளை வைத்து நமது முன்னோர்கள் பல்வேறு வாழ்வியல் தொடர்பான செய்திகளைக் கூறியுள்ளனர். இக்கிழமைகள் தொடர்பான பழமொழிகள் அந்நாள்கள் தொடர்பான மக்களின் நம்பிக்கைகளையும் அந்நாள்களில் பிறந்த மனிதர்களின் பண்புகளையும் தெளிவுறுத்துவனவாக உள்ளன.
கிழமைகளுக்குரிய கடவுளர்கள்
ஞாயிறு என்பது சூரியனுக்கு உரியதாகும். ஞாயிறு என்பதே சூரியனைக் குறிக்கும். திங்கள் சோமனாகிய சிவனுக்கு உரியது. செவ்வாய் என்பது நவக்கிரகங்களுள் ஒன்றாகிய செவ்வாய்க்கு உரியது. அதாவது முருகப்பெருமானுக்கு உதகந்த நாளாகச் செவ்வாய் விளங்குகின்றது. புதன் அதாவாது அறிவன் என்ற வழங்கப்படும் கிழமையானது புதன் எனும் கோளிற்கு உகந்தது. வியாழன் என்பது குருபகவானுக்கு உரியது. வெள்ளி என்பது சுக்கிரனுக்கு உரியது. சனிபகவானுக்கு உரியது காரிக்கிழமையாகிய சனிக்கிழமையாகும்.
இந்நாள்களில் பிறந்த மனிதர்களை இத்தெய்வங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. இவர்களின் ஆளுகைக்கு உட்பட்டே இம்மனிதர்களின் செயல்பாடுகள் அமையும் என சோதிட வல்லுநர்கள் மொழிகின்றனர். மனிதர்களை ஆட்டிவைக்கும் நவக்கிரக நாயகர்களான இவர்களின் செயல்பாடுகள் இக்கிழமைகளில் செய்யப்படும் செயல்களில் பிரதிபலிக்கும் என்றும் அச்சோதிட வல்லுநர்கள் மொழிவது நோக்கத்தக்கது.
ஞாயிறு
ஞாயிறு சூரியனின் ஆதிக்கம் பெற்ற கிழமையாகும். உலகில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் ஏதோ ஒரு வகையில் சூரியனை வழிபட்டு வருகின்றனர். சூரியனே அனைத்து உலக இயக்கங்களுக்கும் அடிப்படைக் காரணமா அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால்தான் சிலப்பதிகார ஆசிரியரும்,
‘‘ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோற்பொற்கோட்டு
மேரு வலந்திரிதலான்.
என்று போற்றுகின்றார். ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன் உச்சம் பெற்றிருந்தால் அவருக்கு அரசு வேலைவாய்ப்பு உறுதி என்பர்.
இந்த ஞாயிற்றுக் கிழமையில் பிறந்தாலும், அதில் பெண்கள் பருவமடைந்தாலும் பல்வேறு இடையூறுகளைச் சந்திக்க வேண்டி வரும் என்று முன்னோர்கள் குறிப்பிடுகின்றனர். இதனை,
‘‘ஞாயிற்றுக் கிழமையில பொறந்தா நாயிபட்ட பாடுதான்’’
என்றும்
‘‘ஞாயித்து கிழமையில சமஞ்சா நாயிபட்டபாடுதான் படணும்’’
என்றும் பழமொழி வாயிலாகத் தெளிவுறுத்துகின்றனர்.
ஞாயிற்றுக் கிழமையில் குழந்தை பிறப்பதற்கும், பெண் பருவமடைவதற்கும் எந்த ஒரு காரணமும் இல்லை எனலாம். எல்லாம் இறைவனின் எண்ணப்படியே நடக்கின்றது. ஞாயிற்றுக் கிழமையில் பிற்பவர்கள் நாய் போன்று அலைந்து துன்புறுவர் என்று மக்களிடையே ஒரு நம்பிக்கை வழக்கில் தொன்றுதொட்டு இருந்து வருகின்றது.
திங்கள்
திங்களைச் சோமவாரம் என்பர். அனைத்திற்கும் மூலமாக விளங்கும் சிவபெருமானின் உச்சம் பெற்ற நாள் திங்கள் கிழமையாகும். திங்கள் எனில் சந்திரனைக் குறிக்கும். இத்திங்களின் சிறப்பினை,
‘‘திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்று
இவ்வம்கண் உலகளித்தலான்’’
எனச் சிலப்பதிகாரம் எடுத்துரைக்கின்றது.
கிராமப் புறங்களில் எந்தக் கிழமைகளில் ஊருக்குப் போவது, எந்தக் கிழமைகளில் என்னென்ன செயல்கள் செய்வது என்று நினைவுபடுத்திச் செய்கின்றனர். ஏனெனில் சில நாள்களில் செய்தால் அச்செயல் முடிவடையாது என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகின்றது.
திங்களன்று வெளியுருகளுக்குப் பயணித்தல் கூடாது. அவ்வாறு பயணம் செய்தால் அவர்கள் திரும்ப மாட்டார்கள் என்று மக்கள் நம்புகின்றனர். அதனால் நல்ல நாள் பார்த்தே வௌயூர்களுக்குப் பயணம் செய்கின்றனர். திங்களன்று பயணம் செய்தல் கூடாது என்பதனை,
‘‘திங்கட்கிழமை பயணம் திரும்பாப் பயணமாய் முடியும்’’
என்ற பழமொழி தெளிவுறுத்துகின்றது. சில குக்கிராமங்ளில்தான் இது போன்ற நம்பிக்கைகள் மக்களிடையே நிலவுகின்றன. பெரும்பாலான மக்கள் எல்லாக் கிழமைகளிலும் பயணம் செய்கின்றனர்.
செவ்வாய்
செவ்வாய்க் கிழமைகளில் மக்கள் எந்தச் செயலையும் செய்யமாட்டார்கள். அவ்வாறு செய்தால் அது நன்றாக முடிவடையாது என்று நம்புகின்றனர். மேலும் செவ்வாயில் குழந்தை பிறப்பதையும் மக்கள் விரும்புவதில்லை. எந்தஒரு நல்ல காரியத்தையும் செவ்வாய்கிழமையில் செய்வதைத் தவிர்த்துவிடுவர். இது மக்களிடையே தொன்றுதொட்டு நிலவிவரும் நம்பிக்கையாகும். மேலும் செவ்வாயில் குழந்தை பிறந்தால் செவ்வாய் தோஷம் ஏற்படும் என்றும் கருதுகின்றனர். மக்களின் இந்த நம்பிக்கையை,
‘‘செவ்வாயோ வெறுவாயோ’’
என்ற பழமொழி மொழிகின்றது. இப்பழமொழி,
‘‘செவ்வாயோ வருவாயோ’’
என்றுதான் இருந்திருக்க வேண்டும். மக்களிடையே, ‘மதுரை என்பது மருதை, மர்ரை’ என்று எங்ஙனம் மாற்றம் பெற்று வழங்கப்பட்டு வருகின்றதோஅதுபோன்று மாற்றமடைந்து வழங்குவது நோக்கத்தக்கது. இதனால் வருவாய் என்ற பொருள் மாற்றம் பெற்று ஒன்றுமே கிட்டாது பேகும் என்ற வெறுவாய் என்ற பொருள் இதில் இடம்பெற்றுள்ளது நோக்கத்தக்கது.
புதன்
புதன் கிழமையை அனைத்துத் தரப்பு மக்களும் விரும்புகின்றனர். இக்கிழமையில் செய்யும் அனைத்துச் செயல்களும் நன்கு லாபத்துடன் முடியும் என்றும் தங்குதடை என்பதே வராது என்றும் மக்கள் கருதுகின்றனர். இக்கிழமையில் குழந்தை பிறந்தால் அது அதிஷ்டம் என்ற எண்ணம் மக்களிடையே நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. இக்கிழமையில்தான் நல்ல செயல்களைச் செய்வர். புதன்கிழமையில் ஒரு செயலைச் செய்யாவிட்டால் அது பெரிய இழப்பாகும் என்ற நம்பிக்கையை,
‘‘பொன்னுக் கிடைச்சாலும் புதன் கிடைக்காது’’
என்ற பழமொழி இயம்புகின்றது.
தங்கம் (பொன்) கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால், நல்ல கிழமையான புதன் கிடைக்காது என்பதனை வலியுறுத்துவதாக இப்பழமொழி அமைந்திருப்பது சிந்தனைக்குரியதாகும். தங்கத்தைவிட புதன்கிழமையை மேன்மையாக மக்கள் கருதி வாழ்கின்றதை இப்பழமொழி புலப்படுத்துகின்றது.
வியாழன்
வியாழன் கிழமை குருவுக்கு உகந்த நாள் என்று சோதிடர்கள் குறிப்பிடுகின்றனர். வியாழக் கிழமை முன்பு விசேசமான நாளாகக் கருதப்படா விட்டாலும் தற்போது குருபகவான் தட்சிணாமூர்த்தியை வழிபடும் நாளாகக் கொண்டு வழிபட்டு வருகின்றனர். வியாழக் கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை (சுண்டல் பயறி) மாலை அணிவித்து வந்தால் குருபகவானின் பலன்களைப் பெறமுடியும் என்கிற நம்பிக்கை இருந்து வருகிறது.
“வியாழ நோக்கம் வந்துட்டா யார் தடுத்தாலும் நிற்காது”
என்ற பழமொழி சொல்கிறது.
வியாழ நோக்கம் என்பது சோதிடத்தில் குருபகவானின் பார்வை எனப்படுகிறது. சோதிடத்தில் குரு பகவான் பார்வை பட்டு விட்டால் நடக்கும் அனைத்து செயல்களும் நல்லதாகவே நடக்கும். குருபகவான் பார்வை இருக்கும் போது, பிற ராசி பகவான்களின் தீய செயல்பாடுகள் எதுவும் நடக்காது. அவைகளால் குருபகவான் கொடுப்பது எதையும் தடுத்த நிறுத்த முடியாது என்று சோதிடர்கள் சொல்வதை நாம் கேட்க முடிகிறது.
வெள்ளி
வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு உரியது. அசுரர்களின் குருவானவர் சுக்கிராச்சாரியார் ஆவார். அவரது ஆட்சிக்குட்பட்டதாக இவ்வெள்ளிக்கிழமை அமைந்துள்ளது. இவ்வெள்ளிக் கிழமையில் குழந்தை பிறத்தல் நல்லதன்று என்று மக்கள் கருதுகின்றனர். அதிலும் ஆண் குழந்தை பிறந்தால் அது தந்தைக்கு ஆகாது என்ற நம்பிக்கை மக்களிடையே வழக்கத்தில் வழங்கப்பட்டு வருகின்றது. மக்களின் இந்நம்பிக்கையினை,
‘‘வெள்ளிக்குடையவன் கொள்ளிக்குடையவன்’’
என்ற பழமொழி விளக்குகின்றது.
வெள்ளிக் கிழமையில் குழந்தை பிறப்பது குடும்பத்திற்கு ஆகாது. பெண் குழந்தை பிறந்தால் அதனால் ஏற்படும் இடையூறுகள் குறைவு. ஆண்குழந்தை பிறந்தால்தான் அது தந்தையின் அழிவுக்கு வித்திடும் என்று மக்கள் கூறிவருகின்றனர். வெள்ளிக்கிழமைகளில் பணமோ, வேறு பொருளோ யாருக்கும் தரமாட்டார்கள். அவ்வாறு கொடுத்தால் செல்வ வளம் வீட்டில் குறைந்துவிடும் என்ற நம்பிக்கை மக்களிடையே நீண்ட காலமாக நிலவி வருகின்றது.
சனி
சனிக்கிழமை சனிபகவானுக்கு உகந்த நாளாகும். இந்நாளினை காரிக்கிழமை என்று குறிப்பிடுவர். இந்நாளில் இறத்தல் கூடாது என்பர். அவ்வாறு இறந்தால் மற்றொருவர் யாராவது உடன் இறந்து விடுவர் என்ற நம்பிக்கை மக்களிடையே காணப்படுகின்றது. சனிக்கிழமையில் இறப்பவர் தனக்குத் துணையாக மற்றொருவரையும் சாகடித்துவிடுவர் என்பர். இதனை,
‘‘சனிப்பொணம் தொணப்பொணம் கேட்கும்’’
என்றும்
‘‘சனிப்பிணம் தனியே போகாது’’
என்றும் அமைந்துள்ள பழமொழிகள் விளக்குகின்றன.
சனிக்கிழமை யாராவது இறந்தால் மற்றவர்கள் இறந்துவிடுவர் என்று மக்கள் அஞ்சி ஒரு கோழிக்குஞ்சினைப் பாடையில் கட்டி அதனை இடுகாட்டிற்கு எடுத்துச் சென்று அங்கு பலிகொடுத்துவிடுவர். இவ்வாறு பலிகொடுப்பதால் மற்றவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்று மக்கள் கருதுகின்றனர்.
கிழமைகள் எந்தவிதத்திலும் தீயன கிடையாது. அத்தீயன எல்லாம் மனிதர்களின் எண்ணங்களில்தான் அமைந்திருக்கின்றன. இன்று இதுபோன்ற நம்பிக்கைகள் நீர்த்துப்போய் வருவது நோக்கத்தக்கது. எல்லாக்கிழமைகளும் நல்ல கிழமைகள்தான். இறைவனை வணங்கிவிட்டு அனைத்துச் செயல்களையும் செய்ய வேண்டும். அதுவே வெற்றிதரும். நல்லனவற்றைச் செய்வோம். நலமாக வாழ்வோம். வாழ்க்கை வளமுறும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.