பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
முனைவர் சி. சேதுராமன்
20. அடி, அடித்தல்
‘‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’’ என்பர் தொல்காப்பியர் தமிழ் மொழியில் தான் இத்தகைய சிறப்பு உள்ளது எனலாம். எந்த ஒரு எழுத்தைத் தமிழில் மாற்றி எழுதினாலும் அதன் பொருள் மாறிவிடும். எல்லாச் சொற்களுக்கும் ஏதாவது ஒரு பொருள் உண்டு. வெற்றுச் சொல் என்பபதே தமிழ் மொழியில் கிடையாது என்பது நோக்கத்தக்கது. அடி-என்பதில் ‘அ’விற்குப் பதிலாக, ‘ஆ’என்ற எழுத்தை மாற்றிப் போட்டால் ஆடி என மாறி மாதத்தின் பெயரையோ, ஆடுதல் என்ற வினையையோ குறிக்கும் அதுபோன்று ஒரே சொல் இடத்திற்குத் தகுந்தாற் போன்று பொருள் வேறுபட்டு வழங்கப்படுவதும் நோக்கத்தக்கது.
அடி, அடித்தல் என்ற இவ்விரு சொற்களும் நுட்பமான பொருள்களைக் கொண்டு விளங்குகின்றன. அடி என்பது வேர்ச்சொல்லாக அமைந்து அடி, அடித்தல் என்ற தொழிற்சொல்லாகவும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அடி என்பது ‘தாள்’(காலடி) என்ற பொருளிலும் வழக்கில் ஆளப்படுகிறது. இவ்விரு சொற்களையும் பழமொழிகளில் வைத்து நமது முன்னோர்கள் பல்வேறு தத்துவக் கருத்துக்களையும் பண்பாட்டு நெறிகளையும் விளக்கிச் சென்றுள்ளனர். அவ்வுண்மைகள் நம் வாழ்விற்கு வழிகாட்டுவனவாக அமைந்துள்ளன.
அடியும் – அம்மியும்
மனிதர்களுள் சிலர் எதற்கும் சரி என்று உடனே கூறமாட்டார்கள். பொறுமையாக யோசித்து நீண்ட காலம் எடுத்துக் கொண்டே சரி என்பர். இன்னும் சிலர் தங்களது கொள்கையை எதற்காகவும் யாருக்காகவும், எச்சூழலிலும் மாற்றிக் கொள்ளமாட்டார்கள். மேலும் அத்தகையவர்களிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறினால் முடிவில் அதற்கு அவர்கள் சரி என்று ஒப்புக் கொள்வார்கள். இத்தகைய மனித இயல்பை,
‘‘அடிமேல அடி அடிச்சா அம்மியும் நகரும்’’
என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது.
அம்மி கருங்கல்லாலனது. அதனை ஓர் அடி அடித்தால் நகர்ந்துவிடுமா? நகராது. தொடர்ந்து அதன்மீது அடித்துக் கொண்டே இருந்தால் சிறிதளவாவது நகரும். அது போன்றே தங்களது கொள்ளையில் விடாப்பிடியாக இருப்பர். அவர்களிடம் மறுபடி மறுபடி தங்களது கருத்தை வலியுறுத்திக் கூறும்போது அவர்கள் சரி என்று பிறரின் கருத்திற்கு உடன்படுவர். இதனை மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள கதை தெளிவுறுத்துகிறது.
குருஷேத்திரத்தில் மகாபாரதப்போர் வெகு மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பீஷ்மர் இறந்தவுடன் கௌரவப் படைக்குத் துரோணர் தலைமையேற்றுப் போரை நடத்துகிறார். பதினான்காம் நாள் போர் பகலில் மட்டுமல்லாது இரவிலும் சமிக்ஞைகளை வைத்துக் கொண்டு நடக்கிறது. அப்போது துரோணரின் அஸ்திரங்கள் பாண்டவர்களுடைய படைகளை வீழ்த்திக் கொண்டிருந்தது. இதனால் பாண்டவப்படை பயந்து நடுங்கிக் கொண்டிருந்தது.
இதனைக் கண்ட கிருஷ்ணன், ‘‘அருச்சுனா இந்தத் துரோணரைப் போரில் வெல்லக் கூடியவர்கள் யாரும் இல்லை. இவரைப் போர்முறைகளினால் வெற்றி கொள்ள முடியாது. தருமத்தைப் புறக்கணித்துவிட்டு ஏதேனும் செய்துதான் தீர வேண்டும். வேறு வழியில்லை. துரோணரின் மகன் அசுவத்தாமன் இறந்ததாகச் கேள்விப்பட்டால் துரோணர் போர்புரிய மாட்டார். துயரத்தினால் ஆயுதங்களைக் கீழே போட்டுவிடுவார். யாராவது துரோணரிடம் சென்று ‘அசுவத்தாமன் இறந்தான்’ என்று சொல்ல வேண்டும்’’ என்று சொன்னான்.
இதைக் கேட்ட அருச்சுனன் திகைத்தான். நெறிதவறிய வழியினை ஒப்புக் கொள்ள அவன் விரும்பவில்லை. கூட இருந்தவர்களும் மற்றவர்களும் மாட்டோம் என்றார்கள். கிருஷ்ணன் ஒரு முடிவுக்கு வந்தவனாகத் தருமனைப் பார்த்துத் தருமா நீதான் கூற வேண்டும். நீ கூறினால் துரோணர் நம்பிவிடுவார் மறுக்காதே’’ என்று கூறினான். ஆனால் தருமனோ, ‘‘கிருஷ்ணா எதற்காகவும் நான் தருமத்தைவிட்டு விலகமாட்டேன். நான் பொய் கூற மாட்டேன்’’ என்று கூறினான்.
கிருஷ்ணனோ விடாது தருமனை வற்புறுத்தினான். அப்போதும் தருமன் மறுக்கவே, கிருஷ்ணன், தருமா நான் கூறியதை மட்டுமே கூறு. நீ ஏன் பொய் கூறுகிறாய். அசுவத்தாமன் என்ற யானையைப் பீமன் கொன்றான்’’ இது உண்மை. இதனைத் துரோணர் காதில் விழும்படி கூறுவாயாக’’ என்று வற்புறுத்தவே தருமனுக்கும் வெற்றியின் மீது ஆசை வர சரி நீ கூறியது போலக்கூறி நான் இந்தப் பாவ காரியத்தைச் செய்கிறேன் என்று கூறினான்.
கிருஷ்ணனது ஏற்பாட்டின்படி, ‘‘பீமன் அசுவத்தாமன் என்ற யானையைக் கொன்றான்(பீமா அசுவத்தாமா ஹதக குஞ்சரக). என்று உரக்கக் கூறினான். அப்போது துரோணரின் காதில் அசுவத்தாமன் இறந்தான் என்பது மட்டுமே கேட்டது.
துரோணர் போர் செய்வதை விடுத்துத் தருமனைப் பார்த்து, ‘‘என் மகன் இறந்தானா? உண்மையா?’’ என்று கேட்டார். மூவுலக ஆட்சி கிடைத்தாலும்கூடத் தருமன் பொய் சொலா்லமாட்டான் என்று நம்பியே துரோணர் கேட்டார். அப்போது கிருஷ்ணன் மிகுந்த மன வேதனை அடைந்தான். தருமர் தருமத்தைப் புறக்கணிக்கப் பயப்பட்டாரானால் பாண்டவர்களுடைய அழிவு உறுதி. துரோணருடைய பிரம்மாஸ்திரம் வீணாகாது என்று கருதினான். தருமனனோ உண்மைக்குப் புறம்பாகப் பேச அஞ்சித் தயங்கினான். இருப்பினும் கிருஷ்ணனது வற்புறுத்தலும் வெற்றியின் மீது இருந்த ஆரைசயும் அவரை விடவில்லை.
தருமன் மனதைத் திடப்படுத்திக் கொண்டு, ‘‘அசுவத்தாமன் என்ற யானை இறந்தது உண்மை’’ என்று தாழ்ந்த குரலில் கூறினான். தருமன், ‘என்ற யானை’ என்று கூறியபோது கிருஷ்ணன் தனது கையிலிருந்த பாஞ்சசன்யம் என்ற சங்கினை ஊதினான். அதனால் துரோணரின் செவியில் ‘அசுவத்தாமன் இறந்தது உண்மை’ என்ற சொல் மட்டும் விழுந்தது.
இதனை நம்பிய துரோணர் ஆயுதங்களைக் கீழே போட்டுவிடடுத் தேர்த்தட்டின் மீது யோகநிலையில் அமர்ந்தார். அப்போது பாண்டவர்களின் படைத் தலைவனான திட்டத்துய்மன் (திருஷ்டத்யும்னன்) கத்தியை எடுத்துவந்து அவரது தலையை வெட்டி வீழ்த்தினான். இங்ஙனம் கிருஷ்ணன் வற்புறுத்தியதால் (அடிமேல் அடிஅடித்ததால்) தருமன் தன் கருத்தை மாற்றிக் கொள்ள நேர்ந்தது (அம்மி நகர்ந்தது). துரோணரும் உயிரிழந்தார்.
இப்பழமொழி எக்காரணத்தைக் கொண்டும் நம்மிடம் உள்ள நல்ல கொள்கைகளை மாற்றிக் கொள்ளக் கூடாது என்ற வாழ்வியல் நெறியையும் நமக்கு வழங்குகின்றது.
அடியும் – அண்ணனும்
அனைவருக்கும் துணைபுரிவது இறைவனது திருவடியே ஆகும். யார் உதவி செய்யா விட்டாலும் இறைவனது திருவடியை அடைக்கலமாகிவிட்டால் இறைவன் தக்க தருணத்தில் உதவுவான். அண்ணன் தம்பி என்ற உறவுகள் கைவிட்டாலும்கூட இறைவன் கைவிடமாட்டான். அதனால் இறைவனது திருவடியைச் சரணடைந்தால் பல்வேறு துன்பங்களிலிருந்து விடுபடலாம் என்ற அரிய கருத்தினை,
‘‘அடி உதவுறது மாதிரி அண்ணன் தம்பிகூட உதவமாட்டார்கள்’’
என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது. இப்பழமொழி இறைவனது திருவயடி உதவுவது போல அண்ணன் தம்பியர் உதவமாட்டார்கள் என்று இறைவனின் சிறப்பினை உணர்த்துவதாகவுள்ளது. இப்பழமொழியை, அடி, உதை உதவுவது போல அண்ணன் தம்பிகூட உதவமாட்டார்கள் என்று மாற்றிப் பொருள் கூறுவர். ஆனால் இப்பொருள் இப்பழமொழிக்கு ஒவ்வாத பொருத்தமான பொருளன்று மேற்கூறிய பொருளே சரியானதாகும்.
யானையும் – அடியும்
எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர்களும் எதிலாவது தவறுவது இயல்பாகும். இத்தகைய மனித இயல்பினைக் குறிக்கும் வகையில்,
‘‘யானைக்கும் அடிசறுக்கும்’’
என்ற பழமொழி அமைந்துள்ளது. பெரிய யானையாக இருந்தாலும் அதன் காலடிசறுக்கி விழுந்துவிடும். அது உலக இயல்பாகும். இதனை ஔவையார் குறித்த கர்ணபரம்பரைக் கதை ஒன்று தெளிவாக விளக்குகிறது.
ஒருமுறை ஔவையார் காட்டுவழியில் நடந்து ்சென்று கொண்டிருந்தார் வழியில் இருந்த நாவல் மரத்தில் ஆடுமாடு மேய்க்கும் ஒரு சிறுவன் ஏறிப்பழம் பறித்துத் தின்று கொண்டிருந்தான். அம்மரத்திற்கருகில் வந்த ஔவையாருக்கு நாவல் பழமட் திண்பதற்கு ஆசை. மரத்தின் மேலிருந்த அச்சிறுவனைப் பார்த்து,
‘‘தம்பி எனக்குச் சிறிது பழம் பறித்தத்துருவாயா?’’ என்று கேட்டார். அச்சிறுவனும் சரி என்று கூறிவிட்டு, ‘‘பாட்டி சுட்ட பழம் வேணுமா? சுடாத பழம் வேணுமா?’’
என ஔவையாரைப் பார்த்துக் கேட்டான். ஔவையாருக்குப் பழுத்த பழத்தைத்தான் சிறவன் சுட்ட பழம் என்கிறான் என்று நினைத்து அச்சிறுவனைப் பார்த்து, ‘‘அப்பா எனக்குச் சுட்டபழமே பறித்துத் தா’’ என்று கூறினார்.
சிறுவன் மரத்தில் இருந்து பழங்களைப் பறித்துக் கீழே போட்டான். பழங்கள் மண்ணில் விழுந்தன. அதை எடுத்துச் சாப்பிட முயன்ற ஔவையார் பழத்தில் மண் ஒட்டி யிருந்ததைக் கண்டு வாயால் அதனை ஊதி ஊதி மண்ணை நீங்கிவிட்டுத் திண்றார்.
மரத்திலிருந்த சிறுவன், ‘‘என்ன பாட்டி பழம் சுடுதா?’’ என்று கேட்டான். ஔவையாருக்கு அதிர்ச்சியாக இருந்தது. அட மாடுமேய்க்கும் சிறுவன் நம்மை வென்றுவிட்டானே! என்று எண்ணி வருந்தினார்.
மரத்திலிருந்து இறங்கி வந்த சிறுவன் முருகனாக ஔவையாருக்குக் காட்சியளித்தார். அதனைக் கண்ட ஔவையார் வணங்கினார். இக்கதை எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவரும்கூட சிறிது தவறித் தவறிழைப்பர். அதனால் நாம் பெரியவர் என்று கருதி கவனமின்றி இராது எதிலும் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற நன்னெறியினையும் இப்பழமொழி புகட்டுவதாக உள்ளது.
அடியும் – மாடும்
மனிதருள் சிலர் அன்பாகச் சொன்னால் கேட்டுக் கொள்வர். சிலர் கேட்கமாட்டார்கள். அத்தகையோரை அடித்தால் மட்டுமே சொன்னபடி கேட்பர். இதனை,
‘‘அடியாத மாடு படியாது’’
என்ற பழமொழி எடுத்துரைக்கிறது.
சில மாடுகள் எந்த வேலையும் செய்யாது சண்டித்தனம் செய்து கொண்டு முரட்டுத்தனமாக இழுத்துக் கொண்டும், பாயவும் வரும் அத்தகைய மாடுகளை நன்கு அடித்து அச்சுறுத்தி வேலைகளுக்குப் பழக்குவர். அடித்து அச்சறுத்தினால் மட்டுமே கீழ்த்தரமாக நடந்து கொள்வோர் கேட்பர். அவர்களை அடித்துத்தான் திருத்த வேண்டும் என மனிதர்களின் இயல்பினைத் திருத்துவதற்குரிய முறைமையினை இப்பழமொழி தெளிவுறுத்துகிறது.
அடித்தலும் – கூடலும்
குடும்பத்தில் கணவன் மனைவி, இருவருக்கும் இடையில் சண்டை சச்சரவுகள் ஏற்படுது இயல்பு. இக்குடும்பச் சண்டையே சில சமயம் குடும்ப வன்முறையாக மாறி இருவரும் மணமுறிவு வாங்கிக் கொள்ளும் அளவிற்குப் போய்விடுவதுமுண்டு. கணவன் மனைவிக்குள் இவ்வாறு சண்டைகள் வந்தால் மூன்றாவது நபருக்கு இடங்கொடுக்காது அவர்களே அதனைத் தீர்த்துக் கொக்ள வேண்டும். அதுவே சிறந்தது.
சிலர் ஒருவருக்கொருவர் பேசாதிருந்து கொள்வதும் உண்டு. ஒரு சில நாள் இது நீடித்தால் ஏற்றுக் கொள்ளலாம். பல நாள்கள் நீடித்தால் அது வாழ்க்கையை வீணடித்துவிடும். கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்பட்டுக் குடும்பம் குலைந்துவிடும்.
கணவன் மனைவிக்குள் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு சண்டை சச்சரவு ஏற்பட்டாலும் உடனே அது முடிவுக்கு வந்துவிடவேண்டும். நீடிக்கக் கூடாது. இதனை,
‘‘அரிசி அரிக்கையில் அடிச்சுக்கணும்
சோறுஉண்கையில் (உண்ணும்போது) கூடிக்கணும்’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
சோறு வடிக்கும் முன்னர் அரிசியைக் கல்இல்லாது களைந்து அரித்து எடுத்துச் சோறு ஆக்கி உண்ணும்போது கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட பிணக்கு முடிவுக்கு வந்துவிடவேண்டும். அப்போதுதான் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வளம் பெறுகும். இல்லை எனில் குடும்பத்தில் குழப்பமும் வறுமையுமே ஏற்படும். இதனை உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற இல்லற நெறியைக் கணவன், மனைவி ஒற்றுமையை இப்பழமொழி நமக்கு எடுத்துரைக்கின்றது.
நீரடித்தலும் – விலகலும்
உறவுகள் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை. இவற்றுக்குள் மோதலும் உண்டு. காதலும் உண்டு. சில சமயங்களில் உறவுகள் முறிந்து ஒட்டாமலேயே போவதும் உண்டு. உறவுகளுக்குள் பிரச்சனைகளோ சிக்கல்களோ ஏற்படின் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்துப் பொறுத்துப் போனால் உறவுகள் நிலைத்து நிற்கும். சிலர் உறவுக்குக் கைநீட்டினால் மற்றவர் அதனை ஏற்காது முறிந்தது முறிந்ததுதான் என்று இருந்துவிடுவர். இருதரப்பினரும் தங்கள் தங்களது யெல்பாடுகளைப் பரிசீலித்துச் செயல்பட்டால் உறவுகளுக்குள் எந்தச் சிக்கலும் வராது. அப்படியே சிக்கல்கள் ஏற்பட்டாலும் அவை நீர்த்துப் போய்விடும் எனவே விட்டுக் கொடுத்து நடந்து கொள்வேண்டும் என்பதனை,
‘‘நீர் அடிச்சு நீர் விலகுமா?’’
என்ற பழமொழி உணர்த்துகிறது.
அணையிலிருந்து வெளிவரும் தண்ணீர் ஏற்கனவே பள்ளத்தில் கிடக்கும் தண்ணீரை அடிப்பது போல் விழுந்தாலும் பள்ளத்தில் கிடந்த நீர் விலகாது இரண்டும் ஒன்று சேர்ந்து கால்வாயில் ஓடும். அதுபோல் உறவினர் யாரேனும் தவறுகள் செய்தாலும் அதனைப் பொறுத்துக் கொண்டு பொறுமையுடன் நட்புப் பாராட்டி வாழ வேண்டும் என்ற அரிய உறவுகளைப் பேணும் முறையினை இப்பழமொழி தெளிவுறுத்துகிறது.
அடித்தல் – ஒடித்தல்
எந்தக் குழந்தையும் வளர்க்கின்ற முறையிலேயே மிகப் பெரியவர்களாக உருவாகின்றனர். அதுபோன்றே மரங்களையும் முறையுடன் வளர்க்க வேண்டும். ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு விதமாக வளரக் கூடியவை. அந்தந்த முறைப்படி அம்மரங்களை வளர்த்தால்தான் அது நல்ல பலனைக் கொடுக்கும். இத்தகைய கருத்துக்களை,
‘‘பிள்ளையை அடிச்சு வளர்க்கணும்
முருங்கையை ஒடிச்சு வளர்க்கணும்’’
என்ற பழமொழி விளக்குகறிது. இப்பழமொழியை,
‘‘அடிச்சு வளர்க்காத பிள்ளையும்
முருக்கி வளர்க்காத மீசையும் ஒண்ணுக்கும் உதவாது’’
என்றும் வழக்கில் வழங்குவர்.
அடிக்கிறபோது பிள்ளையை அடித்து வளர்க்க வேண்டும். அப்போதுதான் குழந்தை பணிவுடன் ஒழுக்கமாகவும் வளரும். முருங்கை நல்ல பலன் கொடுக்க வேண்டுமெனில் ஒடித்து வளர்க்க வேண்டும். மீசையை உருவி முருக்கி விட்டால் மட்டுமே நாம் வளைப்பது போன்று வளைந்து நின்று அழகுதரும். குழந்தையும் இவ்வாறே வளர்த்தால் எதிர்காலத்தில் பணிவுடன் நல்லவனாக வளர்ந்து சமுதாயத்திற்குப் பயனுள்ளவனாவான் என்று இப்பழமொழி அறிவுறுத்துகிறது.
அடித்தலும் – அணைத்தலும்
சிலர் எப்பொழுது பார்த்தாலும் பிறரிடம் கடுமையாக நடந்து கொள்வர். தனது மனைவி, குழந்தைகள், நண்பர்கள் ஆகியோரிடம்கூட முரட்டுத்தனமாக நடப்பர். குழ்தைகளை அடித்தோ கிள்ளியோதான் கொஞ்சுவர். எதற்கெடுத்தாலும் இப்படி இருக்கின்றாரே? இவருக்கு மற்றவர்கள் மீது அன்பு துளியும்இல்லையா? எனில் அவ்வாறு கருத முடியாது. அவர் தனது அன்பினை முரட்டுத்தனமாக வெளிப்பட்துகிறார் என்றே கூற முடியும்.
பிறருக்கு ஏதேனும் துன்பம் நேரும்போது உடனே சென்று முதலில் இவரே உதவுவார். இத்தகையவர்களின் இயல்பினை,
‘‘அடிக்கிற கைதான் அணைக்கும்’’
என்ற பழமெழி தெளிவுறுத்துகிறது. எந்தக் கை அடித்ததோ அதே கை அன்பைப் பிறர் மீதும் தம்மவர்கள் மீதும் பொழியும் என்பதை இப்பழமொழி நவில்கிறது.
இறைவனது திருவடி அனைத்தையும் நல்கும் ஆற்றல் வாய்ந்தது. பிறர் திரும்பத் திரும்பக் கூறும் கருத்துக்களுக்குச் செவி சாய்க்காது நம்முடைய நல்ல கொள்கையிலிருந்து தவறுதல் கூடாது. கணவனும் மனைவியும் அன்புடன் இருந்து நல்லவிதமாகக் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு பண்பாட்டு நெறிகளை அடி, அடித்தல் குறித்த பழமொழிகள் நமக்கு நல்குகின்றன. பண்பட்ட நெறி வாழ்ந்து பாரோர் போற்ற வாழ்வோம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.