பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
முனைவர் சி. சேதுராமன்
35. ஈகை (கொடுத்தல்)
மனிதர்கள் ஒன்று சேர்ந்து வாழ்வதுதான் வாழ்க்கை. அவ்வாறு வாழ்கின்ற மனிதர்களையே உலகம் போற்றும். அதனால்தான் மனிதனைச் சமுதாய விலங்கு என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். மனிதர்கள் தாமும் மகிழ்ந்து பிறரையும் மகிழச் செய்து வாழ வேண்டும். அதுவே சிறந்த வாழ்க்கை ஆகும். பிறருடன் இருப்பதைப் பகிர்ந்து கொண்டு வாழும் வாழ்க்கை உயர்வானதாகும். அவ்வாறு வாழ்வதில் சிறப்பு உண்டு. பிறர்க்குக் கொடுத்துச் சேர்ந்து மகிழ்ந்து வாழும் வாழ்க்கையை ஈகை வாழ்வு என்றும் அற வாழ்வு என்றும் நம்முன்னோர்கள் குறிப்பிட்டனர். பிறர்க்குக்கொடுத்து வாழும் ஈகை வாழ்க்கையைக் குறித்து நம்முன்னோர்கள் பழமொழிகள் வாயிலாகக் கூறியுள்ளனர்.
இடுதல்
பிறர்க்கு உதவுதலை இடுதல் என்று வழக்கில் வழங்குவர். இடுதல் என்பது கொடுத்தல் என்று வழங்கப்படுகின்றது. இதனை,
‘‘சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவார் நெறிமுறையில் இட்டார்
பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி’’
என்று ஔவையார்
(இடுதல் – கொடுத்தல் – இட்டார் – கொடுப்போர்) பற்றிக் குறிப்பிடுவது நோக்குதற்குரியதாகும்.
தன்னை நாடிவரும் வறியவர்க்கு ஒன்றைக் கொடுப்பதாலேயே ஒருவருக்கு நற்புகழ் உண்டாகும். அவரையே உலகோர் கொண்டாடுவர். தன்னை நாடி வருபவர்களுக்கு எவன் ஒருவன் எதுவும் கொடாது மனம் வருந்தப் பேசி இழிவுபடுத்தி அவர்களை அனுப்புகின்றானோ அவனை உலகம் தூற்றும். அதனால் தன் பெயருக்குப் புகழ் விரும்புவோர் இல்லை என்பார்க்கு ஈந்து நற்புகழினை ஈட்ட வேண்டும். இத்தகைய வாழ்வியற் பண்பினை,
‘‘இட்டுப் பேர்படணும் இல்லாட்டி
இடாது பேர்ப்படணும்’’
(இடுதல் – கொடுத்தல், இடாதல்- கொடுக்காமலிருத்தல்)
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
கொடுப்பவனும் கிணறும்
கிணற்றில் உள்ள நீரை எடுத்துப் பயன்படுத்தினால்தான் அக்கிணறு ஊறும். பயன்கொடுக்கும். அக்கிணற்றைப் பயன்படுத்தாது போனால் தூர்ந்து அழிந்துவிடும். அதுபோன்றே செல்வமும் கொடுக்கக் கொடுக்கவே வளரும் இல்லையெனில் அது தேய்ந்து அழிந்து விடும். அதனால் பிறருக்குக் கொடுத்து வாழ்தல் சாலச் சிறந்ததாகும் என்பதை,
‘‘எறைக்கிற கெணறுதான் உறும்’’
என்ற பழமொழி தெளிவுறுத்துகின்றது.
இட்டுக் கெடுபவர் உண்டா?
பிறர்க்கு ஈவதால் வாழ்க்கைக் கெட்டுப் போய்விடுமே! தனக்கு மிஞ்சித்தானே தானம் செய்ய வேண்டும்’ என்றெல்லாம் சிலர் கருதுவர். இடாமல் பொருளை வைத்து இறந்தவரே பலராவர். இட்டு அழிந்தாலும், ‘‘கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தருவதைப் போன்று அவர்களின் புகழ் உலகில் நிலைத்திருக்கும் அதனால் அழிவு வந்தாலும் பிறர்க்கு ஈவதே உயர்வானதாகும் என்பதை,
‘‘தொட்டுக் கெட்டவன் ஒருத்தன்
தொடாமல் கெட்டவன் ஒருத்தன்
இட்டுக் கெட்டவன் ஒருத்தன்’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
இப்பழமொழியில் தொட்டுக் கெட்டவன் துச்சாதனன் ஆவான். இவன் பாஞ்சாலியைத் தொட்டு அவளை அவையில் துகில் உறிந்து இழிவுபடுத்தியதால் அழிந்தான். அதுபோன்று அவனைச் சார்ந்தோரும் அழிவுற்றனர். அவனுக்கு உதவியோர் அனைவரும் மாண்டொழிந்தனர். இதனையே தொட்டுக் கெட்டவன் என்ற பழமொழித் தொடர் குறிப்பிடுகின்றது. இதற்கு, மதுவைத் தொட்டவன் கெட்டான் என்ற வேறொரு பொருளும் உண்டு. மது தன்னைத் தொட்டவனையும் அவனது குடும்பத்தாரையும் அழித்தொழித்துவிடும் தன்மை கொண்டது என்ற கருத்தை உள்ளீடாகக் கொண்டு இப்பழமொழித் தொடர் அமைந்துள்ளது.
தொடாமல் கெட்டவன் இராவணன் ஆவான். இவன் சீதையைத் தொடாமல் பர்ணசாலையோடு தூக்கி வந்து சிறைவைத்துத் தன் ஆசைக்கு சீதையை இணங்குமாறு கூறினான். ஆனால் சீதை மறுத்தாள். சீதையை மீட்க இராமன் படைகொண்டு வந்து இராவணனையும் அவனது குலத்தோரையும் அழித்தான். இதனையே பழமொழியின் இரண்டாவது வரி தெளிவுறுத்துகின்றது.
பழமொழியின் மூன்றாவது வரியானது இட்டுக் கெட்டவன் என்பது கர்ணனைக் குறிக்கின்றது. தன்னுடைய உடலுடன் ஒட்டிப் பிறந்த கவச குண்டலத்தை அந்தணன் வடிவில் வந்து தன் மகன் அருச்சுனனைக் காப்பதற்காக இந்திரன் யாசகம் கேட்டபோது கர்ணன் வந்திருப்பது தேவர்களின் தலைவன் என்பதையும், கவச குண்டலத்தைக் கொடுத்தால் தான் இறந்துவிடுவோம் என்பதையும் அறிந்திருந்தும் அதனை அறுத்தெடுத்துக் கொடுத்தான். கர்ணனைச் சூரியபகவான் தடுத்தும் கேளாது கொடுத்து தன் அழிவுக்குத் தானே வழியைத் தேடிக் கொண்டான்.
போர்க்களத்தில் அருச்சுனனால் கர்ணன் வீழ்ந்து கிடக்கும்போது அவனது உயிர் போகாது கர்ணன் செய்த தான தர்மங்கள் அவனைக் காத்தன. அதனைக் கண்ட அருச்சுனன் கண்ணனைப் பார்த்து, ‘‘கண்ணா நான் எவ்வளவுதான் அம்பெய்தும் கர்ணனுடைய உயிரைப் போக்க முடியவில்லையே! என்ன செய்வது என்று சோர்வடைந்தான். அவனது சோர்வைக் கண்ட கண்ணபிரான், கர்ணனுடைய உயிரை அவன் செய்த தர்மங்கள் காத்துக் கொண்டு உள்ளன. அத்தர்மம் அவனை விட்டுப் போய்விட்டால் அவன் இறந்துவிடுவான். நான் சென்று அதனை வாங்கி வருகின்றேன் என்று கூறிவிட்டு வயது முதிர்ந்த அந்தண வடிவில் சென்று கர்ணனிடம் யாசித்தான். இறக்கும் நிலையிலிருந்த கர்ணன் வந்தது யார் என்று அறியாமலேயே ‘‘ஐயா என்னிடம் என்ன இருக்கின்றதோ அதனைக் கேளுங்கள் நான் தருகின்றேன். என்னிடம் தங்களுக்கு என்ன வேண்டும்’’ என்று கேட்டான். அதற்கு கண்ணபிரான், ‘‘கர்ணா எனக்கு நீ செய்த புண்ணியம் யாவும் வேண்டும். அதனைத் தருவாயா?’’ என்று கேட்டவுடன் கர்ணன் மகிழ்வுடன் அதனைக் கொடுத்தான். அதனை வாங்கிக் கொண்ட கண்ணன் தன் சுயவடிவினைக் கர்ணனுக்குக் காட்டி கர்ணா உனக்கு என்ன வேண்டுமோ கேட்பாயாக! என்றுகூற கர்ணனோ, ‘‘தெய்வத்திடம் வேண்டிக் கேட்பர். ஆனால் என்னிடமே தெய்வம் வந்து என்ன வேண்டும் என்று கேட்கின்றது. ஐயனே இனியொரு பிறப்பு எனக்கு இருந்தால் இல்லையென்று என்னிடம் வருவோர்க்கு இல்லை என்று கூறாத இதயத்தை எனக்குத் தர வேண்டும்” என்று கேட்டான். அதனை கண்ணபிரான் மகிழ்வுடன் கொடுத்தார். பின்னர் அருச்சுனன் அம்பெய்து கர்ணனைக் கொன்றான்.
இங்ஙனம் கேட்டவற்றை எல்லாம் பிறருக்காகக் கொடுத்துக் கொடுத்துத் தான் அழியப் போகின்றோம் என்று அறிந்தும் இடுவதால் ஏற்பட்ட அழிவை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டான். அவனது ஊனுடம்பு அழிந்தது. ஆனால் அவனது புகழுடம்பு அழியவில்லை. இதனையே மேற்குறிப்பிட்ட பழமொழியின் மூன்றாவது வரியானது தெளிவுறுத்துகின்றது. இப்பழமொழி,
‘‘மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று’’
என்ற குறட்பாவின் வரியை நினைவுறுத்துவதாக உள்ளது.
எட்டியும் ஈயாதாரும்
எட்டி என்பது காஞ்சிரங்காய் ஆகும். இது விஷத்தன்மை வாய்ந்தது. இதனுடைய அனைத்துப் பாகங்களும் விஷத்தன்மை வாய்ந்ததாக இருக்கும். அதனால் இதனை ஆடுமாடுகளோ மனிதர்களோ நாடமாட்டார்கள். இம்மரத்தில் பறவைகளும் கூடுகட்டாது. இம்மரத்தைப் போன்றவர்களே ஈயாதவர்கள் ஆவர். இவர்கள் கையில் ஏற்பட்ட காயத்தில் வைப்பதற்குச் சிறிது சுண்ணாம்பு வேண்டும் என்றாலும் அவர்கள் தரமாட்டார்கள். பிறருக்கு எதனையும் கொடுக்கமாட்டார்கள். இவர்கள் வாழ்ந்தாலும் பிறருக்குப் பயன்படாது நிற்கும் எட்டி மரத்திற்குச் சமமானவர்கள். இவர்களது இத்தகைய ஈயாத தன்மையை,
‘‘எட்டி பழுத்தால் என்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?’’
என்ற பழமொழி தெளிவுறுத்துகின்றது.
எட்டி(காஞ்சிரங்காய்) பழுத்தால் எதற்கும், யாருக்கும் பயன்படாது. பிறர்க்குக் கொடுத்து வாழாதவர்கள் எவ்வளவு செல்வத்துடன் வாழ்ந்தாலும் அவர்கள் வாழும் வாழ்க்கை பயனற்ற வாழ்க்கையாகும். அதனால் யாருக்கும் பயனில்லை என்ற கருத்தினை எடுத்துரைத்து அனைவரும் பிறருக்குக் கொடுத்து வாழ வேண்டும் என்று அறிவுறுத்துகின்றது.
பகிர்ந்து கொடுத்து வாழ்தல்
தனக்குக் கிடைத்த பொருளைப் பிறருக்குப் பகிர்ந்து கொடுத்து வாழ்வதே மிகச் சிறந்த வாழ்வாகும். தான் மட்டும் உண்டு பிறர் பசித்திருக்கப் பார்த்திருத்தல் கூடாது. பிறரும் தாமும் உண்டு வாழ்ந்தால் மகிழ்ச்சி எங்கும் தங்கும். இத்தகைய வாழ்வியல் நெறியை அனைவரும் கடைபிடித்து வாழ வேண்டும் என்பதை,
‘‘பங்கித் தின்னா பசியாரும்’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. தனாகவே எதையும் உண்டால் அதில் மகிழ்ச்சி கிட்டாது. பிறரும் தாமும் உண்டு வாழ்ந்தால்தான் மகிழ்ச்சி தங்கும். இல்லையெனில் தாம் மட்டும் உண்ணும் சுயநலக்காரன் கெட்டழிந்து போகும் நிலை ஏற்படும் என்பதை,
‘‘தானத் தின்னு வீணாப் போகாதே’’
என்னும் முதுமொழி நமக்குத் தெளிவுறுத்துகின்றது.
யாரிடம் பொருள், உதவி கேட்பது?
ஈயாதாரிடம் சென்று பொருளோ, உதவியோ கேட்டால் அது கிடைக்காது. அப்படியெனில் யாரிடம் சென்று பொருள் கேட்பது? என்ற வினா எழும். அதற்கு நமது முன்னோர்கள்,
‘‘உண்ணு களித்தவனிடம் உணவிற்குப் போ
உடுத்திக் களித்தவனிடம் உடைக்குப் போ’’
என்று பழமொழி வாயிலாகக் கூறியுள்ளனர்.
பலவிதமான உணவினை நன்கு உண்டு மகிழ்ந்தவனே பசியுடன் வருபவருக்கு உணவிடுவான். பசியால் வாடி உணவினை உண்டு வாழ்கின்றவன்தான் பிறர் பசியறிந்து உணவிடுவான். அதனால்தான் உண்டு மகிழ்வாக இருப்பவனிடம் உணவிற்குச் செல்ல வேண்டும் என்று பழமொழி இயம்புகின்றது. மேலும் நல்லுடைகளை உடுத்தி அனுபவித்து மகிழ்ந்தவன் பிறர் உடை கேட்கும்போது உடை கொடுப்பான். உடுத்தி மகிழாதவன் நாம் ஏன் மற்றவருக்குக் கொடுக்க வேண்டும் என்று கருதி கொடுக்க மாட்டான். அதனால்தான் நன்கு உடுத்தி வாழ்ந்தவனிடம் உடைகேட்டுச் செல்ல வேண்டும் என்று இப்பழமொழி அறிவுறுத்துகின்றது.
பிறருக்குக் கொடுத்துத் தாமும் உண்டு மகிழ்வுடன் வாழ்க்கை நடத்துவதே உண்மையான வாழ்க்கையாகும். அத்தகைய கொடுத்து வாழ்கின்ற வாழ்க்கையை வாழ்ந்து மகிழ்ச்சியடைவோம். பிறரையும் மகிழ்ச்சியடையச் செய்வோம். வாழ்க்கை வசந்தமாக இருக்கும். வாழ்நாள் வசந்தமடைவதுடன் நம்வசமும் ஆகும். இட்டு இன்பமுடன் இகத்தில் வாழ்வோம். வாழ்வில் மகிழ்வோம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.