பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
முனைவர் சி. சேதுராமன்
23. பிழைப்பு
உலகில் தோன்றிய ஒவ்வொரு உயிரும் ஏதாவது ஒரு வகையில் வாழ்க்கையை நடத்தவே முற்படுகின்றது. சிறிய புழுவிலிருந்து உருவத்தில் பெரிய யானை வரை அவையவை முடிந்தவரை ஏதாவது ஒரு செயலில் ஈடுபட்டு தங்களது வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு செல்கின்றன. இவ்வாழ்க்கையை நடத்தும் பாங்கினையே அல்லது முறையினையே வழக்கில் ‘பிழைத்தல்’ என்று குறிப்பிடுகின்றனர்.
இங்ஙனம் பிழைத்தல், பிழைப்பு நடத்துதல் (வாழ்க்கையை நகர்த்துதல்) என்பது மனிதர்களுக்குள் பல்வேறு விதமாக மாறுபட்டுக் காணப்படுகின்றது. இப்பிழைப்பு நடத்துவதை, வேலைபார்த்தல், அல்லது வேலை செய்தல் என்று கூறலாம். கிராமங்களில் சிறியவர்களைப் பெரியவர்கள் பார்த்து, ‘‘என்னப்பா பொழப்பு (பிழைப்பு) தளப்பெல்லாம் எப்படி இருக்குது?’’ என்று கேட்பார். அதற்குச் சிறியவர்கள், ‘‘ஐயா நல்லாப் போயிக்கிட்டு இருக்குதுங்க’’. என்று கூறுவார். அதற்கு, ‘‘ஆமாப்பா பொழக்கிற பொழப்ப நல்லா பொழங்கப்பா இல்லன்னா ஒரு பயகூட மதிக்க மாட்டான்’’ என்று பதில்கூறுவர்.
அதே போன்று ஏதாவது பிரச்சனையில் சிக்கிக் கொண்டு கவலையுடன் இருப்பவரிடமோ அல்லது கோபத்துடன் இருப்பவரிடமோ சென்று யாரேனும் சமாதானம் கூற முயன்றால் அவர்களைப் பார்த்து, ‘‘இந்தப் பாரு ஓம்பொழப்ப நீ பார்த்துக்கிட்டுப் போ’’ என்றோ ‘‘ஓஞ்சோலியப் பார்த்துக்கிட்டுப் போ’’ ஓன் வேலையைப் பார்த்துக்கிட்டுப் போ’’ என்றோ முகத்தில் அடித்தாற் போன்று கூறி விடுவார்.
மேற்குறிப்பிட்டுள்ளவற்றில் இருந்து பிழைப்பு என்பது வாழ்க்கையை நடத்துவதற்குரிய வேலையைப் பற்றியதாக அமைந்துள்ளது நோக்கத்தக்கது. வாழ்க்கையை வாழ வேண்டுமானால் வேலை பார்த்து உழைத்தல் வேண்டும். இத்தகைய வாழ்க்கையை நடத்துதலாகிய பிழைத்தல் பற்றிய பல்வேறு வியத்தகு செய்திகளைப் பழமொழிகள் நன்கு எடுத்துரைக்கின்றன.
நினைப்பும் பிழைப்பும்
நாம் ஏதாவதொரு வேலையைச் செய்து கொண்டிருக்கும் போது வேறு எதனையும் நினைத்தல் கூடாது. அவ்வாறு நினைத்தால் பார்க்கின்ற எந்த வேலையையும் சிறப்பாகச் செய்து முடிக்க முடியாது. ஒரே சிந்தனையுடன் நாம் நமது வேலையைப் பார்த்தால் மிகச் சிறப்பாக அவ்வேலையைச் செய்து முடிக்கலாம். அடுப்பில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் கொதிக்க விட்டுவிட்டு நாம் அதை மறந்து வேறொன்றை நினைத்துக் கொண்டிருந்தால் பால் பொங்கி வீணாவதுடன் அடுப்பும் அணைந்து விடும். ஒரு வேலையைச் செய்யும் போது பிற நினைவுகளுக்கு நாம் இடங் கொடுக்கலாகாது. அவ்வாறு இடங்கொடுத்தால் இழப்பே மிஞ்சும். இதனை,
‘‘நினைப்புப் பொழப்பைக் கெடுத்துவிடும்’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. இப்பழமொழியைப் பின்வரும் நாட்டுப்புறக் கதை விளக்குவதாக அமைந்துள்ளது.
‘‘ஒரு ஊரில் வெண்ணெய், நெய் ஆகியவற்றை விற்கும் வியாபாரி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு நிலையில் இல்லாதவன். ஏதாவது ஒன்றை நினைத்துக் கொண்டு ஏதாவதொரு வேலையைச் செய்து கொண்டே இருப்பான். அவனது இப்போக்கைப் பலரும் கண்டித்தனர். ஆனால் அவன் கேட்கவில்லை.
ஒருநாள் அவன் பெரிய பானையில் தயிரை ஊற்றி வெண்ணை எடுப்பதற்காக அதனை பெரிய மத்தினால் கலக்கிக் கொண்டிருந்தான். வெண்ணெய் திரண்டு வந்து கொண்டே இருந்தது. திரண்டு வந்த வெண்ணெயை எடுத்துச் சேகரித்து அதனை மேலே தொங்கிக் கொண்டிருந்த உரி என்ற அடுக்குப் பானையில் போடுவதற்கான முயற்சியில் அவன் ஈடுபட்டிருந்தான்.
அப்போது அவனுக்கு ஒரு நினைப்பு மனதில் தோன்றவே கற்பனையில் மூழ்கினான். இந்தப் பெரிய பானையில் சேர்த்த வெண்ணெயை உருக்கினால் நிறைய நெய் கிடைக்கும். அதனை எடுத்து விற்றால் நிறையப் பணம் கிடைக்கும். அந்தப் பணத்தைக் கொண்டு இன்னும் நிறைய மாடுகள் வாங்குவேன். இன்னும் அதிகமாக வெண்ணெய் கிடைக்கும். அதனையும் நான் உருக்கி விற்றால் இன்னும் அதிகமாகப் பணம் கிடைக்கும் நான் நிறைய மாடுகளுக்குச் சொந்தக்காரனாக ஆகிவிடுவேன். பெரிய வீடு கட்டுவேன். என்னுடைய வளர்ச்சியைக் கண்டு இந்நாட்டை ஆளும் மன்னன் இளவரசியை எனக்கு மணமுடித்து வைப்பான்.
அவளை மணந்து கொண்ட நான் மகிழ்ச்சியுடன் இருப்பேன். எங்களுக்கு ஒரு மகன் பிறப்பான். நான் ஒருநாள் மாட்டில் பால் கறந்து கொண்டு இருப்பேன். அப்போது எனது மகன் தத்தி நடந்து என்னருகே வந்து கொண்டிருப்பான். அதனைப் பார்த்த நான் என்மனைவியைப் பார்த்து, ‘‘ஏய் அறிவு கெட்டவளே. இதோ பார் குழந்தை என்னிடம் வருகிறது. சீக்கிரம் வந்து தூக்கு’’ என்று கூறுவேன். அவள் தாமதமாக வருவாள்.
அதனைக் கண்ட எனக்கு மிகுந்த கோபம் உண்டாகி அவளை எட்டி மிதித்து ஓங்கி ஒரு குத்துவிடுவேன். அவள் அலறுவாள்’’ என்று நினைத்துக் கொண்டே ஓங்கி வெண்ணெய் வைக்கின்ற பானையைக் குத்துவான். பானை உடைந்து வெண்ணெய் முழுவதும் அவனது தலையிலும் தரையிலும் கொட்டி வீணாகியது. அப்போதுதான் அவன் அடாடா நாம் வெண்ணெயைப் பானையில் வைக்கின்றபோது வேறொரு நினைப்பில் இருந்து விட்டோமே! நினைப்பு நமது பிழைப்பைக் கெடுத்துவிட்டதே!’’ என்று வருந்தினான். இக்கதையில் வரும் வியாபாரியைப் போன்றே நம்மில் சிலரும் இருக்கின்றனர்.
இக்கதை எந்த வேலையாக இருந்தாலும் அதில் கண்ணும் கருத்தும் வைத்துச் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யவில்லையெனில் இந்த வெண்ணெய் வியாபாரியைப் போன்று அனைத்தையும் வீணாக இழந்து துன்புற வேண்டும் என்ற நடைமுறை வாழ்க்கை நெறியை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.
பிறர் பிழைப்பைக் கெடுத்தல்
எந்த நிலையிலும் நாம் பிறரது வாழ்வைக் கெடுக்கும் செயல்களில் ஈடுபடக் கூடாது. அது மனிதத் தன்மையே கிடையாது. பிறருடைய வேலையைக் கெடுத்து அவரது வாழ்க்கையை வீணடிப்பது மிகப்பெரும் பாவமாகும். இந்தப் பாவம் தொடர்ந்து பல தலைமுறைகளின் வாழ்க்கையைப் பாழடித்துவிடும். அதனால் பிறரது வாழ்க்கையில் எந்தவிதமான இடையூறையும் செய்தல் கூடாது என்பதை,
‘‘பிறர் பிழைப்புல மண்ணள்ளிப் போடாதே’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. இது வழக்குத் தொடரைப் போன்று காணப்படினும் இஃது வாழ்க்கை நெறியை எடுத்துரைக்கும் பழமொழி என்பது குறிப்பிடத்தக்கது.
மண்ணள்ளிப் போடுதல் என்பது கெடுத்தல், அழித்தல் என்ற பொருள்படும். பிழைப்பு, வாழ்க்கை, வேலை என்று பொருள்களில் வழங்கப்படுவது நோக்கத்தக்கது. நமக்கு லாபம் கிடைக்கின்றது என்பதற்காகவோ, பிறருக்காகவோ, அல்லது நமது மகிழ்ச்சிக்காகவோ எந்தநிலையிலும் பிறருடைய வாழ்க்கை முறையைக் கெடுக்கின்ற செயல்பாடுகளில் ஈடுபடக் கூடாது என்ற பண்பாட்டுநெறியையும் இப்பழமொழி நமக்குத் தெளிவுறுத்துகிறது.
வேலையற்றவர்களின் மனதும் நிலையும்
வேலையற்றவர்களின் மனதில் சாத்தான் குடியிருப்பான் என்று அறிஞர். வேலை கிடைக்காமலோ, அல்லது வேலை செய்யாமலோ இருப்பவர்களின் மனதில் பலப்பல சிந்தனைகள் எழுந்த வண்ணமாகவே இருக்கும். அவர்கள் தேவையற்ற ஏதாவதொரு வேலைகளைச் செய்து கொண்டே இருப்பர். இத்தகைய நிலையை,
‘‘பொழப்பத்த அம்பட்டையன் எருமைமாட்டைப்
பிடித்து செரச்சானாம்’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. வேலையின்றி இருக்கும் முடி திருத்துபவர் எருமை மாட்டிற்கு முடி எடுத்துவிட்டது போன்று எந்த வேலையும் இல்லாது இருப்பவர் தேவையற்ற வேலையைச் செய்து கொண்டிருப்பர் என்பதையே இப்பழமொழி தெளிவுறுத்துகிறது.
இப்பழமொழியை வேறுவிதமாகவும் (கூறமுடியாத இடக்கரடக்கலாகவும்) வழக்கில் கூறுவர். இதனைப் போன்றே தங்க வேலை செய்பவர் (தட்டார்) வேலை எதுவும் கிடைக்காத நிலையில் தனது குறியைத் தராசுத் தட்டில் வைத்து எடைபார்த்தாராம் என்று வேலை இல்லாத நிலையில் அவரது மனம் செயல்படும் விதத்தை,
‘‘பொழப்பத்த (பிழைப்பற்ற) தட்டான் புலுலப் பிடித்து நிறுத்தானாம்’’
என்ற பழமொழியும் தெளிவுறுத்துவதாக உள்ளது. வேலையில்லாத நிலையிலும் நல்ல செயல்களில் ஈடுபடவேண்டும் என்ற சிந்தனையை இப்பழமொழிகள் நமக்கு நவில்கின்றன.
கோழி – நாய் – பிழைத்தல்
ஒவ்வொரு உயிரும் அவ்வவற்றிற்கு ஏற்றாற் போன்று செயல்பட்டு வாழ்க்கையை நகர்த்துகின்றன. மனிதர்களும் பல்வேறு வகையில் செயல்பட்டு வாழ்கின்றனர். உழைக்காமல் (செயல்படாமல்) வாழ்வில் இருக்க முடியாது. அவரவர் அவரவர்க்கு இயன்ற வகையில் உழைத்து வாழ்வினைத் தக்க வைத்துக் கொள்ளவேண்டும். உழைக்காது இருந்தால் யாரும், எந்த உயிரும் வாழ முடியாது என்பதை,
‘‘கோழி கொத்தித்தான் பிழைக்கணும்
நாயி நக்கித்தான் பிழைக்கணும்’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. நான் எப்படிப் பிழைக்கப் போகிறேன், என்னால எப்படி பிழைத்திருக்க முடியும்? என்று சிலர் எப்போதும் புலம்பிக் கொண்டே இருப்பர். அவர்கள் புலம்பலை விட்டுவிட்டு தம்மால் இயன்றதைச் செய்து வாழ்தல் வேண்டும் என்ற எண்ணத்தை இப்பழமொழி எடுத்து மொழிகின்றது.
தப்பிப் பிழைத்தலும் ஓடிப் பிழைத்தலும்
சில பழமொழிகள் வழக்குத் தொடர்களைப் போன்று காணப்படினும் அப்பழமொழிகள் ஒரு பழங்கதையை உள்ளடக்கியதாக அமைந்துள்ளன. நமக்கு நெருக்கமானவர்களையோ அல்லது குடும்பத்தில் உள்ளவர்களையோ நாம் அடிக்கத் துரத்தும்போது அவர்கள்,
‘‘தப்பிப் பிழைத்தால் தாய் பேரு சொல்வேன்
ஓடிப் பிழைத்தால் ஓம்பேரு சொல்வேன்’’
என்னை விட்டுவிடுங்கள் என்று சத்தமிட்டுக் கொண்டே ஓடுவர். இப்பழமொழி குறிப்பிடும் கதை ஒன்று வழக்கில் நிலவுகின்றது.
இப்பழமொழியில் நல்லதங்காள் கதை குறிப்பிடப்படுகின்றது.
ஒரு ஊரில் ஏழு அண்ணன் தம்பிகள் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு நல்லதங்காள் என்ற ஒரே ஒரு தங்கை இருந்தாள். அவளின் மீது இந்த அண்ணன்மார்களுக்கு மிகுந்த அன்பு. அதனால் அவளை மிகுந்த சிறப்புடன் வளர்த்தார்கள். அவள் எது கேட்டாலும் அதனை உடன் வாங்கிக் கொடுத்தனர்.
இவ்வாறு இருக்கும்போது நல்லதங்காளும் வளர்ந்து பெரியவளானாள். நல்லதங்காளை நல்லவன் ஒருவனுக்கு மணமுடித்துக் கொடுத்தனர். மணமுடித்துக் கொடுத்தாலும் அடிக்கடி சென்று தங்கையைப் பார்த்து அவளுக்குத் தேவையானவற்றைக் கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் இந்த அண்ணன்மார் எழுவருக்கும் திருமணம் நடந்தது. அவர்களுக்கு மனைவியராக வந்தவர்களுக்கு நல்லதங்காள் மீது பொறாமை ஏற்பட்டது. தங்களது கணவர்கள் நல்லதங்காளை விழுந்துவிழுந்து கவனிக்கிறார்களே என்று பொறாமையால் வெந்தனர். நல்லதங்காளுக்கு ஒன்றன்பின் ஒன்றாக ஏழு குழந்தைகள் பிறந்து வளர்ந்தன. இந்நிலையில் நல்லதாங்கள் வாழ்ந்த ஊரில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. உணவின்றி மக்கள் மடிந்தனர். குடிப்பதற்கு நீரின்றி ஆடுமாடுகள் அலைமோதி உயிர் விட்டன.
நல்லதங்காளின் கணவன் வெளியூர் சென்று எவ்வாறேனும் பொருளீட்டி வருகிறேன். குழந்தைகளும் நீயும் உனது அண்ணன்மார் வீட்டிற்குச் சென்று சிறிது காலம் தங்கி இருங்கள். பின்னர் நான் வந்து அனைவரையும் அழைத்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு வெளியூருக்குச் சென்றான்.
கணவனின் சொற்படி நல்லதங்காள் தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு அண்ணன்களின் வீட்டிற்கு வந்தாள். அவள் வந்தபோது அவளது அண்ணன்கள் ஏழுபேரும் வேட்டையாடுவதற்காகக் காட்டிற்குச் சென்று விட்டார்கள். அவர்கள் சிலநாள்கள் கழித்தே தங்களது அரண்மனைக்குத் திரும்புவார்கள். இவ்வாறிருக்க தங்களைத் தேடிவந்த நல்லதங்காளை அவளது அண்ணிமார்கள் வீட்டிற்குள் நுழையவிடாது தடுத்து அவளைக் கொல்லைப் புறத்தில் தங்க வைத்தனர்... அவளது குழந்தைகள் அம்மா பசிக்கின்றது என்று அழவே தனது அண்ணிமார்களிடம் கையேந்தி அண்ணிமார்களே எனது குழந்தைகளின் பசியைப் போக்கிட அரிசி தாருங்கள் என்று அழுது இறைஞ்சினாள்.
அவளது அண்ணிமார்கள் சிறிது அரிசியைக் கொடுத்து சமைத்துச் சாப்பிடச் சொன்னார்கள். எரிப்பதற்குக்கூட விறகு கொடுக்க மறுத்தார்கள். நல்லதங்காள் பச்சை வாழைமட்டையை அடுப்பில் வைத்து எரித்து சோறாக்கினாள். அதனைக் குழந்தைகளுக்குப் பரிமாற பாத்திரங்கள் இல்லாத நிலையில் வாழையிலையில் போட்டுக் குழந்தைகளுக்குக் கொடுத்தாள்.
அவளது நிலையைக் கண்ட அண்ணிமார்கள் கைகொட்டிச் சிரித்தார்கள். நல்லதங்காள் இந்த அவமானம் பொறுக்க முடியாமல் தவித்து ஒரு முடிவுக்கு வந்தாள். பின்னர் எழுந்து தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஊருக்கு வெளியில் இருந்த பாழடைந்த கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்வதற்காகச் சென்றாள். முதலில் ஒரு குழந்தையைத் தூக்கிக் கிணற்றுக்குள் வீசினாள். இவ்வாறு ஒவ்வொரு குழந்தையாகத் தண்ணீருக்குள் வீசியவுடன் மூத்த மகன் மட்டும் அவளைப் பார்த்து அம்மா என்னை விட்டுவிடும்மா.
‘‘நான் ‘தப்பிப் பிழைத்தால் தாய் பேரு சொல்வேன்’ ‘ஓடிப் பிழைத்தால் ஒம்பேரு சொல்வேன்’’ என்று கூறி அழுதான்.
ஆனால் நல்லதங்காள்,
‘‘அப்பா மகனே தாய் இல்லாட்டி தவிடு என்று கூட தட்டமாட்டார்கள். உற்றார் இல்லை என்றால் உமி என்று கூட ஊதமாட்டார்கள். வந்துவிடு நாம் இருப்பதை விட இறப்பதே மேல்’’
என்று கூறி ஓடிய மகனைப் பிடித்து இழுத்து வந்து கிணற்றுக்குள் தள்ளிவிட்டுத் தானும் கிணற்றுக்குள் குதித்து இறந்தாள்.
வேட்டையினை முடித்துக் கொண்டு திரும்பிய அண்ணன்மார்கள் தங்களது தங்கை வந்த விபரத்தினை அறிந்து அவள் எங்கே என்று தங்கள் மனைவிமார்களிடம் கேட்டனர். அதற்கு அவர்கள் பொய்யான தகவலைக் கூறினர். தங்களது தங்கையைத் தேடி அவர்கள் காட்டிற்குள் சென்றனர். ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் தங்களது தங்கையின் பிணமும் குழந்தைகளின் பிணமும் கிடக்கக் கண்டு கண்ணீர் வடித்து அழுதனர். இதற்குத் தாங்கள்தான் காரணம் என்று கூறி தாங்களும் இறந்துவிடுவதே மேல் என்று கருதி வாளால் தங்களது தலைகளைத் தாங்களே வெட்டிக் கொண்டு இறந்தனர். பின்னர் இறைவன் தோன்றி அவர்களுக்கு அருள் வழங்கினார்.
இத்தகைய கதையையே முன்னர் குறிப்பிட்ட பழமொழி நமக்கு எடுத்துரைக்கின்றது. அக்காலத்தில் நிகழ்ந்த சமுதாய அவலத்தை அப்பழமொழி எடுத்துரைப்பதுடன் யாவரிடத்திலும் கருணையுடனும் இரக்கத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தையும் நம் உள்ளத்தில் ஏற்படுத்துகின்றது. இங்ஙனம் பிழைத்தல் என்பது தொடர்பான பழமொழிகள் அனைவரும் உழைக்க வேண்டும். அவரவர் வேலையை அவரவர்கள் செய்தல் வேண்டும். மேலும் அன்புள்ளத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற வாழ்வியல் நெறிகளையும் வழங்குகின்றன.
உழைப்போம். உன்னத வாழ்வு வாழ்வோம். வாழ்வும் வளமுறும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.