மனித வாழ்க்கையில் பல்வேறு நிகழ்வுகள் நிகழ்கின்றன. அந்நிகழ்வுகள் இயல்பாக இருந்தால் நலம். ஆனால் அதுவே இயல்புக்கு மாறாக, நம்பியவர்களால் இடையில் மாற்றப்பட்டு இயற்கைக்கு முரணாக நடப்பின் அது துரோகம் என்று கருதப்படுகிறது. இத்துரோகம் என்பது தொன்று தொட்டு இன்றுவரை நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. இடத்திற்கு இடம், காலத்துக்குக் காலம் இத்துரோகத்தின் அடையாளங்களும், நடைமுறைகளும் மாறுகின்றன. அல்லது அத்துரோகச் செயல்களுக்குக் காரணமானவர்கள் தங்களை நிறம் மாற்றிக் கொள்கின்றனர்.
துரோகத்தைப் பச்சைத் துரோகம், வஞ்சகம், நய வஞ்சகம், நம்ப வைத்துக் கழுத்தறுத்தல், இரண்டகம், கழுத்தறுத்தல், உள்ளிருந்தே ஊட்டியறுத்தல், கருவறுத்தல், பசப்புதல், குள்ளநரித்தனம், கூட இருந்தே குழிபறித்தல், கவிழ்த்தல், ஈரத்துணி போட்டுக் கழுத்தையறுத்தல், சிரித்துக் கொண்டே கழுத்தையறுத்தல், முதுகில் குத்துதல், நடித்தல், நரிவேலை செய்தல், சகுனித்தனம் செய்தல், நாற்றங்கால் வேலை செய்தல் என்று பல்வேறுவிதங்களில் வழக்கத்தில் கூறுவர்.
அனைவரது வாழ்விலும் ஏதோ ஒரு வகையில் துரோகம் இழையோடியிருக்கும். துரோகம் இல்லாத இடம் எதுவுமில்லை என்று கூறலாம். நட்பும் நம்பிக்கையும் தோன்றும் போதே அங்கு துரோகம் முளைவிடுகிறது. வரலாற்றில் பல வீரர்கள் துரோகத்தாலேயே வீழ்த்தப்பட்டனர்.
பேராசை துரோகத்தை விளைவிக்கின்றது. பகைவன் நமக்கு எதிராகச் செயல்பட்டால் அது நமக்கு நன்கு தெரியும்.அது துரோகமல்ல. ஏனெனில் அவன் என்ன செய்வான்? எப்படி நம்மிடம் நடந்து கொள்ளப் போகிறான் என்பதனை நாம் கணித்து விடலாம். ஆனால் நம்முடனேயே உண்டு, உறங்கிப் பழகியவர்கள் நமக்குக் குழி பறிக்கின்ற போதுதான் அது துரோகம் எனப்படுகிறது.
அதனால்தான் நம் முன்னோர்கள் யார் மீதும் அதிகமான நம்பிக்கை வைத்தல் கூடாது என்று கூறியுள்ளனர், நாம் நம்பிக்கை வைத்தவர்கள் நம் நம்பிக்கைக்கு மாறாக நடந்தால் நம்பிக்கை சிதறித் துரோகம் அங்கு வேரூன்றுகிறது.
நம்பிக்கையின்றி வாழ்தல் கூடாது. பிறரை நம்பி நாம் மோசம் போய்விடக் கூடாது. ஒவ்வொருவரும் நம்பிக்கையால் வாழ்ந்து நம்பிக்கையாலேயே அழிகின்றார்கள். இத்துரோகங்களையும் துரோகிகளையும் உணர்ந்து, அறிந்து, நடந்து கொண்டால் நாம் வாழ்வில் ஏமாற்றத்தைச் சந்திக்க வாய்ப்பிருக்காது.
துரோகிகளிடம் இருந்து நம்மையும் நம் வாழ்க்கையையும் காத்துக் கொள்ளலாம். துரோகம் இழைப்பவர்கள் எலலாக் காலத்திலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். ஒவ்வொரு கால கட்டத்திலும் துரோகங்களின் விழுக்காடு அதிகரித்துக் கொண்டேதான் வந்திருக்கிறது.
வரலாறு முழுக்க முழுக்கத் துரோகங்கள் நிறைந்தது. இத்துரோகங்களை நாம் படிக்கின்ற போது நமக்கு விழிப்புணர்வு ஏற்படுகின்றது. வரலாற்று நாயகர்களின் துரோக வீழ்ச்சி நமக்கு எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்ற படிப்பினையைத் தருகின்றது.
“வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி”
என்பதைப் போன்று நமக்கு முன்னர் வாழ்ந்தவர்களின் வரலாறே நமக்குரிய வாழ்வியல் பாடமாகும். இன்று துரோகிகளின் விழுக்காடு அதிகரித்து விட்டது.
யார்? எப்போது? எங்கு? எந்தக் காலத்தில்? எப்படி துரோகம் செய்வார்கள் என்பது யாருக்கும் தெரியாது. பலரும் பலரையும் நம்பி ஏமாந்து கொண்டும் துரோகத்தால் வீழ்ந்து கொண்டுமே இருக்கின்றார்கள். துரோகம் செய்பவர்கள் தாங்கள் செய்த துரோகச் செயலுக்காக வருந்துவதில்லை. மாறாக அதனைத் தங்களின் திறமை என்றும் தந்திரம் என்றும் கெட்டிக்காரத்தனம் என்றும் கூறிப் பெருமையடித்துக் கொள்கின்றனர். இது ஈனர்களின் செயல்.
வரலாற்று மாந்தர்களின் வாழ்க்கையைப் படிக்கும் போது நமக்கு இத்தகையத் துரோகங்களை அடையாளம் கண்டு அவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ள வாய்ப்புக் கிடைக்கும். துரோகங்களிலிருந்து விடுபட்டு வளமான நேர்மையான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும். துரோகிகளின் முடிவை அறியும் போது துரோக எண்ணத்துடன் செயல்படுபவர்கள் மனம் திருந்தக் கூடும். தங்களது உள்ளத்தைத் திருத்தி உண்மையானவர்களாக நேர்மையானவர்களாக வாழ்வதற்கும் வாய்ப்பிருக்கிறது.
இத்தகைய எண்ணங்களால் உந்தப்பட்டுத்தான் “வரலாற்றில் துரோகங்களும் துரோகிகளும்” எனும் இத்தொடரை எழுத முற்பட்டுள்ளேன். இப்போது பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் என்ற எனது தொடரைப் படித்துப் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு என் எழுத்துக்களுக்கு உரமிட்டு வருகின்ற வாசகர்கள் இத்தொடரையும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்.
வரலாற்றில் நிகழ்ந்த பல்வேறு துரோக நிகழ்வுகள் நாம் விழிப்புணர்வுடன் செயல்படுவதற்கு உறுதுணையாக அமையும். அந்த வகையில் இத்தொடரின் வாயிலாக முத்துக்கமலம் வாசகர்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இது பல்வேறுவிதமான எண்ணச் சிதறல்களை நம்முள் எழுப்பும். இத்தொடரைப் படித்துக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களது கருத்துக்கள் என்னை மென்மேலும் செதுக்கி வழிநடத்தும்…
-முனைவர். சி. சேதுராமன்

1. குருவைக் காட்டிக் கொடுத்த துரோகம்
‘உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கலாமா?’, ‘தீட்டுன கட்டையிலேயே பதம் பார்க்குறியா?’, ‘பால் குடிச்ச வீட்டுக்குப் பாதகம் நினைக்காதே…’ என்று துரோகம் குறித்து நமது முன்னோர்கள் பழமொழிகளில் பதிந்து வைத்துள்ளனர். அந்த வகையில் துரோகம் என்று சொன்னாலேயே நமது நினைவுக்கு வரும் பெயர் என்னன்னு தெரியுமா…? அதுதாங்க யூதாஸ்…இந்தப் பெயரை யாராலும் எளிதில் மறக்க முடியாதுங்க….
இந்த யூதாஸையே உலகின் முதல் குருத்துரோகின்னு சொல்லலாம். இவனது துரோகம் யாராலும் மன்னிக்க முடியாததுங்க… அவன் இயேசுவோட கூட இருந்தான்… அவருடனேயே உண்டான்… உறங்கினான்… எல்லாம் செய்தான்… ஆனா ஆசை யாரை விட்டது… அவனது காசு ஆசையினால துரோகியா மாறிட்டான்…
அந்தத் துரோகத்தின் கதையைக் கேளுங்க… நெஞ்சம் பதறும்… இத்துரோகம் வரலாற்றில் கறை படிந்தது… இயேசுவுக்குத் துரோகம் செய்த சீடனின் முழுமையான பெயர் யூதாஸ் ஸ்காரியோத்.
இயேசுவின் பன்னிரு சீடரில் ஒருவன். அவன் சலன மனதின் சொந்தக்காரன். தன் மனக் குளத்தில் வெள்ளிப் பணம் விழுந்தால் துள்ளிக் குதிக்கும் மீனாய் மாறுபவன். இயேசுவைக் கொல்ல சதி வேலை செய்த தலைமைக் குருக்கள் அனைவரும் சேர்ந்து வலையை வீசி யூதாசைப் பிடித்தார்கள். யூதாஸிடம், “இயேசுவை பிடிக்கப் போகிறோம். அவரை நீ படைவீரர்களுக்கு அடையாளம் காட்டினால், நாங்கள் தரும் வெள்ளிப் பணத்தை அள்ளிச் செல்லலாம். அதனைக் கொண்டு இந்த உலகை வெல்லலாம்” என ஆசை வார்த்தைகளைக் காட்டினார்கள்.
யூதாஸ் சிந்தித்தான். இயேசுவைக் காட்டிக் கொடுக்கலாமா? வேண்டாமா? என்றல்ல; எவ்வளவு பணம் வாங்கலாம் என மனதிற்குள்ளேயே கணக்கிட்டான். பின்னர் அவர்களை நோக்கி, “இயேசுவைக் காட்டித் தருவேன். அதற்குப் பதிலாக எனக்கு நீங்கள் முப்பது வெள்ளிக் காசுகளைத் தப்பாது தருவீர்களா?” என்றான்.
யூதாசின் கருத்தைக் கேட்ட குருமார்கள் சிறிதும் சிந்திக்காமல் அவன் கேட்ட காசுகளைத் தருவதற்கு ஒப்புக் கொண்டனர். ஒரு சகாப்தத்தின் சரிவுக்கு சதித் திட்டம் அங்கே சப்தமில்லாமல் ஒப்பந்தமானது. யூதாஸிடம் எப்படி இயேசுவைக் காட்டிக் கொடுப்பாய் என்று குருமார்கள் கேட்டார்கள். அதற்கு அவன், “இயேசுவை நான் கட்டிப் பிடித்து முத்தமிட்டுக் காட்டித் தருவேன். மரணத்தின் மாளிகைக்கு அவரை முத்தத்தின் முன்னுரையோடு அனுப்பி வைப்பேன்” என்றான்.
மாலையில், பன்னிரு சீடர்களோடு இயேசு அமர்ந்தார். அப்பத்தை எடுத்துப் பிரார்த்தனை முடித்துப் பகிர்ந்தளித்து, சீடர்களைப் பார்த்து, “நண்பர்களே, உங்களில் ஒருவன்தான் என்னைக் காட்டிக் கொடுப்பான்” என்றார். தெளிவாய் வந்தது தெய்வ வாக்கு. மேலும் இயேசுவானவர், “ஒட்டிக் கொண்டிருக்கும் உங்களில் ஒருவன் என்னை காட்டிக் கொடுப்பான். என்னைச் சுட்டிக் காட்டும் அவனுக்கு மிகப்பெரிய கேடு வரும்” என்று சீடர்களைப் பார்த்துக் கூறினார்.
அதனைக் கேட்ட சீடர்கள் அதிர்ந்தனர்.
“எங்களில் ஒருவனா? ஆண்டவரே எங்களைப் பார்த்து ஏனிந்த சந்தேகம் கொள்கின்றீர்? எங்காவது வானுக்கு எதிராகப் பறவைகள் வழக்கிடுமா? நதியின் துளிகள் மழைக்கு எதிராய் மனுக் கொடுக்குமா? எங்களில் யார் என்று சொல்லுங்கள் ஆண்டவரே, யார் அவன் சொல்லுங்கள்...” என்று கூறிச் சினத்தில் சீடர்கள் முகமும் கண்களும் சிவந்தனர்.
அவர்களின் கூற்றினைக் கேட்ட இயேசு, “என் பாத்திரத்தில் கையிட்டு என் முகத்தில் புன்னகையிட்டு, என்னோடு இருக்கும் ஒருவனே அவன். நம்பிக்கை மீது கோடரி வைத்த அவனுக்கு ஐயோ கேடல்லவா நிகழப் போகிறது” என்றார்.
அருகிலிருந்த யூதாஸ் அவரிடம், “உங்களைக் காட்டிக் கொடுப்பவன் நானா ஆண்டவரே? என ஒன்றுமறியாத அப்பாவியாய்க் கேட்டான்.
அதற்கு இயேசு, “நீயே நடக்கப் போவதைச் சொன்னாய்” என்று கூறிப் புன்னகைத்தார்.
மரணத்துக்கு முந்தைய, இறுதி இரவுணவில் இயேசு சீடர்களின் பாதங்களைத் தண்ணீரால் கழுவித் துண்டால் துடைத்தார். அதனைக் கண்ட சீடர்கள் இயேசுவைப் பார்த்து, “ஐயன்மீர்….! உம் பாதம் பட்ட நிழலில் நடந்தவர்கள் நாங்கள். நீர் எங்களின் பாதங்களைத் தொட்டுக்
கழுவுவதா? அரச கிரீடம் ஒன்று அடிமை ஆடை துவைப்பதா? இது அடுக்காது” என்று பல அதிர்ச்சிக் கேள்விகளைக் கேட்டுச் சீடர் குழு நடுங்கியது.
நடுங்கிய அவர்களைப் பார்த்து இயேசு, எதுவும் கூறாது, “தலைவன் என்பவன் பணியாளன்” என்பதைத் தனது பணி மூலம் சீடர்களுக்குப் புரிய வைத்தார். அப்போது பேதுரு, “இயேசுவே நீரா என் பாதங்களை நீரால் கழுவுவது? பரமனே இது சரியானதல்லவே” என்று கண்கலங்கத் துன்பம் நிறைந்த வார்த்தைகளைக் கூறினார்.
அவரைப் பார்த்து இயேசு, “பேதுருவே நான் உன் பாதங்களைக் கழுவாவிடில், உனக்கு என்னோடு தொடர்பில்லை என்று பொருள். தாழ்த்துவதே தலையாய செயல். நான் இவ்வாறு செய்வது பின்னர் உனக்குப் புரியும்” என்று கூறினார். அதனைக் கேட்ட பேதுரு, “அவ்வாறெனில், பாதம் மட்டும் ஏன் கழுவ வேண்டும் பரமனே? என் தலையில் கூட தண்ணீரை ஊற்றலாமே?” என்று பதட்டத்தில் பேசினார்.
அதற்கு இயேசு, “குளித்தவன் தூய்மையாய் இருக்கிறான். எனவே, பாதம் கழுவினாலே போதுமானது. தலையில் இருந்தாலும் தரையில் கிடந்தாலும் கிரீடம் கிரீடம் தான். பணிவில் இருப்பவன் மட்டுமே பணியில் இருக்க வேண்டும். உங்கள் ஆண்டவரான நானே உங்கள் பணியாளனானேன்! நீங்களும் எந்தக் காரணங் கொண்டும் கர்வத்தை அணியாமல், கவனமாய் இருங்கள். தற்பெருமைத் தளைகளைத் துளிர்க்க விடாதீர்கள் பணிவின் துணிவை வளருங்கள்”. என்றார்.
பின்னர் இயேசு கோதுமை அப்பத்தைக் கைகளில் ஏந்தி, “இது என் உடல்” என்றார். திராட்சை இரசக் கிண்ணத்தை எடுத்து, “இது என் இரத்தம்” என்றார். “என் உடலை உண்டு என் இரத்தத்தைக் குடித்து என் செயல்களுக்குள் செல்லுங்கள். இதுவே, என் சாவுக்கு முந்தைய இரவு உணவு. இனிமேல் வருவதெல்லாம் வேதனையின் காலம். போ யூதாஸ், நீ செல்ல வேண்டிய தருணம் இது செய்ய வேண்டியதைச் செய்” என்றார்.
யூதாஸ் அங்கிருந்து எழுந்து விலகிச் சென்றான்.
பின்னர் இயேசு அங்கிருந்த சீடர்களைப் பார்த்துப் பேசத் துவங்கினார். “இப்போது மானுட மகனின் மாட்சிமைக் காலம். இந்தக் காலம் இன்னும் சில நாள் மட்டுமே என் காட்சிக் காலம். பின் நீங்கள் என்னைக் காணல் இயலாது. நான் வரும் இடத்துக்கு இப்போது நீங்கள் வருவதும் நேராது. உங்கள் நம்பிக்கையின் மேல் சில பூக்களைத் தூவ நான் மீண்டும் வருவேன். உங்களுக்கான என் கட்டளை ஒன்றே ஒன்றுதான். அனைவரின் மீதும் நீங்கள் அன்பு செய்யுங்கள். நான் உங்களுக்குக் காட்டிய அன்பின் ஆழத்தை நீங்கள் எல்லோர் மீதும் காட்டுங்கள் பேச்சினால் பெரியவர்களாகக் காட்டிக் கொள்ளும் மனிதர் முன், நீங்கள் புயல் போன்ற செயல்களால் அறியப்படுங்கள். நீங்கள் என் பணியாளர் அல்ல; ஏனெனில் தலைவன் செய்வதை பணியாளன் அறியான். நீங்களோ என் தோழர்கள். என்னோடான பயணத்திற்கு இணங்கியவர்கள். உங்களுக்கும் எனக்குமிடையே மறைக்கும் திரைகள் தொங்கியதில்லை. எதிர் கருத்துக்கள் எதுவும் தங்கியதில்லை. உலகம் உங்களை வெறுக்கும். கவலைப் படாதீர்கள் என்னையே மறுத்தவர்கள் அவர்கள். நீங்கள் இனி உலகின் சொத்துக்களல்ல, விண்ணக வித்துக்கள். நீங்கள் துயருறுவீர்கள் அப்போது உலகம் மகிழும். நீங்கள் புலம்புவீர்கள் அப்போதும் உலகம் மகிழும். ஆனால், உங்கள் புலம்பல் நீளாது. வலியின் எல்லையெல்லாம் மீண்டும் என்னைக் காணும்போது மாண்டு போகும். ஆனந்தம் மீண்டும் மீண்டு வரும். அபோது நீங்கள் மகிழ்ச்சியின் சக்கரவர்த்திகளாய், பூவுலகின் அரியணையில் புன்னகை புரிவீர்கள். உங்கள் அகமகிழ்ச்சி அழிக்கப்பட மாட்டாது! என்னிடம் நீங்கள் விண்ணப்பங்கள் வைத்ததில்லை. இனிமேல் கேளுங்கள்… தரப்படும். உங்களுக்கு எதுவும் மறுக்கப் படாது” என்று அவர்களுக்கு அறிவுரை பகன்றார்.
பின் வானத்தை நோக்கி, “தந்தையே, நேரமாகி விட்டது. உன் மகனை மகிமைப் படுத்தும்” என்றார். சீடர்கள் ஒன்றும் புரியாது, இயேசுவின் வார்த்தைகளை தமது உள்ளத்துக்குள் உருட்டிக் கொண்டிருந்தார்கள்.
சீடர்களோடு இயேசு ஒலிவ மலைக்கு சென்றார். அங்கு சென்றவுடன் சீடர்களைப் பார்த்து, “அன்பானவர்களே! இன்றிரவே, நீங்கள் என்னைக் குறித்து இடறல் படுவீர்கள். மேய்ப்பனை வெட்டியபின் மந்தைகள் சிதறடிக்கப்படும்” என்றார். மரத்தை முறித்துவிட்டால் பறவைகள் பறந்துவிடும் என்பதை இயேசு அறியாதவரா ?
இயேசு கூறியதைக் கேட்ட பேதுரு மனம் வருந்தினார். அவர் இயேசுவைப் பார்த்து, “ஐயன்மீர்! யார் உம்மை மறுதலித்தாலும் நான் மறுதலிக்கவே மாட்டேன்” என்றார்.
அதனைக் கேட்டு இயேசு சிரித்தார். பின்னர் பேதுருவைப் பார்த்து, “அன்பான பேதுருவே இன்று இரவு சேவலின் சத்தம் கேட்கும் முன் மூன்றுமுறை நீ என்னை மறுதலிப்பாய்” என்றார்.
பேதுருவோ, “இல்லை இயேசுவே… இல்லை. சாவதென்றாலும் அது உம்மோடுதான்” என்று முன்மொழிந்தார்.
சீடர் அனைவரும் அதை வழிமொழிந்தனர்.
பின்னர் இயேசு கெத்சமெனித் தோட்டம் வந்தார். பேதுரு, யாக்கோபு, யோவான் அவரோடு இருந்தனர். இறப்புக்கு முந்தைய இரவின் வேதனையில் இயேசு, “தந்தையே முடியுமெனில் இந்த வலி மடிந்து போகட்டும். ஆயினும், என் விருப்பம் முக்கியமன்று உம் விருப்பமே என் பாக்கியம்” என்று செபித்தார்.
மனிதனாய் வந்த மனுமகன் வேதனையின் வார்த்தைகளை வெளியிடுகிறார். ஆனாலும் தந்தையின் விருப்பத்துக்கு தலை வணங்குகிறார். சீடர்களோ உறக்கத்தின் உச்சத்தில் விழுந்து கிடந்தார்கள். அவர்கள் நிலைமையின் தன்மையை உணராதவர்களாக இருந்தார்கள்.
பெருமழை வருவதறியாமல் பறந்து திரியும் பஞ்சு போல, அவர்கள் ஓய்வில் சாய்ந்திருந்தார்கள். ஒருமணி நேரம் செபிக்க உங்களுக்கு முடியாதா? “உள்ளம் ஊக்கமானது, ஊனுடல் வலுவற்றது தான். ஆயினும் விழித்திருந்து செபியுங்கள்” கூறிய இயேசு, இரண்டாம் முறையும்
தனியே சென்று தந்தையிடம் செபித்தார்.
“நான் பருகினால் மட்டுமே இந்த துன்பத்தின் பாத்திரம் காலியாகுமெனில் விருப்பத்துடன் பருகுவேன். உம் திட்டம் மட்டுமே நிறைவேறட்டும்” என்றார். மூன்றாம் முறையாக மீண்டும் மனசும் உடலும் மண்டியிட இயேசு செபித்தார். ஆழமான செபத்தின் கரைகளில் நிம்மதிக் காற்று அவரை வருடியது. இதயம் எதையும் தாங்குவதற்குத் தயாரானது. பின் சீடர்களிடம் இயேசு வந்து, “தூக்கம் போதும் துக்கத்தின் காலம் துரத்துகிறது. என் சாவுக்கான மேளம் சப்தமிடுகிறது. எழுந்திருங்கள் போகலாம்” என்றார். நீண்ட உறக்கத்தில் மூழ்கிக் கிடந்த சீடர்கள் அந்த விடியலுக்கு வெகுதூரமிருக்கும் அதிகாலையில் உறக்கத்தை உதறி எழுந்தார்கள்.
யூதாஸின் துரோகம்
அப்போது யூதாஸ் தலைமையில் அவர்களை நோக்கி ஆயுதங்களோடு ஒரு கூட்டம் வேகமாக ஓடி வந்தது. யூதாஸ் அவர்களுக்கு முன்பாக வந்தான். வந்தவன் இயேசுவைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டான். இயேசு அவனிடம், “யூதாஸ், முத்தம் அன்பின் அடையாளம்; அதைச் சுட்டிக் காட்டும் அடையாளமாக்கி அசிங்கப்படுத்தி விட்டாயே” என்றார்.
அதனைக் கேட்ட யூதாஸ் எதுவும் கூறாது அங்கிருந்து அகன்றான். இயேசுவை அடையாளங் கண்டு கொண்ட படை வீரர்கள் உடைவாள்களை உருவிக் கொண்டு கள்வனை வளைக்கும் காவலர் போல இயேசுவைச் சுற்றி வளைத்தனர். அப்போது கோபமுற்ற இயேசுவின் சீடர்களுள் ஒருவன் கூர் வாளெடுத்து உருவி வீரன் ஒருவனின் காதைக் கத்தரித்தான்.
இயேசு அச்சீடரைத் தடுத்தார். சீடரைப் பார்த்து, “உன் வாளை உறையில் போடு, வாளெடுத்தவன் வாளால் மடிவான். இவை நிகழ வேண்டும் என்பதே ஏற்பாடு” என்றார்.
பின்னர் துண்டாய் விழுந்து துடித்த செவியைத் தேடி எடுத்து வெட்டுண்ட இடத்தில் தொட்டு ஒட்டுப் போட்டார் இயேசு.
தீமையின் பறவைக்கும் நன்மையின் சிறகுகளை நல்குகிறார். தனது காதைத் தடவிப் பார்த்த காவலனின் விரல்கள் காதில் வெட்டுப்பட்ட சுவடு கூட இல்லாததால் திடுக்கிட்டுத் திரும்பின. தனக்கான பலிபீடம் தயாரித்தவர்களோடும் பரமனிடம் இருந்த அன்பு இயேசுவைப் பிடிக்க வந்த படைவீரர்களை உலுக்கியது.
ஆனாலும் அவர்கள், ஆள்வோரின் கட்டளைக்குக் கட்டுப்பட்டவர்கள். ஆணையின் மிதியடிகளை தூக்கிச் சுமப்பவர்கள். இயேசு அவர்களைப் பார்த்துத் “திருடனைப் பிடிக்க வருவதுபோல் இருட்டைக் கூட்டிக் கொண்டு திரிவதேன்? எதற்கு இந்த அதிகாரத் தடிகளும், மரணம் சுமக்கும் உடை வாள்களும்? நான் நாள் தோறும் கோயிலில் நற்செய்தி அறிவிக்கிறேன் அப்போதெல்லாம் நீங்கள் ஆயத்தமாகவில்லையா?” என்றார். இழுத்துச் செல்ல வந்தவர்கள் ஒன்றும் பதிலுரைக்காது இயேசுவை அழைத்துச் சென்றார்கள். உடனிருப்பேன் என்ற சீடர்கள் இயேசுவை விட்டுவிட்டு உடனே ஓடிப் போயினர்.
இயேசு காய்பா என்பவனிடம் கையளிக்கப்பட்டார், அவன் ஒரு தலைமைக் குரு. பொய்சாட்சிகளுக்காய் அவர்கள் பிணங்களைப்
பிராண்டினார்கள். எந்த வலையில் போட்டு இவனை இறுக்குவதென்று இதயத்தைக் கசக்கினர். இறுதியில் இவன் ஆண்டவரின் ஆலயத்தை இடித்துக் தள்ளுங்கள் மூன்று நாட்களில் மீண்டும் கட்டுவேன் என்றான், என்றனர். உன் பதில் என்ன? தலைமைக் குரு அதிகாரத் தோரணையில் அகங்காரமாய் கேட்டான். இயேசுவோ மெளனத்தின் மீதே மனம் சாய்த்திருந்தார். நீ மெசியாவா? குரு மீண்டும் கொக்கரித்தார்.
நீரே சொல்லிவிட்டீர். இனிமேல் மனுமகனின் மாட்சிமை வருகையை நீர் கண்டிப்பாய் காண்பீர் என்றார். இதோ… தேவ நிந்தனை. இனியென்ன சாட்சி வேண்டும் இவன் சாட்சியின்றி சாவுக்குரியவன். கூடியிருந்தவர்கள் தலைமைக் குருக்களின் சூதுக்குள் குடியிருந்தவர்கள், அவர்கள் இயேவைக் கொல்லச் சொல்லி நச்சரிக்க வேண்டுமென எச்சரிக்கப்பட்டவர்கள்.
சதிகார எதிராளிகளின் அவையில், நீதிப் பறவை நிர்மூலமாக்கப் பட்டது. வாழ்வின் உச்சத்தைப் போதித்தவர் கன்னங்களில் எச்சில் உமிழப்பட்டது. உன்னதங்களின் தேவனின் கன்னங்களில் அறைகள் விழுந்தன. வீதிகளில் இன்னும் வெளிச்சம் விழவில்லை. மக்கள் இன்னும் விழித்து எழவில்லை.
பேதுரு மறுதலித்தல்
கூடத்தின் முற்றத்தில் குளிரைக் கொலை செய்ய விறகுக்கு மேல் வன்முறை வெப்பம் கொழுந்து விட்டு எரிந்தது. பேதுரு, வெப்பத்தின் தெப்பத்தில் முக்காடிட்டு மறைந்திருந்தார். ஊழியக்காரி ஒருத்தி பேதுருவைப் பார்த்ததும் புருவம் சுருக்கினாள், ஐயம் பெருக்கினாள். “நீ யேசுவோடு இருந்தவனா?” கேள்வி விழுந்த வேகத்தில் தடுமாறினார் பேதுரு.
“நானா? இல்லையே!” படபடத்தது பதில். முகத்தை இன்னும் முறையாய் மறைத்து மறைந்திருந்தார் பேதுரு. இயேசுவுக்கு என்ன நிகழ்கிறது என்பதை அறிந்து கொள்ளும் வலி கலந்த ஆர்வம் அவருக்கு. இரண்டாவதாய் இன்னொருத்தி அருகே வந்து பதுங்கிய பேதுருவிடம் பேசினாள்.
பேதுருவின் பேச்சில் உழைக்கும் வர்க்கத்தின் வாசனை, மீன் மணத்துடன் மிதந்திருக்க வேண்டும். “உன் பேச்சே உன்னை காட்டிக் கொடுக்கும் கண்ணாடி, நீ அவனோடு இருந்தவன் தான்” அவள் அழுத்தமாய் உரைத்தாள். “அது நானில்லை, அவர் யாரென்றே அறியேன்” பேதுரு மீண்டும் தப்பித்தல் பதிலை ஒப்பித்தார்.
அவள் தன் சந்தேகத்தை சில காதுகளுக்குள் ஊற்றினாள். மூன்றாம் முறையாக, வேறு சிலர் பேதுருவின் பக்கம் வந்தனர்.
“உண்மையைச் சொல். நீ அவனுடைய சீடன் தானே?” மிரட்டல் குரலில் மிரண்டு பதிலிறுத்தார் பேதுரு. “இல்லை இல்லை இல்லவே இல்லை”. மறுதலித்த ஓசை முடிவடைந்த வினாடியில் சேவல் ஒன்று எங்கோ சப்தமிட்டது. பேதுருவின் உள்ளத்தில் அதிர்ச்சிப் பருந்து வந்தமர்ந்தது. சேவல் ஒலி கேட்கும் முன் மும்முறை என்னை மறுதலிப்பாய் எனும் இயேசுவின் ஒலி மனதில் எதிரொலிக்க வெளியே சென்று கதறி அழுதார்.
இயேசுவின் சத்திய வார்த்தைகள் அனைத்தும் நடந்தேறின.
குருத்துரோகியின் முடிவு
இயேசு, பிலாத்துவின் அரண்மனைக்கு பழிவாங்க அழைத்துச் செல்லப்பட்டார். செய்திகள் கேள்விப்பட்ட யூதாஸ் தனது குருவைக் காட்டிக் கொடுத்தமைக்காக மனம் வருந்தினான். இயேசு தண்டனைகளிலிருந்து தப்பிவிடுவார் என்ற கணக்கு தப்பாகிவிட்டதில் கலங்கினான். சூரியனை உருக்கிக் குடுவையில் கொட்டுவது இயலாதென்றே இறுமாந்திருந்தான் அவன்.
பலமுறை இயேசு சதிகாரர்களின் சதி வளையத்தை எளிதாக வளைத்தெறிந்திருக்கிறார். பிடிக்க வந்தவர்களிடமிருந்து மாயமாய் மறைந்திருக்கிறார். அப்போதெல்லாம் இயேசுவின் வேளை வரவில்லை. இப்போது வந்ததென்பதை யூதாசின் மனம் அறியவில்லை.
மாசற்ற இரத்தத்தை மாட்டி விட்டேன் முத்தத்தின் ஈரத்தால் காட்டிக் கொடுத்துவிட்டேன். வெள்ளை மனிதனை வெள்ளிக் காசுக்காய்
விற்று விட்டேன். கதறிய யூதாஸ் குருக்களிடம் போய் கையேந்தினான். “அவரை விட்டு விடுங்கள். இயேசு கடவுளின் மனிதன்; மனிதனின் கடவுள். நீங்கள் கொடுத்த வெள்ளிக் காசுகள் இதோ இந்தச் சுருக்குப் பையில் இருக்கின்றன. அவற்றைப் பெற்றுக் கொண்டு அவரை விட்டுத் தாருங்கள்” என்று மன்றாடினான். முட்டையை விட்டு வெளிவந்த பறவை மீண்டும் முட்டைக்குள் போவது சாத்தியமில்லையோ அதுபோன்றே யூதாசின் விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டது.
யூதாஸ் தன் கையிலிருந்த காசுகளை ஆலயத்தில் விட்டெறிந்தான். இயேசுவே மன்னியும் என இதயங் கிழியக் கதறினான். வெள்ளிக் காசுகள் ஆலயமெங்கும் அனாதையாய் ஓட, சுருக்குப் பை பாவத்தின் அடையாளமாய் சுருங்கிக் கிடக்க, யூதாஸ் சுருக்குக் கயிற்றில் உயிரைச் சுருக்கினான்.
தனக்கு அனைத்துமாக இருந்து வழிகாட்டிய குருவை முப்பது காசுகளுக்காகக் காட்டிக் கொடுத்த குருத்துரோகியின் முடிவு சுருக்குக் கயிற்றில் முடிந்தது. யூதாஸால் காட்டிக் கொடுக்கப்பட்ட இயேசு சிலுவையில் அறையப்பட்டுப் புதைக்கப்பட்டு, மீண்டும் உயிர்த்தெழுந்தார். துரோகத்தின் மறு பெயரானான் யூதாஸ். துரோகத்தால் வீழ்ந்த இயேசுவோ தெய்வமாக அனைவராலும் வழிபடப்பட்டார்; உலக ரட்சகரானார். உலக வரலாற்றில் யூதாஸின் துரோகம் அழியாத கறையாகத் திகழ்கிறது. சீடனாய் ஒரு மூடன் தம்முடன் இருந்தபோதும் இயேசு அவனைத் தண்டிக்கவில்லை. அவன் செய்யப் போகும் துரோகச் செயலை அறிந்திருந்தும் அவனது அழிவிற்காகப் பெரிதும் வருந்தினார். ஆம்! நட்பும் நம்பிக்கையும் ஒன்றோடு ஒன்று நெருக்கமாக இருக்கும்போதே துரோகமும் ஒன்றாக நெருக்கமாக இறங்கி விடுகிறது. அப்போது களைபோன்று துரோகம் தெரிகிறது. அக்களைகளை விலக்கிவிட்டுச் செல்வதில்தான் நமது வாழ்க்கை அடங்கி இருக்கிறது… களைகளைப் பிடுங்கி எறிந்து விட்டு வாழ்க்கையை வளமாக்குவோம்….
வீரத்தையும் வீரர்களையும் வீணர்கள் மட்டுமா காட்டிக் கொடுப்பர்…? இல்லை… இல்லை….புனிதமான கோயிலில் அதிகாரிகளாக விளங்குவோரும் காட்டிக் கொடுப்பர்… அவர்கள் பாழாய்ப்போன பணத்திற்காக ஆசைப்பட்டுக் காட்டிக் கொடுக்கும் துரோகிகளாக மாறுவர்…அப்படிப்பட்ட ஒரு நம்பிக்கைத் துரோகி வேறெங்கும் இல்லை…நமது தென்னிந்தியாவில்தான் இருந்தான்…அவனது துரோகத்தால் தியாக தீபம் ஒன்று அணைந்த வரலாறு உங்களுக்குத் தெரியுமா…? அத்துரோகியைப் பற்றித் தெரிந்து கொள்ள அடுத்த பகுதி வரை காத்திருங்கள்!

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.