‘உங்கள் வயதை வருடங்கள் வைத்துக் கணக்கிடாதீர்கள். நண்பர்களை வைத்துக் கணக்கிடுங்கள். உங்கள் வாழ்க்கையைக் கண்ணீரை வைத்துக் கணக்கிடாதீர்கள் - புன்னகைகளை வைத்துக் கணக்கிடுங்கள்’
‘வயோதிகம் மலையேறுவது போல. மலை உச்சியில் நமககுக் கண்கொள்ளாக் காட்சிகள் காத்திருக்கின்றன’
‘மிகச் சிறந்த இசை வடிவங்கள் புராதன வயலினிலிருந்துதான் இசைக்கப்படுகின்றன’
‘அழகை ரசிப்பவனுக்கு வயோதிகம் இல்லை’
‘இன்னொரு இலக்கை நிர்ணயிக்க இன்னொரு கனவைக் காண உனக்கு வயோதிகம் கூடுதல் அவகாசம் தரவேச் செய்கிறது’
பற்களுக்கான குரல்கள்
*ஆடக் கூடாது
பரதநாட்டியம்
பல்
* பல் மருத்துவமனைக்குள்
புக பயந்தது பாம்பு
பல்லைப் பிடுங்கி
விடுவார்களோ என!
- ரிஷிவந்தியா
|
‘அழகான யுவன், யுவதிகள் இயற்கை விபத்துகள். ஆனால், அழகான வயோதிகர்கள் இயற்கையின் கலை வடிவம்’
‘வயோதிகர்கள் தங்கள் முகச்சுருக்கங்களில் மின்னும் நட்சத்திரங்களைப் பதுக்கி வைத்திருப்பர்’
‘முதியோரின் காதல் கதைகள் யுகம் யுகமாய் தொடரும் முடிவிலிகள்’
‘குழந்தைப் பிராயம் தன்னடக்கமானது, விடலைப் பருவம் மிதமானது, வாலிபப் பருவம் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் கூடிய பருவம். வயோதிகமோ விவேகம், விவேகம்’
மொத்தத்தில் முதுமைப்பருவம் கொண்டாடப்படவேண்டும் என்றால் முதியவர்கள் தங்கள் பல் ஆரோக்கியத்தைச் செவ்வனேப் பராமரிக்க வேண்டும்.
பாக்கியம் ராமசாமியின் அப்புசாமியும் சீதாபாட்டியும் கதைகள் படித்திருக்கிறீர்களா?
என் அப்பா வழியாக நான் நிறையப் பார்த்திருக்கிறேன், ஓவியர் ஜெயராஜ் அப்புசாமியை டொக்குவாயுடன் வரைந்திருப்பார்.
என் பள்ளிப் பருவத்தில் அப்புசாமியின் டொக்குவாயை, பொக்கைவாயை அப்புசாமியின் தனித்தன்மையாகப் பார்த்தேன், இப்போது அப்புசாமியை பார்க்கும் போது ‘சீதே கிய்வி ரொம்ப மோசம்… ஒரு நல்ல பல் மருத்துவரிடம் அப்புசாமியை அழைத்து சென்று பல்செட் கட்டியிருக்கலாமே… கிழம் பொக்கைவாயுடன் திரியட்டும், என சீதே கிய்வி அப்புசாமியை பழிவாங்கி விட்டாரே: சரி பீமாராவ் அல்லது ரசகுண்டாவது கொஞ்சம் காசு போட்டு அப்புசாமிக்கு பல்செட் கட்டியிருக்கலாமே? ஏன் மறந்தனர் ஏன் மறந்தனர்?’ என யோசிப்பேன்.
ஐந்தாறு வருடங்களுக்கு முன் என் தந்தை மதுரைக்கு அருகிலிருக்கும் திருமங்கலத்துக்கு போயிருக்கிறார். அங்கு என் தந்தையை அவரது உறவுக்காரப் பெண் சந்தித்திருக்கிறார். அவரைத்தான் என் தந்தை முதலில் திருமணம் செய்வதாக இருந்தது. என் தாத்தாவின் ஒத்துழையாமையால் அந்தத் திருமணம் நடைபெறவில்லை. வேறொருவரை மணந்த அந்தப் பெண் திருமண வாழ்வில் தோற்று தனி மரமாக நின்றிருக்கிறார்.
என் தந்தையை பார்த்த அந்தப் பெண் ‘எங்க வாயத்திறந்து காட்டு ஆர்னிகா?’ என்றிருக்கிறார்.
என் தந்தையும் வாயைத்திறந்து காட்ட, “விழாம எல்லா பல்லும் அப்படியே இருக்கே!” என வியந்திருக்கிறார் அந்தப் பெண்.
பற்களை ஒழுங்காகப் பராமரித்தால் எண்பது வயதானாலும் பற்கள் உறுதியாக இருக்கும் என்கிற உண்மை அந்தப் பெண்ணுக்குத் தெரியவில்லை.
சரி, பொதுவாக மக்களுக்கு எந்த வயதில் பற்கள் விழும்?
* 44 வயதிற்குள் 69ச தவீத மக்களுக்கு குறைந்தது ஒரு பல்லாவது விழுந்து விடுகிறது.
* 50 வயதில் மக்கள் ஞானபல் உட்பட 12 பற்களை இழந்து விடுகின்றனர்.
* 50-64 வயதில் 10 சதவீத மக்களுக்கு எல்லாப் பற்களும் விழுந்து விடுகின்றன.
* 74 வயதில் 13 சதவீத மக்களுக்குப் பற்கள் விழுந்து பொக்கை வாயாகத்தானிருக்கின்றன.
* 74 வயதை தாண்டியவர்களில் 26 சதவீத மக்களுக்கு பொக்கை வாய்தான்.
- இருப்பினும், 90 வயது வயோதிகர் பலர் எந்தப் பல்லுமே விழாமல் ஆரோக்கியமாகச் சிரிக்கின்றனர்.
என் தந்தையின் முகநூல் நண்பர் எத்திராஜன் ஜானகிராமன் வேலூரில் வசிக்கிறார். அவர் ஓய்வு பெற்ற அஞ்சலக அலுவலர். உலகம் சுற்றும் வாலிபத் தாத்தா என்று சொல்லலாம். அவருக்கு சமீபத்தில் 90 வயது நிறைவுற்றது. அவருக்கு அனைத்துப் பற்களும் உண்டு. வயதானால் பல் இயற்கையாகவே விழும் என்பது பொய், புனைவு.
* விபத்து
* பற்சொத்தை
* புகைப் பிடிக்கும் பழக்கம்
* வெற்றிலை பாக்கு போடும் பழக்கம்
* முரட்டுத்தனமாக பல் துலுக்குதல்.
- இது போன்ற பல காரணங்களே பல் இழப்பிற்குக் காரணமாக அமைகின்றன. பற்களை இழந்தவர்களுக்கு செயற்கைப் பல் கட்டும் மருத்துவம் மிக மிக அவசியமானது.
செயற்கையாய் பல் கட்டுவதில் பல வகைகள் உண்டு.
அதில் முதல் வகை;
1. தேவைக்கு மாட்டி அகற்றும் ஒரு சிறுபகுதி கட்டுப்பல். ஆங்கிலத்தில் அதனை Removable Partial Denture என்பர். சுருக்கமாக RPD என்றும் சொல்வதுண்டு. Denture என்பதைத் தமிழில் கட்டுப்பல், செயற்கைப் பல் தொகுப்பு, செயற்கைப் பல், பொய்ப் பல், தசனத் தொகுப்பு, பற்தொகுதி எனவும் கூறுவர்.
தேவைக்கு மாட்டி அகற்றும் சிறுபகுதி கட்டுப்பல்- பகுதி பல் உதிர்ந்த வாய் நோயாளிகளுக்கு செயல்பாடு மற்றும் அழகு கருதி கட்டப்படுகிறது. அவர்களுக்கு பிரிட்ஜ் எனப்படும் நிரந்தர சிறுபகுதி கட்டுப்பல் கட்டப் பொருளாதார வசதி இல்லாமல் இருக்கலாம். இவ்வகை பற்களை நோயாளிகள் யாருடைய உதவியும் இன்றி, தானேக் கழற்றி மாட்டலாம். ஆனால் நிரந்தரமாய் பொருத்தப்பட்ட கட்டுப்பல்லை அகற்றப் பல் மருத்துவர் தேவை. தேவைக்கு மாட்டி அகற்றும் ஒரு சிறுபகுதி கட்டுப்பல்லின் பயன்பாடுகள் இவைதான்;
* உணவை மெல்ல உதவுகிறது.
* தெளிவாகப் பேச உதவுகிறது.
* தோற்றத்தைக் கண்ணியப்படுத்துகிறது.
* உடற்கூறியல் அம்சங்களை மேன்மைபடுத்துகிறது.
இது மாதிரியான கட்டுப்பல்லை வீட்டுக்குள் வந்ததும் அல்லது இரவு தூங்கப் போவதற்கு முன்பும் கழற்றி வைக்க வேண்டியிருக்கும்.
ஒரே ஒரு பல்லுக்குப் பதிலாக செயற்கைப் பல்லைப் பொருத்தினால், அதனை Flipper Tooth என்பர்.
வயதானவர்கள் முறுக்கு, சீடை சாப்பிடலாமா?
ஆர். சித்ராப்ரியா, கரூர்.
எழுபது வயதுக்கு மேற்பட்ட பாடகர்கள் பல் செட் கட்டிய பின் பிசிறு தட்டாத குரலில் பாட முடியுமா?
மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:
கட்டுப்பல் பாடகரின் குரல்வளத்தை 90 சதவீதம் பாதிக்காது. வார்த்தைகள் உச்சரிப்பிலும் வாக்கிய அமைப்பு புரிதலிலும் பாடுபவருக்கு வயோதிக குழப்பம் வரலாம். கட்டுப்பல்லின் பொருத்தும் தரத்தைப் பொறுத்தும் பாடகரின் குரல் வளம் கூடலாம் குறையலாம். அடிநாஅழற்சி (டான்சில்) இருந்தாலும் பாடகரின் குரல்வளம் மாறும். இன்னொரு முக்கியமான தகவல், அந்திமக் காலத்து டி.எம்.சௌந்தர்ராஜன் குரலும், பாடகி பி. சுசீலா குரலும் அண்மையில் கேட்ட போது மிகவும் மாறி போயிருந்தன. அதற்குக் காரணம், பாடகர்களின் மனம். மொத்தத்தில் வயோதிகம், கட்டுப்பல் காரணமாக குரல் வளத்தில் சிறு தேய்மானம் இருக்கத்தான் செய்யும்.
|
RPD எனப்படும் தேவைக்கு மாட்டி அகற்றும் ஒரு சிறுபகுதி கட்டுப்பல்லின் பயன்கள்
* மீதம் இருக்கும் இயற்கையான பற்களுக்கு எந்த புதிய பாதிப்பும் ஏற்படாது.
* எந்தெந்தப் பல் தவறி இருக்கிறதோ அத்தனைக்கும் செயற்கைப் பல் மூலம் பதிலிப் பல்லாக ஏற்பாடு செய்யலாம்.
* மிக எளிதாக மாட்டி, கழற்றி, பல் சுகாதாரத்தைப் பேணலாம்.
* பொருத்திய கட்டுப்பல் சேதமுற்றால் மிக எளிதாக அகற்றி வேறொரு பல் பொருத்தலாம்.
* கட்டுப்பல்லில் ஏதேனும் சிறு மாற்றம் செய்யவேண்டி இருந்தால் செய்யலாம்.
RPD எனப்படும் தேவைக்கு மாட்டி அகற்றும் ஒரு சிறுபகுதி கட்டுப்பல்லின் பாதகங்கள்
* கட்டுப்பல்லுக்கு மிக நீண்ட நாள் உத்தரவாதம் தரப்படுவதில்லை.
* கட்டுப்பல்லில் சேரும் பற்காரை மற்ற இயற்கைப் பற்களைப் பாதிக்கலாம்.
இந்த RPD எனப்படும் தேவைக்கு மாட்டி அகற்றும் ஒரு சிறுபகுதி கட்டுப்பல்லை நான்கு பிரிவுகளாக பிரிக்கலாம். அடுத்தப் பகுதியில் அதனைப் பற்றி முழுமையாகப் பார்க்கலாம்.