உலகின் மிகச் சுவையான உணவைப் பல் வலிக்கும் போது சாப்பிட்டால் உணவு வாயைக் காயப்படுத்தும் என்பார்கள். என் தந்தை, தனக்குத் தெரிந்த எழுத்தாளர் எழுதிய சிறுகதையினை அடிக்கடி சிரித்தபடி நினைவு கூர்வார்.
ஒரு பிரம்மச்சாரி அறை. அறையில் நான்கைந்து நண்பர்கள். ஒரு நண்பருக்கு நள்ளிரவில் திடீரென பல்வலி வந்து விடுகிறது. பல் வலியின் அசுர வேதனை தாங்காமல் துள்ளத் துடிக்கிறார் நண்பர். விடிந்தால், தான் உயிருடன்
இருக்க மாட்டோம் எனக் கருதி தனது பொருட்களை எல்லாம் நண்பர்களுக்கு பங்கு பிரித்துக் கொடுத்து விடுவார். ஒரு நண்பனுக்கு தன் காதலியைத் தாரை வார்த்தும் கொடுத்து விடுவார். பல மணி நேர அலப்பறைக்கு பின் பல்வலி நண்பர் தூங்கி விடுவார். காலையில் பல் வலி இல்லாமல் சாதாரணமாக எழும் நண்பர், நண்பர்களுக்குக் கொடுத்தப் பொருட்களை திரும்பப் பிடுங்கிக் கொள்வார். காதலி தானத்தை ரத்தும் செய்வார். இதுதான் அந்தச் சிறுகதை. பல்வலி என்பது அறுபது மாடி கட்டடத்தில் தீப்பற்றிக் கொண்டால் இடைவிடாமல் அலாரம் அடிக்குமே, அதனைப் போல ஒரு மனிதனை பல் வலி அதிரடித்து விடும். தாய்ப்பால் கொடுத்தும் தாலாட்டு பாடி தூங்க வைத்தும் தூங்காமல், தொடர்ந்து அழும் பச்சிளம் குழந்தையைப் போன்று பல் வலி அதிரடித்து விடும்.
மேற்கத்திய உலகில் பல் மருத்துவக் காப்பீடை மிகமிக முக்கியமானதாக எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், இந்தியாவில் பல் மருத்துவக் காப்பீடுகள், தபால்கள் எடுக்கப்படாத சிவப்புத் தபால் பெட்டிகள் போல தனித்துக் கிடக்கின்றன.
அரசு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் கைகோர்த்துப் பல் மருத்துவக் காப்பீட்டை வீரியமிக்கதாக்க வேண்டும். தடுப்பும் தகுந்த நேர மருத்துவமும் பல் மருத்துவத்தின் இரு கண்கள். முழுமையான உடல் நலம் ஒவ்வொரு மனிதரின் அடிப்படை உரிமை. வாய்வழி நலம் முழுமையான உடல் நலத்தின் ஒரு கிளை தான். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து நாடுகளில் பல் மருத்துவக் காப்பீடு முழுமையாக வெற்றியடைந்துள்ளது.
பல் கவிதை
* பூனையை கடிக்கவா
அம்மா காட்டிய சோறூட்டும் நிலாவைக் கடிக்கவா
ஊசி போடும் நர்ஸம்மாவைக் கடிக்கவா
நாலு குஞ்சு பூச்சாண்டியைக் கடிக்கவா
கன்னத்தைக் காட்டு தாத்தா
நச்புச்சென்று ஒரு கடிமுத்தம் தருகிறேன்.
- அ. ஜன்னத்துல் பிர்தௌஸ்
|
இந்தியாவில் 1981 ஆம் ஆண்டில், முதன்மையான நலக் காப்பீடுகள் மக்கள் முன் கடை விரித்தன. பதினேழு காப்பீடு நிறுவனங்கள் சந்தையில் குதித்தன. காப்பீடு நிறுவனங்கள் 2006 முதல் 2007 ஆம் ஆண்டில் 94.96 சதவீத வளர்ச்சி பெற்றன. பிரிமியம் 3500 கோடி வசூலானது. இந்த நிறுவனங்கள் பல் மருத்துவத்துக்கான தனிக்காப்பீடு கொள்கைகள் எதையும் கொண்டு வரவில்லை. பதிலாக, மற்ற கொள்கைகளுடன் பல் மருத்துவத்தைச் சேர்த்திருக்கின்றன. பல நிறுவனங்கள் பல் மருத்துவத்தைக் காப்பீட்டுக் கொள்கைகளில் இணைக்கப் பல நிபந்தனைகளை விதித்தன. உலக அளவில் பல் மருத்துவக் காப்பீடுகள் எப்படி உள்ளன?
அமெரிக்காவில் பல் மருத்துவக் காப்பீட்டை அமெரிக்கப் பல் மருத்துவக் கழகம் ஒழுங்குபடுத்தி உள்ளது. 1960 ஆம் ஆண்டில் 45 இலட்சம் அமெரிக்கர்கள் பல் மருத்துவக் காப்பீடு எடுத்திருந்தனர். 1980 ஆம் ஆண்டில் பத்து கோடி அமெரிக்கர்கள் பல் மருத்துவக் காப்பீடு எடுத்திருந்தனர். 2006 ஆம் ஆண்டில் பல் மருத்துவத் திட்டங்களின் தேசியக் கழகம் 20 கோடி அமெரிக்கர்கள் பல் மருத்துவக் காப்பீடு எடுத்திருப்பதாக அறிவித்துள்ளது. இது அமெரிக்க மக்கள் தொகையில் 57 சதவீதம் என்பது கவனிக்கத் தககது. அமெரிக்காவில் இரு வகையான பல் மருத்துவக் காப்பீடுகள் செய்யப்படுகின்றன. அதில் ஒன்று, முன்னாள் அமெரிக்கக் குடியரசுத்தலைவர் கொண்டு வந்த ஒபாமா பராமரிப்பு (Obama Care). இது மே 2007 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. இதன் நோக்கம், பல் மருத்துவத்தில் சேவைக் கட்டணமும், நிர்வகிக்கப்பட்ட பராமரிப்புத் திட்டமும் இணைந்தது. இத்திட்டம் ஒவ்வொரு அமெரிக்கருக்கும் பல் மருத்துவத்தை வீட்டின் கதவைத் தட்டி அளித்தது.
சுவீடனின் தேசியச் சுகாதார கழகம் 1938 ஆம் ஆண்டிலிருந்து பள்ளி மாணவர்களுக்குச் சிறப்பான பல் பராமரிப்பு நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்தியது. இந்த நிகழ்ச்சி நிரல் 6-16 வயதுக் குழந்தைகளுக்கு மாதாந்திரப் பரிசோதனை, இலவசச் சிகிச்சை, ஆண்டுப் பல் பராமரிப்புகளைப் பரிசளித்தது. 17 முதல் 19 வயதினருக்கு சிகிச்சை செலவில் சலுகை கொடுக்கப்பட்டது. இளம் வயதினருக்கு நிர்ணயிக்கப்பட்ட பல் மருத்துவக் கட்டணம், கருவுற்ற பெண்களுக்குப் பல் மருத்துவக் கட்டணம் 75 சதவீதம் திருப்பியளிக்கப்பட்டது. பொது மனித உடல் நலம் சுவீடன் அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இங்கு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை. 1973 ஆம் ஆண்டில் சுவீடன் இருபது வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்குப் பல் மருத்துவக் காப்பீடு கட்டாயம் எனச் சட்டம் கொண்டு வந்தது. அண்மைய அரசியல் மாற்றம் காரணமாக சுவீடனில் தனியார் பல் மருத்துவர்கள் பெருகி விட்டனர்.
இங்கிலாந்தில் 1948 ஆம் ஆண்டுக்குப் பின் பல் மருத்துவம் தேசிய உடல்நலச் சேவையில் (NHS) இணைக்கப்பட்டுள்ளது. இதற்கான செலவை மக்கள் மீதான வரி ஈடுகட்டுகிறது. மூன்று வகையான பல் மருத்துவ காப்பீடுகள் இங்கிலாந்தில் புழங்குகின்றன. அவையாவன;
1. பொதுப் பல் மருத்துவச் சேவை (General Dental Service – GDS)
2. சமுதாயப் பல் மருத்துவச் சேவை (Community Dental Service – CDS)
3. மருத்துவமனைப் பல் மருத்துவஅ சேவை (Hospital Dental Service – HDS)
பொதுவாக, பெரும்பான்மையான இங்கிலாந்து மக்கள் பொதுப் பல் மருத்துவச் சேவைகளையேத் தேர்ந்தெடுக்கின்றனர். பதினெட்டு வயதுக்குக் குறைவானவர்களும், கருவுற்ற பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் கட்டணமில்லாப் பொதுப் பல் மருத்துவச் சேவை பெறுகின்றனர். சமுதாயப் பல் மருத்துவச் சேவை சிறப்புத் தேவைகள் கொண்ட குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. பொதுப் பல் மருத்துவச் சேவை ஏழைகளுக்கு முழுமையாக பயன்படுகிறது. உடனடி பல் மருத்துவச் சிகிச்சைகளுக்குப் பொதுப் பல் மருத்துவச் சேவை துணை நிற்கிறது.
பல் மருத்துவக் காப்பீடு - மாற்று வழி
சு. தமிழ்ச்செல்வி, பந்தல்குடி.
நடுத்தர மக்களுக்குப் பயன் தரும் வகையில் பல் மருத்துவக் காப்பீட்டுக்கு மாற்று வழி ஏதாவது இருக்கிறதா?
மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:
ஒரு பல் மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்ளும் முன் மாதாந்திர கட்டணம் எவ்வளவு வரும்? வருடம் எவ்வளவு பணம் கட்ட வேண்டியிருக்கும் என்று சிறிய அளவில் கணக்குப் போட்டுப் பார்க்க வேண்டும். நமது பல் நலம் எப்படி இருக்கிறது? என நமக்கேத் தெரியும். ஆண்டுக்குப் பல் மருத்துவத்துக்கு ஆகப்போகும் செலவைக் கணித்திட வேண்டும். அந்தச் செலவை விடப் பல மடங்கு அதிகம் கட்ட நேர்ந்தால், அதனால் எந்தப் பயனுமில்லைதானே? மாதம் ரூபாய் 500/- வீதம் ஐந்து ஆண்டுகளுக்கு (60 மாதங்கள்) நிரந்தர வைப்புத்தொகையாகச் செலுத்துங்கள். திடீரென, ஒரு பெரிய பல் மருத்துவச் செலவு வந்தால் வைப்புத்தொகையினை முறித்து மருத்துவச் செலவை ஈடு கட்டுங்கள். சில வைப்புத் தொகைத் திட்டங்களில், கடன் பெறும் வசதியுமிருக்கும். குறைவான மருத்துவச் செலவு இருப்பின் அதில் கடனாகப் பெற்றுக் கொள்ள முடியும். எவ்விதப் பாதிப்புமில்லாத நிலையில், ஐந்து ஆண்டு முடிவில் வட்டியுடன் குறிப்பிட்ட அளவில் பணம் கிடைத்துவிடும்.
|
ஆனால், இந்தியாவிலோ எல்லாம் தலைகீழ்தான். உயிர் போகும் பல்வலியின் அசாதாரண சூழலில்தான் நோயாளிகள் பல் மருத்துவரை அணுகுகின்றனர்.
‘ஆனாக்க அந்தமடம்
ஆவாட்டி சந்தமாடம்
அதுவும் கூட இல்லாக்காட்டி
பிளாட்பாரம் சொந்த இடம்’
என்கிற பாட்டு நமக்குள் ஓடுகிறது.
இந்தியர்கள் பல் மருத்துவத்தில் வரும் முன் காப்பில் ஈடுபடுவதில்லை. வந்த பின் சொற்ப பாதிப்புடன் தப்பிப்பது என்கிற மனோநிலையில் உள்ளனர். இந்தியச் சந்தைகளில் விலை உணர்திறன் அதிகம். ஐம்பது பைசா
கூட இருந்தாலும் ஒரு பொருளை வாங்க மாட்டார்கள். பல் மருத்துவக் காப்பீடு ஒரு பயனுள்ள சிறு முதலீடுதான்.