பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
முனைவர் சி. சேதுராமன்
22. மனச்சோர்வு
மனிதன் வாழ்வாங்கு வாழ நல்ல நலமான மன வளம் தேவை ஆகும். நல்ல மனவளம் இல்லையேல் அனைத்தும் சீர்கெடும். மனம் புரிந்து கொள்ள முடியாத புதிராக விளங்குவது. தொன்று தொட்டு மனம் பற்றிய ஆய்வுகள் உலகில் நிகழ்ந்து கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது. மனம் கெட்டால் உடல் உள்ளிட்ட அனைத்தும் கெட்டுவிடும். அதனால் தான் நமது முன்னோர்கள் மனதை நலமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்கள் போலும்.
மனதை நலமுடன் வைத்திருப்பதற்குப் பல்வேறு விதமான பயிற்சிகளையும் நமது முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ளனர். மனதில் உறுதியும் வலிமையும் இருந்தால் எதையும் சாதிக்கலாம். உடல் வலிமை ஒருவருக்கு இருந்தாலும் உள வலிமை இல்லையெனில் அவரால் எதனையும் சாதிக்க இயலாது. இதனால்தான் மனதில் உறுதி வேண்டும் என்று தொன்றுதொட்டு நமது முன்னோர்கள் தெளிவுறுத்தியுள்ளனர்.
எதற்கும் இடங்கொடுக்கலாம். ஆனால் மனச்சோர்வுக்கு மட்டும் மனிதன் இடங்கொடுக்கக் கூடாது. மனச்சோர்வை, கவலை, விரக்தி என்று பலவாறு கூறுவர். இம்மனச்சோர்வு ஏற்பட்டால் மனிதன் என்ன நடந்தால் என்ன? நடக்கிறது நடக்கத்தானே செய்யும். இல்லை நம்மால தடுத்து நிறுத்திவிடத்தான் முடியுமா? போங்க. எது நடந்தாலும் பராவாயில்லை என்று விரக்தியான நிலையில் பேசுவர். இத்தகைய பேச்சுப் பேசுபவர்களைப் பார்த்து அவர்கள் மனச்சோர்வுற்றுள்ளனர் என்று கூறிவிடலாம். இத்தகைய மனச்சோர்வு குறித்த பழமொழிகள் வழக்கில் மக்களிடையே வழங்கப்பட்டு வருவது நோக்கத்தக்கது.
கடைந்தது – குடைந்தது
சிலர் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருப்பர். ஆனால் அவர்களுக்குத் தேவையானது எதுவும் கிடைக்காது. சிலர் ஏனோதானோ என்று முயற்சி செய்வர். தாம் செய்யும் செயலில் எவ்விதமான உறுதிப்பாடும் இன்றி முயற்சி செய்வர். அவர்களுக்குத் தேவையானதைவிடக் கூடுதலாகக் கிடைக்கும். இரண்டாமவர் நான் எதிர்பார்க்கவே இல்லை என்று மிகுந்த மகிழ்ச்சி அடைவர். முதலாமவர் நாம் முயற்சித்தோம், அதற்கு உரிய பலன் கிடைக்கவில்லையே என்று வருந்துவார். மனச்சோர்வுக்கும் ஆளாவார். அவரிடம் சென்று ‘‘இன்னொரு முறை முயற்சி செய்து பாருங்க’’ என்று கூறினால் அவர்,
‘‘கடைஞ்சதுலேயே வரல்லை
குடைஞ்சதுலயா வரப்போகுது’’
என்று விரக்தியுடன் கூறுவார்.
மோரை நன்கு மத்தினால் கடைந்தால் வெண்ணெய் வரும். நன்கு வெண்ணெய் வர தண்ணீர் கலவாத பாலாக இருக்க வேண்டும். அதிகம் தண்ணீர் கலந்த பாலாக இருந்தால் வெண்ணெய் வராது. நன்கு கடைந்தபோதே வராத வெண்ணெய் மோரில் கையைவிட்டு நன்கு கலக்கினாலா(குடைந்து) ‘குடைந்து குடைந்து நீராடி’-திருவெம்பாவை) வரப்போகிறது என்ற பொருளில் இப்பழமொழி வழங்கப்படுகிறது. நன்கு முயற்சித்த பின்னர் கிடைக்காதது குறுக்கு வழியில் சென்றாலா கிடைக்கப் போகின்றது என மனிதர்களின் மனநிலையை விளக்கும் வகையில் இப்பழமொழி அமைந்துள்ளது.
மட்டை – மயிர் (தலைமுடி)
அடுப்பு எரிப்பதற்கு விறகு, கரி, மரத்தூள் உள்ளிட்ட பல்வேறு வகைகளிலான எரிபொருள்களைப் பயன்படுத்துவர். பெரும்பாலும் விறகு அல்லது அடுப்புக் கரியையே மிகுதியும் மக்கள் பயன்படுத்துகின்றனர். அடுப்புக்கரிக்காக மரங்களை வெட்டி அதனைக் கரிமூட்டம் போட்டு அதிலிருந்து வரும் கரியை வீடுகளுக்கு அடுப்பெரிப்பதற்காகப் பயன்படுத்துவர். நல்ல விறகாக இருந்தால்தான் கரி நன்கு கிடைக்கும் இல்லையெனில் வெறும் சாம்பலே மிஞ்சும். அதற்காக நல்ல விறகாகப் பார்த்து அடுக்கி மண்ணைப் பூசி நெருப்பினைப் பற்ற வைத்து பக்குவமாக அவ்விறகினை வேக வைத்துக் கரியை உண்டாக்குவர். ஆனால் பனைமரம், தென்னை மரம் போன்றவற்றில் கிடைக்கும் கழிவான மட்டைகளை வெட்டி அடுக்கி மூட்டம் போட்டால் கரி அகாது. சாம்பலே மிஞ்சும். இவ்வாறு மிஞ்சும் சாம்பல் எதற்கும் உதவாது போய்விடும்.
இதைப் போன்று உண்மையாக உழைக்கும் ஒருவருக்கு உழைப்பிற்கு ஏற்ற உரிய ஊதியம் கிடைப்பதில்லை. சிலரால் அவ்வூதியமும் குறைவாகக் கொடுக்கப்படும் அல்லது மறுக்கப்படும். அப்போது அவரிடம் வேறு வழியில் பொருள் கிடைக்கும் அதனை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினால் அவர்,
‘‘மட்டை சுட்டே கரியாகலையாம்
மயிரு சுட்டா கரியாகப் போகுது’’
என்று கூறுவார். நான் உழைத்தற்கே உரிய பொருள் கிடைக்கவில்லை. வேறுவழியில் சென்றாலா கிடைக்கப் போகிறது என்று கூறி அத்தகைய பொருள் தமக்கு வேண்டாம் என மறுத்து விடுவார். தென்னை, பனை ஆகியவற்றின் மட்டைகளை எரித்தாலே கரி கிடைக்காது. மனிதனின் தலைமுடியை எரித்தால் மட்டையைப் போன்றே ஆகிவிடும். இந்நிகழ்வை வைத்து மனிதனின் மனநிலையை இப்பழமொழி எடுத்துரைக்கின்றது. தனக்கு நியாயமான வழியில் கிடைக்காத போது மனிதன் மனச் சோர்வுக்கு ஆளாகின்றான் என்ற அரிய உளவியல் கருத்தினை இப்பழமொழி விளக்குவது குறிப்பிடத்தக்கது.
வாய் நீரும் வயிறும்
உழைப்பவர் எவ்வளவுதான் உழைத்தாலும் பொருள் கிடைக்காது வாழ்வில் முன்னேற்றம் காண முடியாது இருப்பர். அவரிடம் சிலர் தவறான வழியில் சென்று பொருளீட்டலாம் என்று பலர் தவறான ஆசை வார்த்தைகளைக் கூறுவர். ஆனால் அவர் நேர்மையானவராக இருந்தால் அதற்கு உடன்பட மாட்டார். மீண்டும் அவரை வற்புறுத்தினால் அவர் தம்மை வற்புறுத்துபவரைப் பார்த்து,
‘‘வாநீர்(வாய்நீர்) குடிச்சா வயிறு நிறையப் போகுது’’
என்று கூறுவார்.
நன்கு பசியேற்படுகின்ற போது உணவு உண்டால் மட்டுமே வயிறும் நிறையும். பசியும் ஆறும். தண்ணீர் கிடைக்காத போது வாயில் ஊறும் நீரை மட்டும் குடித்தால் வயிறும் நிறையாது, பசியும் ஆறாது. அதுபோன்றே குறுக்கு வழியில் சென்று பொருளீட்ட முயற்சித்தால் அம்முயற்சி பலனளிக்காது என்ற வாழ்க்கை உண்மையை இப்பழமொழி உணர்த்துகிறது. எந்தச் சூழலிலும் மனிதன் நேரிய வழியிலிருந்து பிறழக் கூடாது என்ற பண்பாட்டு நெறியை இப்பழமொழி தெளிவுறுத்துவது குறிப்பிடத்தக்கது.
மாவு – காற்று, உப்பு – மழை
தமக்கு அதிர்ஷ்டமே இல்லை என்று சிலர் புலம்பிக் கொண்டே இருப்பர். அவர்கள் ஒரு தொழிலைச் செய்யத் தொடங்கி அது நன்கு கைகூடி வருவதற்கு முன்பாக லாபமில்லை என்று கைவிட்டுவிட்டு, பிறிதொரு தொழிலினைச் செய்வர். இவ்வாறு செயல்படுவோர் எதிலும் முழுமையான வெற்றி பெறுவதில்லை. அவர்கள் தங்களது தோல்விக்கு மற்றவர்களையே காரணமாக்குவர். இவர்களின் மனநிலையை,
‘‘மாவி(ற்)க்கப் போனா(ல்) காத்தடிக்குது
உப்பு வி(ற்)க்கப் போனா(ல்) மழைபெய்யுது’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
இவர்கள் எப்போது பார்த்தாலும் தான் தொடங்கிய செயல் எதுவுமே வெற்றியடைவில்லை என்று கூறி பெரும் மனச் சோர்வுக்கு ஆளாவர். எதையும் அவர்கள் எதிர்மறையாகவே சிந்தித்துப் பேசிக்கொண்டே இருப்பர். அத்தகைய மனநிலையை உடையவர்கள் தங்களது மனச்சோர்வை அகற்றி தங்களால் முடியும் என்ற எண்ணத்தை உள்ளத்தில் பதிய வைக்க வேண்டும்.
மேலும் காற்றடிக்கும் போது மாவு விற்றால் அது பாழ்பட்டுவிடும். மழை பெய்யும்போது உப்பு விற்றால் மழையில் நனைந்து உப்பு கரைந்து விடும். இதனை உணர்ந்து மனிதர்கள் செயல்பட வேண்டும். காலத்தையும் சூழலையும் அறிந்துணர்ந்து செயல்பட்டால் மட்டுமே வாழ்வில் வெற்றி கிடைக்கும் என்ற மனச்சோர்வு அகற்றும் நெறியை இப்பழமொழி விளக்குகிறது.
இப்பழமொழி வழக்குத் தொடர் போன்று காணப்படினும் இஃது வழக்குத் தொடரன்று. இஃது வாழ்வியல் உண்மையை உணர்த்தும் பழமொழியே ஆகும். சூழல் அறிந்து மனச்சோர்வு அகற்றி வாழ்க என்ற பண்பாட்டு நெறியை உள்ளீடாகக் கொண்டு இப்பழமொழி அமைந்துள்ளது.
மனச்சோர்வு மனிதனை அரித்துக் கொன்று விடும். அதற்கு இடங்கொடுக்காது நமது வாழ்க்கையில் மனந்தளராது உழைத்து முன்னேற வேண்டும். அப்போதுதான் வாழ்வு வளமுறும் என்ற வாழ்க்கைக்கு உரிய உறுதிப் பொருள்களை இப்பழமொழிகள் வழங்குகின்றன. மனச்சோர்வு அகற்றி மாண்புறு வாழ்க்கை வாழ்வோம். வாழ்க்கை வசப்படும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.