மனிதர்களில் இருவகை உண்டு என்று கணக்கிடுகிறார் ஔவையார். அவரின் கணக்கு புதுமையானதாக இருக்கிறது. மனிதர்கள் எல்லோருக்கும் கண்கள், காதுகள், மூக்கு, கைகள், கால்கள் எல்லாம் ஒரே அமைப்பில், ஒரே செயல்பாட்டில் உள்ளன. இவ்வாறு இவை ஒன்றாக இருப்பதால் எல்லா மனிதர்களும் ஒரே நிலைப்பட்டவர்கள் என்று சொல்லிவிட இயலுமா?
உறுப்புகள் ஒன்றானாலும் மனிதர்க்கான சக்தி, அறிவு, உள்ளம் என்று பலவும் வேறுபடுகிறதே... ஏன்? என்று கேள்வி எழுப்புகிறார் ஔவையார்.
மனிதர்களின் உறுப்புகள் ஒன்றானாலும் அவர்களின் செயல்பாடுகள் இருவகைகளில் அமைகின்றன.
சொல்லாமலே செய்யத் தெரிந்தவர்கள் ஒரு குழுவினர். சொல்லித் தந்தும் செய்யத் தெரியாதவர்கள், செய்ய மறுப்பவர்கள் மற்றொரு குழுவினர்.
மரங்களிலே இருவகை உண்டு. விதைத்து வளர்ந்து பூத்துக் காய்த்துக் கனிகளைத் தரும் மரங்கள் ஒரு புறம். பூக்களைத் தரமாலே காய்களைத் தரும் மரங்கள் மற்றொரு புறம். பூக்காமலே காய்க்கும் மரங்கள் உண்டா? நிறைய இருக்கின்றன. அத்தி மரம், ஆலமரம், பலா மரம், அரசமரம் போன்ற மரங்கள் பூவாமல் காய்களைத் தந்து நிற்கும் மரங்கள் ஆகும்.
பூக்காமலே காய்க்கும் மரங்களைப் போன்றவர்கள் முதல் குழுவினர். அதாவது சொல்லாமலே செயல்களைப் புரிந்து கொண்டு செய்யத்தக்கவர்கள். இவர்கள் மிக்க வலிமை உடையவர்கள். ஒரு இடத்திற்குச் சென்றால் சொல்லாமலே அச்செயலின் தன்மைகளை உணர்ந்து அறிந்து செயல்படுவர்கள் இவ்வகையினர்.
நிலத்தில் விதைகளை விதைக்கின்றோம். நீர் வார்க்கின்றோம். இருந்தாலும் பல விதைகள் முளைக்கின்றன. சில விதைகள் முளைக்காமல் பயனற்றுப் போய்விடுகின்றன. இதுபோன்று சொல்லித் தந்தும் செய்யாத பல மனிதர்கள் இருக்கின்றார்கள். இவ்விரு குழுவினரில் சிறந்தவர்கள் யார் என்பது சொல்லாமலே தெரிந்துவிடும்.
ஒரு கல்லூரி ஆசிரியர் மாணவர்களிடம் நாளைக்குச் செய்ய வேண்டுவன குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறார். நாளைக்கு மாணவர்களாகிய நீங்கள் ஒரு சமுதாயப் பணிக்குச் செல்ல இருக்கிறீர்கள். திருவிழாவில் கூட்ட நெரிசலைத் தவிர்த்து, அனைவரும் திருவிழாவில் பங்கெடுத்துக் கொள்ளும் நல் வாய்ப்பினை நீங்கள் பெற்றுத்தரவேண்டும். ஆகவே அனைவரும் வெள்ளை நிறச் சட்டை, வெள்ளை நிற கால்சட்டை அணிந்து வரவேண்டும் என்று மாணவர்களிடம் சொன்னார். அப்போது மாணவர்கள், ஐயா எங்களிடம் வெள்ளைச் சட்டை உள்ளது. வெள்ளை கால்சட்டை இல்லை என்றனர். வெள்ளை கால்சட்டை என்பது வேறொன்றும் இல்லை. வெள்ளை பாண்ட் இதைத்தான் நான் வெள்ளைக் கால்சட்டை என்றேன் என்று ஆசிரியர் விளக்கம் தந்தார்.
அப்போது மாணவர்கள், ஐயா அதுதான் ஐயா வெள்ளைக் கால்சட்டை, வெள்ளை பாண்ட் எங்களிடம் இல்லை என்றார்கள். திருவிழாவிற்காக அனைவரையும் வெள்ளை கால் சட்டை தைக்கச் சொல்லமுடியாது. தைப்பதற்கான நேரமும் இல்லை, பொருளும் இல்லை. எனவே வெள்ளைச் சட்டை, கருப்பு கால்சட்டை அதாவது கருப்பு பாண்ட் போட்டுக் கொண்டு மாணவர்கள் வரவேண்டும் என்று இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பெற்றது.
நன்றாகக் கவனியுங்கள். இப்போது ஒரு மாணவர் ‘‘ஐயா கருப்பு சட்டை வெள்ளை பாண்ட் தானே போட்டு வரவேண்டும்’’ என்றார். எல்லா மாணவர்களும் கொல் என்று சிரித்தார்கள். அதாவது கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட். ஆனால் அந்த மாணவர் மனதில் விழுந்தது கருப்பு சட்டை, வெள்ளை பாண்ட்.
ஆசிரியர் கோபப்படாமல், எப்படி ஆசிரியர் சொல்வதைத் தப்பாகவே புரிந்து கொள்கிறார்கள் என்று யோசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த அந்த மாணவர் ‘ஐயா கோபித்துக் கொள்ளாதீர்கள். கருப்பு சட்டை, வெள்ளை பாண்ட்தான் என்னிடம் உள்ளது, வெள்ளைச் சட்டை இல்லை’’ என்றான்.
இந்தப் பதிலில் மாணவரின் குறும்பு இருப்பதாகக் கருதினாலும் கருதலாம். அல்லது சொல்லாமல் செய்பவர்கள் வல்லவர்கள் நல்லவர்கள். சொல்லியும் செய்யாதவர்கள் முன்னேற்றத்தை இழப்பார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பூவாதே காய்க்கும் மரமும் உள மக்களுளும்
ஏவாதே நின்று உணர்வார் தாம் உளரே- தூவா
விதைத்தாலும் நன்று ஆகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றாது உணர்வு
என்பது ஔவையாரின் நல்வழிப் பாடலாகும்.
சொல்லாமல் செயலாற்றும் வல்லமை உடைய முதல் குழுவாக நம்மை இருக்கச் சொல்லி இப்பாடல் வலியுறுத்துகிறது. இவர்களே உலகில் முதன்மையானவர்கள். உலகம் வெற்றிகரமாக நடக்க இவர்களே தேவையானவர்கள்.