மனித சமுதாயம் பலரால் கட்டமைக்கப்பெற்றுள்ளது. பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள், பணிசெய்யும் இடத்தில் உடன் பணி செய்வோர் போன்ற பலரால் சூழப்பெற்றது மனித வாழ்க்கை. அவர்களை அரவணைத்துப் போவது என்பது மிகவும் இன்றியமையாதது.
உறவினர்களை அரவணைத்துப் போகும் ஒருவன் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சண்டை போட்டுக் கொண்டு அமைதியாக வாழ்ந்துவிட முடியாது. பக்கத்து வீட்டுக்காரர்களையும் அன்பு பாராட்டி உறவினர்கள் போல பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
அமுதம் உண்க அயல் இல்ஆட்டி என்று ஒரு சங்க இலக்கியத் தலைவி பாடுகிறாள். அதாவது பக்கத்து வீட்டுப் பெண் யாருக்கும் கிடைக்கப்பெறாத அமுதத்தை உண்ணட்டும் என்று வாழ்த்துகிறாள். என்ன காரணம் என்றால் தலைவன் வருவானா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறாள் தலைவி. அந்நேரத்தில் பக்கத்து வீட்டுப் பெண் எதேச்சையாக நிச்சயம் வருவார் என்று சொல்கிறாள். பக்கத்து வீட்டுப்பெண்ணின் சொல் தலைவன் வந்துவிடுவான், கவலைப் படாதே என்று சொல்வது போல தலைவிக்கு அமைந்துவிட்டது. இதன் காரணமாக பக்கத்துவீட்டுப் பெண் அமுதம் உண்ணட்டும் என்று வாழ்த்துகிறாள் தலைவி.
எனவே அக்கம் பக்கத்தார், நண்பர்கள், உறவினர்கள் இவர்கள் யாவரையும் நெருங்கிய அன்பு பூண்டு மனிதர்கள் வாழ்க்கையை நடத்த வேண்டும். எப்படி உறவினர்களைப் பாதுகாத்து நம்மோடு அன்புடன் இருக்கச் செய்வது? ஔவையார் இதற்கு ஓர் அருமையான வழியைக் காட்டுகின்றார்.
மரம் பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
இரந்து அழைப்பார் யாவரும் அங்கில்லை - சுரந்து அமுதம்
கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத்தவர்
என்று ஒரு நல்ல யோசனையை வழங்குகிறார் ஔவையார்.
இனிமையான பழங்களைத் தரும் மரம் ஒன்று ஊர் நடுவில் உள்ளது என்று வைத்துக் கொள்வோம். அது இனிமையான பழங்களை தந்து கொண்டிருக்கும் நேரத்தில் யாரும் அழைக்காமல் வௌவால் பறவைகள் அப்பழங்களை உண்ண வந்துவிடுகின்றன. பழந்தின்னி வௌவால் என்று ஒரு வகை வௌவால்களில் உண்டு. அவை இனிமையான பழங்களை நாடித் தன் பயணத்தைச் செய்து கொண்டிருப்பனவாகும். வௌவால்கள் இரவு நேரத்திலேயே பெரும்பாலும் வெளியில் கிளம்புகின்றன. பழங்களை, பூக்களைப் பார்க்கவே கண்களை விழித்து நோக்குகின்றன. இது விலங்கினத்திலும் சேர்த்துக் கொள்ளத்தக்கது. பறவையினத்திலும் சேர்த்துக் கொள்ளத்தக்கது. மிகப் பழமையான வரலாறு உடையது வௌவால்.
இரவு நேரத்தில் யாரும் அழைக்காமலே பழங்கள் பழுத்திருக்கும் மரத்தை நாடி வௌவால்கள் வருகின்றன. மரங்களில் இருக்கும் பழங்களை உண்ணத் தொடங்கி விடுகின்றன. அதுபோன்று உறவினர்கள் பழுத்த மரமாக இருக்கும் தன் உறவுக்காரரை நாடி வரத்தொடங்குவர். அவ்வாறு வருபவர்களை, மரம் எப்படி மனம் கோணாமல் வௌவாலுக்கு பழங்களைத் தருகிறதோ அதுபோல அவர்கள் விரும்பும் பலவற்றையும் தந்து மனம் கோணாத உறவாக உறவினர்களை அமைத்துக் கொள்ளவேண்டும்.
அமுதம் போன்ற பாலைத் தன் கன்றுகளுக்குத் தரும் பசுக்களைப் போல உறவினர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று ஔவையார் குறிப்பிடுகிறார். கன்றுகுட்டியை ஈன்ற பசுவானது தன் கன்றுக்குட்டியைப் பார்த்த உடனேயே பாலை சுரந்து தர ஆரம்பித்துவிடும். அதுபோல உறவினர்களைப் பார்த்தவுடனேயே அவர்களை மதிக்கும் வகையில் பற்பல பொருள்களை, பலவகை உணவுகளைத் தந்து உபசரிக்க வேண்டும். இந்த உபசரிப்பில் மகிழ்ந்து நம்மோடு இருக்கும் உறவினை உறவினர்கள் மேம்படுத்திக் கொள்வார்கள்.
ஆனால் சில நேரங்கள் உறவினர்களைக் கண்டதும், அவர்களின் குறைகளே கண்களுக்குத் தெரியும். அக்குறைகளை அவர்கள் வந்த காலத்தில் மேலும் பேசி குறைகளை வலியுறுத்தினால் அது அன்பினைப் பாதிப்படையச் செய்துவிடும். உறவினர்கள் எதிரிகளாகி விடுவார்கள்.
குறைகள் இருந்தால் மறந்துவிட்டு உறவினர்களுக்குப் பலவற்றையும் வழங்கினால் அதுவே உறவைப் பலப்படுத்தும் என்பது ஔவையாரின் சிந்தனையாகும்.
பொருளை அடிப்படையாக வைத்து இயங்கும் உலகம் இது. எனவே உறவுகளை மேம்படுத்திக் கொள்ள பொருளைச் செலவழிக்க வேண்டியுள்ளது. பொருளைக் கொடுத்து அன்பைப் பெருக்கும் பாச விளையாட்டு உறவினர்களைப் பேணும் விளையாட்டு ஆகும்.