பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
முனைவர் சி. சேதுராமன்
18. நூல்கள்
நூல்கள் மனிதனின் அறிவை வளர்க்கும் அமுதசுரபிகளாகும். பலரின் வாழக்கையை மாற்றியமைத்தவையும் நூல்களே ஆகும். நல்ல நூல்கள் நல்ல நண்பர்களுக்குச் சமமாக விளங்குகின்றன. ஒருவர் தேடி எடுத்து விரும்பிப் படிக்கும் நூல்களைக் கொண்டே அவரின் குணநலன்களை அறிந்து கொள்ளலாம் என்ற உளவியல் அறிஞர்கள் கூறுவர். நூல்கள் மனிதர்களின் குணநலன்களை மாற்றியமைக்க வல்லன. வாழ்விற்குரிய நன்னம்பிக்கையையும் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்துவன நூல்களே ஆகும்.
மகாத்மா காந்தியடிகள், ஆபிரகாம் லிங்கன் உள்ளிட்ட பல்வேறு சிறந்த தலைவர்கள் உருவாவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தவை நூல்களாகும். மாவீரன் அலெக்ஸாண்டர் தான் சென்ற இடஙகளுக்குக் கெல்லாம் இலியட், ஒடிசி ஆகிய காப்பிய நூல்களைத் தன்னுடன் எடுத்துச் சென்று படித்ததாக வரலாறு குறிப்பிடுகிறது.
நல்ல நூல்களைப் படிப்பது சுகம். அது ஒரு தவநெறியாகவும் அமைந்து விளங்குகிறது. இத்தகைய நூல்கள் படிக்கப்படிக்க இன்பம் நல்குவன. இந்நூல்களைப் பற்றிய பழமொழிகள் வழக்கில் வழங்கப்பட்டு வருவது நோக்கத்தக்கது. இப்பழமொழிகள் நூல்களின் சிறப்பையும் மனிதர்களின் பண்பையும் விளக்குவதாக அமைந்துள்ளன.
கல்லாடம்
சிவபெருமானின் திருவருட் செயல்களைச் சிறப்பித்துக் கூறும் கல்லாடம் என்ற நூலைக் கல்லாடர் என்பவர் எழுதியுள்ளார். இவர் எக்காலத்தில் வாழ்ந்தவர் என்பதை அறிய இயலவில்லை. பல்வேறு காலங்களிலும் இப்பெயருடையோர் சிலர் வாழ்ந்திருந்ததை வரலாற்றில் காணலம். ‘திருக்கண்ணப்ப தேவர் திருமறம்’ என்ற நூலை இயற்றியவரும் கல்லாட தேவ நாயனார் என வழங்கப்படுகிறார்.
கல்லாடம் ஆசிரியப்பாவில் அமைந்துள்ளது. சிவபெருமனின் அருட்செயல்களையும், புராணக் கருத்துக்களையும், திருவிளையாடற் கதைகளையும், அடியவர் வரலாறுகளையும், இசை, நாடனம் முதலிய நுண்கலைச் செய்திகளையும் கொண்ட பண்பாட்டுப் பெட்டகமாக இந்நூல் விளங்குகின்றது. இந்நூலினைப் படித்தவர்கள் பண்பாட்டு நெறிகளில் சிறந்து விளங்குவர். அத்தகைய பண்பட்டவருடன் வீண்பேச்சிலோ வீணான வாதத்திலோ ஈடுபடக் கூடாது. அவ்வாறு ஈடுபட்டால் அவரின் கோபத்திற்கு ஆளாகித் துன்புற நேரிடும். இதனை,
‘‘கல்லாடம் கற்றவனோடு சொல்லாடாதே’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. இஃது அந்நூல் எழுந்த கால கட்டத்தில் தோன்றி மக்களிடையே வழக்கில் வழங்கப்பட்டு வந்த பழமொழியாகும்.
அகராதி
சொற்களுக்குப் பொருள் தருகின்ற நூல்களை அகராதி என்பர். இவ்வகராதியை நிகண்டுகள் என்றும் அகரமுதலி என்றும் குறிப்பர். இவ்வகராதி பல சொற்களுக்குப் பல்வேறுவிதமான நுட்பமான பொருள்களை இவ்வகராதி வழங்குகின்றது. அகராதியை நன்கு கற்றவன் தன்னைப் பற்றி யாராவது கூறும் வார்த்தைகளுக்கு வெவ்வேறு பொருள் கொண்டு பிறருடன் மாறுபட்டுக் கொண்டே இருப்பான். இதனால் பல்வேறுவிதமான சிக்கல்கள் ஏற்படும். நிம்மதி இராது. இதனை உணர்ந்து அகராதியை நன்கு கற்றவனுடன் எதுவும் தேவைக்கதிகமாகப் பெசுவதைத் தவிர்க்க வேண்டும். இதுவே பேசுபவருக்கு நன்மையைத் தரும். இதனை,
‘
‘அகராதி படித்தவனுடன் வாய்க் கொடுக்காதே’’
என்ற பழமொழி எடுத்துரைக்கிறது.
ஒவ்வொன்றையும் சிலர் ஒவ்வொன்றாகத் தவறாகப் பொருள் கொண்டு பிரச்சனைகளை உருவாக்கிவிடுவர். இதனைத் தவிர்க்க வேண்டுமெனில் அத்தன்மையருடன் பேசுவதைக் குறைத்துக் கொள்ளல் வேண்டும். அது அனைவருக்கும் நலம் பயக்கும் என்ற பண்பாட்டு நெறியை அகராதி குறித்த பழமொழி தெளிவுறுத்துகின்றது.
திருக்குறள் – நாலடியார்
தரணியில் தனித்ன்மை பெற்ற நூலாகவும், தமிழர்களைத் தலைநிமிர வைக்கும் நூலாகவும் விளங்கும் நூல் உலகப் பொதுமறையாம் திருக்குறளாகும். இத்திருக்குறளைப் பின்பற்றி அதன் கருத்துக்களை அடியொற்றிய நூலாக அமைந்திருப்பது சமணமுனிவர்கள் இயற்றிய நாலடியாராகுமத். இந்நூல்கள் இரண்டும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் நூல்களாக அமைந்திலங்குகின்றன.
வாழ்க்கையில் தளர்ச்சியுறும் மனிதர்களுக்கு வாழ்க்கையில் உறுதியளிக்கும் உறுதிப்பொருள்களான கருத்துக்களை இவ்விருநூல்களும் எடுத்துரைக்கின்றன. இந்நூல்களின் பெருமையை,
‘‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி’’
என்ற பழமொழி அமைந்துள்ளது.
ஆலங்குச்சி, வேப்பங்குச்சி ஆகியவற்றில் பல் துலக்கினால் பற்கள் உறுதித் தன்மை அடையும். பற்களின் ஈறுகளும் அதன் எனாமலும், கிருமிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்புடன் உறுதிப்படவும் வைக்கிறது. அதுபோல் வாழ்க்கையை நான்கு அடிகளால் ஆகிய நாலடியாரும், இரண்டடியாலாகிய திருக்குறளும் வாழ்க்கையை உறுதிப்படுத்துகின்றன. பல்வேறு புறத்தாக்குதல்களில் இருந்து மனித வாழ்க்கையை இவ்விரு நூல்களும் பாதுகாக்கின்றன என்பதை மேற்குறித்த பழமொழி தெளிவுறுத்துகின்றது. இதனைப் போன்றே,
‘‘பழகுதமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்’’
என்ற தொடரும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தொடர் பழமொழி போன்று காணப்படினும் அஃதன்று. இஃது வழக்கில் வழங்கப்படும் வழக்குத் தொடர் எனல் பொருந்தும்.
பாகவதம்
திருமாலின் பெருமைகளை எடுத்துரைக்கும் நூல் பாகவதமாகும். கிருஷ்ணவதாரத்தில் திருமால் நிகழ்த்திய அருட் செயல்களை விளக்குவதாக இந்நூல் அமைந்துள்ளது. பகவானாகிய ஸ்ரீகிருஷ்ணர் அடியார்களுக்கு அருளிய தன்மையும் அவர்தம் பெருமைகளையும் விளக்கியுரைப்பதாகப் பாகவதம் விளங்குகின்றது.
திருமாலின் அவதாரச் சிறப்பினை இந்நூல் விளம்புவதாக இப்பாகவதம் அமைந்துள்ளது. சிலர் இறைவனது பெருமையைக் கூறும் பாகவதத்தைப் படித்தாலும் அவர்கள் பெருமாளின் கோவில்களை இடிப்பர். இறைவனுக்கு ஏற்றகாத, அடுக்காத, பொருந்தாத செயல்களைச் செய்வர். அவரது கல்விக் கேள்விக்கும் அவர்தம் செயல்பாட்டிற்கும் எந்தவிதமான தொடர்பும் இராது. இதனை,
‘‘படிக்கிறது பாகவதம்
இடிக்கிறது பெருமாள் கோயில்’’
என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது.
நூல்களைக் குறித்த பழமொழிகள் நூல்களின் சிறப்புகளையும் அதன் தன்மைகளையும் எடுத்துரைக்கின்றன. பல்வேறு சமூக மாற்றத்திற்கான விதைகளைத் தூவுவனவாக நூல்கள் அமைந்துள்ளதையும் இப்பழமொழிகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. நூல்களைக் கற்று அதன் வழி நடந்து அறிவார்ந்த மக்களாக அகிலம் போன்ற அனைவரும் வாழ்வோம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.