பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
முனைவர் சி. சேதுராமன்
24. பாட்டு
பாடலை விரும்பாதார் உலகில் யாருமில்லை. மனிதன் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை பாடல் என்பது வாழ்வுடன் இணைந்து விட்ட ஒன்று. பிறக்கும் போதும் பாடல் பாடப்படுகிறது. மனிதன் இறக்கும் போதும் பாடல் பாடப்படுகின்றது. தொழில், நடத்தல், பொழுதுபோக்கு என்று அனைத்திலும் பாடல் என்பது நீக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாகத் தமிழர்களின் வாழ்வில் பாடல் என்பது இரண்டறக் கலந்துவிட்ட ஒன்றாக அமைந்துள்ளது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தாங்கள் விரும்பும் பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனைக் கருத்தில் கொண்டே பாரதிகூட,
‘‘பாட்டினைப் போல் ஆச்சரியம்
பாரின்மிசை இல்லையடா’’
என்று பாடுகிறார். பாடலைக் கேட்பவரும் மகிழ்கிறார். அதனைப் பாடுபவரும் மகிழ்கிறார். இவ்வாறு இருவரையும் மகிழ்விக்கும் தன்மை இசையுடன் கூடிய பாடலுக்கு மட்டுமே உண்டு.
சுந்தரமூர்த்தி நாயனாரும்,
‘‘ஏழிசையாய் இசைப்பயனாய்’’
என்று இசைப்பாடலின் வடிவாய் இறைவன் இருக்கிறான் என்பதைக் குறிப்பிடுகின்றார்.
சிவனிருந்த கைலாய மலையைத் தூக்குவதற்கு இராவணன் முற்பட்ட போது சிவபெருமான் தனது கால் கட்டை விரலால் கைலாய மலையை அழுத்தக் கைலாய மலையின் அடியில் இராவணன் சிக்கிக் கொண்டான். அதிலிருந்து விடுபட எவ்வளவோ முயன்றும் அவனால் இயலவில்லை.
சற்று யோசித்த வேளையில் இராவணனுக்கு ஒரு வழி புலப்பட்டது. இசையுடன் பாடினால் அப்பாடலைக் கேட்கும் இறைவன் அருள்புரிவான் என்று எண்ணித் தனது தலையில் ஒன்றினைத் திருகித் தனது கைகளில் வீணைபோன்று செய்து கொண்டு மீட்டி சாம காஉம் பாடினான். அவ்வாறு பாடிய சாமகானத்தைக் கேட்டு மகிழ்ந்த இறைவன் கால்விரலை எடுக்க இராவணன் தப்பித்து வெளியில் வந்தான். அவனது பாடலில் மயங்கிய இறைவன் அவனுக்கு அருள் வழங்கினார்.
இங்ஙனம் இறைவனையே இசைவிக்கும் திறம் கொண்டதாகப் பாட்டு அமைந்திருந்தது நோக்கத்தக்கது. இத்தகைய பாட்டை மையமாக வைத்துப் பண்பாட்டை விளக்கும் வகையில் பல்வேறு பழமொழிகள் மக்களிடையே வழங்கப்பட்டு வருவது நோக்கத்தக்கது.
பாடிய வாய் ஆடிய கால்
வேலை செய்கின்றவர்கள் ஏதாவதொரு வேலையைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில் அவருக்கு மனமும் உடலும் சற்று பாதிக்கும் சூழ்நிலை ஏற்படும். இத்தகையவர்கள் ஏதாவது செயலைச் செய்து கொண்டே இருப்பார்கள். இத்தகைய மனிதர்களின் குணத்தை,
‘‘பாடிய வாயும் ஆடிய காலும் நிற்காது’’
என்ற பழமொழி விளக்குகிறது.
ஏதாவதொரு இடத்தில் இருக்கும் நிலையில் பாடலைக் கேட்பவன், பாடல் பாடும் திறம் படைத்தவனாக இருப்பின் இயல்பாக அவனது வாய் பாடத் தொடங்கி விடும். அவனே பாடலைப் பாடுவான். அதுபோல் ஆடல் வல்லான் ஒருவன் தாளகதியைக் கேட்டவுடன் அவனையும் அறியாமலேயே அவனது கால்கள் நடனமாடத் தொடங்கி விடும். அவன் விரும்பாதிருந்தாலும் கூட அவனது இரத்தத்திலேயே ஊறிப் போன நடன அசைவுகள் அவனை ஆட வைத்துவிடும். நல்ல வேலைக்கரனால் வேலை செய்யாது இருக்க இயலாது. என்பதை விளக்குவதற்காகவே பாட்டுப் பாடுபவர், நடனம் ஆடுபவர் ஆகியோரின் செயல்கள் குறிப்பிடப் பெற்று, இப்பழமொழி வழக்கில் வழங்கப் பெறுகிறது. நன்கு வேலைத் திறம் படைத்த வேலையாளுக்கு வேலை கொடுத்து அவனது ஆற்றல் சமுதாயத்திற்குப் பயன்படுமாறு செய்தல் வேண்டும் என்ற கருத்தையும் மேற்குறித்த பழமொழி புலப்படுத்தியிருப்பது நோக்கத்தக்கது.
பயிற்சியும் முயற்சியும்
எந்த ஒரு வேலைக்கும் பயிற்சியும் முயற்சியும் தேவையாகும். இவை இரண்டும் இல்லையெனில் எதனையும் செய்வது துன்பத்தைத் தரும். உண்பது உடுத்துவது உள்ளிட்ட வாழ்வின் அனைத்து விதமான செயல்பாடுகளுக்கும் முயற்சியும், பயிற்சியும் தேவை. இதனை அனைவரும் உணர்ந்து செயல்படுதல் வேண்டும். பயிற்சி இருந்தால் எத்தகைய செயலையும் நன்கு செய்து முடிக்கலாம். அதனால்தான்,
‘‘சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு மனப்பழக்கம்’’
என்று நமது பெரியோர்கள் கூறியிருப்பதும் நோக்கத்தக்கதாகும். இதனை,
‘‘பாடப்பாட ராகம் மூட மூட ரோகம்’’
என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது. பாடகர் ஒருவர் பாடிப் பாடிப் பயிற்சி செய்தால் மட்டுமே அவரால் சிறப்பாகப் பாட இயலும். ராகமும் இனிமையாக வரும். அடிபட்டுப் புண் வந்த இடத்தை நன்குக் கழுவி சுத்தம் செய்து மருந்திட்டு வெளிக்காற்றுப் படும்படி செய்தால் அது ஆறிவிடும். அதனைச் சுத்தம் செய்யாது மூடியே வைத்திருந்தால் அது மேலும் மேலும் சிதைந்து ரோக நோயாக மாறி அழுகிவிடும். அது போன்றே எதனையும் உரிய பயிற்சியுடன் மேற்கொள்ளல் வேண்டும் என்ற அரிய வாழ்வியல் நெறியை இப்பழமொழி நமக்கு அறியத் தருகின்றது.
காசும் பாட்டும்
பையிலும் கையிலும் பணம் இருப்பின் மகிழ்ச்சி தானாக வெளிப்படும். மனம் மிகுந்த மகிழ்ச்சியில் திளைக்கும். பணம் இல்லை எனில் மனம் சோர்ந்துவிடும். ஒருவரிடம் பணம், அல்லது பொருள் இருக்கின்றது என்பதை அவர் இருக்கும் நிலையை வைத்தே கூறிவிடலாம். ஆனால் இது அனைவரிடத்திலும் அறிய இயலாது. சிலர் பணம் இருந்தால் மிகுந்த மகிழ்ச்சியுடன் பாடல் பாடி மகிழ்ந்து கொண்டிருப்பர். அவரின் செயல்பாடு வழக்கத்திற்கு மாறுபட்டதாக இருக்கும். இத்தகையோரின் பண்பினை,
‘‘கோவணத்துல ஒரு காசிருந்தால் கோழி கூப்பிட பாட்டு வருமாம்’’
என்ற பழமொழி விளக்குகின்றது.
கிராமங்களில் பணத்தைச் சுருக்குப் பையில் போட்டு தங்களது அரைஞாண் கயிற்றில் முடிந்து தொங்க விட்டுக் கொள்வர். அவ்வாறு பணம் நிறைய இருப்பின் அவர் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பார். அவர் தனிமையாக இருந்தால் அதிகாலையிலேயே எழுந்து (கோழி கூவ) மகிழ்வாகப் பாடிக் கொண்டே தனது வேலைகளைச் செய்யத் தொடங்குவார். இது அனைத்து மனிதர்களிடமும் காணலாகும் பொதுப் பண்பாகும்.
பணமிருப்பின் ஒருவரது செயல்பாடுகள் சற்று வேறுபட்டுக் காணப்படும். அத்தகையவர் தன்னிடம் பணம் இருப்பதைப் பிறர் அறிந்து கொள்ள வேண்டும் என்றோ பிறருக்குத் தன்னிடம் பணம் இருப்பதைத் தெரியப்படுத்த வேண்டும் என்றோ கருதுவார். அவர் வேறுபாடாக ஏதாவது செய்து பிறர் தன்னைக் கவனிக்குமாறு செய்வார். அவ்வாறு வேறுபாடாக அவர் நடந்து கொள்வதைக் கண்ட (ஆடுதல், பாடுதல், பேசுதல் உள்ளிட்ட செயல்கள்) பிறர் ‘‘என்னப்பா என்ன ரொம்பவும் சந்தோஷமாக இருப்பதைப் போல் தெரியுதே! என்ன ஏதாவது பரிசுப் போட்டியில பணம் ஏதும் கிடைத்ததா?’’ என்று கேட்பார். அவரோ இல்லை, இல்லை என்று மழுப்பலாகப் பதிலளிப்பார். இத்தகையோரின் பண்பினை விளக்குவதாக இப்பழமொழி அமைகின்றது.
தாலாட்டும் ஒப்பாரியும்
குழந்தைகளைத் தூங்க வைப்பதற்காகப் பாடப்படும் பாட்டுத் தாலட்டு ஆகும். தாய் தன்குழந்தைக்குத் தரும் முதல் சீதனம் இதுவாகும். இலக்கியத்திற்குத் தாய் வழங்கிய கொடை என்று தாலாட்டைக் கூறுவர். தால்-நாக்கு, நாவினை அசைத்துப் பாடுவதால் தாலாட்டு என்று பெயர் பெற்றது. இதனை ராராட்டு, ஆராட்டு, தாலாட்டு என்றும் வழக்கில் வழங்குவர். இத்தாலாட்டு,
‘‘ஆராரோ ஆரிரரோ ராரிக்கு ராரி மெத்தை’’
என்று தாய் மாமன், பாட்டனார், குடும்பப் பெருமை, தாய், தந்தையர் பெருமை உள்ளிட்ட பொருண்மைகளில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இத்தாலாட்டு குழந்தையில் தாயாரால் மட்டும் பாடப்படாது. குழந்தையைச் சார்ந்தோராலும் பாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் குழந்தை பெற்றவள் மனமகிழ்ச்சியுடன் தாலாட்டுப் பாடுவாள். அவளுக்குத் தாலாட்டு என்பது தானாக வரும். யாரிடமும் கேளாது அவளாகவே பாடுவாள். அவளுக்குத் தாலாட்டுப் பாட்டுத் தானாக வரும்.
அதுபோன்று இறந்தவருக்கு ஒப்புச் சொல்லிப் பாடுவது ஒப்பாரி என்று வழங்கப்பெறும். இவ்வொப்பாரியை இழவுப் பாட்டு, சாவுப் பாட்டு, கையறுநிலைப் பாட்டு என்றும் வழங்குவர். இறந்தவரின் மீது கொண்ட அன்பினாலும் அவரை இழந்த இழப்பினைத் தாங்கிக் கொள்ள இயாலாமையினாலும் இவ்வொப்பாரிப் பாடலைப் பாடுவர். இறந்தவரின் பெருமை, அவர் செய்த நல்ல செயல்கள், அவருடன் கொண்டிருந்த நட்புறவு ஆகியவற்றை எல்லாம் சொல்லிச் சொலிலி ஒப்பாரி வைத்து அழுவர்.
அதிலும் தந்தையை இழந்தவளுக்கு ஒப்பாரி என்பது இயல்பாக வரும் தந்தையை விட நெருங்கிய உறவு எதுவுமில்லை. அதனால் அவ்வுறவே இல்லாத கையற்ற நிலையில் இவ்வொப்பாரி தானாக வரும். இத்தாலாட்டும் ஒப்பாரியும் இயல்பாக வருவது. இதனை,
‘‘தலைச்சன் பிள்ளைப் பெற்றவளுக்குத் தாலாட்டும்,
தகப்பனப் பறிகொடுத்தவளுக்கு ஒப்பாரியும் தன்னால வருமாம்’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
தாலாட்டு ஏன் தாய்க்கு இயல்பாக வருகிறது? அல்லது ஏன் வர வேண்டும்? காரணம் இருக்கிறது. திருமணம் ஆன சில மாதங்கள் கழித்து அவளைப் பார்ப்போர் அனைவரும் என்ன ஏதாவது விசேஷம் உண்டா? என்று கேட்பர். அவள் உண்டு என்று கூறினால் அவளுக்குச் சமுதாயத்தில் உள்ளோர் மதிப்புக் கொடுப்பர். இல்லையெனில் அவளை மலடி என்று இழிவாகக் கூறிப் பழிப்பர். மலடி என்ற அவச் சொல்லில் இருந்து தாய் என்ற நிலைக்கு உயர்த்தித் தனக்குச் சமுதாயத்தில் மதிப்பு வாங்கிக் கொடுத்த முதல் குழந்தை தலைச்சன் குழந்தை அதனால் அக்குழந்தை பெற்றவளுக்கு இயல்பாக மகிழ்வுடன் தாலாட்டு என்பது வரும் அதனையே இப்பழமொழி உணர்த்துகிறது.
தந்தை தனது குழந்தைகள் நன்றாக வரவேண்டும் என்று விரும்புவான். தனது குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாக இருந்தாலும் கூட அவர்கள் மீது அக்கறையோடு இருப்பான். அதிலும் பெண் குழந்தைகள் மீது தனி அக்கறை காட்டுவான். அவர்கள் துன்புறாது இருக்க வேண்டும் என்று எப்போதும் விரும்புவான். அத்தகைய தந்தையை இழந்தவளுக்கு ஒப்பாரி என்பது தானாக வரும். தந்தையை இழந்த பின்னர் தன்னைப் பற்றி அக்கறை கொள்வதற்கு ஆள் இல்லையே என்று விரக்தியுற்று வருந்தி அழுவாள். இத்தகைய அரிய உறவுப் பிணைப்புகளை வெளிப்படுத்துவதாக இப்பழமொழி அமைந்துள்ளது.
இங்ஙனம் பாட்டு என்பது வாழ்க்கையில் இரண்டறக் கலந்து விளங்குவதோடு மனிதர்களின் பண்பினையும், அவர்களுக்கு இடையில் விளங்கும் உறவுப் பிணைப்பினையும் தெளிவுறுத்துவதாக அமைந்துள்ளது. பண்ணுடன் வாழ்ந்து, பாடலைக் கேட்டுப் பண்பட்ட வாழ்க்கை வாழ்வோம். பாரோர் வாழ்த்த வாழ்வோம். வாழ்க்கை மகிழ்வுறும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.