ஆளை வைத்து ஒருவரை எடை போட்டுவிட முடியாது. ஒருவரைப் பார்க்கும்போது அவரின் செயல் வல்லமை தெரிவதில்லை. எனவே எந்த மனிதரையும் சாதரணமாக எடை போட்டுவிட முடியாது. அறிவு, அன்பு, செயல் வல்லமை, பண்பு போன்றன மனிதர்களின் உள்ளே அமைந்து கிடக்கின்றன. இவற்றை அறியாமல் ஒரு மனிதரை முழுவதும் அறிந்து கொண்டோம் என்று சொல்ல முடியாது.
ஒருவர் எடை மேடைக்குச் செல்கிறார். அவரின் எடை அறுபத்தைந்து கிலோ என்று காட்டுகிறது. உடனே மருத்துவர் நலமான உடல். உங்களின் உயரத்திற்கு ஏற்ப எடை உள்ளது என்கிறார். கேட்டவருக்கும் மகிழ்ச்சி. சொன்னவருக்கும் மகிழ்ச்சி.
இதுபோன்று மனித மனத்திற்குள் இருக்கும் அன்பு, பண்பு, பாசம், அறிவு ஆகியவற்றை உடனே எடை போட்டு, என்ன தரம் என்று சொல்லிவிட முடியுமா?
அன்பு, பாசம், பண்பு, அறிவு ஆகியன ஒரே நிலையில் எல்லாக் காலத்திலும் இருந்து விடுமோ?, அல்லது தேயுமா?, அல்லது வளருமா? இவற்றை எல்லாம் சிந்திக்க வேண்டும்.
எனவே வெளித்தோற்றத்தை வைத்து மட்டுமே ஒரு மனிதரை அளந்துவிட முடியாது. வெளித்தோற்றத்தில் மிக உயரமாக ஒருவர் இருக்கலாம். சராசரி உயரத்திற்கும் குறைவாக ஒருவர் இருக்கலாம். இருவரையும் உயரத்தை மட்டும் வைத்து உயர்வு தாழ்வு சொல்லிவிடுவது தவறானது. அவர்களின் உள்ளம் எப்படிப்பட்டது என்பதை அறியவேண்டும்.
தாழம்பூ வாசனை மிக்கது. ஆனால் அதனை அப்படியே எடுத்துப் பெண்கள் தலையில் சூடிக்கொள்ள இயலுமா? முடியாதே.
தாழம்பூ வாசனை உடையது என்றாலும் அதன் வடிவம் ஏற்புடையதாக இல்லை. சிறிய பூதான் மகிழம்பூ. அதன் வாசம் அனைவரையும் ஈர்க்கிறது. பத்தடி தூரத்தில் அம்மரம் இருந்தாலும் தான் இருக்கிறேன் என்பதை அம்மரத்தின் பூக்களின் வாசம் உணர்த்தி விடுகிறது. கீழே விழுந்து மகிழம் பூக்களைக் கோர்த்துச் சிறுபிள்ளைகள் மாலையாக அணிந்து கொண்டு அழகு பார்க்கிறார்கள். காயக் காய இன்னும் மணம் தருகிறது மகிழம்பூ
மகிழ்ச்சியை நுகர்பவர்க்குத் தருவதால் அது மகிழ்ச்சிப் பூ என்று அழைக்கப்பட்டு பின்னர், மகிழம் பூவாக ஆகியிருக்கிறது.
எனவே பூக்களில் பெரிய பூ தாழம்பூ என்ற பெருமை அதற்கு உரியதாகிறது. வாசத்திலே பெருமை உடையது மகிழம்பூ என்பதால் அது பூவாசனையின் சிகரமாக இருக்கிறது.
கடல் மிகப் பெரிய நீர்ப்பரப்புதான். அதனில் பல டன் எடையுள்ள கப்பல்கள் மிதக்கின்றன. முத்துகள் விளைகின்றன. உப்பு கிடைக்கிறது. எல்லாம் சரிதான். ஆனால் அதனை ஒரு வாய் குடிக்க இயலுமா? முடியாதே...
கடலுக்கு அருகிலேயே மண்ணைத் தோண்டி நல்ல நீரைப் பெறுகிறார்கள். இரண்டடி தூரத்தில் உப்புக்கடல் இருந்தாலும், சிறிய மண் குழியில் கிடைக்கும் தண்ணீர் குடிக்க ஏற்றதாக இருக்கிறது.
கடல் பெரியதா? இந்த மணற்குட்டை பெரிதா? குடிக்க நீர் தருவதால் மணற்குட்டையே சிறப்பானதாகின்றது. இருந்தாலும் அளவில் பெரிய நீர் நிலை கடல். குடிக்கச் சிறந்த நீர் நிலை மணற்குட்டை.
எனவே ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு மனிதரும் முக்கியமானவரே என்ற எண்ணம் வரவேண்டும்.
மடல் பெரிது தாழை மகிழ் இனிது கந்தம்
உடல் சிறியர் என்று இருக்க வேண்டா- கடல் பெரிது
மண்ணீரும் ஆகாது அதன் அருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகிவிடும்
என்று பாடல் எழுதுகிறார் ஔவையார்.
சிறியர் என்று யாரையும் இகழ வேண்டாம். அவரவர் துறையில் அவரவர்கள் சிறப்பானவர்கள் ஆவர். இந்த எண்ணம் அனைத்து மனிதர்களிடத்திலும் வந்துவிட்டால் மனிதர்கள் சக மனிதர்களை மதிக்கும் திறம் பெற்றுவிடுவார்கள்.