பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
முனைவர் சி. சேதுராமன்
59. வேலை
மனிதர்கள் உலகில் உயிர்ப்புள்ளவர்களாக வாழ்வதற்கு வேலை இன்றியமையாத ஒன்றாகும், ஒவ்வொரு மனிதனும்அவரவர் தகுதிக்கேற்பவும் வாய்ப்பிற்கேற்பவும் வேலைகளைச் செய்து வாழ்ந்து வருகின்றான். தேவாரத்தில் நாவுக்கரசர், “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்று குறிப்பிடுவது நோக்கத்தக்கது. பெரும்பாலும் வேலை என்பது தனி மனிதரின் செயலினைக் குறிக்கும். தனிமனிதன் வாழ்வதற்காக எந்தெந்த வகைகளில் எல்லாம் செயல்படுகிறான் என்பதையே வேலை எனும் சொல் குறிப்பிடுகின்றது. மனிதன் வயிற்றுப் பிழைப்பிற்காகவும் உலகில் உயிர் வாழ்க்கையைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் பல்வேறு விதமான வேலைகளைச் செய்கின்றான்.
ஒருவருக்கு கேடு செய்வதற்குத் தீய வழியில் செயல்பட்டால் அதனைத் தீய வேலையில் இறங்காதே என்று கூறி பெரியோர்கள் கண்டிப்பதை வழக்கில் நாம் பார்க்கின்றோம், மனிதனின் செயல்பாடுகளையும் வேலை என்பது உணர்த்துகின்றது. நம் முன்னோர்கள் வேலை என்பது குறித்துப் பல்வேறு பண்பாட்டு நெறிகளை நமக்குப் பழமொழிகள் வாயிலாக எடுத்துரைத்துள்ளனர்.
வேலையும் காரணமும்
சிலர் எந்த வேலையும் செய்யாது சோம்பேறியாக இருப்பர். அதிலும் சிலரிடம் ஏதாவது ஒரு வேலையைத் தந்தால் அவர்கள் அதனைச் செய்யாது ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி அந்த வேலையைத் தட்டிக் கழிப்பர். எந்தச் சூழலிலும் அவர்கள் மனம் இறங்கி ஒரு வேலையைச் செய்யமாட்டார்கள். உப்புச் சப்பில்லாத காரணங்களைக் காட்டி அவ்வேலையைச் செய்வதிலிருந்து தப்பித்துக் கொள்வர். இத்தகையவர்களை,
“வேலை சொன்னாப் பேல வரும்”
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
அந்த வேலையைச் செய் என்று கூறும் போது, அதனைச் செய்யாது எனக்கு மலங்கழிக்கும் நிலை வந்துவிட்டது. என்னால் செய்ய முடியாது என்று கூறிவிட்டுச் சென்றுவிடுவார். இது வழக்குத் தொடர் போன்று காணப்படினும் மனிதர்களின் மாண்பினை உணர்த்தும் பழமொழியாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வேலையும் கூலியும்
வேலை செய்யாது எதுவும் உலகில் கிடைக்காது. அதாவது உழைக்காமல் யாரும் எந்தப் பலனையும் பெற முடியாது. உழைத்தால் மட்டுமே பொருள் கிடைக்கும். உழைக்காதிருந்தால் பொருளின்றி முன்னேற்றமின்றி வாழ்வில் துன்புற நேரிடும். வேலை செய்தால்தான் வாழ்க்கையில் மலர்ச்சியைக் காண முடியும். இதனை,
“வேலை பார்த்தாக் காசு வேசம் போட்டாக் கூலி”
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
ஓரிடத்திற்குச் சென்று ஒருவர் கொடுத்த வேலையைச் செய்து முடித்தால் பொருள் கிடைக்கும். அதாவது அதற்குரிய கூலி கிடைக்கும். அது போன்றே வாழ்க்கையில் எந்த வேலையையும் செய்தால் மட்டுமே நமக்குப் பொருள் கிடைக்கும். இதனை உணர்ந்து நாம் வாழ்வில் உழைத்துப் பொருளீட்ட வேண்டும். அவ்வாறு உழைக்காதிருந்தால் எந்தப் பொருளும் கிட்டாது என்பதையும் இப்பழமொழி எடுத்துக் கூறி உழைக்கின்ற எண்ணத்தை மனதில் விதைக்கின்றது.
வேலையற்றவனின் மனம்
எந்த வேலையும் செய்யாமல் இருப்பவனின் உள்ளத்தில் சாத்தான் குடியிருப்பான் என்று இங்கர்சால் குறிப்பிடுவார். வேலை செய்யாது சோம்பேறியாக இருப்பவனின் உள்ளம் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். அவன் ஏதாவது தவறான செயல்களில் ஈடுபட்டு மனநோயாளியாகவும் மாறும் நிலை உருவாகும். அது மட்டுமல்லாது எது தேவையற்றதோ அந்த வேலையை அவன் செய்து கொண்டிருப்பான். அது மட்டுமல்லாது எது தேவையற்றதோ அந்த வேலையைச் செய்து கொண்டிருப்பான். வீணான வேலைகளைச் செய்யாது பலனுள்ள வேலைகளைச் செய்ய வேண்டும் என்பதை,
“வேலையத்த அம்பட்டன் எருமையப் புடுச்சுக்கிட்டுச் செரச்சானாம்”
என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது. முடிதிருத்தும் வேலை பார்ப்பவர் வேலை இல்லாமல் இருக்கும் போது முடியில்லாத எருமை மாட்டைப் பிடித்துக் கொண்டு மழித்துக் கொண்டிருப்பதைப் போன்று எந்த ஒரு வேலையும் செய்யாமல் சும்மா இருந்து தேவையற்ற வேலையை ஒருவர் செய்தல் கூடாது என்பதை இப்பழமொழி வாயிலாக நமது முன்னோர்கள் மொழிந்துள்ளனர். தேவையற்ற வேலையைச் செய்யாது, எதனைச் செய்தால் வாழ்க்கை உயர்வடையுமோ அதனைச் செய்தல் வேண்டும் என்ற உயரிய எண்ணத்தையும் இப்பழமொழி நமக்கு நல்குவது நோக்கத்தக்கது.
வேலையைக் கண்டு பயப்படுவோர்
மனிதர்களுள் சிலர் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்ய மாட்டார்கள், அந்த வேலை தெரிந்தாலும் தவறாகவே செய்வர். அவர்களை ஏன் தவறாக வேலையைச் செய்தீர்கள் என்று கேட்டால் ஏதாவதொரு காரணத்தைக் கூறித் தப்பித்துச் சென்றுவிடுவர். இவர்களை வேலைக் களவாணி (வேலையைச் செய்யாது தப்பிக்கும் வேலைத் திருடன்) என்று வழக்கில் கூறுவர். இத்தகையவர்களை,
“வேலக்களவாணிக்கு நெத்தியில வேர்வை”
என்ற பழமொழி படம் பிடித்துக் காட்டுகிறது.
புதிய மாடுகளை உழவுக்குப் பழக்கும் போது அடிக்கடி படுத்துக் கொள்ளும். அது வலுவுடையதாக இருப்பினும் படுத்துக் கொண்டு சண்டித்தனம் செய்யும் இங்ஙனம் சண்டித்தனம் செய்யும் செயலில் ஈடுபட்டவர்களையே வேலைத் திருடன் என்று வழக்கில் மக்கள் குறிப்பிடுகின்றனர். எந்தக் காரணங் கொண்டும் வேலை செய்யாது வேலைத் திருடனாக யாரும் மாறுதல் கூடாது என்பதை இப்பழமொழி நமக்கு உணர்த்துகிறது.
வேலை செய்பவரும் வேலை செய்யாதவனும்
அலுவலகங்களில் பணிபுரிவோரில் எல்லோரும் சரியாக வேலை செய்வார்கள் என்று கூற முடியாது. வேலை செய்து ஊதியம் பெறுபவர்களை விட வேலை செய்யாது ஊதியம் பெறும் எத்தர்களே இன்று அதிகமாக உள்ளனர். பணம் என்றால் அவர்கள் முன்னணியில் இருப்பர். பணமில்லை என்றால் எந்த வேலையையும் செய்ய மாட்டார்கள். அது மட்டுமல்லாது, வேலை கிடைக்கும் வரை எந்த வேலையாக இருந்தாலும் நான் செய்துவிடுவேன் என்று கூறுபவர்கள், வேலை கிடைத்தவுடன் அதனைச் சரிவரச் செய்யாது பொய்க் காரணங்களைக் கூறிக் கொண்டும் வேலை செய்யுமாறு கூறுபவர்களைப் பற்றிக் குறை கூறிக் கொண்டும் திரிவர். இதனை,
“வேலை செய்யறவனுக்கு வேலையைக் கொடு
வேலை செய்யாதவனுக்குக் கூலியைக் கொடு”
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. எல்லா இடத்திலும் காணப்படும் இழிநிலையை எடுத்துரைக்கின்ற பழமொழியாக இது அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நமக்கு உரிய வேலைகளை உண்மையாகச் செய்து ஊதியம் பெற வேண்டும். உழைக்காது ஊதியம் பெற்றால் அது நோய்க்குச் செலவு செய்ய வேண்டி வரும். உண்மையாய் மனச்சான்றுடன் வேலை செய்து பெறும் ஊதியம் மட்டுமே நமது உடம்பில் ஒட்டும். அவ்வாறு நேர்மையாய் உழைப்பவர்கள் இறையருள் பெறுவர். பிறரை ஏமாற்றாது உண்மையாக நமக்குரிய வேலைகளைச் செய்து பிறர்க்குத் தீங்கும் செய்யாது வாழ்வோம். வாழ்வு வளம்பெறும்
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.