பொது மருத்துவமனைகளில் நோயுற்றவர்களுக்குப் பயன்படுத்தப்படும் தளவாடங்களில் உள் நோயாளிகளாகச் சிகிச்சை பெற்று வருபவர்களில், நோயின் தன்மைக்கேற்ப, அவர்களுக்குத் தேவையான வசதிகளைக் கொண்ட பல்வேறு படுக்கைகள் தற்போது வந்திருக்கின்றன. ஆனால், பல் மருத்துவமனைகளில், பல் நோயாளிகளைச் சோதிப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் பல் மருத்துவ இருக்கை பல்வேறு வசதிகளைக் கொண்டதாக இருக்கிறது.
பல் அறுவை சிகிச்சையின் போது, நோயாளியை வசதியாக ஆதரிக்கவும், நிலை நிறுத்தவும் வடிவமைக்கப்பட்ட, சிறப்பு மருத்துவக் கருவிகளை உள்ளடக்கிய இருக்கையாக பல் மருத்துவ இருக்கை அமைந்திருக்கிறது. இது பல் மருத்துவர்கள்
நோயாளிகளின் வாயை எளிதில் அணுக அனுமதிக்கிறது. இது அடிப்படையில் சரி செய்யக்கூடிய அம்சங்களுடனும், சாய்ந்து கொள்ளக்கூடிய வகையிலான நாற்காலி என்று சொல்லலாம். இது பெரும்பாலும் பல் அலகு போன்ற பிற பல் சோதனைக் கருவிகளை ஒருங்கிணைத்து, முழுமையான சிகிச்சை செய்திடும் வகையில் அமைந்திருக்கிறது.
பல் கவிதை
* நீ வாய்திறந்து சிரித்தாய்
சித்ரா பௌர்ணமி
நீ வாய் மூடி மௌனித்தாய்
சந்திரகிரகணம்.
தினம் நூறு பௌர்ணமிகள்
தினம் நூறு கிரகணங்கள்
தரிசிக்கிறேன் தேவதையே..
- அ. ஜன்னத்துல் பிர்தௌஸ்
|
பொதுவாக இந்த இருக்கையானது,
* தேவைக்கேற்ப சரி செய்யக்கூடிய தன்மை கொண்டது.
பல் நாற்காலிகள் சரி செய்யக்கூடிய அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதால், பல் மருத்துவர்கள் நோயாளியின் வாய் வழிக் குழிக்கு உகந்த பல்வேறு வழிகளில் அணுகி சிகிச்சையளிக்க முடியும்.
* ஆறுதல்
நோயாளிகள் வசதியான நிலையில் வைக்கப்படுகிறார்கள். இதனால் நடைமுறைகளின் போது ஏற்படும் அசெளகரியங்கள் குறைகின்றன.
* ஒருங்கிணைப்பு
பல் நாற்காலிகள் பெரும்பாலும் பல் அலகுகளுடன் ஒருங்கிணைக்கப் படுகின்றன. இதில் மேல்நிலை விளக்குகள், ஸ்பிட்டூன் கிண்ணங்கள் மற்றும் பல் கருவிகளுக்கான கட்டுப்பாடு அமைப்புகள் போன்ற கூறுகள் அடங்கும்.
* அணுகல் தன்மை
இந்த வடிவமைப்பு பல் மருத்துவர்கள் நோயாளியின் பின்னால் வசதியாக உட்கார அனுமதிக்கிறது. இதனால் நோயாளிகளின் வாய் மற்றும் பல் கருவிகளை எளிதில் அணுக முடியும்.
முதன் முதலில் 18 ஆம் நூற்றாண்டில் ஜோசியா பிளாக் எனும் பல் மருத்துவரே பல் மருத்துவ இருக்கையைக் கண்டுபிடித்தார். மர இருக்கையைத் தேவைக்கேற்ப மாற்றி வடிவமைத்தார்.
பல் மருத்துவ இருக்கையில் மூன்று முக்கியமான நிலைகள்
பல் மருத்துவ இருக்கையை சரியான நிலையில் நிறுத்துதல் பல் மருத்துவருக்கு மிக முக்கியமான விஷயம். இதனால் மருத்துவரின் தெளிவு நிலை, அணுக இயலும் தன்மை மற்றும் சோர்வு தடுப்பு கூடும்.
பல் மருத்துவ இருக்கையில் மூன்று நிலைகள் உள்ளன. அவை;
* ஏறக்குறைய மல்லாக்கப் படுத்திருக்கும் நிலை (Almost Supine)
* 45 டிகிரி சாய்வு நிலை (Reclined at 45 Degree)
* நேரான அல்லது செங்குத்தான நிலை (Upright)
பல் மருத்துவ இருக்கையை சிகிsசை இருக்கை அல்லது நோயாளி இருக்கை அல்லது அறுவை சிகிட்சை இருக்கை எனவும் அழைப்பர்.
பல் மருத்துவ இருக்கையின் வகைகள்;
* நிர்ணயிக்கப்பட்ட தரநிலை பொது பல் மருத்துவ இருக்கை - இது போன்ற பல் மருத்துவ இருக்கைகளே அனைத்துப் பல் மருத்துவமனைகளிலும் இருக்கும்.
* குழந்தைகள் பல் மருத்துவ இருக்கை - இந்த வகை இருக்கை குழந்தைகளுக்காக தனித்து வடிவமைக்கப்பட்டது. இந்த இருக்கைகளில் குழந்தைகள் அமர வசதியாய் உட்காருமிடம் பொம்மை வடிவமைப்புகளுடன் இணைந்திருக்கும். குழந்தைகளை பல் மருத்துவமனைக்குக் கவர்ந்திருக்கும் முறையில் அந்த இருக்கைகள் வண்ணமயமாகவு இருக்கும்.
* சிறப்புப் பல் மருத்துவ இருக்கை - அறுவை சிகிச்சை மற்றும் பல் சீரமைப்பு அறுவை சிகிச்சை போன்றவைகளுக்கு ஏற்றதாக இந்த இருக்கை வடிவமைக்கப்பட்டிருக்கும்.
* மின் பல் மருத்துவ இருக்கை - இவ்வகை இருக்கைகளில் மின்மோட்டார்கள் இருக்கையை முன்னே பின்னே சரி செய்வதற்கு ஏற்றபடி பொருத்தப்பட்டிருக்கும்.
* காற்றால் இயங்கும் பல் மருத்துவ இருக்கை (Pneumatic Dental Chair) - இருக்கையின் நகர்ச்சியை தீர்மானிக்க அழுத்தப்பட்ட காற்று பயன்படும்.
* திரவ அழுத்தத்தால் இயங்கும் பல் மருத்துவ இருக்கை (Hydraulic Dental Chair) - திரவ அழுத்தம் இவ்வகை இருக்கைகளில் பயன்படுத்தப்படும். நகர்வு மிகத் துல்லியமாக இருக்கும்.
* கையடக்கப் பல் மருத்துவ இருக்கை - நடமாடும் பல் மருத்துவமனைகளில் பயன்படுத்தக் கூடிய இருக்கை.
* பணிச்சூழலியல் பல் மருத்துவ இருக்கை : (Ergonomic Dental Chair) - பல் மருத்துவர் மற்றும் நோயாளிகளின் வசதி மற்றும் தேவைகளைக் கருத்தில் கொண்டு இந்த இருக்கை உருவாக்கப்படுகிறது. இவ்விருக்கைகளில் மேம்பட்ட ஆதரவும் சரி செய்யக்கூடிய நிலைகளும் பொருந்தி உள்ளன.
* உடல் பருமன் ஆனவர்களுக்கான பல் மருத்துவ இருக்கை – (Bariatric Dental Chair) - சிறப்பான வடிவமைப்புடன் கூடிய இருக்கை குண்டானவர்களுக்கும் எளிதில் நகர முடியாதவர்களுக்கும் சிகிச்சையளிக்க உதவுகிறது.
*சக்கரங்கள் கொண்ட நகரக்கூடிய பல் மருத்துவ இருக்கை – (Movable Dental Chair) - வெவ்வேறு பணியிடங்களில் செயல்பட இம்மாதிரியான இருக்கை பயன்படுகிறது.
பல் மருத்துவ இருக்கைகளின் வடிவமைப்புகள் உயரிய தொழில் நுட்பத்துடன் இணைந்தே வளர்ச்சியடைந்து வந்திருக்கின்றன.
நவீனப் பல் மருத்துவ இருக்கைகள் நோயாளிகளின் உச்சபட்ச பாதுகாப்புக்காகவும், வசதிக்காகவும் மட்டும் உருவாக்கப்படவில்லை. அவை பல் மருத்துவரின் வசதிகளைக் கருத்தில் கொண்டும் உருவாக்கப்படுகின்றன.
அதி நவீனப் பல் இருக்கைகளில்;
* இரட்டை இணைப்பு தலை ஓய்வு
* மசாஜ் அமைப்பு
* நீர் கொதிகலம் கட்டமைப்பு
* தொடுதளம் கட்டுப்படுத்திகள்
எனும் சில புத்தம்புது நிலைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
மவுத் வாஷ் எனும் வாய்க்கழுவி
எஸ் மார்க்கபந்து, சிவகங்கை.
மவுத் வாஷ் எனும் வாய்க்கழுவிகளைப் பயன்படுத்துவது நல்லதா? கெட்டதா?
மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:
வாய்துர்நாற்றம், பல், ஈறு வலிகளுக்குச் சிலர் வாய்க்கழுவிகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். எலிகளின் மீது நடத்தப்பட்ட சோதனை பற்றி 'நேச்சர்' எனும் இதழில், ‘நீண்ட நாட்களாக வாய்க்கழுவிகளை உபயோகிப்பது முழு உடல் சார்ந்த ஒன்றுக்கும் மேற்பட்ட அவயங்கள் சார்ந்த நோய்களை வரவழைக்கும். வாய்க் கழுவிகள் குடல் நுண்ணுயிரிகள் இருப்பைச் சேதப்படுத்தும். ஈறு நோய் உணவுக்குழாய் புற்றுநோய் வாய்ப்பை உருவாக்கும். நாள்தோறும் இரு முறை பல் துலக்கல் மற்றும் பல் தழுவுதல் (Flossing) செய்து வந்தாலேப் போதுமானது. வாய்க்கழுவிகள் பயன்படுத்துவதைத் தவிர்த்து விடுவது நல்லது.
|
பல் மருத்துவ இருக்கைகளில் பல வணிகக் குறிகளுடன் சந்தையில் கிடைக்கின்றன.
1. வால்டென்ட் போலாரிஸ் பல் மருத்துவ இருக்கை - விலை 1,59,995. இரண்டு வருட உத்தரவாதம்.
2. அமேஸான். இன் பல் மருத்துவ இருக்கை - எல் இ டி விளக்கு, இரைச்சல் இல்லாத கம்ப்ரஸ்ஸர். விலை 2,39,500.
3. பிளானட் பல் மருத்துவ இருக்கை விலை 1,55,000
4. எஸ்கே டென்ட் எஸ்கே 8000 முழுமையான தானியங்கி மின் இயக்க பல் மருத்துவ இருக்கை. விலை ரூ 1,47,850.
5. டெநெக்ஸ்ட் கையடக்க பல் மருத்துவ இருக்கை ரூ 28,000.
6. பெஸ்டோன்ட் கிளாஸிக் பல் மருத்துவ இருக்கை. விலை1,06,500.
7. c1 மற்றும் எல்ஈடி விளக்கு பொருத்தப்பட்ட பல் மருத்துவ இருக்கை விலை 2,26,000.
8. ஜி நட்டஸ் பல் மருத்துவ இருக்கை விலை ரூ2,35,000.
9. ஆம்பைகோ டிஎன்எஸ் 1215 தானியங்கி பல் மருத்துவர் இருக்கை. விலை 66, 400.
10. டாபி க்ரோமா பல் மருத்துவ இருக்கை
11. ஆன்தோஸ் கிளாஸ் ஏ3 பாஸ் பல் மருத்துவ இருக்கை
போன்றவைகள் மருத்துவச் சந்தைகளில் கிடைக்கின்றன. மேலேக் குறிப்பிட்டிருக்கும் தற்போதைய விலை பின்னாளில் மாற்றங்களுக்குட்பட்டது என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.