இந்தப் பகுதியில் வாய்க்குள் இருக்கும் துணை உறுப்புகளில் ஒன்றான நாக்கைப் பற்றிப் பார்க்கலாம்.
“நாக்கின் நலமே பற்களின் நலம்; பற்களின் நலமே நாக்கின் நலம்” என்று நாம் உறுதியாகச் சொல்ல முடியும்.
வாய்ப் பகுதியின் நடுவில் இருக்கும் நாக்குக்கு முப்பத்திரண்டு பற்கள்தான் பெரும் பாதுகாப்பு.
நாக்கு என்கிற வார்த்தையைக் கேட்டதும் உங்களின் காதுகளில் விஜய் ஆண்டனியின் பாடல் ஒன்று ஒலிக்கத் தொடங்கிவிடும்.
“மாடு செத்தா மனுஷன் தின்னான்
தோலை வச்சு மேளம் கட்டி
அர்ரார்ரா நாக்கமுக்க
நாக்க முக்க நாக்கமுக்க”
- என்று உங்கள் கால்கள் தொடர்ந்து நான்கு நிமிடங்கள் குத்தாட்டம் போட்டே நிற்கும்.
எங்கள் ஊர் பக்கம் ஒரு சொலவடை சொல்வார்கள். இஸ்லாமியப் பெருமக்களின் சொலவடை அது.
“வாயை மூடினால் ஸலாமத்து
வயிற்றைக் கட்டினால் ரஹ்மத்து”
|
பற்களுக்கான குறள்கள்
* பல்லிற்கும் உண்டு அடைக்கும் தாழ்
பற்சொத்தை பாதரசத்தால் அடைக்கப்படும்.
* பெற்றோர் மகற்காற்றும் நன்றி பல்நோய்கள்
இல்லா திருக்க பழக்கல்
- தேஜஸ் சுப்பு என்கிற கனலி
|
எடின்பரோ பல் மருத்துவப் பள்ளியின் பல் சீரமைப்பு மருத்துவப் பிரிவு ஆய்வு செய்து, ஆண்களுக்கு நாக்கின் நீளம் 3.3 அங்குலம் (அ) 8. 5 செமீ. என்றும், பெண்களுக்கு நாக்கின் நீளம் 3.1 அங்குலம் (அ) 7 9 செமீ. என்றும் அறிவித்தது.
ஆரோக்கியமான நாக்கு இளஞ்சிவப்பு (Pink) நிறத்தில் காணப்படும். ஆனால், சிலருக்கு வெள்ளை, மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு, கறுப்பு, ஊதா, பழுப்பு, பச்சை, நீல நிறங்களில் என்று நாக்கின் நிறம் வேறுபடுகிறது.
பூஞ்சைத் தொற்று உள்ளவர்கள், நீரிழிவு நோய் (Diabetes Mellitus)பாதிப்பு உள்ளவர்கள், செயற்கைப் பல் (Denture) கட்டியவர்கள், இளைப்பு எனும் மூச்சுத் தடை நோய்க்கு (Asthma) ஊக்க மருந்து (Steroid) எடுத்துக் கொள்பவர்கள் என்று சிலருக்கு நாக்கு வெள்ளை நிறமாக இருக்கும்.
கிருமிகளின் அதீத வளர்ச்சியுடையவர்கள், புகையிலைப் பழக்கமுடையவர்கள், காளாஞ்சகப்படை (Psoriasis) மற்றும் மஞ்சள் காமாலை (Jaundice) பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு நாக்கு மஞ்சள் நிறமாக இருக்கும்.
போலிக் அமிலம் குறைபாடுடையவர்கள், உயிர்ச்சத்து (Vitamin) பி 12 குறைபாடு உடையவர்களுக்கு நாக்கின் நிறம் சிவப்பாக இருக்கும்.
மோசமான பல் பராமரிப்பு கொண்டவர்கள், நாள்தோறும் நுண்ணுயிர்க் கொல்லி மருந்து (Antibiotics) உட்கொள்பவர்கள், இருதய நோயுடையவர்கள் , வேதிச்சிகிச்சை (Chemotherapy) செய்து கொள்பவர்கள், செங்காய்ச்சல் (Scarlet Fever) கொண்டவர்களின் நாக்கு நிறம் கறுப்பு நிறமாக இருக்கும்.
ஒரு நாக்கின் உள்ளும் புறமும் ஆராய்ந்தால் வாய்ப் புற்றுநோயை கண்டுபிடித்து விடலாம்.
ஆரோக்கியமான நாக்கு ஒருவருக்கு இருப்பது போல, அடுத்தவருக்கு அமையாது. வெவ்வேறு தோற்றங்களுடன் ஆரோக்கியமான நாக்குகள், வெவ்வேறு நிறங்களில் இருக்கும்.
நோயுற்றவர்களின் நாக்கை நிறத்தைக் கண்டறிந்து, கீழ்க்கண்ட மருத்துவத்தால் நோயைச் சரி செய்து, நாக்கின் நிறத்தை மீட்டெடுக்கலாம்.
* செங்காய்ச்சலுக்கு அதிக சக்தி வாய்ந்த நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை உட்கொள்ளச் செய்யலாம்.
* பூஞ்சைத் தொற்றுக்கு பூஞ்சைக்கு எதிரான மருந்துகளைக் கொடுக்கலாம்.
* உணவுக்கு பின் விழுங்க உயிர்ச்சத்து பி 12 மாத்திரைகள் தரலாம்.
* போலிக் அமில மாத்திரைகள் தரலாம்.
* நிணநீர் கணு நோய்க் குறிக்கு ஒவ்வாமை எதிர்ப்பு மாத்திரைகளைத் தரலாம்.
உணவை நக்குதல், சுவை பார்த்தல், விழுங்குதல், மூச்சு விடுதல், பேசுதல் என்று நாக்கின் தினசரி வேலைகளைச் சொல்லலாம்.
பெண் கருவுற்ற காலத்தில், நான்காவது மாதக் கருவிலேயே நாக்கு உருவாகி விடுகிறது. நாக்கில் எலும்புகள் இல்லை, நாக்கு தசைகளால் ஆனது. நாக்கைச் சுற்றிச் சளிச்சவ்வு படர்ந்துள்ளது. தவிர, நாக்கு பலவகை காம்புக் குமிழ்களாலும், சுவை அரும்புகளாலும் நிரப்பப்பட்டவை. நாக்கு அடுக்கமைவு செதில் போர்வை மேலணியால் செய்யப்பட்டது. நாக்கு ஒரு செரிமான உறுப்பு. நடுக்கழுத்தின் உவையுரு நாவெலும்பில் நாக்கு ஆரம்பித்து வாயின் முன் உள்பகுதி வரை நீண்டிருக்கிறது.
நாக்கின் உள்ளுறுப்புகள் எனும் போது,
1. குடை அரும்புகள் (Filiform Papillae) - நாக்கின் முன் பகுதி. மூன்றில் இரண்டு பங்கு நாக்கில் இவை நிரம்பியுள்ளன. மெலிதான நூல் வடிவம் கொண்டது.
2. காளான் வடிவ முகிழ்ப்புகள் (Fungiform Papillae) - நாக்கின் பக்கவாட்டிலும் ஓரத்திலும் இவ்வகை நுண்காம்புகள் இருக்கின்றன. இதில் 1600 சுவை அரும்புகள் இருக்கின்றன.
3. அகழியறும்புகள் (Circumvallate Papillae) - பின் நாக்கில் சிறுபுடைப்புகளாய் இருக்கின்றன. இவற்றில் 250 சுவை அரும்புகள் இருக்கின்றன.
4. இலை போன்ற மெல்லிய தாள்கள் (Foliate) - பின் நாக்கின் இரண்டு பக்கமும் கடின மடிப்புகளாய் இவை இருக்கின்றன. இருபது இலை போன்ற மெல்லியதாள்கள் இதில் அடங்கியுள்ளன. பல்வகை சுவை அரும்புகள் இங்கே நிரம்பியுள்ளன. உண்ணும் உணவின் சுவையை சுவை அரும்புகளின் நரம்பணுப் பின்னல்கள், மூளைக்குப் புலன் சார்ந்த செய்திகளை அனுப்புகின்றன.
நாக்கின் அனைத்துப் பகுதிகளும் உணவின் அனைத்துச் சுவைகளையும் உணரும் தன்மையுடையன. நாக்கானது பொதுவாக, இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, எரிப்பு என்று ஐந்து வகையான சுவைகளையும், அதனுள் அடங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான துணைச் சுவைகளையும் கண்டறியும் திறன் பெற்றது.
|
முக அழகு கேள்வி பதில்
சு. மணிமாலா:
பல் மருத்துவம் பற்றியும் சில மூட நம்பிக்கைகள் இருக்கின்றதே...?
மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:
* சமணர்கள் பல் பிடுங்கும் போது மயக்க மருந்து ஊசி போட்டுக் கொள்வதில்லை.
* உயர் வகுப்பு மக்கள், தாழ்ந்த வகுப்பு மருத்துவரிடம் மருத்துவம் பார்ப்பதில்லை.
* விழுந்தப் பல்லைப் பெற்றோரோ, சிறுவர்களோ எடுத்து, கல்லுக்கு அடியிலோ வீட்டுக் கூரைக்கு மேல், எலி வளைக்குள் பாதுகாக்கின்றனர். அப்படிப் பாதுகாத்தால் மீண்டும் முளைக்கும் பல் எலிப் பல் போன்று படு உறுதியாக இருக்கும்.
* பிறக்கும் போதே குழந்தைக்குப் பல் இருந்தால், அது குழந்தையின் தாத்தாவின் உயிருக்கு ஆபத்து என நம்புகின்றனர்.
- இப்படி ஆயிரம் மூட நம்பிக்கைகள் இந்தியச் சமூகங்களில் உலவுகின்றன. அவற்றையெல்லாம் புறந்தள்ளி அறிவியல் வழியிலான நம்பிக்கைகளை மட்டும் நம் மனதில் கொள்வது நல்லது.
|
உலகத்திலேயே நீளமான நாக்கு யாருக்கு இருக்கிறது?
அமெரிக்காவை சேர்ந்த நிக் ஸ்டோபெரி (Nick Stoberi) என்பவருக்கு 3.97 அங்குலம் அல்லது 10.1 செமீ நீளமுள்ள நாக்கு இருக்கிறது. இவரது நீளமான நாக்கு கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது.
இவர் நாக்கால் ஓவியம் வரைவார். ஓவியமேதை பிக்காஸோ பெயரைச் சிறிது மாற்றி, இவரைக் கேலியாக, லிக்காஸோ (நக்கிப் படம் வரைபவர்) என்று பட்டப் பெயர் வைத்திருக்கிறார்கள்.
மனிதர்களுக்கு மட்டும்தான் நாக்கு இருக்கிறதா? மற்ற உயிரினங்களுக்கு நாக்கு இல்லையா? என்று கேட்கலாம்.
விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட மற்ற உயிரினங்களின் நாக்கைப் பற்றி அடுத்தப் பகுதியில் பார்க்கலாம்...!