பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
முனைவர் சி. சேதுராமன்
60. ஆண் - பெண்
ஆண் பெண் இருவரும் இணைந்ததே உலகம். இருவரில் ஒருவர் இல்லையெனில் உலகம் இல்லை. இவ்வாறிருக்கும் நிலையில் உலகில் அனைவரும் ஆண், பெண் வேறுபாடு பார்த்து அவர்களுக்கு உரிய உரிமைகளையும் வாழ்க்கையையும் நிர்ணயிக்கும் நிலை நிலவுவது வருந்துவதற்குரியதாகும். அதிலும் உலகில் ஆண், பெண் வேறுபாடு என்பது அதிகமாகக் காணப்படுகின்றது. ஆண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும், பெண் என்பவள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் சமுதாயம் வரையறை செய்கின்றது.
குழந்தை பிறந்த உடனேயே இத்தகையப் பாகுபாடு தொடங்கி விடுகின்றது. ஆண் குழந்தையை ஒரு மாதிரியாகவும், பெண் குழந்தையை ஒரு மாதிரியாகவும் வளர்க்கத் தொடங்கி விடுகின்றனர். பெண் என்பதாலேயே சமுதாயத்தில் இழிவுபடுத்தும் நிலை ஏற்படுகின்றது. இத்தகைய வேறுபாடு என்பது தொன்று தொட்டு மக்களிடையே நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறிருந்தாலும், நமது முன்னோர்கள் பெண்ணை உயர்வாகக் கருதி சமமாக நடத்துதல் வேண்டும் என்று வலியுறுத்தினர். அதிலும் பழமொழிகளில் சமுதாயத்தில் நிலவி வந்த வேறுபாடுகளை எடுத்துரைத்து ஆண், பெண் என்ற பேதம் நீக்கி அவர்களும் மனிதரில் ஒரு கூறு என்று கருதி மதிப்பளித்தல் வேண்டும் என்று நமது முன்னோர்கள் தெளிவுறுத்தியுள்ளனர்.
ஆண் பிள்ளை
வீட்டிலும் வெளியிலும் ஆண் பிள்ளைகளை உயர்வாகக் கருதும் பழக்கம் உள்ளது. ஆண் பிள்ளைகள் உடல் வலிமை வாய்ந்தவர்களாகவும், பெண் பிள்ளைகள் உடல் வலிமை குறைந்தவர்களாகவும் சமுதாயத்தில் உள்ள மக்களால் நினைக்கப்படுகின்றனர். ஆனால் அது மனதளவில் ஏற்பட்ட எண்ணக் குறைபாடு என்று நாம் கொள்ளலாம். பழங்காலத்தில் பெண் ஒரு புலியை முறத்தால் அடித்து விரட்டியதும், பெண்கள் போர்க்களத்திற்குச் சென்று போர் புரிந்ததும், இன்றும் பெண்கள் பல வீரச் செயல்களைச் செய்வதும் இவ்வெண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தெளிவுறுத்துகிறது. ஆண், பெண் உயர்வு தாழ்வு கற்பிக்கின்ற மனநிலையை,
“சாண் புள்ளயானாலும் ஆண் புள்ள இல்ல”
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
ஆண், பெண் என்ற பேதம் நீக்கி மக்கள் வாழ வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுவதாகவும் இப்பழமொழி அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆண் பிள்ளைகள்தான் சமுதாயத்தில் உயர்ந்தவர்கள், வலிமையானவர்கள் என்று எண்ணுகின்ற எண்ணத்தைக் கைவிடுதல் வேண்டும். அப்போதுதான் இச்சமுதாயம் முன்னேற்றம் காணும் என்ற எண்ணங்களையும் இப்பழமொழி நம்முள் விதைக்கின்றது.
ஆண் - பெண் வேறுபாடு
ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாம். பெண்கள் இப்படித்தான் வாழ வேண்டும் என்று பெண்களுக்கு மட்டும் பல கட்டுப்பாடுகளை இச்சமுதாயம் விதிக்கின்றது. இதனால் ஆண்கள் செய்யும் தவறுகளுக்கு இச்சமுதாயம் மறைமுகமாகத் துணைபோகின்றது. ஆண்கள் எத்தகைய தவறுகளையும் செய்வதற்குத் தகுதியுடையவர்கள் என்பதைப் போன்றதொரு மாயை சமுதாயத்தில் நிலவி வந்துள்ளதை,
“ஆம்பள ஆயிரங் குட்டிச் சொவரு தாண்டுவான்
பொம்பள தாண்ட முடியுமா?”
என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது.
ஆண் பலரோடு தவறாக உறவு வைத்துக் கொள்வதையும் பல தவறுகளைச் செய்யலாம் என்பதையும் இச் சமுதாயம் ஏற்றுக் கொண்டுள்ளதையும், பெண்கள் இவ்வாறெல்லாம் இருக்க முடியாது, அல்லது இருக்கக் கூடாது என்ற பேதத்தையும் கற்பித்து ஆண்களின் தவறான ஒழுக்கமற்ற செயல்களுக்கு உடந்தையாக இச்சமுதாயம் இன்றும் இருந்து வருகிறதென்பதை இப்பழமொழி நமக்கு எடுத்துரைப்பதாக அமைந்திருக்கின்றது. இத்தகைய மனநிலை மாறி ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அனைவரும் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற வாழ்வியல் நெறியை இப்பழமொழி நமக்கு மறைமுகமாக அளிப்பது குறிப்பிடத்தக்கது.
அது போன்றே சமுதாயத்தில் பலரும் கூடியிருக்கும் பொது இடத்தில் பெண்கள் சிரிக்கக் கூடாது. அவ்வாறு சிரித்தால் அவள் ஒழுக்கமற்றவள் என்று இச்சமுதாயம் கருதுகின்றது. இது இன்றுவரை மக்களிடையே வழக்கத்தில் இருந்து வருவது நோக்கத்தக்கது. இத்தகைய சமுதாய நிலையை,
“பொம்பள சிரிச்சாப் போச்சு பொகையில விரிச்சாப் போச்சு”
என்ற பழமொழி விளக்குகின்றது. ஆண்கள் எங்கு வேண்டுமானாலும் வாய்விட்டுச் சிரிக்கலாம். பெண்கள் சிரிக்கக் கூடாது. அவ்வாறு சிரித்தால் பெண் ஒழுக்கமற்றவள் என்று விதி எழுதப்படாத சமுதாயச் சட்டமாக மக்களால் கடைபிடிக்கப்பட்டு வருவது சமுதாயத்தின் சமமற்ற முறைமையைத் தெளிவுறுத்துகிறது. ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி வழங்கப்பட்டு வந்ததையும் இப்பழமொழி எடுத்துரைக்கின்றது. இந்நிலை மாற வேண்டும்.
புகையிலையை விரித்தால் அதன் காரத்தன்மை போய்விடும். அதுபோன்று பெண் சிரித்தால் அவள் ஒழுக்கம் சிதைந்து போய்விடும் என்று கருதுவது பெண்ணை அடக்கி ஆளும் ஆணாதிக்கத்தைக் காட்டுவதாக உள்ளது. இச்சமுதாயத்தில் பெண் எவ்வாறு மதிக்கப்பட்டாள் என்பதற்கு இப்பழமொழி சான்றாகவும் அமைந்துள்ளது. இவ்விழிநிலை நீக்கி ஆணுக்கும் பொதுவான விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படுதல் வேண்டும் என்ற எண்ணத்தையும் இப்பழமொழி நம்முள் விதைக்கின்றது.
அறிவு நிலையில் ஆண் - பெண்
வலிமை, ஒழுக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமல்லாமல் அறிவுநிலையிலும் பெண்ணைத் தாழ்நிலையிலேயே இச்சமுதாயம் வைத்திருந்தது. பெண், ஆணைவிட அறிவுநிலையில் குறைந்தவளாக உள்ளாள். அவளது சிந்தனைத் திறன் ஆண்களை விடக் குறைவானது என இச்சமுதாயம் நினைத்துக் கொண்டிருக்கின்றது. இத்தகைய பெண்ணை அடிமைப்படுத்தும் சமுதாயச் சிந்தனையை,
“பெண்புத்தி பின்புத்தி”
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
இங்கு புத்தி என்பது அறிவினைக் குறிக்கின்றது. பெண்ணின் அறிவு கடைப்பட்ட நிலையில் உள்ளது. பின்னால் வருவதைச் சிந்திக்கும் அறிவாற்றல் அவர்களுக்குக் கிடையாது. எதுவும் நடந்த பின்னர்தான் அவர்கள் தாங்கள் செய்த தவறினை உணர்ந்து வருந்துவார்கள். அனைத்தையும் ஆராய்ந்து முடிவெடுக்கும் திறன் அவர்களிடம் இல்லை என்ற சமுதாயத்தின் எண்ணத்தை வெளிப்படுத்துவதாக இப்பழமொழி அமைந்திருப்பது நோக்கத்தக்கது.
இஃது பொருத்தமான கூற்று அன்று. இன்று பெண்ணும், நன்கு சிந்தித்துத் தனது வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் நல்ல அறிவு சார்ந்த முடிவுகளை எடுக்கின்றனர். ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்ணை இழிவுபடுத்த வேண்டும் என்ற இழிவான நோக்கிலும், பெண்ணை அடிமைப்படுத்தி அடக்கி ஆள வேண்டும் என்ற நோக்கத்திலும்தான் இப்பழமொழி வழக்கில் வழங்கப்பட்டு வந்துள்ளது என்பது எண்ணத்தக்கது. இத்தகைய இழி நிலை மாற வேண்டும். அவ்வாறு மாறினால்தான் பெண்ணறிவு இச்சமுதாய முன்னேற்றத்திற்குப் பயன்படும்.
ஆண் - பெண் சமத்துவம்
சமுதாயத்தில் ஆண் பெண் இருவரும் இரு கண்களாவர். அவர்களுள் உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்பது கிடையாது. உயர்வு தாழ்வு கற்பிப்பது எண்ண நோயாகும். இவ்வெண்ணத்தை மாற்றுதல் வேண்டும். ஆணுக்குள்ள உரிமையும் பெண்ணுக்கும் உண்டு என்று அனைத்துத் தரப்பினரும் உணர்தல் வேண்டும்.
அதை விடுத்து பெண்ணிற்கு மட்டும் விதிகளைவிதித்து அவளைக் கட்டுப்படுத்தி அடிமைப்படுத்த நினைப்பது சமுதாய முன்னேற்றத்திற்கு இடப்படும் தடைக்கல்லாகும். இத்தகைய தடையை உடைத்தெறிந்து பெண்ணின் அறிவையும் அவளது வலிமையையும் சமுதாயம் பயன்படுத்திக் கொண்டு முன்னேற்றம் அடைதல் வேண்டும் என்ற கருத்தை,
“ஆம்பளக்கி மொகத்துல முடின்னா (மசுருன்னா)
பொம்பளக்கி கெண்டக்கால்ல முடி (மசுரு)”
என்ற பழமொழி வலியுறுத்துகிறது.
எந்த நடைமுறையாக இருந்தாலும் அதனை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாக வைத்தல் வேண்டும் என்ற உயர் நெறியை இப்பழமொழி நமக்கு வழங்குகின்றது. உருவத்தாலோ, அறிவாலோ அல்லது வலிமையாலோ பெண், ஆணை விடக் குறைவானவள் அல்ல. ஆணும் பெண்ணும் சமம் என்பதை இப்பழமொழி வலியுறுத்துகிறது. ஆணுக்கு முகத்தில் மீசை இருப்பதால் அவன் அனைத்திலும் உயர்ந்தவன் என்று கருதிவிட முடியாது. ஆணுக்கு முகத்தில் இருந்தால் பெண்ணிற்கு காலில் உள்ளது. இடம்தான் வேறுபாடே தவிர, மீசை இருப்பதால் மட்டுமே, அதாவது ஆண் என்பதால் மட்டுமே அவன் அதிகாரம் படைத்தவன் என்று எண்ணுதல் கூடாது.
அனைத்து நிலைகளிலும் ஆண்களை விடப் பெண்களும் சமமான திறன் உடையவர்களாக விளங்குகின்றனர் என்பதை அனைவரும் உணர்தல் வேண்டும் என்பதை இப்பழமொழி நமக்கு எடுத்துரைக்கின்றது.
ஆண், பெண் என்று பேதம் பார்க்காது அனைத்து உரிமைகளையும் பெண்களுக்கு வழங்க இச்சமுதாயம் செழிப்பதற்கு வழி வகுக்க வேண்டும். அதுதான் சமுதாயத்தைச் சீரான வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும். அதை விடுத்து பெண்களை இன்றும் அடிமைப்படுத்திக் கொடுமைப்படுத்துவது தொடர்ந்தால் உலகம் எந்தவிதமான முன்னேற்றத்தையும் காணாமல் அழிந்துவிடும். நம் முன்னோர் வழி நடந்து ஆணையும் பெண்ணையும் இரு கண்களாகப் போற்றிச் சமுதாயம் முன்னேற அனைவரும் பாடுபடுவோம். சமுதாயம் முன்னேறும்… வாழ்க்கை மலர்ச்சியடையும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.