தற்போதைய உலக மக்கள் தொகை 820 கோடிக்கும் மேலாக இருக்கின்றது. இம்மக்கள் தொகையில் 10.3 விழுக்காடு முதியோர்கள் இருக்கின்றனர். 1974 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் உலக மக்கள் தொகையில்
முதியவர்கள் 5.5 விழுக்காடு என்றிருந்தனர். இந்த விழுக்காடு வருகிற 2050 ஆம் ஆண்டில் 20.7 விழுக்காடாக அதிகரித்துவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
முதியவர்கள் எண்ணிக்கை அதிகரிப்புக்கு அடிப்படையாக இரண்டு காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன.
* வாழ்நாள் காலம் அதிகரிப்பு
* கருவுறுதல் விகிதம் குறைவு.
பொதுவாக, உலகளவில் மனிதரின் வாழ்நாள் 67.2 ஆண்டுகளிலிருந்து 70.8 ஆண்டுகளாக அதிகரித்திருக்கிறது. 2045 ஆம் ஆண்டில் மனிதரின் சராசரி வாழ்நாள் காலம் 77 வருடங்களாக அதிகரிக்கும். அப்போது வயது முதிர்ந்தவர்களின் எண்ணிக்கை இளைஞர்களின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்கின்றன. வளரும் நாடுகளின் மக்கள் தொகையில் 25 விழுக்காடு முதியவர்களே. இந்தியாவின் மக்கள் தொகை 145 கோடியை எட்டியிருக்கிறது. இது உலக மக்கள் தொகையில் 17.78 விழுக்காடாகும். 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் முதியவர்களின் எண்ணிக்கை 153 மில்லியன் என்று இருக்கிறது. இந்த எண்ணிக்கை 2050 ஆம் ஆண்டில் 347 மில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, இந்தியாவின் அனைத்து நோய்களும், முதியோர் உடல் நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 21-ஆம் நாளில் உலக மூத்த குடிமக்கள் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த உலக மூத்த குடிமக்கள் நாள் 1991 ஆம் ஆண்டிலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உடல் நலக் குறைபாடு மற்றும் முதியவர்களைப் புறக்கணிப்பது போன்ற வயது அதிகமான பெரியவர்களைப் பாதிக்கும் பல்வேறு காரணிகள் பற்றிய பிரச்சனைகள் சார்ந்த விழிப்புணர்வுவை அதிகரிப்பதே இந்த நாளின் நோக்கமாக இருக்கிறது. இந்திய அரசு மூத்த குடிமக்கள் நலனுக்காக,
* ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB –PMJAY).
* முதியோர்களுக்கான தேசியக் கொள்கை 1999.
* பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் நிர்வகிப்பு மற்றும் மேம்பாட்டுச் சட்டம் 2007.
* முதியவர்களுக்கான சுகாதார கவனிப்புக்கான தேசிய நிகழ்ச்சி நிரல் (NPHCE).
எனும் சட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.
பற்களுக்கான குரல்கள்
*ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
கற்றுக் கொடுத்த தமிழ் ஆசான்
ஈறு கெட்டு வந்தார்
பல் மருத்துவராகிய பழைய மாணவனிடம்.
* முப்பத்திரெண்டு பெற்று பெருவாழ்வு வாழ வைப்பார்
பல் மருத்துவர்
- ரிஷிவந்தியா
|
1979 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியர்களின் மூத்தக் குடிமக்களில் 60 விழுக்காட்டிற்கு மேல் முழுப் பற்களையும் இழந்த பொக்கை வாய் கொண்டவர்களாக இருந்தனர். 1989 ஆம் ஆண்டில், இந்நிலை குறைந்து 44 விழுக்காட்டினராக மாற்றம் பெற்றது. அதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டில் இந்நிலை 20 விழுக்காடு எனும் அளவில் குறைந்திருக்கின்றது.
ஒருவரின் 32 பற்களும் உதிர்ந்து, முழுப்பற்களும் இல்லாத நிலையில், அவர் ‘பொக்கைவாய்’ என்று அடையாளப்படுத்தப்படுகிறார். இதனை ஆங்கிலத்தில் Edentulism என்கின்றனர். ஆஸ்திரேலியாவில் முதியோர் பல் மருத்துவம் ‘பல் மருத்துவத்தின் சிறப்புத் தேவைகள்’ எனும் பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுச் செயல்படுத்தப்படுகிறது. இதனை ஆஸ்திரேலியப் பல் மருத்துவ மன்றம் அங்கீகரித்துள்ளது.
இங்கிலாந்தின் பொதுப் பல் மருத்துவ சபை 13 பிரிவுகளில் பல் மருத்துவம் செய்ய அங்கீகரிக்கிறது ஆனால், அதில் முதியோர் பல் மருத்துவத்தை தனிப் பிரிவாக அங்கீகரிக்கப்படவில்லை. அமெரிக்காவின் பல் மருத்துவச் சங்கமும்,
கனடாவின் ராயல் காலேஜ் ஆஃப் கனடாவும் முதியோர் பல் மருத்துவத்தைத் தனிப் பிரிவாக அங்கீகரிக்கவில்லை என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ளலாம்.
முதியோர்களுக்கு பொதுவாய் வரும் மருத்துவப் பிரச்சனைகளாக, கீழ்க்காணும் நோய்கள் இருக்கின்றன.
* முதுமை மறதி நோய் (Dementia)
* கீல்வாதம் (Arthritis)
* நோய் தணிப்பு பேணல் (Palliative Care)
* எலும்புப்புரை (Osteoporosis)
* முதுமை மூட்டழற்சி (Osteoarthritis)
* உடல் தளர்ச்சி நோய் / நடுக்குவாதம் (Parkinsons Disease)
* பெருந்தமனி தடிப்பு (Atherosclerosis)
* இருதய நோய் (Heart Disease)
* உயர் இரத்த அழுத்தம் (Hypertension)
* உயர் இரத்தக் கொழுப்பு (Cholesterol)
* பல் பிரச்சனைகள் (Dental Problems)
65 வயதுக்கு மேற்பட்டோரில் 23.7 விழுக்காடு முதியோருக்கு பல் சிதைவு, பல் விழுதல், பல் நிரப்பல் போன்றவை நடந்திருக்கின்றன.
வயதானால் நோய்கள் தானாகவே வரும் என்பது அறியாமை. எந்த வயதினர் ஆனாலும் நோய் தொற்று வராமல் தடுப்பது சிறப்புடையது. வாய் என்பது ஒட்டுமொத்த மனித உடலின் நலத்துக்கான கண்ணாடி. வாய் நலம் பாதுகாக்காதவர்களுக்கு நோய்கள் அவ்வப்போது வந்து தாக்கும்.
வயதான முதியவர்களுக்கு,
* சர்க்கரை சார்ந்த உணவுகள் எடுத்துக் கொள்வது.
* 24 மணி நேரமும் ஏதாவது தின்று கொண்டே இருப்பது.
* பற்சுத்தம் பேணாமை.
* எச்சில் சுரப்பு - குறைபாடும் அதன் செயல்பாடும்.
* ஈறு சுருக்கம் (Gingival Recession)
என்று பல பல்நலக் குறைபாடுகள் ஏற்படுகின்றன.
வயதானவர்கள் முறுக்கு, சீடை சாப்பிடலாமா?
எம். பி. சிவானந்த், துடியலூர்.
எனக்கு எழுபது வயதாகிறது. தீபாவளிப் பலகாரங்களில் எனக்கு முறுக்கு, சீடை, தட்டை மிகவும் பிடிக்கும். இந்த வயதில் அவற்றைச் சாப்பிடலாமா? அதைச் சாப்பிட நான் என்ன செய்ய வேண்டும்?
மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:
வயதான காலத்தில் பற்களுக்குப் பாதிப்பில்லாமல் சாப்பிடலாம். அச்சு முறுக்கு கொஞ்சம் மென்மையாக இருக்கும். அதனைத் தண்ணீர் அல்லது பாலில் நனைத்துச் சாப்பிடலாம். கடினமான முறுக்கு போன்ற பலகாரங்களைத் தவிர்க்கலாம். தவிர்க்க வேண்டிய பலகாரங்களைச் சாப்பிட வேண்டுமென்று அடம் பிடிப்பவர்கள், கிராமங்களில் முன்பு வெற்றிலை போடும் வயதானவர்கள், வெற்றிலை, பாக்கு இடிக்கச் சிறு உரல் வைத்திருப்பார்கள். அந்த உரலில் தாங்கள் விரும்பும் முறுக்கு, சீடைகளை போட்டு இடித்து மாவாக்கிச் சாப்பிடுங்கள். பற்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராது.
|
உலகம் முழுவதும் 2024 ஆம் ஆண்டில், 40 லட்சம் முதியவர்கள் முதுமை மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலிருக்கும் முதியவர்களில் 7.4% பேர் மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2050 ஆம் ஆண்டில் 134 லட்சம் என்று மறதி நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும். இந்தியாவில் மாநிலத்துக்கு மாநிலம் மறதி நோயாளிகளின் எண்ணிக்கை மாறுபடும். ஆண்களை விடப் பெண்கள் அதிக அளவில் மறதி நோயால் பாதிக்கப்படுகின்றனர். நகர்புறங்களை விடக் கிராமப்புறங்களில் மறதி நோய் அதிகமாக இருக்கிறது. கல்வியறிவு குறைந்தவரை மறதி நோய் அதிகம் பாதிக்கிறது. சரிவிகித சத்துணவு உண்ணாதோர், கட்டுபடுத்தாத இதய நோயாளிகள், காற்று மாசால் பாதிக்கப்பட்டோர் போன்றவர்கள் மறதி நோய்க்கு அதிகம் பாதிப்படைகின்றனர்.
முதியோர்க்கான பல் மருத்துவத்தில் கீழ்க்கண்ட செயல்முறைகளை வரிசைபடுத்தலாம்.
* நோய்க்குறி அறிதல் (Diagnosis)
· நோய்த் தடுப்பு (Prevention)
· நோய் நிர்வகிப்பு (Management)
· நோய் சிகிச்சை (Treatment)
· நோய் கண்காணிப்பு (Health Monitoring)
முதியோர்களுக்கான பல் மருத்துவத்தை முதியோர் பல் இயல் (Gerodontology) எனக் குறிப்பிடுவர்.
முதியோர் பல் மருத்துவம் குறித்து அடுத்த பகுதியில் முழுமையாக அறிவோம்.