கடந்த பகுதியில் எய்ட்ஸ் நோய்த் தொற்றுடையவர்களுக்கான பல் சிகிச்சை குறித்துப் பார்த்தோம். இந்தப் பகுதியில் ஆண் நீரிழிவு (Diabetes mellitus) நோயாளிகள் பற்றியும், அவர்களுக்கான பல் மருத்துவச் சிகிச்சை பற்றியும் பார்க்கலாம்.
உலகில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நோய்கள் உள்ளன. அவைகளில் சில உயிர்க் கொல்லி நோய்களாக இருக்கின்றன. அவற்றில், இருதய நோய், புற்றுநோய், கோவிட் 19, பக்கவாதம், நீண்ட கால சுவாச நோய்கள், அல்ஜைமர் நோய்,
நீரழிவு நோய் போன்றவைகளைக் குறிப்பிடலாம்.
உலகில் 537 மில்லியன் நீரிழிவு நோயாளிகள் இருக்கின்றனர். வருகிற 2045 ஆம் ஆண்டில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 783 மில்லியனாக உயரக்கூடும் என்று ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. ஆண்டுதோறும் 70 இலட்சம் பேர் நீரிழிவு நோயால் இறக்கின்றனர். ஒவ்வொரு ஐந்து நொடிக்கும் ஒரு நீரிழிவு நோயாளி இறக்கிறார்.
இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு அதிகமாகும் நீண்டகால வளர்சிதை மாற்ற நோயே நீரிழிவு நோய் எனப்படும். நீரிழிவு நோயால் இதயம், இரத்தக் குழாய்கள், கண்கள், சிறுநீரகம் மற்றும் நரம்புகளுக்குக் கடுமையான பாதிப்பு
ஏற்படுகிறது. இன்னும் சுருக்கமாகச் சொன்னால், நீரிழிவு நோயை நிர்ணயித்துச் சொல்வதென்றால், உடலில் கணையச் சுரப்பு நீர் (Insulin) போதுமான அளவு சுரக்கவில்லை அல்லது தேவைக்கேற்பச் செயல்படவில்லை எனலாம்.
பற்களுக்கான குறள்கள்
*கவசமாய் காக்கும் கவனித்துப் போக்கும்
அவதாரம் மருத்துவ(ர்) அன்பு.
* பற்கள் உதவும் பயனுறுப்பு என்றுமே
கற்களல்ல பற்கள் கவனி.
- தஞ்சாவூர் ஹரணி
|
கணையச் சுரப்பு நீர், கணையத்தின் உயிரணுக்களின் வலியுணர்வு செல்களின் திட்டுகளில் சுரக்கிறது. ஒரு ஆரோக்கியமான ஒல்லியான நபருக்கு தினம் 18 முதல் 40 U எனும் அளவில் கணையச் சுரப்பு நீர் சுரக்கிறது. நீரிழிவு நோயில் முதன்மையாக நான்கு வகைகள் இருக்கின்றன.
1. நீரிழிவு நோய் வகை 1
2. நீரிழிவு நோய் வகை 2 - உடல் உழைப்பு இல்லாத பருமனானவர்களுக்கு இவ்வகை நோய் வரலாம்.
3. நீரிழிவு நோய் வகை 3 - கர்ப்பிணிப் பெண்களுக்கு வரும் நீரிழிவு நோய்
4. நீரிழிவு நோய் வகை 4 - இளம் வயதினரைத் தாக்கும் நீரிழிவு நோய் (Gestational Onset Diabetes of Young - MODY)
இவ்வகை நீரழிவு நோய்களைத் தவிர, சில துணை நீரழிவு நோய் வகைகளும் உள்ளன.
1. புதிதாகப் பிறந்த குழந்தைகள் சார்ந்த நீரிழிவு நோய் (Neonatal Diabetes)
2. அரிதான மரபியல் நரம்புச் சிதைவு நோய் சார்ந்த நீரிழிவு நோய் (Wolfram Syndrome)
3. தன்னியக்கப் பின்னடைவு மரபணுக் கோளாறு சார்ந்த நீரழிவு நோய் (Aalström Syndrome Diabetes)
4 இளம் பருவத்தில் தொடங்கி, மெதுவாக உடலை ஆக்கிரமிக்கும் நீரிழிவு நோய் (Latest Auto Immune Diabetes in Adults)
5. மூளையசதி நோய் அறிகுறிகளை கொண்ட மூன்றாம் வகை நீரிழிவு நோய்.
6. நுரையீரல் மற்றும் செரிமான அமைப்பைப் பாதிக்கும் நீர்மத் திசுவழற்சி (Cystic Fibrosis)
இதுவரை நீரிழிவு நோயின் அடிப்படை நிலைகளைப் பார்த்தோம். இனி, நீரிழிவு ஆண் நோயாளிகளுக்கான பல் மருத்துவத்தைப் பார்க்கலாம்.
ஆண்களில் மூன்று வகையினர் உள்ளனர்.
* நீரழிவு நோய் இல்லாத உடல் நலமுடைய ஆண்கள்
* நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி ஆண்கள்
* நீரிழிவு நோய்க்கு முந்திய நிலை ஆண்கள்
* நீரழிவு நோய் இல்லாத நிலைக்கும் நீரழிவு நோய் ஏற்பட்ட நிலைக்கும் இடையிலான நிலை ஆண்கள்
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைப் பொதுவாக இரண்டு வழிகளில் பரிசோதனைக் கூடத்தில் சோதிக்கலாம்.
வெறும் வயிற்றில் காலையில் எழுந்தவுடன் ரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு இருக்கிறது எனப் பரிசோதனைக் கூடத்தில் சோதிக்கலாம். காலையில் சாப்பிடுவதற்கு முன் வெறும் வயிற்றில் இரத்தச் சர்க்கரை அளவு 100 mg/dl (ஒரு டெசி லிட்டருக்கு இத்தனை மில்லி கிராம்கள்) இருக்க வேண்டும். காலை சிற்றுண்டி உண்ட பின்பு இரத்த சர்க்கரை அளவு 140 mg/dl முத்ல் 215 mg/dl அளவில் இருக்க வேண்டும். இரத்த சர்க்கரையின் அளவு தாண்டினால் அது நீரிழிவு நோய் என்று உறுதி செய்து விடலாம்.
.
உணவு உண்ட பின் இரத்த சர்க்கரை 140 லிருந்து 180 mg/dl இருந்தால், பாதுகாப்பானது. நீரழிவு நோய் உங்கள் வாயில் சுரக்கும் உமிழ்நீரின் குணாதிசயங்களை மாற்றுகிறது. உமிழ்நீர் வாயின் ஈரத்தன்மையை பாதுகாக்கிறது. நீரிழிவு நோய் உள்ளவருக்கு வாய் உலர்ந்திருக்கும். உமிழ்நீர் பல் சொத்தையைத் தடுக்கிறது, பேக்டீரியா கிருமி வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது. கிருமிகள் உருவாக்கும் அமிலங்களுடன் போராடுகிறது.
நீரிழிவு நோயாளிகளின் உமிழ் நீரில் சர்க்கரை அதிகரித்திருக்கும். அந்தக் கூடுதல் சர்க்கரை வாயிலுள்ள கிருமிகளை வளர்க்கும் தன்மையுடையவை. அதனால், மென்மையான பிசுபிசுவென ஒட்டும் காரை உருவாகும். அந்தக் காரையினால் பற்சொத்தை தோன்றலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் பல் பிரச்சனைகளைக் கீழ்க்கண்டவாறு பிரிக்கலாம்.
* பல் கூச்சம் (Tooth Sensitivity)
* பல்லில் காரை படிதல் (Plaque Formation)
* ஈறுகளுக்குள் தொற்று (Bacterial Gum Infection)
* ஈறுகள் அழற்சி அல்லது ஈறுகள் வீக்கம் (Gingvitis)
* பற் சொத்தை (Tooth Cavities)
* வாய் துர்நாற்றம் (Halitosis)
* பற்குறித் தொற்று (Periodontitis)
* வாய் வறட்சி (Xerostomia)
* வாய்ப்புண்கள் (Oral Thrush)
* வாய் எரிச்சல் (Burning Mouth Syndrome)
சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைப்பதுதான் பற்களின் நலத்தைப் பேணுவதற்கான அடிப்படைத் தகவல். இது தவிர, அதிகமாகத் தண்ணீர் பருகுதல், ஏராளமான காய்கறிகள் மற்றும் புரதச் சத்துகளை உணவில் சேர்த்தல், மாவுச் சத்து மற்றும் மாவுச்சத்து உணவுகளைத் தவிர்த்தல் நல்லது. நல்ல உணவுப் பழக்கம் உடற்பயிற்சி முக்கியம்.
நீரிழிவு நோயாளிகள் ஆண்டுக்கு இருமுறை பல் மருத்துவரை நேரில் சந்தித்து சோதனைகள் மேற்கொண்டு மருத்துவ ஆலோசனை பெறுதல் நலம். புகைப்பிடிக்கும் பழக்கமுடையவர்கள், அதனை நிரந்தரமாக நிறுத்திவிடுவது நல்லது. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பல் இடுக்குகளைச் சுத்தம் செய்ய உதவும் நூல் (Floss) கொண்டு, அதில் சேர்ந்திருக்கும் உணவுத் துணுக்குகளை அகற்ற வேண்டும்.
நீரிழிவு நோயுற்ற கணவன் மனைவிக்கு முத்தம் கொடுக்கலாமா?
எஸ் கௌரி மனோகரி, கோயம்புத்தூர்.
நீரழிவு நோயுடைய கணவர் மனைவிக்குக் கொடுக்கும் ஆங்கில முத்தம், மனைவிக்குப் பாதுகாப்பானதாக இருக்குமா?
மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:
வாய்வழி முத்தத்தால் நீரழிவு நோய் பரவாது. வாய் சுத்தம் இல்லாமல் தரப்படும் ஆங்கில முத்தம் பல நோய்த் தொற்றுகளை உருவாக்கும். ஆனால் விதிவிலக்காக, ஆங்கில முத்தங்கள் உமிழ் நீர் அளவை அதிகமாய் சுரக்கச் செய்யும். அதனால் வாய், பற்கள், ஈறுகளின் நலம் மேம்படும். வாயைத் துலக்கி விட்டு, வாய்க்கழுவிகளைக் (Mouth Wash) கொண்டு கொப்பளித்து விட்டு முன்னெச்சரிக்கை முத்தம் பரிமாறிக் கொள்வது மேலும் நலம் தரும்.
|
நீரிழிவு நோயாளிகளுக்கு பல் மருத்துவம் செய்யும் போது பல் மருத்துவர் சில முன்னெச்சரிக்கைகளைச் செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
* பல் மருத்துவத்துக்கு வரும் நோயாளி 40 வயதுக்கு மேற்பட்டவராகவும், உடல் பருமனாகவும் இருப்பவராக இருந்தால், அவர் நீரிழிவு நோயாளியாக இருக்கலாம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
* நீரிழிவு நோயாளிக்குப் பல் மருத்துவம் மேற்கொள்ளும் முன் அவர் நீரிழிவு நோய்க்கு எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரைகளைப் பற்றிக் கேட்டறிவது சிறப்பு. அதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், சிகிச்சைக்கு வந்திருக்கும் நீரிழிவு நோயாளியின் நீரிழிவு சிறப்பு மருத்துவருடன் தொடர்பு கொண்டு தேவையான சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறலாம்.
* நோயாளியின் உடலில் இருக்கும் சர்க்கரையின் அளவைக் கண்டறிந்து, அதற்கேற்றபடி பல் மருத்துவரின் செயல்பாடுகள் அமைந்தால், நீரிழிவு நோயின் நோயுற்ற தன்மையையும் (Morbitity) இறப்பு சதவீதத்தையும் (Mortality) வெகுவாகk குறைக்கலாம்.
* பல் மருத்துவம் செய்யவிருக்கும் நீரழிவு நோயாளிக்கு 70 மிகி / டெசிலி - 300 மிகி / டெசிலி சர்க்கரை அளவு இருந்தால் பல் சிகிச்சையினைத் தொடரலாம். சர்க்கரையின் அளவு மிகி / டெசிலிக்குக் கீழ் இருந்தால் கார்போஹைட்ரேட் கொடுத்து குறை இரத்த சர்க்கரையை (Hypoglycemia) தடுக்கலாம்.
* பல் சிகிச்சைக்குப் பின் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் (Antibiotics) பரிந்துரைப்பது சாலச் சிறந்தது. பெரும்பாலும் நீரிழிவு நோயாளிகளுக்குப் பல் மருத்துவம் காலை உணவுக்கு பின் கணையச் சுரப்பு நீர் (Insulin) எடுத்துக் கொண்ட பின் செய்வது பாதுகாப்பானது.