மிருகங்களின் பறவைகளின் நாக்குகளை பற்றிப் பார்க்கும் முன் மனித நாக்கில் ஏற்படும் ஒரு முக்கியமானப் பிரச்சனை பற்றித் தெரிந்து கொள்வோம்.
நாக்கின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் தசை நாரை இழுமடி (Frenum) என்பர். இந்த இழுமடி என்கிற கொத்து தசை நார்கள்தான் நாக்கை வாயின் அடித்தளத்துடன் இணைக்கிறது. இந்த இணைப்பு குறுகியதாக இருந்தால் நாக்குப் பிடிப்பு (Ankyloglossia) என்கிற வாய் குறைபாடு உருவாகும். இக்குறைபாட்டை நீக்க ஈறுதட்டு தசைநாண் நீக்கம் (Frenectomy) எனும் அறுவை சிகிச்சை செய்வர். அறுவை சிகிச்சைக்குப் பின் வாயின் கீழ் அண்ணத்துடன் இணைக்கப்பட்ட தசை நார்கள் இயல்புக்கு நீட்டப்படும்.
உண்ணும் உணவின் சுவையில் மாற்றம் தெரிந்தால், அதனை, சுவைக்குழப்பம் (Dysgeusia) என்பர். உண்ணும் உணவின் சுவை முழுக்க முழுக்க உணர முடியாத நிலைக்கு, சுவை மாற்ற உணர்வின்மை (Ageusia) என்பர்.
கீழ்க்கண்ட மருத்துவப் பிரச்சனைகள் இருந்தால் நாக்கு மரத்துப் போகும்.
* உணவு அல்லது மருந்தின் ஒவ்வாமை.
* தன்னுடல் தாக்கு நோய்.
* இரத்தக்குழாய் சுருக்கம்.
* நரம்புகள் சேதம்.
* வைட்டமின் குறைவு.
* பக்கவாதம்.
பற்களுக்கான குறள்கள்
* சொற் குத்தல் போலவே கொடுமை உண்டபின்
பற்குத்தல் நிதமும் செய்தல்.
* வெண்குழல் வத்தி நித்தம் புகைப்போருக்கு
வெண்முத்து பற்கள் வாரா.
- தேஜஸ் சுப்பு என்கிற கனலி
|
தொடர்ச்சியாகப் புகைப்ப்டிக்கும் பழக்கமுடையவர்களுக்கு நாக்கில் புண்கள் வரும். நீண்ட நாள் புண்கள் புற்று நோயாக மாற வாய்ப்பிருக்கிறது.
சிலருக்கு நாக்கு எரிச்சல் இருக்கும். இதனை, எரிகின்ற வாய் நோய்க்குறி (Burning Mouth Syndrome) எனக் கூறுவர். மாதவிலக்கு நின்று போன ஐம்பது வயது பெண்களுக்கு இப்பிரச்சனை வரும்,
நாக்கு வீக்கத்தை பெரிய நாக்கு (Macroglossia) என்பர். கூடுதல் புரோட்டீன் தேக்கமே நாக்கு வீக்கத்துக்குக் காரணம்.
இரத்தசோகை உயிர்ச்சத்து பி (Vitamin B) குறைபாடு உள்ளவருக்கு மொழு மொழுவென்று மொட்டை நாக்கு இருக்கும்.
இப்போது மிருகங்கள், நீர் வாழ் உயிரினங்கள் மற்றும் பறவைகளின் நாக்குகளைப் பற்றிப் பார்ப்போம்.
1. தவளை
தவளைகளில் 4000 வகையான தவளைகள் உள்ளன. தவளையின் நாக்கு, மனிதர்களின் நாக்குகளை விடப் பத்து மடங்கு மெலியது. தவளையின் நாக்கை, இழுபடக்கூடிய செயற்கை இழைக்கான மரக் குழைம (Viscose Elastic) நாக்கு என்பர். தவளையின் நாக்கு பொதுவாக சிவப்பு நிறத்தில் இருக்கும். சில வகை தவளைகளின் நாக்குகள் இளஞ்சிவப்பு, மஞ்சள், நீல நிறங்களில் காணப்படும். தவளையின் உமிழ்நீரை, நியூட்டன் வகையில்லாப் பாய்மம் (Non -Newtonian Fluid) என்பர். தவளை தன் இரையை 0.07 நொடிகளுக்குள் சுருட்டி விழுங்கி விடும். மனிதன் கண்ணிமைக்கும் நேரத்தில் ஐந்தில் ஒரு பங்கு நேரத்தில் இரையை விழுங்கி விடும். மொத்தத்தில் தவளையின் நாக்கு ஒரு தூண்டில் போலச் செயல்படுகிறது.
2. நீலநாக்கு அரணை
பாம்புராணி, பாம்பரணை, பாப்பராணி என்ற பெயர்களில் அழைக்கப்படும் அரணையை நீலநாக்கு அரணை (Blue Tongued Skink) என்று சொல்லலாம். அரணை என்பது ஒரு பல்லி வகையைச் சேர்ந்தது. உலகில், 1500 வகையான அரணைகள் உள்ளன. அரணைகள் அனைத்தும் விஷமுடையவை அல்ல. சிலர் அரணை நாக்கினால் மரணம் என்பர். அது பொய்யான தகவல். அரணையின் வாய்ப்பகுதி திசுக்கள் புற ஊதாக் கதிர்களைப் (Ultra Vilolet Rays) பிரதியலிக்கும் தன்மை கொண்டவை. அதனால், அரணையின் நாக்கு துடிப்பான நீல நிறமாய் இருக்கிறது.
3. கழுகுகள்
கழுகுகளின் நாக்கு இளஞ்சிவப்பாய் குறுகலாய் கூர்மையான அலகுகளுக்கு இடையே அடக்கமாய் அமைந்திருக்கும்.
’
4. முதலைகளை முறிக்கும் ஆமைகள்
மேக்ரோகிளிமைஸ் டிமென்கி (Macrochelys temminckii) எனும் அறிவியல் பெயரைக் கொண்ட, முதலைகளை முறிக்கும் ஆமைகள் (Alligator Snapping Turtle) படுத்துக் கொண்டே நாக்கை புழு மாதிரி ஆட்டும். புழு என நினைத்து மீன்கள் ஏமாந்து, இந்த ஆமைகளுக்கு இரையாகும்.
5. கிளிகள்
கிளிகள் (Parroat) மனிதரைப் போல பேசக்கூடியவை. பேசும் வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாது என்றாலும், பலகுரலில் (Mimicry) பேசும். கிளிகளுக்கு உதடுகள் கிடையாது, தொண்டைபெட்டி கிடையாது. சுவாசக் குழாய்க்கும் நுரையீரலுக்கும் இடையே அமைந்திருக்கும் ஆங்கில எழுத்தான ஒய் வடிவ குரல்வளையினால் (Syrinx) பேசுகின்றன. கிளிக்கு நாக்கு மனித விரல் வடிவில் இருக்கும். கிளியின் நாக்கில் நாவடி (Hyoid Apparatus) என்கிற எலும்புகள் உள்ளன.
6. பேரரசர் சிறுகுரங்கு
பேரரசர் சிறுகுரங்கு (Emperor Tamarin) என்பது பாலூட்டிகளின் பெரும்பிரிவுகளில் முதன்மையான பாலூட்டி இனமான முதனி (Primate) எனப்படுபவை. இக்குரங்கின் முகத்தில் அடர்த்தியான மீசை இருக்கும். இதன் எடை 500கிராம் வரை இருக்கும். அமேசான் படுகையிலும், பிரேசிலிலும் வசிக்கின்ற இவ்வகைக் குரங்குகள், தங்கள் அதிருப்தியை காட்ட நாக்கை வாயின் உள்ளும் புறமும் ஆட்டும். நாக்கால் விசில் போன்ற சப்தம் எழுப்பும்.
7. கொசு போன்ற பூச்சிகள்
கொசு போன்ற பூச்சிகளுக்கு நாக்குக்கு பதில் உறிஞ்சுக்குழல் அல்லது குழல்வாய் (Proboscis) இருக்கிறது. இந்த உறிஞ்சுக்குழலைக் கொண்டு உணவை உறிஞ்சிக் குடிக்கும். இதனை சிற்றுதடு (Labellum) எனவும் கூறுவர்.
8. எறும்புத்தின்னி
அழுங்கு எனப்படும் எறும்புத்தின்னி (Ant Eaters) ஒரு பாலூட்டி இனமாகும். எறும்புத் தின்னிக்கு பல் இல்லை. அறுபது செமீ நீளமுள்ள நாக்கு இருக்கிறது. பச்சென்று ஒட்டும் பசை நாக்கு. இந்த நாக்கு விலா எலும்புடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த நாக்கைப் பயன்படுத்தி ஒரு நாளைக்கு முப்பதாயிரத்துக்கும் அதிகமான எறும்பு மற்றும் கரையான்களைத் தின்கிறது. தனது நாக்கை ஒரு நொடிக்கு 150 தடவைகள் ஆட்டும்.
9. பச்சோந்தி
பச்சோந்தி தனது உடலை விட 2.5 மடங்கு நீளமாய் நாக்கை நீட்டுகிறது. இதன் வேகம் நொடிக்கு 8500 அடி எனும் அளவில் இருக்கும். சில வெட்டுக்கிளிகளின் நாக்கின் வேகம் நொடிக்கு 23100 அடி எனும் அளவில் இருக்கும். சிலவகை பல்லிகளின் நாக்கின் வேகம் நொடிக்கு 14700அடி எனும் அளவில் இருக்கும்.
10. ஓசனிச் சிட்டு மற்றும் தேன் சிட்டுகள்
ஓசனிச்சிட்டுகள் (Hummingbird) என்னும் மிகச் சிறிய பறவைகள் சிறகடித்துக் கொண்டே பூவில் இருந்து தேனை உறிஞ்சி உண்டு வாழ்பவை. இவ்வினப் பறவைகள் வட, தென் அமெரிக்கக் கண்டங்களில் மட்டுமேக் காணப்படுகின்றன. நம் நாட்டில் காணப்படும் தேன் சிட்டுகளைப் போன்றவை இச்சிட்டுகளின் நாக்கை உணர்கொம்பு நுனித்தட்டு (Lamellate) என்பர். இவை, நீளமான மயிர் போன்ற இணைப்புகளுடன் காணப்படும். தேன்சிட்டின் நாக்கு நொடிக்கு 12 தடவை துடிக்கும். தேன்சிட்டின் நாக்கு ஒரு உறிஞ்சுக்குழல போலச் செயல்பட்டு பூவுக்குள் இருக்கும் தேனை உறிஞ்சும்.
11. மரங்கொத்தி
மரங்கொத்தியின் (Woodpecker) நாக்கு அதன் மூளையின் பின்புறத்தில் மடித்து வைக்கப்பட்டிருக்கும். மிக வேகமாய் மரம் கொத்தும் போது, மரங்கொத்தியின் மூளை பாதிப்படையாமல் இருக்க மடித்து வைக்கப்பட்ட நாக்குப் பகுதி உதவுகிறது. நொடிக்கு 20 தடவைகள் வீதம் மரங்கொத்திகள் ஒரு நாளைக்கு 12000 தடவைகள் எனும் அளவில் மரத்தைக் கொத்துகின்றன.
ஒற்றைத் தலைவலி கேள்வி பதில்
உ. சரவணன், குனியமுத்தூர்
எனக்கு அடிக்கடி ஒற்றைத் தலைவலி வருகிறது. என்னுடன் பணிபுரியும் நண்பர் ஒருவர், ‘உன் தலைவலிக்கு காரணம் உன் பல் பிரச்சனையாக கூட இருக்கலாம்' என்கிறார். பல் பிரச்சனைக்குத் தலைவலி வருமா?
மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:
முக்கை நரம்பு அல்லது முப்பெரும் நரம்பு (Trigeminal Neuralgia) முகம் மற்றும் கண் இயக்கங்களைக் கட்டுப்படுத்தக் கூடியது. பல் சொத்தை, பல் விரிசல் மற்றும் அறிவுப் பல் முழுமையாக முளைக்காதிருத்தல் போன்றவைகளால் ஏற்படும் பல் வலியினால், ஒற்றை தலைவலி வரலாம். பல்வலி இருப்பின் பல் மருத்துவரைச் சந்தித்து, பல் பிரச்சனை ஏதுமில்லை என்று அறிந்த பின்பு நரம்பியல் மருத்துவர்களை அணுகலாம்.
|
12. பெங்குவின்கள்
பெங்குவினின் நாக்கில் சுவை மொட்டுகள் கிடையாது. நாக்கில் தலை வாரும் சீப்பு அமைப்பு உள்ளது. சீப்பு போன்ற அமைப்பால் பெங்குவின்கள் கிரில் மீன்களை வேட்டையாடுகின்றன.
13. நாக்கை தின்னும் ஒட்டுண்ணிகள்
சில வகை ஒட்டுண்ணிகள் மீன்களின் நாக்குகளைத் தின்றுவிட்டு போலி நாக்காய் மாறி விடும். அந்த ஒட்டுண்ணியின் பெயர் சிமோத்துவா எக்ஸிகுவா (Cymothoa Exigua). இந்த ஒட்டுண்ணிகள் ஏழு இணைக் கால்களால் மீன்களின் செவுள்களுக்குள் நுழைந்து மீனின் நாக்கை விழுங்கி விடுகின்றன.
14. ஒட்டகச்சிவிங்கி
ஒட்டகச் சிவிங்கிக்கு 53 செமீ நீளமுள்ள நாக்கு இருக்கிறது. ஊதா கறுப்பு நீலம் கலந்த நாக்கு. நாக்கில் ஏரளமான கருநிறமிகள் நிறைந்துள்ளன. ஒட்டகச் சிவிங்கிகள் காதைச் சுத்தம் செய்ய நாக்கையேப் பயன்படுத்துகின்றன.
15. சூரியக்கரடி அல்லது தேன் கரடி
சூரியக் கரடி அல்லது தேன் கரடிகளுக்கு நாக்கு 25 செ.மீ நீளமுள்ளது. இந்த நாக்கு, தேன் கூட்டிலிருந்து தேனை நக்கப் பயன்படுகிறது.
16. நீர் யானை
ஐம்பது வயது நீர் யானைக்கு நாக்கு 60 செ.மீ நீளமுடையதாக இருக்கிறது. நான்கு வயதான நீர்யானைக்கு 45 செ.மீ நீளமிருக்கிறது.
17. பெரிய நச்சுப்பல்லி
அமெரிக்காவில் நியூமெக்சிகோ அரிசோனா முதலிய பகுதிகளிற் காணப்படும் பெரிய நச்சுப்பல்லியின் (Gila Monster Lizard) நுனியில் இரு முனைகள் உள்ள நாக்கு இருக்கிறது. நாக்கில் கறுப்பு நீல நிறமிகள் நிறைந்திருக்கும். நாக்கால் இரையை நுகர்ந்து இரையை வாரி விழுங்கும்.
19 சிங்கம்
சிங்கம் தனது நாக்கால் தனது உடம்பை நக்கிக் கொள்கிறது. உப்புத்தாள் போல சிங்கத்தின் நாக்கு சொரசொரப்பாய் இருக்கும். சிங்க நாக்கில் இனிப்பைக் கண்டுபிடிக்கும் உணர்வி இருக்கிறது.
20. மரப்பல்லி
மரப்பல்லி நாக்கை நீட்டி இரையை உண்ணும் போது சிறு குழந்தை போல கிரீச்சிடும்.