பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
முனைவர் சி. சேதுராமன்
21. காத்திருத்தல்
வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் காத்திருத்தல் என்பது நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கட்டாயமாக நம் மீது திணிக்கப்படுகின்றது. இக்காத்திருப்பு பொருளுக்காக, நண்பர்களுக்காக, வாய்ப்பிற்காக, ஓரிடத்திற்குச் செல்வதற்காக எனப் பல்வேறு காரணங்களுக்காகத் தொடர்கிறது. சரி, இந்தக் காத்திருப்பு எப்போது முடிவுறும்? யாருக்கும் தெரியாது. இளம் பருவத்தில் தொடங்கி இறக்கும் பருவம் வரை இக்காத்திருப்பு மனித வாழ்க்கையில் தொடர்கிறது.
மனிதர்கள் மட்டும் தானா காத்திருக்கிறார்கள் எனில் இல்லை எனலாம். மழைக்காக, உணவுக்காக, உறைவிடத்திற்காக, நிழலுக்காக, வெயிலுக்காக என உயிர்கள் அனைத்தும் எதற்காகவோ எதையோ எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. அனைத்து உயிரினங்களின் எதிர்பார்ப்பும் நிறைவேறுகிறதா எனில், அது அவையவை எதிர்பார்ப்பைப் பொருத்தே அமைகின்றன. இத்தகைய காத்திருத்தல் பற்றிய பண்பாட்டுக் குறிப்புகளை நமது முன்னோர்கள் பழமொழிகளில் பதிவு செய்து வைத்துள்ளனர். அவை நமக்கு வாழ்க்கை குறித்த பல்வேறு நெறிகளை வழங்குகின்றன.
தேவையின்றிக் காத்திருத்தல்
காத்திருத்தல் தேவையைப் பொருத்து அமைகிறது. இது அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும். மனிதரில் சிலர் தமக்கு தேவையான பொருள் கிடைக்காது எனத் தெரிந்தும் அதற்காகக் காத்திருப்பர். அவர்கள் காலவிரயத்தையோ, பொருள் விரயத்தையோ பற்றிக் கவலைப் படமாட்டார்கள்.
>
இதனை யாராவது, ‘‘என்னப்பா இப்படி தேவையின்றிக் காத்திருக்கின்றாயே காத்திருக்கலாமா?’’ என்று சொல்லி விட்டால், ‘‘உனக்கென்ன? நான்தானே காத்திருக்கிறேன். உன் வேலை எதுவோ அதனைப் பார்த்துக் கொண்டு போ’’ என்று முகத்தில் அடித்தாற் போன்று கூறிவிடுவார்கள். அவர்களாகவே தாம் எதற்காகக் காத்திருந்தோமோ அது வீண் வேலை என்று பின்னர் உணர்ந்து தெளிவர். இவர்களின் மன இயல்பினை,
‘‘இலவு காத்த கிளிதான்’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
இப்பழமொழி உவமைத் தொடர் போன்று அமைந்திருக்கும் பழமொழி ஆகும். இலவம் மரத்தில் காய்த்திருக்கும் காய் கனியாகும் போது அதனைத் தின்று பசியாறலாம் என்று கிளியானது தினந்தோறும் வந்து காத்துக் கொண்டே இருந்தது. ஆனால் இறுதி வரை இலவமரத்தில் உள்ள காயானது, கனியவே இல்லை. நெற்றாகவே இருந்தது. பசியுடன் கிளி காத்துக் கொண்டே இருந்து ஏமாற்றம் அடைந்தது. மனிதர்கள் பலர் தமக்கு கிடைக்க வாய்ப்பில்லாத ஒன்றிற்காகக் காத்துக் கொண்டே இருப்பர். இப்பழமொழியைப் பின்வரும் பஞ்சதந்திரக் கதை தெளிவாக விளக்குவதாக அமைகின்றது.
>
பெரிய காடு ஒன்று இருந்தது. அதில் நரி ஒன்று வாழ்ந்து வந்தது. அதற்கு நல்ல பழுத்த மாம்பழம் பழம் ஒன்றைச் சாப்பிட வேண்டும் என்று ஆசை வந்தது. ஆனால் நரியோ மாம்பழம் எதிலிருந்து கிடைக்கிறது என்று சரிவரத் தெரியாது. மற்றவர்கள் அப்பழத்தின் சுவைபற்றிக் கூறக் கூற அதன் ஆசை அதிகரித்தது.
நரியானது எப்படியாவது மாம்பழத்தைச் சாப்பிட்டு விடவேண்டும் என்று அப்பழத்தைத் தேடித் திரிந்தது. காடுமுழுவதும் தேடிய நரிக்குக் கண்ணில் பழம் தட்டுப் படவே இல்லை. இவ்வாறு தேடித் திரிந்த நரி தனது முயற்சியைக் கைவிடாது மீண்டும் தேடியபோது அங்கு ஒரு காளைமாட்டைப் பார்த்தது. அக்காளை மாடு வாட்டசாட்டமாக வளர்ந்திருந்தது.
நரி அந்தக் காளை மாட்டைப் பார்த்த போது அது மேய்ந்து கொண்டிருந்தது. அதன் கால்களுக்கிடையில் மாம்பழம் போன்று சிவந்த நிலையில் காளைமாட்டின் விரை(காளைக்குரிய பிறப்புறுப்பு) தொடைகளுக்கிடையில் தொங்கியது. இதனைப் பார்த்த நரிக்கு ஆகா நாம் தேடிய மாம்பழம் இதோ தொங்கிக் கொண்டிருக்கின்றதே. இதுநாள் வரை நமக்குத் தெரியாமல் போய்விட்டதே. இந்தக் காளையல்லவா இதனைக் கட்டித் தொங்கவிட்டுக் கொண்டு திரிகிறது. இந்தப் பழத்தை எப்படியாவது பறித்துத் தின்றுவிட வேண்டும். காளைமாடானது அசந்துள்ள நிலையில் பழத்தைப் பறித்துச் சாப்பிட்டு விடவேண்டும் என்று அந்தக் காளைமாடு செல்லும் இடங்களுக்கெல்லாம் பின்தொடர்ந்து சென்றது. நாள்கள் கடந்தன. ஆனால் காளையின் கால்களுக்கிடையில் தொங்கும் பழம் கீழே விழவில்லை. நரியால் இதனைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஒரு நாள் எப்படியாவது இன்று காளையிடமிருந்து பழத்தைப் பறித்துச் சாப்பிட்டு விடவேண்டும் என்று முடிவு செய்து காளையின் பின்னாலேயே சென்றது.
காளை ஓரிடத்தில் நன்கு மேய்ந்து கொண்டிருந்தது. சரியான சமயம் இதுதான் என்று கருதிய நரி, மாடு அறியாதவாறு அதன் பின்னால் சென்று அதன் கால்களை ஒட்டிநின்று அம்மாட்டின் விரை(விதை)யைக் கடிக்கத் தலையைத் தூக்கியது. அப்போது மாடு அதை உணர்ந்து திரும்பிப் பார்த்து வேகமாகத் தனது பின்னங்காலால் ஓங்கி உதைத்தது. நரியின் பற்களில் பட்டு அதன் உதடு கிழிந்து பற்களும் பெயர்ந்து இரத்தம் வழிந்தது. அப்போதுதான் நரிக்கு அது மாம்பழம் இல்லை. காளைமாட்டின் விதை என்று அறிந்தது. தப்பித்தோம் பிழைத்தோம் என்று நரி அங்கிருந்து ஓடியது. இத்தனைக் காலம் தவறாக நினைத்துக் காத்திருந்து கொண்டு நாம் காலத்தை வீணாக்கி விட்டோமே என்று வருந்தியது.
மேற்கூறப்பட்ட கதையில் வரக்கூடிய நரிபோன்று வீணாக எதையும் புரிந்து கொள்ளாது காத்திருப்போரின் இயல்பினைத் தெளிவுறுத்துவதாக அமைந்துள்ளது. இலவு காத்த கிளி என்ற பழமொழிக்குத் தகுந்த விளக்கமாகவும் அமைகின்றது.
காலமும் காத்திருத்தலும்
சிலர் ஓரிடத்தில் நம்மைக் காத்திருக்கக் கூறிவிட்டு வரமாட்டார்கள். கேட்டால் மறந்து விட்டேன் என்று கூறுவர். அதனைப் போன்று சிலர் அதிக நேரம் கழிந்த பின்னர் வருவர். என்னப்பா காலதாமதம் இவ்வளவு நேரம் ஒருவரைக் காக்க வைக்கலாமா என்று கேட்டால் அட காத்திருப்பதிலும் ஒரு சுகம் இருக்கப்பா. என்று சிரித்துக் கொண்டே கூறுவர். ஆனால் அவருக்காகக் காத்திருந்தவர்தான் மிகவும் நொந்து போவார். இத்தகையோரை காலத்தைக் கொல்பவர்கள் அதாவது ‘காலக் கொல்லிகள்’(Time killers) என்று கூறலாம். இவர்கள் காலத்தால் மட்டுமே திருந்துவார்கள்.
நாம் நமக்குரிய காலம் வரும் வரை நாம் காத்திருக்க வேண்டும். வந்தவுடன் அதனைப் பயன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை வளமுறும். ஆனால் சிலர் தமக்குரிய வாய்ப்புகள் வந்தபோதும் அதனை அவர்கள் பயன்படுத்தாது வீணாகக் காலங்கடத்துவர். மேலும் வாய்ப்புகளை வீணாக்கிவிட்டு, காலம் தமக்காக மீண்டும் வந்து காத்திருக்கும் என நம்புவோரும் உண்டு. இவர்களைத் திருத்துகின்ற வகையில்,
>
‘‘அய்யரு வர்ற வரை அமாவாசை காத்திருக்குமா?’’
என்ற பழமொழி அமைந்துள்ளது.
அமாவாசையில் இறந்தவர்களுக்குத் திதி கொடுத்து நீத்தார் கடன் செலுத்துவர். அதற்கு அய்யர் சரியான நேரத்திற்கு வந்து மந்திரங்களைக் கூறி நீத்தார் கடனைச் செய்பவரைக் கொண்டு பிண்டம் கொடுக்கச் செய்வர். அமாவாசைத் திதி குறிப்பிட்ட நேரம் மட்டுமே இருக்கும். அதற்குள் நீத்தார்கடன்களைச் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்தால் வாழ்வில் நற்பலன்கள் ஏற்படும் என்பர். இல்லையெனில் நீத்தாருக்குப் பிண்டம் கொடுப்பதனால் எந்தவிதப் பயனும் ஏற்படாது.
எனவே திதி வரும் காலத்திற்காக நீத்தார் கடன் செய்பவரும், அதனைச் செய்விப்பவரும் (அய்யர்) தான் காத்திருக்க வேண்டும். அமாவாசைத் திதி காத்திருக்காது. காலத்திற்காக நாம்தான் காத்திருக்க வேண்டுமே தவிர காலம் நமக்காகக் காத்திருக்காது என்ற அரிய வாழ்வியல் நெறியை இப்பழமொழி நமக்கு வழங்குகிறது.
காத்திருந்தவனும் நேற்று வந்தவனும்
ஒரு பொருள் கிடைப்பதற்காகச் சிலர் நெடுங்காலமாகக் காத்திருப்பர். ஆனால் அப்பொருள் அவருக்குக் கிடைக்கும் முன்னர் தற்செயலாக வந்தவர் அப்பொருளைக் கைப்பற்றிக் கொண்டு செல்வர். நெடுங்காலமாகக் காத்திருப்பவர் மிகவும் வருத்தத்திற்கு ஆளாவார். இது முறையாகக் காத்திருந்தவருக்கேக் கிடைக்க வேண்டிய பொருள் முறையின்றிப் பிரிதொருவருக்குக் கிடைப்பது தவறான செயல்முறையாகும். இதனை,
‘‘காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன்
கொண்டு போன கதைதான்’’
என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது.
>
காவல் காத்திருந்தவன் மனைவியை வீட்டிற்கு வருபவன் தன்னோடு அழைத்துக் கொண்டு செல்வது நியாயமற்றது. அது நீதிக்குப் புறம்பானதும் ஆகும்.
இப்பழமொழி இராமாயணக் கதையை உள்ளீடாகக் கொண்டு விளங்குகின்றது. தந்தையிடம் கொடுத்த வாக்குறுதிக்காகத் தன் மனைவியுடனும், தம்பியுடனும் காட்டில் சென்று தங்கியிருந்தான் இராமன். தன் தங்கையின் தூண்டுதலால் சீதையின் அழகைப் பற்றிக் கேள்வியுற்ற இராவணன் அங்கு வந்து, காவல் காத்திருந்த இராம, இலக்குமணர்களைப் பிரித்து பர்ணசாலையுடன் இலங்கைக்குப் பெயர்த்து எடுத்துச் சென்றான். அநீதி இழைத்தான். அழிவைத் தேடிக் கொண்டான். இதனையே காத்திருந்தவன் (இராமன்) பொண்டாட்டியை (சீதையை) நேத்து (நேற்று) வந்தவன் (இராவணன்) கொண்டு போனதே இராமாயணக்கதை ஆகும்.
அடுத்தவருக்கு உரிய நியாயமான பொருளையோ, பிறவற்றையோ நாம் அறத்திற்குப் புறம்பாகக் கைப்பற்ற நினைக்கக் கூடாது. அங்ஙனம் கைப்பற்றினால் அறமே அறம் பிறழ்ந்தவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் அழிக்கும் என்ற அறநெறியை இப்பழமொழி விளக்குவதாக அமைந்துள்ளது.
ஆக்க ஆறப் பொறுத்தல்
இக்காத்திருத்தலைப் பொறுத்தல் என்று வழக்கில் வழங்குவதும் உண்டு. ஓரிடத்திற்குச் செல்பவனைப் பார்த்து அதே இடத்திற்குச் செல்பவன், ‘‘ஏய் இந்த பாருய்ய நானும் அங்கதான் வர்றேன். சத்த(சற்று) பொறுத்துப் போய்யா’’ என்று கூறுவான். இன்னும் சிலர் தங்களது நண்பர்களைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு மிகக் காலந்தாழ்த்தி வருவார். அவரது நண்பரோ அவருக்காக நெடுநேரம் காத்திருந்து விட்டுச் சென்று விடுவார். வீட்டிற்குச் சென்று தமது நண்பரைப் பார்த்து, ‘‘ஏய்யா நான்தான் தாமதமா வந்துட்டேன். நீயாவது சத்தநேரம் (சற்று நேரம்) பொறுத்திருக்கக் கூடாதா? அதுக்குள்ள வீட்டிற்கு வந்துட்டே?’’ என்று கேட்பார். இங்கு பொறுத்தல் என்பது காத்திருத்தல் என்ற பொருளிலேயே வழங்கப்படுவது நோக்கத்தக்கது.
பலருக்குக் காத்திருப்பது என்பது அறவே பிடிக்காது. உடனடியாக எல்லாம் முடித்துக் கொண்டு சென்றுவிட வேண்டும் என்று நினைப்பர். அவர்களைப் பார்த்து, ‘‘எப்பப் பார்த்தாலும் வெந்நீத் தண்ணிய கால்ல ஊத்திக்கிட்டு வந்த மாதிரிதான் பறப்பிங்க’’ என்று கேட்பர். எதற்கெடுத்தாலும் இந்தப் பண்புடையோர் ஒரு இடத்தில் இல்லாமல் பரபரவென்றே இருப்பார். இத்தகைய மனிதர்களின் இவ்வியல்பினை,
‘‘ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்க முடியாதா?’’
என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது. பசிக்கின்றது என்று கூறியவன் சோறாக்குமாறு கூறிவிட்டான். ஆனால் சோறு வெந்து அதனை வடித்து ஆற வைக்கின்ற போது எனக்கு வேண்டாம் நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்று விடுவான்.
சிறிது நேரம் காத்திருந்து உணவுண்டு செல்வதற்கு எதிலும் அவசரப்படுபவர்களால் இயலாது. விதையைப் போட்டுவிட்டு உடனே கதிர் அறுவடை செய்ய வேண்டும் எனில் முடியாது. காலம் வரும் வரைக் காத்திருந்துதான் பின்னர் விளைந்தவுடன் அறுவடை செய்ய வேண்டும். எனவே காத்திருக்க வேண்டியதற்கு காத்திருத்தல் வேண்டும். அது தவறல்ல என்ற கருத்தினை இப்பழமொழி நமக்கு அறிவுறுத்துகிறது.
காத்திருப்பதற்குக் காத்திருந்து நமக்குரிய வாய்ப்புகள் வரும்போது அதனைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும். பிறர் காத்திருந்து பெற்ற பொருள்களுக்காக, எந்த நிலையிலும் நாம் ஆசைப்படக் கூடாது. தேவையின்றி வீணாகவும் காத்திருக்கக் கூடாது என்பன போன்ற பல்வேறுவிதமான வாழ்வியல் நெறிகளை காத்திருத்தல் பற்றிய பழமொழிகள் நமக்கு வழங்குகின்றன.
பிறருக்கு உரிய வாய்ப்புக்களைப் பறிக்காது, காலம் வரும்வரை காத்திருந்து, நமக்கு உரிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேறி வளமான வாழ்க்கை வாழ்வோம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.