பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
முனைவர் சி. சேதுராமன்
34. திசைகள்
திசைகள் நான்கு. கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்பவை அவை. இவற்றுடன், வட கிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு என்ற நான்கையும் சேர்த்துத் திசைகளை எட்டு என்றும் கூறுவர். இத்திசைகள பூமியை தெற்கு வடக்காகவும், கிழக்கு மேற்காகவும் பிரிக்கின்றன. ஒவ்வொரு திசையிலும் ஒவ்வொரு நாடு இருக்கின்றது. ஒவ்வொரு திசைக்கும் ஒரு தனித்துவம் உண்டு. இத்திசைகளை வைத்து பலவிதமான பழமொழிகள் வழங்கப்படுகின்றன. இப்பழமொழிகள் மக்களின் வாழ்வியல் நம்பிக்கையை விளக்குகின்ற வகையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கும்மேற்கும்
சூரியன் உதிப்பது கிழக்குத் திசையாகும். மறைவது மேற்குத் திசையாகும். சூரியன் உண்மையிலேயே உதிப்பதும் இல்லை மறைவதும் இல்லை என்பதே உண்மையான அறிவியல் கூறும் கருத்தாகும். சூரியன் ஒரே நிலையில் நிற்கின்றது. பூமியே தன்னைத்தானே சுற்றிக் கொண்டும் சூரியனையும் சுற்றி வருகிறது. இதனால்தான் நமக்கு இரவு பகல் ஏற்படுகின்றது. சூரியன் தெரியும்போது அதனை உதயமாகிவிட்டது என்றும் சூரியன் இல்லாத போது அது மறைந்து விட்டது என்றும் மக்கள் கருதுகின்றனர்.
சிலர் தங்களது கருத்தையோ அல்லது கொள்கையையோ அல்லது ஏதேனும் ஒன்றைப் பற்றிக் கூறும்போது ஆணையிடுவர். இதனைச் சபதம் என்று வழக்கில் குறிப்பிடுவர். அவ்வாறு குறிப்பிடும்போது,
‘‘கிழக்கே உதிக்கிற சூரியன் மேற்கே உதிச்சாலும் அந்த இடத்திற்கு வரமாட்டேன்’’ என்று கூறுவர். இது அனைத்துத் தரப்பினரும் குறிப்பிடும் கருத்தாகும். இது உலகில் நடைபெறாத ஒன்று. அவ்வாறு உலகில் நிகழாத ஒன்றை குறிப்பிடும்போது இவ்வாறு மக்கள் பேசுவர். இக்கிழக்கு சூரியன் உதிக்கும் திசை என்பது காலங்காலமாக மக்களிடையே வழங்கப்பட்டு வருவதும் நோக்கத்தக்கது.
இக்கிழக்குத் திசையையும் மேற்குத் திசையையும் சிலர் பார்ப்பர். பலர் பார்க்க மாட்டார்கள். கூத்தாடும் நடிகர்களும், கூலி வேலை செய்பவர்களும் இவ்வாறு இரு திசைகளையும் பார்ப்பர். இதனை,
‘‘கூத்தாடி கிழக்கே பார்ப்பான்
கூலிக்காரன் மேற்கே பார்ப்பான்’’
என்ற பழமொழிகள் தெளிவுறுத்துகின்றன.
இரவு பத்துமணிக்கு நாடகத்தில் நடிக்கும் நடிகர்கள் விடிய விடிய நடிப்பார்கள். சூரியன் உதயமாகும்பொழுது நாடகம் முடிந்திருக்கும். விடிந்தவுடன் நடிகர்கள் அனைவரும் நாடகத்தை முடித்துக் கொண்டு தங்களது ஊர்களுக்குச் சென்றுவிடுவர். பொழுதுவிடியாதா என்று கிழக்குத் திசையையே நாடக நடிகர்கள் பார்த்துக் கொண்டிருப்பர். நாடகத்தை மக்கள் வழக்கில் கூத்து என்று குறிப்பிடுவர். அக்கூத்தில் நடிப்பவரைக் கூத்தாடி, கூத்தர் என்று வழங்குவர்.
வயலிலோ அல்லது வீடுகளிலோ வேலை செய்பவரைக் கூலிக்கு வேலை பார்ப்பவர் என்பர். கூலிக்கு வேலை செய்பவரையே கூலிக்காரன் என்று வழக்கில் குறிப்பிடுவர். இவர்கள் எப்போது சூரியன் மறையும் என்று மேற்குத் திசையையே பார்த்துக் கொண்டு வேலை செய்வர். சூரியன் மறைந்தவுடன் தங்களது வேலையை முடித்துக் கொண்டு கூலியை வாங்கிக் கொண்டு வீட்டிற்குச் சென்றுவிடுவர். இங்ஙனம் நடிகர்கள், கூலித்தொழிலாளர் ஆகியோரின் செயல்பாட்டினை விளக்குவதாக இப்பழமொழி அமைந்துள்ளது.
கிழக்கே வில்
மழை பெய்யும்போது கிழக்குத் திசையில் வானவில் தோன்றும். இதனை இந்திர வில் என்று மக்கள் குறிப்பிடுவர். இது பெரும்பாலும் கிழக்குத்திசையில் தோன்றும். ஒருசில நிமிடங்கள் இது நீடிக்கும். இவ்வாறு வானவில் தோன்றினால் நிலத்தில் நல்ல மழைபெய்து மழைநீர் கரைபுரண்டு ஓடும் என்பது மக்களின் நம்பிக்கை. இந்நம்பிக்கையினை,
‘‘கிழக்கே வில்லுப்போட்டா கீழ்வெள்ளம் வரும்’’
என்ற பழமொழி தெளிவுறுததுகிறது. இங்குகீழ் என்பது தரையை அதாவது நிலத்தைக் குறித்து வந்த சொல்லாகும். தரையில் நீரோட நன்கு மழைபொழியும் என்பதே இப்பழமொழியின் பொருளாகும்.
வடக்குத் திசை
வடக்குத் திசையைப் புண்ணிய திசை என்று மக்கள் கருதுகின்றனர். ஏனெனில் முக்தித் தலம் என்று வழங்கப்படக் கூடிய காசி வடக்குத் திசையில் இருப்பதால் மக்கள் அவ்வாறு நம்புகின்றனர். அதுமட்டுமல்லாது வட திசையை நோக்கி்த் தலையை வைத்துப் படுத்தல் கூடாது. வடக்குத் திசையில் காந்தப்புல ஆற்றல் மிகுதியாகும். நாம் தலைவைத்துப் படுக்கும்போது நம் உடலில் உள்ள காந்த ஆற்றலும் வடதிசையில் உள்ள காந்த ஆற்றலும் இணையும்போது உடலில் தேவையில்லாத நோய்கள் வருவதற்கு ஏதுவாகிவிடும். காந்தப்புல எதிர்ப்பு விளைவுகளில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காகவே நமது பெரியோர்கள் வடதிசையில் தலைவைத்துப் படுக்கக் கூடாது என்றனர். இதனை,
‘‘வாராத வாழ்வு வந்தாலும் வடக்கே தலைவைத்துப் படுக்காதே’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
பிணமாக இருந்தாலும் மக்கள் வடதிசையினைப் பார்த்து தலையை வைத்துப் புதைக்க மாட்டார்கள். நமது தலையானது தென்துருவம் போன்றது. வடதிசை வடதுருவம் போன்றது. அதனால்தான் இரு துருவங்களும் சந்திக்காது. அவ்வாறு சந்தித்தாலும் பல்வேறு விரும்பத்தகாத உடல் உபாதைகள் ஏற்படும் என்பதை உணர்ந்தே நமது முன்னோர்கள் வடதிசையில் தலைவைத்துப் படுக்கக் கூடாது என்றனர். இது நமது வாழ்வை வளமாக்கும் பண்பாட்டு மொழியாகும்.
வடதிசையும் வாஸ்தும்
நமது முன்னோர்கள் வீடு கட்டும்போது வாஸ்து சாஸ்திரம் பார்ப்பது இல்லை. மாறாக மனையடி சாஸ்திரம் மட்டுமே பார்த்து வீட்டைக் கட்டுவர். ஆனால் தற்போது அனைத்துத் தரப்பினரும் வாஸ்து நிபுணரை அழைத்து வந்து அவர் எவ்வாறு கூறுகிறாரோ அவ்வண்ணமே வீட்டைக் கட்டுகின்றனர். ஆனால் ஒவ்வொருவருடைய இராசிக்கும் ஒவ்வொரு திசை பொருத்தமானதாக அமையும். அதற்கேற்றாற் போன்றே வீட்டைக் கட்டுதல் வேண்டும். அதிலும் வடக்குப் பார்த்திருக்கும் வீட்டிற்கு வாஸ்து சாஸ்திரம் பார்க்க வேண்டியதில்லை என்று நமது பெரியோர்கள் கூறுவர். ஏனெனில் காசி, கைலாயம் உள்ளிட்ட சிவஸ்தலங்கள் அனைத்தும் வடக்கே உள்ளதால் சிவனின் அருட்பார்வை வடக்குப் பார்த்த வீட்டிற்கு உண்டு என்று நமது முன்னோர்கள் நம்பியதால் வடக்குப் பார்த்த வீட்டிற்கு வாஸ்து சாஸ்திரம் பார்க்கத் தேவையில்லை என்று கூறினர் போலும். இதனை,
‘‘வடக்கே பார்த்த வீட்டுக்கு வாஸ்த்துப் பார்க்கத் தேவையில்லை’’
என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது. இப்பழமொழி மக்களின் ஜோதிட நம்பிக்கையை உள்ளடக்கியதாக அமைந்திருப்பது நோக்கத்தக்கது.
இங்ஙனம் நான்கு திசைகளைக் குறித்து வழங்கப்படும் பழமொழிகள் மாந்தர்களின் வேலைக்கேற்ற குணநலன்களை விளக்குவதுடன் முன்னோர்களின் அறிவியல் சார்ந்த அறிவை வெளிப்படுத்தும் வகையிலும் அமைந்திருப்பது சிறப்பிற்குரியதாகும். முன்னோர்கள் நமது உடல்நலத்தில் அக்கறை கொண்டு பழமொழிகள் வாயிலாகத் தமக்குப் பின்வரும் சந்ததியினர் நற்பழக்க வழக்கங்களை கடைபிடித்து வாழ வேண்டும் என்ற அடிப்படையிலேயே அரிய கருத்துக்களைக் கூறிச் சென்றுள்ளனர். நமது முன்னோர்கள் வழியைப் பின்பற்றி உடல் நலத்துடன் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து மகிழ்வுறுவோம். வாழ்வு வளமடையும். மனது நிறைவடையும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.