புருவங்களில் ஒற்றைப் புருவம் மழித்தல், கண்களில் விதவிதமான நிறங்களில் விழியொட்டு வில்லை (Contact Lens) பொருத்துதல், ஒற்றை மூக்கில் வளையம், நாக்கு நுனியில் வளையம், தொப்புளில் வளையம், நீண்ட நகங்கள் வளர்த்து ஒவ்வொரு நகத்துக்கும் ஒரு வண்ண நகப்பூச்சு, உடல் முழுக்கப் பச்சை குத்தல் என்று எதையாவது செய்து, தங்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டிக் கொள்வதில் ஆர்வம் கொள்ளும் பலர் இருக்கின்றனர்.
பற்களை ஏதாவது செய்து அலங்கரிப்பது என்பது இன்று தொடங்கியதல்ல, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தேத் தொன்று தொட்டு வரும் ஆதி பழக்கம் என்று சொல்லலாம். இந்த வரிசையில், பற்களில் பச்சைக்குத்தும் வழக்கம் புதிதாக ஏற்பட்டு இருக்கிறது. இதனை ஆங்கிலத்தில், Cult என்கின்றனர். இதற்குத் தமிழில், சமயத்தில் வழிபாட்டு மரபு என்றும், உளவியலில் சடங்கு அல்லது நம்பிக்கை என்றும், மருத்துவத்தில் நாட்டுமுறைச் சிகிச்சை அல்லது பட்டறிவு சிகிச்சை என்று சொல்லலாம். பல்லில் பச்சைகுத்துதல் மட்டுமில்லாமல், பல்லிற்கு நகைகள் அணிவிக்கும் வழக்கமும் புதிதாக அறிமுகமாகி இருக்கிறது. பல்லில் பச்சை குத்துதல், பல்லிற்கு நகை அணிவித்தல் என்று இரண்டு வகையான ஒப்பனைகள் பல் மருத்துவத்தில் முக்கியமாகி இருக்கின்றன.
பல்லில் பச்சை குத்துதல் முறையினை பிரின்ஸ்டன் நானோ அறிவியலாளர் மைக்கேல் மெக்அல்பைன் (Michael McAlpine) மற்றும் டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் உயிரி மருத்துவப் பொறியாளர்களான ஃபியோரென்சோ ஒமெனெட்டோ (Fiorenzo Omenetto), டேவிட் கப்லான் (David Kaplan) மற்றும் ஹு தாவோ (Hu Tao) ஆகியோர் வடிவமைத்தனர். இது தங்கம், பட்டு மற்றும் பென்சில் கரி ஆகியவற்றால் செய்யப்பட்டது. ஹிப்-ஹாப் பாடகர்கள் மற்றும் ராப் பாடகர்கள் மேடையில் பிரமாதமாக தோற்றமளிக்கத் தொடங்கிய போது பல் பச்சை குத்தல்கள் பிரபலமடைந்தன. பல்லில் பச்சை குத்தல் தொடங்கி இருபது ஆண்டுகளுக்கும் மேலாகி விட்ட போதிலும், இந்தியாவில் தற்போதுதான் பல்லில் பச்சை குத்தல் பிரபலமடைந்து வருகிறது.

பல்லில் பச்சை குத்துவதில், பல் மகுடம் செய்யும் பல் பரிசோதனைக் கூடங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. பல் மருத்துவமனையில், பல்லின் அமைப்பை வார்ப்பு செய்து, அதனை ஆய்வகத்துக்கு அனுப்புகின்றனர். வார்ப்பு செய்த பல்லில் திறமையான ஓவியர் பச்சை குத்தும் ஓவியங்களை வரைகிறார். பல்லில் சிறிய அளவிலான ஓவியம் பிறந்துவிடுகிறது. செயற்கைப்பல் பொருத்தும் போதும், இது போன்ற பல் ஓவியம் வரையலாம். பல் ஓவியம் வாயின் 32 பற்களில் எந்தப் பல்லிலும் செய்யலாம்.
பற்களுக்கான குறள்கள்
* புன்னகை நெஞ்சின் புதுமையாய் நின்றிடவே
மென்பல்லின் மேன்மை மதி.
* காலையும் மாலையும் பல்துலக்கல் பண்பாடாம்
சோலையாம் வாழ்வு சுகம்.
- தஞ்சாவூர் ஹரணி
|
பல் ஓவியத்தில், பல்வண்ணக் காட்சிக் கருவி (Kaleidoscope) வண்ணங்கள், எதிர்பாராத வடிவமைப்புகள், விரித்த சீட்டுக் கட்டு போல் அழகிய வடிவங்களும் உண்டு. பல் பச்சை குத்துதல் இறப்பு வரை இருக்கலாம் அல்லது ஓரிரு வருடங்களில் மறைந்துவிடக் கூடியதாக, தற்காலிக ஏற்பாடாகவும் இருக்கலாம். தற்காலிகப் பல் பச்சைகுத்தலை Gnasher Tat என்கின்றனர். தற்காலிகப் பச்சை குத்தல்கள் ஒருங்கொளி அல்லது சீரொளி (Laser) உதவியுடன் பல்லில் ஒட்டிக் கொள்கின்றன. ஒரு தற்காலிகப் பச்சை குத்துவதற்கு 15 முதல் 20 நிமிடங்கள் ஆகும். பச்சை குத்துவதற்கான வடிவமைப்பைப் பொறுத்துக் கூடுதல் நேரம் பிடிக்கலாம். நிரந்தர பச்சை குத்தல்கள் பல்லில் துளைக்கப்பட்டு உருவாக்கப்படுகின்றன. நிரந்தர பச்சை குத்துவது கூட வலியற்ற செயல்முறையாகும்.
பல் பச்சை குத்தல் என்பது மேல்பக்கத்தின் பக்க வெட்டுபற்களில், வேட்டைப் பல்லில், முன் கடைவாய்பல்லில், கடைவாய் பல்லில் செய்யப்படுகின்றன. பல் பச்சைக் குத்தலில் மிருகங்களின் உருவங்கள், இதயம் மற்றும் துளைக்கும் காதல் அம்பு, இசைக்கருவிகள், எருது, லிப்ஸ்டிக் உதடுகள், வெற்றி சமிக்ஞை, மனித முக உருவங்கள் என்று பல்வேறு ஓவியங்கள் இடம் பெறுகின்றன.

பல்லில் பச்சை குத்தல் என்பது உடலின் பல நோய்களின் அபாய முன் அறிவிப்பாகச் செயல்படுகிறது. ஆம், உங்கள் திறன்பேசி அழைக்கும் போது பல் வர்ணங்கள் ஒளிரும். இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் போது பல் பச்சையின் நிறம் மாறும். பென்சில் கரி எனும் உணரி (SENSOR) நீங்கள் நோய்வாய்பட்டால் உடனே அறிவிக்கும். மேலும், உங்கள் மூச்சுக் காற்றை நுகர்ந்து பாக்டீரியா தொற்றுக்கான நிவாரணத்தைக் கூறும். ஒரு மாட்டின் பல்லில் பொருத்தப்பட்ட பென்சில் கரி உணரி நோயின் மூலக்கூறுகளை மோப்பம் பிடிப்பதை ஆராய்ச்சி மூலம் உறுதி செய்திருக்கிறார்கள். இதேப் போன்று, உணவின் நம்பகத்தன்மையும் பென்சிற்கரி உணரி மூலம் கணித்து விடலாம். எம்ஆர்எஸ்ஏ எனப்படும் சூப்பர் பாக்டீரியா ஐஸி பைகளில், குளியலறை திரைகளில் எண்ணற்ற மருத்துவமனை இடங்களில் ஒளிந்திருப்பதை கண்டுபிடித்து விடலாம்.
பல்லில் பச்சை குத்தல் என்பது செலவு கூடுதலான ஒன்றுதான். நீங்கள் பல்லில் பச்சை குத்தும் வடிவமைப்புகளைப் பொருத்து, கட்டணங்கள் மாறக்கூடும். அடிப்படையான, பல் பச்சை குத்தலுக்கு 1000 முதல் 1500 ரூபாய் வரை செலவு இருக்கும். அதே வேளையில், நுட்பமான பல் பச்சை குத்தலுக்கு 15000 முதல் 20000 ரூபாய் வரை செல்வு ஏற்படலாம். பல் பச்சை குத்தலால் பக்க விளைவுகள் ஏற்படும் என சிலர் சொல்கின்ற போதிலும், அறிவியல்பூர்வமாக அது உறுதி செய்யப்படவில்லை. பல் பச்சை குத்தியவரின் வாய் நலமானது, அவரது பற்களைப் பேணுவதைப் பொருத்தே இருக்கிறது.
ஆப்பிள், கரும்பு சாப்பிடுவதால் பற்கள் சுத்தமாகுமா?
எஸ். அறிவுமதி, திருச்சி.
ஆப்பிள் பழம், கரும்பு கடித்து தின்றால் பற்கள் சுத்தமாகும் என்கிறார்களே... அது உண்மைதானா?
மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:
ஆப்பிள் பழம் சாப்பிடும் போது உமிழ்நீர் அதிகம் சுரந்து கிருமிகளும் உணவுத் துகள்களும் அலசி ஓடும். கரும்புச் சாற்றை அல்லது கரும்பைக் கடித்துத் தின்றால் வாய் துர்நாற்றம் அகலும். ஆப்பிள் பழங்களில் இருக்கும் ஆல்பா ஹைடிராக்ஸி ஆசிட் பற்களை வெண்மைப் படுத்தும். ஸ்ட்ராபெர்ரி பழங்களும் பல்ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பழங்களைச் சாப்பிடுகிறோமோ இல்லையோ, நாள்தோறும் இரு முறை பல் துலக்கல், நம் பல் நலத்துக்கான முழு பலம் என்பது மட்டும் உறுதி.
|
பல் பச்சை குத்தலில் துளி கூட வலி இருக்காது. பல் பச்சை குத்தல் முடிந்த பின்பு, அது தேவையில்லை என்று கருதும் வேளையில், அதனை ஐந்தே நிமிடங்களில் அழித்து விட முடியும். பல் பச்சை குத்தல் செய்யப்பெற்ற இடத்தினைச் சுற்றி பாக்டீரியாக்கள் குவிந்து விடும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் பற்சொத்தை வரலாம். சிலநேரங்களில் பல் பச்சை உராய்ந்து தேய்ந்து பழையதாகி போனால் அவற்றை மாற்ற வேண்டி வரும். இவை தவிர, பல் அமைப்பை பல் பச்சை குத்தலுக்காக மாற்றியமைப்பதால் பல் அமைப்பு பலவீனப்படும். பற்களின் ஆயுள் குறையும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, பற்களில் பொருத்தப்படும் பென்சிற்கரி உணரி அளவில் பெரியவை. பெரும்பாலான மக்கள் பல் பச்சைக் குத்தலை கடைவாய்ப் பற்களில் நாக்கின் அருகாமையில் கன்னத்தின் பக்கவாட்டுகளில் அமைப்பர். கன்னத்தின் பக்கவாட்டுகளில் பல் பச்சை இருந்தால் அதனை எளிதாக கன்னத்தை ஒரு பக்கம் இழுத்து நண்பர்களுக்குக் காட்டி விடலாம். பல் பச்சை குத்தலை சிலர் பல் மருத்துவ உலகின் புரட்சி என அறிவிக்கின்றனர். பல் பச்சைகள் மிக எளிதாக பாக்டீரியாக்களை மோப்பம் பிடித்து கொடுக்கும் தொழில் நுட்பம் நல்லது எனவும் கூறுகின்றனர். மொத்தத்தில் பல் பச்சை குத்தலை மருத்துவத் தேவைக்கான ஆயுதம் என்கின்றனர்.
மரபு சார்ந்த பல் மருத்துவர்கள், பல் பச்சை குத்தல் மூலம் பற்களை அழகுபடுத்துகிறேன் என்று பலரும் அதன் ஆயுட்காலத்தைக் குறைத்து விடுகின்றனர். இறைவன் கொடுத்த பற்களை, அதே நிறத்தில் எவ்விதச் செயற்கை ஒப்பனையும் செய்து கொள்ளாது நல்ல முறையில் பராமரிப்பதே சிறப்பு என்கின்றனர்.