கடந்த பகுதியில் வெட்டுப் பற்களைப் பற்றி பார்த்தோம். இந்த பகுதியில் Canines எனப்படும் கோரைப்பற்களைப் பற்றிப் பார்ப்போம். Dentes Canini எனவும் கோரைப்பற்களை அழைப்பர். கோரைப் பற்களை, கண் பற்கள் என்றும் கூறுவர். ஏனென்றால், கோரைப்பற்கள் மிகச் சரியாகக் கண்ணுக்குக் கீழே அமைந்துள்ளன.
பாம்பின் நச்சுப்பல் போல, நாயின் கோரைப்பல் போல சாயல் கொண்டது மனிதரின் கோரைப்பல்.
பல்மருத்துவர்கள் கோரைப்பற்களை Cuspids என ஆங்கிலத்தில் அழைப்பர். ஹிந்தியில் Shabdkosh என்பர். பற்களில் நீளமானவை கோரைப்பற்கள்.
கோரைப்பற்கள் கூர்மையான நுனித்த கொடுக்கு போன்ற தோற்றம் கொண்டவை.
மேல்வாயின் வலது பக்கம் ஒன்று, மேல் வாய் இடது பக்கம் ஒன்று, கீழ்வாயின் வலது பக்கம் ஒன்று, கீழ்வாயின் இடது பக்கம் ஒன்று என்று மொத்தம் ஒரு மனிதருக்கு நான்கு கோரைப்பற்கள் இருக்கும். பால் கோரைப்பற்கள் கீறல் பற்களுக்கும் முதல் கடைவாய் பற்களுக்கும் பிறகு முளைக்கும். 17 முதல் 23 மாதங்களில் குழந்தைகளுக்கு முதல் கோரைப்பல் முளைக்கும். 23 மாத முடிவில் எல்லா கோரைப்பற்களும் முளைத்திருக்கும்.
பால் கோரைப்பற்களை குழந்தைகள் 9- 12 வயதில் இழப்பர்.
பற்களுக்கான குறள்கள்
* காலை மாலை தவறாது துலக்குவோருக்கு பற்களின்
ஓலை கிழியாமல் காக்கப்படும்.
* மொத்த வாழ்நாளில் முப்பத்தியெட்டு நாட்கள்
முத்துப்பல் துலக்கச் செலவு.
- தேஜஸ் சுப்பு என்கிற கனலி
|
கோரைப்பற்களின் பயன்பாடுகள் என்று கீழ்க்காணும் சில பயன்களைச் சுட்டலாம்.
* உணவை துண்டித்து கிழித்து சிறு சிறு துண்டுகளாக்கி உண்ண கோரைப் பல் உதவுகிறது. மிருகங்களில் மாமிசப் பட்சிணிகளுக்கு கோரைப்பற்கள் மிக உதவியாக இருக்கின்றன.
* பேசும்போது கோரைப்பற்கள் கீறல் பற்களுடன் இணைந்து பேச உதவுகின்றன.
* உதடுகளில் வடிவத்தை கோரைப்பற்கள் சரிவரப் பேணுகின்றன.
* மற்ற மூன்று வகை பற்கள் அதனதன் இடங்களில் சரிவர நிலை கொள்ள கோரைப்பற்கள் வழிகாட்டியாகச் செயல்படுகின்றன.
* கடைவாய்ப் பற்களை சேதமுறாமல் கோரைப்பற்கள் பாதுகாக்கின்றன.
* வாயின் அழகியலை கோரைப்பற்கள் நிர்வகிக்கின்றன.
* மனிதரின் சிரிப்பை மகிமைப்படுத்துவது கோரைப்பற்களே.
கோரைப் பற்களின் ஈறுகள் எளிதில் தேயும். காரணம் வாயில் அவைகளின் அமைப்பு. கீழ்த்தாடை கீறல் பற்களிலும் மேல்தாடை கோரைப் பற்களிலும்தான் ஈறு தேய்மானம் அதிகம் ஏற்படும். பற்களைத் துலக்கும் போது, கோரைப் பற்களின் மீது அதிகக் கவனம் தேவை. பற்களைத் துலக்கும் போது, பிரஷ்களின் அழுத்தம் அதிகமாக கோரைப்பற்களைத்தான் தாக்கும். ஆகவே, கோல்கேட் சூப்பர் பிளக்ஸி போன்ற மென்மையான வகைகளை வாங்குவது நலம்.
நிரந்தரப் பற்கள் முளைப்பதற்குத் தடையாக பால் கோரைப்பற்கள் இருந்தால் அவையை அகற்றி விடுவது நலம்.
மேல் வரிசை கோரைப்பற்களில் தெற்றுப்பல் இருந்தால் அதிர்ஷ்டம் என சிலர் கூறுவர். இது ஒரு கலாச்சாரம் மற்றும் நாட்டுப்புற நம்பிக்கை. ஆனால், அந்தத் தெற்றுப் பற்களால் பக்கத்து இரு பற்கள் பற் சொத்தையாலும் ஈறு நோயாலும் பாதிக்கப்படும் என்கிற உண்மையை அந்த மூட நம்பிக்கையாளர்களுக்கு யார் உணர்த்துவது?
மாமிச உணவு உண்பவர்களுக்குத்தானே கோரைப்பற்கள் தேவை? சைவர்களுக்கு கோரைப்பற்கள் எதற்கு? என்கிற கேள்வி எழலாம்.
கடைவாய் பற்களும் முன் கடைவாய் பற்களும் விரிசல் விழாமல் முறிந்து விடாமல் பாதுகாப்பது கோரைப் பற்களே. கோரைப்பற்களை அகற்றினால் வாய் சுத்தமும் தன்னம்பிக்கையும் பாழாகும். அபூர்வமாக சிலர் கோரைப்பற்கள் இல்லாமல் வளர்கின்றனர்.
சுறா மீன்களுக்கு கோரைப்பற்கள் விழுந்துவிட்டால் மீண்டும் முளைக்கும். மனிதர்களுக்கோ நாய்களுக்கோ கோரைப்பற்கள் விழுந்தால் மீண்டும் முளைக்காது.
கோரைப் பற்களின் உடற்கூறியல் பார்ப்போம்.
கோரைப்பற்களுக்கு மூன்று பாகங்கள் உண்டு.
1. கிரீடம் (Crown)
2. கழுத்து(Neck)
3. வேர் (Root)
பல்லின் வேர்பகுதி பல்லுயிர் தசை நார் எனும் திசுக்கள் வழியாக எலும்பில் நங்கூரமிட்டு உள்ளது. பல் கிரீடத்தின் மேல் பகுதி எனாமலாலும் உட்பகுதி டென்டினாலும் ஆனவை. டென்டினின் உள்ளே ஒரு குழிவு உள்ளது. அந்தக் குழிவை ஒரு கூழ் நிரப்புகிறது. கூழை ஆங்கிலத்தில் Pulb என்பர். நரம்புக்குழாய் பின்னலே கூழ் அல்லது பல்ப் எனப்படும்.
இரத்தக் காட்டேரிப் பற்கள்
1897 ஆம் ஆண்டு பிராம் ஸ்டோக்கர் என்பவர் ட்ரான்ஸில்வேனியாவில் இருந்து இரத்தக் காட்டேரி வருவதாக கதை எழுதினார். 15 ஆம் நூற்றாண்டு ரோமானிய கவர்னர் விளாட் தி இம்பாலர் என்பவரை மனதில் வைத்துத்தான் இரத்தக் காட்டேரிக் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டதாகக் கூறுவர். பேய் வேடம் போட்டு ஆட்டம் போடும் ஹாலோவீன் திருவிழா 2000 ஆண்டுகளுக்கும் மேலான மரபு வழியைக் கொண்டது. அயர்லாந்து, ஸ்காட்லாந்தில் இந்த ஹாலோவீன் திருவிழா புகழ்பெற்றது. இரத்தக் காட்டேரியாக நடிக்கும் சினிமா நடிகர்கள் உயர்தர ஒவ்வாமை தராத டென்டல் பிளாஸ்டிக் கோரைப் பற்களைத்தான் மாட்டிக் கொள்கின்றனர். பொய் இரத்தக் காட்டேரிப் பற்கள் இனிப்பால் செய்யப்படுகின்றன. நிகழ்வு முடிந்ததும் தின்று விடலாம். பொய் காட்டேரிப் பற்கள் 200 முதல் 400 ரூபாய் வரை அமேசானிலும் பிளிப்கார்ட்டிலும் கிடைக்கின்றன. சில பல பேருக்கு மேல் வரிசை கோரைப்பற்கள் பெரும்பாலும் இட வசதி இல்லாமல் தனித்து நிற்கின்றன.
|
ஆண்களை விடப் பெண்களின் கிரீடம் நீளம் அதிகம். பல்லின் அளவு ஆண்களுக்குப் பெரிது. பெண்களுக்கு ஒப்பீட்டு அளவில் சிறிது. கோரைப் பற்கள் தனித்த நீண்ட வேர்பகுதி உடையவை. கூம்பு அல்லது முக்கோண படிவ கூர் முனைக் கிரீடம் கொண்டவை. மேல் தாடை கோரைப்பற்களின் கிரீடம் மற்றும் வேரின் சராசரி உடற்கூறியல் நீளம் 9. 61 மிமீ/ 16. 28 மிமீ., கீழ்த்தாடை கோரைப்பற்களின் கிரீடம் மற்றும் வேரின் சராசரி உடற்கூறியல் நீளம் 8. 70 மிமீ / 15.51 மிமீ மனித கோரைப்பற்களின் அளவு ஆளுக்கு ஆள் இனத்துக்கு இனம் வேறுபடும். பல் அளவு மாறுபாட்டுக்கான காரணங்கள்.
* பல்லுறுத்தோற்ற நார்க்கழலை நேரம்.
* பற்சிப்பி தடிமன்
* உடல் அளவு
* ஹார்மோன் வேறுபாடுகள்
* எக்ஸ் குரோமோசோம் இருப்பு
* ஊட்டச்சத்து மேம்பாடுகள்
* வாய் சார்ந்த நோய்கள்
* குழந்தைப் பருவக் கோளாறுகள்
* சமூகப் பொருளாதார நிலை
* இன வேறுபாடுகள்
பாட்டில் மூடிகளைப் பல்லால் கடித்துத் திறக்கலாமா?
என். தென்னரசு திருப்பூர்.
பாட்டில் மூடிகளை கைகளால் திறக்க முடியாவிட்டால் வாயால் கடித்துத் திறப்பேன். சில நண்பர்கள் இப்படிச் செய்வதால் பற்கள் போய்விடும் என மிரட்டுகின்றனர். உண்மையில் என் பற்கள் போய்விடுமா?
மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:
ஒரு சாதனைக்காக, லாரியை கூடப் பற்களால் கடித்து இழுப்பவர்கள் உள்ளனர். ஆனால் அது சாதனை, உங்களது செயல் வேதனையே. பாட்டில் மூடிகளைத் திறக்க எத்தனையோ வழிகள் இருக்க, இந்த வலியான முயற்சி தேவைதானா? 10 ரூபாய்க்குப் பாட்டிலைத் திறக்கும் திறப்பான்கள் கிடைக்கின்றன. நகவெட்டியுடன் திறப்பான்கள் இணைந்து கிடைக்கின்றன. பற்களின் வலிமையை வீணாக்கு, வலியைத் தேடிக் கொள்ளாதீர்கள்.
|
கோரைப்பற்கள் பல் கூட்டமைப்பில் முக்கியமான அங்கம் வகிக்க உயிரியல் மற்றும் உயிரியல் வேதியியல் காரணிகளே முக்கியக் காரணங்கள்.
மேலும் சில காரணங்கள்:
* இடப்பற்றாக்குறை
* பற்கள் முளைப்பு வரிசையில் தொந்திரவுகள்.
* பால் கோரைப் பற்கள் பிடிவாதமாய் இடம் கொடுக்காமல் அப்படியே நிற்பது
* பல்மொட்டுகளின் சுழற்சி
* முந்திரி கொட்டை தனமான வேர் பகுதி மூடல்
* சிறுகட்டிகள் மற்றும் தீங்கில்லாத வளர்ச்சி கட்டிகள்
மொத்தத்தில் ஒரு மனிதன் உண்ண, பேச, கச்சித முக அமைப்புடன் திகழ கோரைப்பற்கள் அதி முக்கியம்.