நல்லவற்றை நாளும் சொல்லவேண்டி இருக்கிறது. ஒரு முறை நல்லதைச் சொன்னால் போதுமே என்ற எண்ணம் கூடத் தோன்றலாம். இன்றைக்கு உலகம் புதிதாக வளர்கிறது. புதிய உயிர்கள் தோன்றுகின்றன. புதிய நிகழ்வுகள் நடக்கின்றன. புதிய புரிதல்கள் ஏற்படுகின்றன. இன்று புதிதாய்ப் பிறக்கிறோம். சென்றது மீளாது. நேற்று சொன்னது நேற்றோடு நின்றுவிடுகிறது. எனவே இன்றும் சொல்லவேண்டி இருக்கிறது. என்றும் நல்லவற்றைச் சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும். கேட்பதற்கான தேவையும் அவசியமும் இருந்து கொண்டே இருக்கின்றன.
குறிப்பாக இளைஞர்களுக்குச் சொல்லித் தர வேண்டிய செய்திகள், ஒழுக்கங்கள், உயர்பண்புகள் நிறைய இருக்கின்றன. ஒருமுறை திருநெல்வேலியில் பெரிய மாநாடு நடைபெறுகிறது. அம்மாநாட்டில் திருக்குறள் பற்றிப் பேச சோழவந்தான் என்ற ஊரைச் சார்ந்த சண்முகனார் அழைக்கப் பெற்றிருந்தார். அவர் புகைவண்டியில் வருவதாக பயணத்திட்டம் இருந்தது.
இவரை வரவேற்க இரு மாணவர்களை அனுப்பியிருந்தார்கள். அவர்களிடம் புகைவண்டியின் இரண்டாம் வகுப்புப் பெட்டியில் ஒரு புலவர் வருவார். அவரை நீங்கள் அழைத்து வரவேண்டும் என்று குறிப்பிடப்பெற்றது. இம்மாணவர்கள் இருவரும் சென்றனர் புகைவண்டி வந்தது. இரண்டாம் வகுப்புப் பெட்டியின் அருகிலும் அவர்கள் நின்றார்கள். ஆனால் பெட்டியில் ஒருவரையும் காணவில்லை. எங்கே புலவர், எங்கே புலவர் என்று இரு மாணவர்கள் தேடிக் களைத்துப் போய் மாநாடு நடக்கும் இடத்திற்குச் சோர்வுடன் வந்து சேர்ந்தார்கள். விழாக்குழுவினருக்கு இது ஏமாற்றத்தை அளித்தது. புலவர் சண்முகனார் வராமல் நின்றுவிட்டாரோ என்ற கவலை அவர்களுக்கு.
சில மணித்துளிகளில் இடுப்பில் நான்கு முழ ஆடை, மேலே பழுப்பேறிய துண்டு, முகத்திலே நடுத்தரமான மீசை, அதற்குப் மேல் பொடியெறிய மூக்கு என்ற வடிவமைப்பில் ஒருவர் வந்து சேர்ந்தார். அவரே சோழவந்தான் அரசன் சண்முகனார். யாரையும் எதிர்பார்க்காமல் தன் காலே தனக்கு உதவி என்று மாநாடு நடக்கும் இடம் அறிந்து வந்திருக்கிறார் புலவர். அவரின் எளிமைக்கு அளவில்லை. அவரின் தமிழுக்கு அளவே இல்லை. அவரை நான்காம் தமிழ்ச்சங்கத்தை நிறுவிய பாண்டித்துரை அவர்கள் வரவேற்று மகிழ்ந்தார். அவர் தலைமையில் தான் புலவர் அன்று பரிமேலழகரின் திருக்குறள் உரை பற்றிப் பேசினார். இனிமையான இரண்டரைமணி நேரப் பொழிவாக இருந்தது அந்தப் பொழிவு. இது தமிழகம் அலையும் கலையும் என்ற நூலில் குறிக்கப் பெறுகிறது. இந்நூலை எழுதியவர் ரா. பி. சேதுப்பிள்ளை. இவரே மாநட்டுக்கு குழுவின் சார்பில் புலவரை அழைத்து வர அனுப்பபட்ட மாணவர் என்றால் நம்ப முடிகிறதா. இதில் ரா. பி சேதுப்பிள்ளையின் இளமைக் காலத் தொண்டைப் பாராட்டுவதா அல்லது அரசஞ் சண்முகனாரின் எளிமையைப் பாராட்டுவதா, விழா நடத்திய விழா அன்பர்களைப் பாராட்டுவதா. இப்படித்தான் பல நிகழ்வுகள் பல அனுபவப் பாடங்களைக் கற்றுத்தருகின்றன.
எளிமை அழகு, இனிமை, சிறந்த பண்பு என்று எத்தனை முறை சொன்னாலும் இந்த நிகழ்ச்சி வாயிலாகப் புரிந்து கொள்ளும் போது மிக்க மகிழ்வை அளிக்கிறது என்பது உண்மை. எனவேதான் மூத்தோர் சொற்கள் அமுதங்கள் ஆகின்றன.
இது போன்ற நல்ல பண்புகளை நாளும் நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது. ஒரு நான்கு நல்லவற்றை இன்று அறிவோம். நான்மணிக்கடிகை என்னும் நூல் நான்கு நல்ல மணிகளை ஒவ்வொரு பாடலிலும் அமைத்து அறிவூட்டும் இலக்கியமாகும். அதில் ஒரு பாடல் சிறந்தது என்று சாமி. சிதம்பரனார் சங்கப் புலவர் சன்மார்க்கம் என்ற தன்னூலில் காட்டியுள்ளார். அந்தப் பாடல்;
“திருஒக்கும் தீதுஇல் ஒழுக்கம். பெரிய
அறன் ஒக்கும் ஆற்றின் ஒழுகல் பிறனைக்
கொலை ஒக்கும் கொண்டு கண்மாறல் புலைஒக்கும்
போற்றாதார் முன்னர்ச் செலவு”
இந்தப் பாடலில் நான்கு நல்ல நயமான கருத்துகள் இடம்பெற்றுள்ளன.
திரு ஒக்கும் தீது இல் ஒழுக்கம்
தீமையைத் தராத நல்ல ஒழுக்கம் செல்வம் போன்றது என்கிறது இப்பாடலடி. இவ்வடியில் செல்வம், செல்வமின்மை, ஒழுக்கம், ஒழுக்கமின்மை என்ற இரு இணைகளை முன்வைத்து எழுதப் பெற்றுள்ளது. மிகுந்த செல்வம் என்பது ஒழுக்கம் என்றால் ஒழுக்கம் இருப்பவரிடத்தில் செல்வம் இருக்காது என்பது பொருளாகிறது. மிகுந்த செல்வம் உடையவரிடத்தில் ஒழுக்கம் இருக்குமா என்ற ஐயத்தையும் இது கிளப்பிவிடுகிறது. செல்வம் என்பது தீமை தராத நிலையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்று பொருள் கொள்ள வேண்டும். ஒழுக்கம் என்பது நன்மையாக இருந்தால் அது செல்வத்தை ஈட்டித் தரும் வழி என்று புரிந்து கொள்ளவேண்டும். நடந்து செல்பவர் இடத்தில் கொஞ்சம் பணம் சேர்ந்து விட்டால் அவர் மகிழ்வுந்தில் செல்ல முயற்சி செய்கிறார். நடப்பது நன்மை என்ற அவரின் உடல் நன்மையும் கெடுகிறது. பணம் வந்துவிட்ட காரணத்தால் அவர் மகிழ்வுந்தில் செல்ல எண்ணுவதால் செலவும் கூடுகிறது. நடந்து செல்பவர் செல்வம் வந்த போதும் நடந்தே சென்றால் பணமும் செலவாகாது. ஒழுக்கமும் பாழ் படாது. இதுவே திரு ஒக்கும் தீது இல் ஒழுக்கம் என்பது.
பெரிய அறன் ஒக்கும் ஆற்றின் ஒழுகல்
ஒருவர் பெரிய பெரிய அறங்களை எல்லாம் செய்யவேண்டாம். தன் கடமையைச் சரிவர ஒழுக்கமாகச் செய்தால் அதுவே அறம் என்கிறது நான்மணிக்கடிகை. கடமைகளைச் சரிவரச் செய்பவன் வேறு அறங்களைச் செய்யவேண்டுவது இல்லை என்று குறிக்கிறது இப்பாடலடி. ஆசிரியர் ஒருவர் தன் ஆசிரியக் கடமையைக் குறைவில்லாமல் செய்யவேண்டும். மாணவர் தான் படிக்கும் கடமையைக் கீழ்படியும் கடமையை மறவாமல் ஆற்றவேண்டும். மருத்துவர் தம்மிடம் வந்த நோயாளியைக் காக்கவேண்டும். நீதிபதி சரியான நீதி வழங்கவேண்டும். அவரவர் அவரவர் கடமையை ஆற்றினால் அதுவே மிகச் சிறந்த அறம் என்கிறது நான்மணிக்கடிகை.
பிறனைக் கொலை ஒக்கும் கொண்டு கண்மாறல்
நண்பர் ஒருவரை தம்முடன் இணைத்துக்கொண்டு பின்பு அவனை விட்டு நீங்குதல் என்பது உயிர்க்கொலை புரிந்ததற்குச் சமமாகும். நண்பர்களை ஆராய்ந்து நட்பு கொள்ளவேண்டும், நட்பு கொண்டபின் அந்நண்பனை விட்டுவிடுதல் என்பது மிகப்பெரும் குற்றம். நாடாது நட்டலின் கேடில்லை. நட்டபின் வீடில்லை என்கிறார் வள்ளுவர்.
போற்றார் முன் செல்லுதல் இழிவாகும்
தம்மை போற்றாதவர்கள் முன்னர் செல்வது இழிவைத் தரும். தம்மை மதிக்காதவர்களிடத்தில் மதிப்பினை எதிர்பார்ப்பது தவறு. மதியாதவர்கள் தலை வாசகல் மிதியாமை கோடி பெறும். மதிக்காதவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து நாம் விலகி விடுவது என்பது நமக்கு நன்மையைத் தரும். அவர்களும் நன்மை பெறுவார்கள். வெறுப்பவர்கள் என்று சொல்லாமல் ஏன் போற்றாதவர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. வெறுப்பவர்கள் என்ற நிலைக்கு யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதுதான் உள் கருத்தாகும். நல்ல ஒழுக்கமுடன் இருத்தல், கடமையைத் தவறாமல் செய்தல், நண்பர்களை என்றும் நட்புடன் அமைத்துக் கொள்ளுதல், போற்றாதவர் பக்கம் செல்லாதிருத்தல் என்பன நான்மணிக் கடிகை காட்டும் நான்கு நற்குணங்கள் ஆகும். இந்த நற்குணங்களை நாளும் நினைந்து நாம் நடக்கவேண்டும். மற்றவர்களுக்கும் இதனை அறிவித்து அவர்களையும் நல்வழிப்படுத்த வேண்டும். விளம்பி நாகனாரின் நான்மணிக்கடிகை பல நல்ல கருத்துகளை வழங்கிச் சென்றுள்ளது.