பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
முனைவர் சி. சேதுராமன்
61. வஞ்சனை
வாழ்க்கையில் பிறருக்கு எந்த நிலையிலும் நாம் தீங்கு செய்தல் கூடாது. பிறரை வஞ்சித்து அதன் மூலம் யாரும் எதையும் பெற முயற்சித்தலும் கூடாது. அவ்வாறு வஞ்சனையைச் செய்து வாழ்வது இழிந்த வாழ்க்கை ஆகும். பிறரை வஞ்சித்து வாழ்க்கை நடத்துபவர்களுடன் நாம் இணங்கி வாழ்வதும் கூடாது. அதனால்தான் நமது முன்னோர்கள்,
“வஞ்சனை செய்வாரோடு இணங்க வேண்டாம்”
என்று கூறினர். நம் முன்னோர்கள் பிறரை வஞ்சித்து வாழ்வோரைப் புழுவை விட இழிவானவராகக் கருதினர். அந்த வாழ்க்கை சிறப்பாக இருப்பதைப் போன்றிருந்தாலும் அஃது பின்னாளில் தீராத பழியையும் துன்பத்தையும் உண்டாக்கும். வஞ்சனை இன்றி நேர்மையாக வாழ்ந்து பிறரையும் வாழ வைக்க வேண்டும் என்பதை நமது பெரியோர்கள் பழமொழிகள் வாயிலாக எடுத்துரைத்துள்ளனர். அப்பழமொழிகள் வஞ்சனை செய்வோர் அடையும் இழிநிலையை எடுத்துரைப்பதுடன் நேரிய வழியில் வாழ்வதற்கும் வழிகாட்டுவனவாக உள்ளன.
நெஞ்சைக் கெடுக்கும்
தூய்மையான மனதை வஞ்சக எண்ணங்கள் சீர்குலைக்கின்றன. பிறரை மனதாலோ, உடலாலோ, எண்ணத்தாலோ, சொல்லாலோ, செயலாலோ வஞ்சித்தல் கூடாது. அது துரோகமாகும். நட்புறவை இவ்வஞ்சனையானது கெடுத்துவிடும். இவ்வஞ்சகத்தை மனதில் புக விடுதல் கூடாது. அவ்வாறு புக விட்டால் அவ்வஞ்சகமானது யாருடைய மனதினுள் புகுந்ததோ அவரது மனதைக் கெடுத்து வாழ்வைச் சீர்குலைக்கும், இதனை,
“வஞ்சகம் நெஞ்சைக் கெடுக்கும்
மகாதேவன் கண்ணைக் கெடுப்பான்”
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
தவறு செய்பவர்களை மகாதேவனாகிய சிவன் தண்டிப்பது போன்று பிறருக்கு உடலாலோ, உள்ளத்தாலோ, செயலாலோ வஞ்சனை செய்பவர்களை அவருடைய மனமே அழித்துவிடும் என்று இப்பழமொழி தெளிவுறுத்துகிறது.
ரெண்டகம் - பாதகம்
இவ்வஞ்சனையை ரெண்டகம் என்றும் பாதகம் என்றும் குறிப்பிடுவர். வெளியில் ஒன்றும் உள்ளத்தில் ஒன்றும் வைத்துக் கொண்டு செயல்படுவதையே ரெண்டகம் என்று மக்கள் குறிப்பிடுகின்றனர். அத்தகையோர் வெளிப்படையாக எதையும் கூற மாட்டார்கள். அவர்கள் நடித்துக் கொண்டு பிறரை வஞ்சம் தீர்ப்பர்.
நமக்கு உதவி செய்பவர்களுக்கு நாம் வஞ்சனை செய்தல் கூடாது. அது நன்றி கெட்ட செயலாகும். இவர்கள் பாம்பினும் கொடியவர்கள். இவர்களைப் பாவிகள் என்பர். நமக்கு உதவி செய்தவர்களுக்கோ, உணவிட்டவர்களுக்கோ நாம் எந்தவிதமான கெடுதலையும் செய்தல் கூடாது. அவ்வாறு செய்வது நேர்மைக்கும் நீதிக்கும் புறம்பான செயலாகும். இதனை,
“உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நெனைக்கக் கூடாது”
“பால் குடிச்ச வீட்டுக்குப் பாதகம் நெனைக்கக் கூடாது”
என்ற பழமொழிகள் தெளிவுறுத்துகின்றன.
சிலர் கூடவே இருந்து கொண்டு நமக்குக் கேடு விளைவிப்பர். அவ்வாறு இருப்பவர்களையே உண்ட வீட்டுக்கு வஞ்சனை செய்பவர்கள் என்பர். அது போன்றே பால் குடித்தல் என்பதுமாகும். சிலர் தங்களுக்குக் கேடு செய்பவர்களிடம் பாலைக் கொடுத்துப் பருக வைத்துப் பாலில் சத்தியம் வாங்கிவிடுவர். பாலில் சத்தியம் செய்யும் தீயவர்கள் பால் குடிக்கக் கொடுத்தவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்ய மாட்டார்கள். அஞ்சுவர்.
எந்த நிலையிலும் நமக்கு உதவியவர்களுக்கு நாம் தீங்கிழைத்தல் கூடாது என்பதையே இப்பழமொழிகள் நமக்கு அறிவுறுத்துகின்றன. அவ்வாறு செய்பவர்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாவார்கள். அதனைப் போன்றே நம்மை நம்பி இருக்கின்ற நண்பர்களிடம் மனதிற்குள் ஒன்றும் வெளியில் ஒன்றும் வைத்துப் பேசுதல் கூடாது என்பதையும் இப்பழமொழி நமக்குத் தெளிவுறுத்துவதாக அமைந்துள்ளது.
வஞ்சனை விடுத்து வளமான எண்ணத்தோடு நல வாழ்வு வாழ்ந்து, பிறரையும் வாழ வைப்போம். நம் வாழ்க்கை மட்டுமல்ல நம்மைச் சார்ந்தவர்களின் வாழ்க்கையும் செழிப்பாகும் என்பது திண்ணம். நெஞ்சத்தில் வஞ்சம் வைக்காது மலர் மணம் கமழும் நல்லெண்ணங்களை வைத்து மகிழ்வாக வாழ்வோம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.