பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
முனைவர் சி. சேதுராமன்
62. கணவன் மனைவி
மனமொன்றிய கணவன் மனைவியின் வாழ்க்கையே சிறந்த வாழ்க்கையாகும், அதிலும் ஒத்த அன்புடையவர்களின் இல்லறம் நல்லறமாக விளங்கும் அவர்களின் வாழ்க்கை எல்லாவிதத்திலும் உயர்ந்ததாக அமையும். கணவன் மனைவி இருவரும் பேருக்கு வாழாமல் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்வது வாழ்க்கையைச் சொர்க்கமாக்கும்.
மேலும் உறவுகளில் உன்னதமானது கணவன் மனைவி உறவு, ஆயிரம் உறவுகள் வரலாம்; போகலாம். ஆனால், கணவன் மனைவி உறவு என்பது புனிதமானதும், இறுதிவரை தொடர்ந்து வருவதும் ஆகும். இத்தகைய உறவுகளின் தன்மை குறித்துப் பழமொழிகள் வாயிலாக நம் முன்னோர்கள் சிறப்புற பல்வேறு கருத்துக்களைச் சுவைபடக் கூறிச் சென்றுள்ளனர்.
கணவன் - மனைவி
கணவனை நடைமுறையில் புருஷன், கொண்டவன், வீட்டுக்காரன் என்றும், மனைவியைப் பெண்டாட்டி, இல்லாள், தாரம், வீட்டுக்காரி என்றும் குறிப்பிடுவர். கணவனும் மனைவியும் ஒற்றுமையுடன் இணைந்து வாழ்ந்தால்தான் அவர்களைச் சமுதாயம் மதிக்கும். இல்லையெனில், அவர்களை இழிவாகக் கருதி ஒதுக்கும், கைகொட்டிச் சிரிக்கும். அதனால்தான் கண்ணதாசனும்,
“புரிந்தவன் துணையாக வேண்டும்”
என்று தெளிவுறுத்துகிறார்.
கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்க்கை நடத்துதல் வேண்டும். இருவரில் ஒருவர் பிரிந்தோ, தனித்தோ வாழ்ந்தால் அவர்களை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள், மனைவி தனித்துக் கணவனை விட்டுப் பிரிந்து வாழ்ந்தால் அவளை வாழாவெட்டி என்றும் வாழ்க்கையை வாழத் தெரியாதவள் என்றும் கூறி ஏளனம் செய்வார்கள்.
இல்லத்தில் கணவன் ஒழுங்கானவனாகவும், நேர்மையானவனாகவும் இருந்தால் மட்டுமே வாழ்க்கை சிறக்கும். மனைவியும் மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் பிறர் போற்ற வாழ முடியும். மற்றவர்களோ பிற உறவுகளோ இழிவாக நடத்தும் போது அவர்களது தவறுகளை மன வலிமையுடன் சுட்டிக் காட்டி மனைவியானவள் பேசலாம். கணவன் இழிகுணக் கேடனாக இருந்தால் மனைவி அவமானப்படுவாள். மனஉறுதியுடன் அவளால் எதையும் செய்ய முடியாது. கணவன் குடும்பத்தில் நற்குணமுடையவனாகக் குடும்பத்தைக் காப்பவனாக இருத்தல் வேண்டும் என்பதை,
“கொண்டவன் சரியா இருந்தா
கூரை ஏறிச் சண்டைக்குப் போகலாம்”
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
கணவன் சரியாக அமையாத பெண்கள் வாழ்வில் துன்பங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதையும் இப்பழமொழி தெளிவுறுத்துகிறது. கொண்டவன் என்பது கணவனைக் குறிக்கும். கூரை ஏறி என்பது இழித்தும் பழித்தும் கூறுபவர்களை எதிர்த்து மனைவி பேசுவதைக் குறிக்கும் என்பதை இப்பழமொழி தெளிவுறுத்தியுள்ளது. கணவன் மனைவியை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்காத குணமுள்ளவனாக இருத்தல் வேண்டும். அப்போதுதான் மனைவி மகிழ்வுடன் இல்லறம் நடத்த இயலும் என்பதையும் இப்பழமொழி உள்ளீடாகக் கொண்டிலங்குகின்றது.
கள்வனும், புல்லனும்
தன்னை மணந்தவன் எத்தகையவன் ஆனாலும், அவனை மனைவி விட்டுக் கொடுக்க மாட்டாள். இது பெண்களின் இயல்பு. கிராமப்புறங்களில் இதனை நாம் கண்கூடாகக் காணலாம். கடுமையாக மனைவியைப் போட்டுத் தெருவில் அடித்துத் துன்புறுத்துவான். அவனைப் பிறர் அடிக்க முற்பட்டால் மனைவியானவள், “ஏம்புருஷன் என்னைய அடிப்பான் மிதிப்பான் அதக் கேக்குறதுக்கு நீ யாரு…? ஒன்னோட வேலையப் பாத்துக்கிட்டுப் போய்யா…?” என்று கூறிச் சண்டைக்கு வந்துவிடுவர். இத்தகைய பெண்களின் குணத்தை,
“கள்வனானாலும் கணவன் புல்லனானாலும் புருஷன்”
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
திருடனாகவோ, இழிவான குணகேடனாகவோ கணவன் இருந்தாலும் அவன் தன்னை மணந்து கொண்டவன் என்ற ஒரே காரணத்திற்காக மனைவியானவள் விட்டுக் கொடுக்க மாட்டாள். தன் கணவனை உயர்வாக மதிப்பாள் என்பதையே இப்பழமொழி நமக்குத் தெளிவுறுத்துகிறது. இப்பழமொழியையே,
“கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்”
என்று வேறு வகையாகவும் வழக்கில் வழங்குவர். இவ்வாறு கூறுவது சரியான பொருளைத் தராது. கள்வன் என்பதே கல்லானால் என்றும் புல்லன் என்பதே புல் என்றும் வழக்கில் மருவி வந்துள்ளது என்பது நோக்கத்தக்கது.
சிலப்பதிகாரக் கண்ணகி தன் கணவன் தன்னை விட்டுப் பிரிந்து மாதவியுடன் வாழ்ந்தாலும், பொருளை இழந்து வறியவனாகத் திரும்பி வந்த போதும் விட்டுக் கொடுக்காது அவனுடனேயே வாழ்ந்தாள். அவனது செயல்களுக்கு உறுதுணையாக இருந்தாள். அவனை உயர்வாக மதித்தாள். கள்வன் என்று மன்னன் கூறிய போதும் அதனை மறுத்து கணவன் கள்வன் அல்லன் என்று நிலைநிறுத்தினாள். இப்பழமொழிக்குச் சிலப்பதிகாரக்கதை உதாரணமாக அமைந்திலங்குவது குறிப்பிடத்தக்கது.
பிள்ளையும் புருஷனும்
குழந்தை பிறந்தவுடன் பெண்கள் உணவுப் பொருள்களை உண்ணும் போது கவனமாக இருத்தல் வேண்டும். அவ்வாறின்றி கண்ணில் பட்ட உணவுகளையெல்லாம் உண்டால் தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு வாந்தி, பேதி ஏற்பட்டுக் குழந்தையின் உயிருக்கு ஊறு நேர வாய்ப்பு ஏற்படும் என்பது முன்னோர்களின் கருத்தாகும். பலாப்பழம், மாம்பழம், முட்டை உள்ளிட்டவற்றை மிதமிஞ்சி உண்டால் குழந்தைக்கு வயிற்று வலியுடன் வயிற்றுப் போக்கும் ஏற்படும். அதனால்தான் வீட்டிலுள்ள வயதானவர்கள் பிள்ளை வேணுமின்னா வாயக்கட்டுடி என்று குழந்தை பெற்ற பெண்களிடம் கூறுவர்.
அதைப் போன்றே வீட்டில் இருக்கும் பெண்ணானவள் தன் கணவனை தேவையறிந்து அவனுக்கு உணவிட்டு அவன் நலத்தைப் பேண வேண்டும். உழைத்துக் களைத்து வீட்டிற்கு வரும் கணவனுக்குச் சரிவர உணவிடாது தான் மட்டும் உண்டு களிப்புறும் பெண்களால் கணவனின் உடல்நலமும் உளநலமும் பாதிக்கப்பட்டு அவன் பிணியாளனாகி விடுவான். அதனால் கணவனுக்கு நல்ல உணவிட்டு அவனது உடல்நலத்தைப் பேணுவதில் மனைவி கவனம் செலுத்த வேண்டும் என்பதை,
“வாயக்கட்டுனவளுக்குப் பிள்ளை: வயித்தக் கட்டுனவளுக்குப் புருஷன்”
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
கண்ணில் கண்ட உணவுப்பொருளையெல்லாம் கண்டு உண்ணுவதற்கு ஆசைப்படாத வாயை அடக்கியவளே குழந்தையை நன்கு வளர்க்க முடியும். இதற்கு தானே உண்ணாது குழந்தையையும் கவனித்து குழந்தைக்குத் தேவையானதைக் கொடுத்து வளர்த்தல் வேண்டும். கணவனைப் பட்டினி போடாது, அவனுக்கு உணவிட்டு அவனைப் பாதுகாத்தல் வேண்டும் என்பதைக் குறிப்பிட்டுக் குடும்ப நலம் பேணும் வகை நிலையை இப்பழமொழி எடுத்துரைக்கின்றது. குழந்தைகளை நிழல் என்பர்; கணவனை நிஜம் என்பர். நிஜம் நன்றாக இருந்தால்தால்தான் மற்றவை நலமாக இருக்க முடியும் என்பதையும் இப்பழமொழி குறிப்பிடுவது நோக்கத்தக்கது.
கழுத்துப் புருஷனும் வயிற்றுப் புருஷனும்
பொதுவாக ஆண்களை வடமொழியில் புருஷன் என்றே அழைப்பர். இது இன்றும் மக்கள் வழக்கில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. பொதுவாக ஆண்களைக் குறிக்க புருஷன் என்ற சொல் வழங்கப்பட்டாலும் பெரும்பான்மையாக ஒரு பெண்ணின் கணவனையே இச்சொல் அதிகம் குறிக்கின்றது.
கணவனை இழந்து துயரப்படும் பெண்ணைப் பார்த்து,
“கழுத்துப் புருஷன் போனா என்ன வயித்துப்
புருஷன்தான் இருக்கான்ல"
என்று ஆறுதல் கூறுவர். இது வழக்கில் வழங்கப்படும் தொடர் போன்று காணப்பட்டாலும், இது பெண்களுக்கு நம்பிக்கையூட்டும் நிலையில் அமைந்த பழமொழியே ஆகும்.
கணவன் இறந்து போனால் இடிந்து போய்விடாது தன்னை நம்பி இருக்கும் குழந்தைகளைக் கவனித்தல் வேண்டும். அதுவே அவளின் கடமையாகும் எனும் குடும்ப கடமையையும் அதேவேளையில், நம்பிக்கையையும் பெண்களுக்கு ஊட்டும் வகையில் இப்பழமொழி அமைந்துள்ளது. கணவன் இல்லையென்றாலும் அவள் வயிற்றில் பிறந்த ஆண் குழந்தை இருக்கின்ற போது அதனை வைத்து வாழ்க்கையை நடத்துதல் வேண்டும். கவலைப்படக் கூடாது என்ற நம்பிக்கையூட்டும் பண்பாட்டு நெறியை இப்பழமொழி வழங்குகிறது. பழமொழி வழி நடந்து பண்பாடு காத்து பாரில் நன்கு உயர்வோம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.