பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
முனைவர் சி. சேதுராமன்
36. சும்மா
நம்மைப் பார்க்கத் திடீரென்று வரும் நமது நண்பரைப் பார்த்து என்னங்க திடீரென்று சொல்லாமல் வந்திருக்கின்றீர்கள்? என்று கேட்டால் அவர் ‘சும்மா உங்களைப் பார்க்கணும்னு தோணுச்சு, அதனால இப்படியே வந்தேன். என்ன எப்படி இருக்கிறீங்க?’ என்று நம்மைப் பார்த்து அவர் கேட்பார். அதற்கு நாம், ‘சும்மா இருக்கேன்’ என்று கூறிவிட்டு, ‘ஆமா உங்க தொழில் எல்லாம் எப்படி இருக்கின்றது?’ என்று நாம் கேட்க அவர் அதற்கு, ‘அதற்கென்ற சும்மா ஜாம் ஜாம்னு போய்க்கிட்டு இருக்குது’. என்று சொல்வார்.
அதைப்போன்று நாம் ஏதாவது வேலை செய்து கொண்டிருக்க, நமது பையனோ, பெண்ணோ அப்பா இதக்கொஞ்சம் பாருங்கப்பா, என்றோ எதையாவது கேட்டாலோ நாம், ‘சும்மா சும்மா வந்து என்னைத் தொந்தரவு படுத்தாதே. பேசாம உங்க அம்மாகிட்ட போயி கேளு’’ என்று அவர்களைப் பேசி விரட்டிவிடுவோம். இவ்வாறு ‘சும்மா’ என்ற சொல்லானது எல்லா இடத்திலும், எல்லாராலும் எப்போதும் பயன்படுத்தப்படுகின்றது.
பொருள் புரிந்து யாராவது கூறுகின்றார்களா? இல்லை கூறவேண்டும் என்பதற்காகக் கூறுகின்றார்களா? என்று கேட்டால் யாரும் அதற்குத் தெளிவான விடையினைக் கூற இயலாது. படித்து முடித்த ஒருவரைப் பார்த்து, “என்ன செய்றீங்க?” என்று கேட்டால் அவர், ‘சும்மாதான் இருக்கறேன்’ ஒரு வேலையும் அகப்படமாட்டேங்குது. நானும் முயற்சி செஞ்சுகிட்டுத்தான் இருக்கறேன். எவனாவது சும்மா வேலை கொடுக்கறானா? பணம், சிபாரிசுன்னு கேக்கறான். என்ன பண்றது. வேலை கிடைக்கிற வரைக்கும் சும்மா இருக்கக் கூடாதேன்னு கிடைக்கற வேலையைச் செய்வோம்னு தெரிஞ்ச வேலையைச் செஞ்சுகிட்டு இருக்கிறேன்’ என்று கூறுவர்.
இவ்வாறு சும்மா என்ற சொல்லானது ஒவ்வொருவரும் பல்வேறு நிலைகளில் பயன்படுத்தும் சொல்லாக அமைந்திருப்பது சிந்தனைக்குரியதாகும். இத்தகைய சும்மா என்ற சொல்லை வைத்து நமது முன்னோர்கள் பழமொழிகள் பலவற்றைக் கூறி நமது வாழ்க்கைக்கு வழிகாட்டியுள்ளனர்.
சும்மா என்பதன் பொருள்
சும்மா என்று சும்மா சும்மா கூறுகின்றார்களே அதற்கு என்னதான் பொருள்? சுகமாக, ஒன்றுமில்லாது, ஒன்றுமில்லை, எதற்கெடுத்தாலும், வெறுமனே, வெறுமை என்று பல்வேறு நிலைகளில் இச்சொல்லிற்குப் பொருள்கொள்ளலாம். சும்மா என்பது வெற்றுச் சொல் அல்ல. இது இடத்திற்குத் தகுந்தாற்போன்று பொருள் தரக்கூடிய சொல்லாக உள்ளது. இச்சும்மா என்ற சொல்லை,
‘‘சும்மா இரு சொல்லற என்று நவின்றனை
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலேன் பாவியேனே!’’
என்று திருப்புகழில் அருணகிரிநாதர் முருகனை வேண்டிப் பாடுகின்றார்.
இப்பாடலில் சும்மா என்பது பேசாது இருத்தல் என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது நோக்கத்தக்கது. ஒவ்வொரு இடத்திற்கும் அதற்கேற்றாற் போன்று பொருள் கொள்ளும் நிலையில் ‘சும்மா’ என்ற சொல் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சும்மா கிடந்த கோழியும் சோறும்
சிலருக்கு உதவி செய்தால் அது தீமையில் கொண்டு போய்விடும். அதனால் யாருக்கு உதவி செய்ய வேண்டும், யாருக்கு உதவி செய்யக் கூடாது என்பதைத் தெரிந்து கொண்டு உதவ வேண்டும். தவறான நபருக்கு உதவி செய்தால் அந்நபரால் நமக்குத் துன்பமே நேரும்.
இதனை ஒரு பஞ்சதந்திரக் கதை தெளிவாக விளக்குகின்றது.
ஒரு முதலை வலையில் அகப்பட்டுக் கொண்டு கதறியது.
வழியில் போவோர் வருவோரைப் பார்த்து என்னை விடுவித்து விடுங்கள். உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும் என்று மனமுருகி வேண்டியபடி இருந்தது.
அப்போது அந்தப்பக்கம் சென்று கொண்டிருந்த ஒரு சிறுவன் இதனைக் கேட்டான். முதலையின் கண்ணீர் அவனை வருத்தியது. முதலை அவனைப் பார்த்து, ‘சிறுவனே என்னை நீ விடுவித்தால் உனக்கு நல்லது நடக்கும். ஆபத்தில் சிக்கியவரைக் காப்பது அனைவரது கடமையல்லவா? அதனால் என்னை இந்த வலையிலிருந்து விடுவித்துவிடு’’ என்று கேட்டது.
அதற்கு அச்சிறுவன், ‘‘முதலையே நான் உன்னை விடுவித்து விடுவேன். ஆனால் நீ என்னைக் கொன்றுவிடுவாயே? அதற்காகத்தான் நான் யோசிக்கின்றேன்’’ என்றான்.
இதனைக் கேட்ட முதலை, ‘நான் இதயமற்றவன் அல்ல. உன்னைக் கொல்ல மாட்டேன். என்னை நம்பு’ என்று கண்ணீர் மல்கக் கூறியது.
இதனைக் கேட்ட சிறுவன் முதலையை விடுவித்தான். வலையிலிருந்து விடுபட்டவுடன் சிறுவனின் காலைக் கவ்வியது முதலை. சிறுவன் வலி தாளாது அழுதான். அழுது கொண்டே, ‘நன்றி கெட்ட முதலையே உதவி செய்தவனையே நீ கொல்லலாமா? இது நீதியா?’’ என்று கேட்டான்.
அதற்கு முதலை, ‘நீதியோ, எதுவோ எனக்குத் தெரியாது. தற்போது எனக்குப் பசியெடுக்கின்றது. நான் உன்னைச் சாப்பிடப் போகின்றேன்’ என்று கூறியது. அப்போது சிறுவன் கதறினான். அவனது கதறல் காடெங்கும் எதிரொலித்தது.
அதனைக் கேட்ட ஒரு நரி அப்பக்கம் வந்து அக்காட்சியைப் பார்த்தது.
சிறுவன் நடந்ததைக் கூறித் தனக்கு உதவுமாறு கேட்டான்.
நரியும் சிறுவனுக்கு உதவ நினைத்து, ‘முதலையே நீ செய்வது தவறு உதவிய அச்சிறுவனை விட்டுவிடு’ என்றது.
ஆனால் முதலை மறுத்து நியாயம் பேசியது.
அதனைக் கேட்ட நரி, ‘முதலையே நான் முதலிலிருந்து உனது விவகாரத்தைக் கேட்க வேண்டும். நீ இதற்கு முன்னர் வலையில் எப்படி மாட்டி இருந்தாய்? அதனை நான் பார்த்தால்தான் நீ கூறுவது சரியென்று எனக்குத் தெரியும்’’ என்று கூறியவுடன் முதலை சிறுவனை விட்டுவிட்டு வலைக்குள் சென்று எப்படி அகப்பட்டுக் கொண்டேன் என்பதை செய்து காட்டியது.
முதலையின் வாயிலிருந்து விடுபட்ட சிறுவனைப் பார்த்து நரி, ‘சிறுவனே ஓடிவிடு! கொடியவர்களுக்கு எப்போதும் உதவி செய்யாதே! அவ்வாறு செய்தால் அவர்கள் உதவி செய்தவர்களையே துன்புறுத்தத் தொடங்குவர். இனிமேல் யாருக்கு உதவி செய்வது என்பதை அறிந்து உதவி செய்’’ என்று கூறியது.
சிறுவனும் ஓடி உயிர்பிழைத்துக் கொண்டான்.
இத்தகைய கருத்தை,
‘‘சும்மா கிடந்த கோழிக்குச் சோத்தப் போடுவானேன்
அது கொண்டையக் கொண்டைய
ஆட்டிக்கிட்டுக் கொத்த வருவானேன்’’
என்ற பழமொழி தெளிவுறுத்துகின்றது.
நல்லவர்களுக்கே உதவிசெய்ய வேண்டும். அப்போதுதான் அவ்வுதவிக்கு மதிப்பு ஏற்படும். இப்பழமொழியின் கருத்தை விளக்குவதைப் போன்று,
‘‘உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து’’
என்ற திருக்குறள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சும்மா கிடந்த சங்கு
மனிதர்களில் சிலர் எதையோ செய்யப்போய் அது வேறு எதிலாவது போய் முடிந்து விடும். அவர்களிடம் ‘எதுக்கு இப்படி செய்தீர்கள்?’ என்று கேட்டால், அவர், ‘சும்மா செஞ்சு பார்ப்போமேன்னு செய்தேன். ஆனா இப்படி ஆகும்னு நான் எதிர்பார்க்கவில்லை’ என்று கூறுவார். புரியாமலோ அல்லது தெரியாமலோ சில செயல்களைச் செய்துவிட்டுப் பின்னர் அதனால் துன்பம் வரும் போதுதான் நாம் செய்தது தவறு என்பதை நாம் உணர்வோம். இதனை,
‘‘சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி’’
என்ற பழமொழி தெளிவுறுத்துகின்றது.
மகாபாரதத்தில் ஆயுதமே எடுக்கமாட்டேன் என்று உறுதியுடன் உதவி செய்வதாக கண்ணன் பார்த்தனுக்குத் தேரோட்டியாக வந்தான்.
இதனால் துரியோதனன் மகிழ்ந்தான்.
ஆனால் பார்த்தன் கண்ணன் மட்டும் தனக்கு வந்தால் போதும். கண்ணன் எதுவும் செய்ய வேண்டாம் என்று கண்ணனை மட்டும் உதவுமாறு கேட்டுக்கொண்டான்.
அவ்வாறு கண்ணன் அருச்சுனனின் சாரதியாக அமர்ந்தவுடன், தனது மகன் அபிமன்யூவை அழித்த ஜயத்ரதனை அழிப்பதற்கு முயன்ற போது, அது முடியாத நிலையில் இருந்தபோது தனது பாஞ்சசன்யம் என்ற சங்கை ஒன்றுமில்லாத ஆண்டியாகிய கண்ணன் எடுத்து ஊதினான். அப்போது கண்ணனுடைய தேரை அவனது தேரோட்டி மாதலி மிக விரைவாக ஓட்டி வந்தான். அத்தெய்வீகத் தேரில் அமர்ந்து ஜயத்ரதனின் அருகில் சென்று அவனைக் கொன்றொழித்து மீண்டும் தனது தேருக்கு வந்துவிட்டான் அருச்சுனன். சும்மா கெடந்த சங்கினை ஊதிக் கௌரவர்களின் படையை அழித்தான் கண்ணன் என்ற பொருளின் அடிப்படையிலேயே மேற்குறித்த பழமொழி எடுத்துரைக்கின்றது.
நோயுற்றவன் கையும் சும்மா
சிலர் அமைதியாகவே இருக்க மாட்டார்கள். எதையாவது செய்து கொண்டே இருப்பர். அவர்களது கையானது பரபரத்துக் கொண்டே இருக்கும். அவரால் கைகளை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. இவர்களின் பண்பினை விளக்கும் வகையில்,
‘‘செரங்கு புடுச்சவன் கையும்
அறுவாப் புடுச்சவன் கையும் சும்மா இருக்காது’’
என்ற பழமொழி அமைந்துள்ளது.
கையில் சிரங்கு (புண்) வந்தவன் சொரிந்து கொண்டே இருப்பான். அவனால் சொரிவதை நிறுத்த முடியாது. அவனுக்குச் சொரியச் சொரிய இன்பமாக இருப்பதால் அவன் கைகள் சொரிந்து கொண்டே இருக்கும். அதுபோன்று கையில் அரிவாள் வைத்திருப்பவன் எதையாவது வெட்டியோ, கொத்தியோ, அறுத்துக் கொண்டோ இருப்பான். இத்தகைய தன்மை கொண்டவர்களாக சிலர் உலாவருவதை நாம் அன்றாட வாழ்வில் பார்க்கலாம். எப்போதும் எதையாவது செய்து கொண்டிருக்கும் பண்பினை உடையவர்களின் நிலையையே இப்பழமொழி எடுத்துரைக்கின்றது.
பம்மாத்தும் பணியாரமும்
சிலர் அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று கூறுவார்களே தவிர எந்தச் செயலையும் செய்ய மாட்டார்கள். காரணம் கேட்டால் எதையாவது கூறுவர். ஒருவர் ஒரு நண்பருடைய வீட்டிற்குச் சென்றார். அவரைப் பார்த்த நண்பர், ‘‘அடடே வாங்க வாங்க. உட்காருங்க’’ என்று கூறிவிட்டு, ‘‘அப்புறம் என்ன சாப்பிடுறீங்க. மோரு, டீ, காபி, கூல்டிரிங்ஸ் என்று அடுக்கிக் கொண்டே செல்வார்.
ஆனால் எதையும் அவர் வாங்கிக் கொண்டு வந்து கொடுக்க மாட்டார். வீட்டிலுள்ளவரிடம் ‘டேய் போய் வாங்கிட்டு வா’ என்று கூறிக்கொண்டே இருப்பார்.
நண்பரோ, ‘அதெல்லாம் வேண்டாங்க... ஒண்ணும் வேண்டாம் இங்க வாங்க’ என்பார். அதற்கு அவரோ, ‘நீங்க சும்மா இருங்க’ என்று சொல்லிக் கொண்டே வாங்கிவருமாறு அடுத்தவரை போ போ என்று கூறிக்கொண்டே இருப்பார்.
கடைக்குப் போகக் கூடியவரோ இடத்தைவிட்டு நகராமலேயே இதோ, இதோ என்று கூறிக்கொண்டே இருப்பார். இத்தகைய செயல்பாட்டையே பம்மாத்து என்பர்.
செயலைச் செய்யாது செய்வது போல் நடிப்பதையும் பம்மாத்து என்பர். இத்தகையவர்களின் பண்பினை விளக்குவதைப் போன்று,
‘‘பம்மாத்துக்கார அம்மா
ரெண்டு பணியாரம் தாரேன் சும்மா’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
சும்மா என்பதை நாம் சும்மாவாக நினைத்துக் கொண்டே இருக்கின்றோம். ஆனால் அச்சொல் பல்வேறுவிதமான செய்திகளையும் மக்களின் பண்புகளையும் விளக்கும் சொல்லாக அமைந்துள்ளது. மேலும் எவ்வாறு வாழ வேண்டும் என்ற வாழ்வியல் நெறியையும் எடுத்துரைப்பதாகவும் இச்சொல் அமைந்திருப்பதும் சுகமாக என்ற வேறொரு பொருளைத் தருவதும் நோக்கத்தக்கது. சும்மா இராது உழைத்து சுகமாக வாழ்வோம். வாழ்க்கை வளமாக அமையும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|