மனித உடலின் மேற்பகுதியில் ஏற்படும் சில குறைபாடுகளை அறுவைச் சிகிச்சையின் வழியாகச் சரி செய்து கொள்ளூம் சிறப்புச் சீரமைப்பு அறுவை மருத்துவர் (Plastic Surgeon) போன்று, பல் மருத்துவத்தில் தாடை அறுவைச் சிகிச்சை, உதடுப் பிளவு சீரமைப்பு போன்றவைச் சரி செய்து கொள்வதற்கும், புற்றுநோய், விபத்து மற்றும் பிறவியிலேயே ஏற்பட்ட முகக்குறைபாடுகளைச் சரி செய்து கொள்வதற்கும் முகத்தை மறுசீரமைப்பு செய்யும் அறுவைச் சிகிச்சை (Maxillo Facial Surgery) மருத்துவர்களாக, மிகவும் அனுபவம் வாய்ந்த பல் மருத்துவர்கள் இருக்கின்றனர். முகம், தாடை, கழுத்து அல்லது வாயில் தோன்றும் நோய்கள் மற்றும் காயங்களுக்கான சிகிச்சையினையும் முகச் சீரமைப்பு அறுவைச் சிகிச்சை மருத்துவர்களான பல் மருத்துவர்கள் செய்கின்றனர்.
முகக்காயங்கள், தாடைகளின் ஒழுங்கீனம், புற்றுநோய் கட்டிகள், நீர்க் கட்டிகள், வாய்ப் புற்றுநோய், தாடை மூட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள தசைகளின் வலி மற்றும் செயலிழப்பு (தற்காலிக மண்டை மூட்டுக் கோளாறு) போன்றவைகளும், விபத்தில் சிதைந்த முகத்தைச் சீரமைத்தல், உதட்டுப் பிளவைச் சரி செய்தல், உதடு பழுது, செயற்கைப் பல் பொருத்துதல், தாடை அறுவைச் சிகிச்சை, முக அழகு மேம்படுத்துதல் போன்றவைகளும் முகச் சீரமைப்பு அறுவைச் சிகிச்சை எனப்படுகிறது.
முகச் சீரமைப்பு அறுவைச் சிகிச்சைக்கு, விபத்துகள் மற்றும் முக எலும்புகளின் முறிவு மற்றும் காயங்களின் கிழிசல்களை பழுதுபார்த்தல், உதடு மற்றும் மேலண்ணப் பிளவு போன்ற பிறவிக் குறைபாடுகளை களைதல், புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி அப்பகுதியைப் புனரமைத்தல், தாடை இணைப்புகளின் வலி நீக்கி முழுமையாக இயங்கச் செய்தல் (Temporo Mandibular Joint Cure), மேல்தாடை கீழ்தாடை முன் நின்றோ பின் தங்கியோ இருப்பதை நேர் செய்தல், தூக்கத்தில் மூச்சுத் திணறலை (Sleep Apnea) சரி செய்தல், பல் எலும்பு ஒட்டுதல் (Dental Bone Grafting), தாடை அறுவைச் சிகிச்சை, செயற்கைத் தாடை பொருத்துதல், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மேல் தாடையை அகற்றுதல் (Maxillectomy), தலை மற்றும் கழுத்துப் புற்றுநோய், தாடைகள் துருத்துதல், நீண்ட நாள் முக வலி போன்றவை பொதுவான காரணங்களாக இருக்கின்றன.
இவை தவிர, இரண்டு சக்கர, நான்கு சக்கரச் சாலை விபத்துகள், பிறருடன் சண்டை மற்றும் கைகலப்பு, திருவிழா போன்ற கூட்டங்களில் சிக்குதல், தீபாவளி போன்ற பண்டிகைகளில் அபாயகரமாக வெடி வெடித்தல், பற்களால் கண்ட பொருட்களை திறத்தல், கால்பந்து, ரக்பி போன்ற ஆட்டங்களில் காயங்கள், வளர்ப்பு மிருகங்களுடன் விளையாடி முகக்காயப்படுதல், குளியலறை, கழிவறையில் வழுக்கி விழுதல், சட்ட விரோதமாக வெடி மருந்து தயாரித்து விபத்தில் சிக்குதல், தொடருந்து மற்றும் பேருந்துகளில் படிக்கட்டுப் பயணம் போன்றவைகளால் முகத்தில் ஏற்படும் பாதிப்புகளை முகச் சீரமைப்பு அறுவைச் சிகிச்சையின் மூலம் சரி செய்திட முடியும்.
|
குறியீட்டு வரிசை
“சிரிப்பு ஒரு கோப்பின் பெயர்
பற்கள் அதன் வெண்மை
படவணுக்கள்
உண்மை பழைய பதிப்பு
புதியமுகம் வணிகமயமான
வடிவம்
மனிதன் மென்பொருளின்
சிரிப்பு மாதிரி
நிழலில் மட்டுமே தெரியும்
அவனின் உண்மை”
-ஏ. நஸ்புள்ளாஹ், இலங்கை.
|
முகச் சீரமைப்பு அறுவைச் சிகிச்சை செய்யும் பல் மருத்துவர்கள் மருத்துவத்திலும், பல் மருத்துவத்திலும் இரட்டைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Doctor of Dental surgery (DDS) அல்லது Doctor of Dental Medicine (DMD) பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Oral and maxillofacial surgery (OMFS) படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முக மறுசீரமைப்பு அறுவைச் சிகிச்சை வல்லுநர்கள், சிகிச்சைக்கு முன்பாக, புற்றுநோயியல் வல்லுநர்கள், நரம்பியல் வல்லுநர்கள், சிறப்புச் சீரமைப்பு அறுவை மருத்துவர்களைக் கலந்தாலோசித்திட வேண்டும்.
முகச் சீரமைப்பு அறுவைச் சிகிச்சை வல்லுநர்கள், முகச் சீரமைப்பு செய்யும் நோயாளிகளிடம் பின் வரும் வழிமுறைகளைப் பற்றித் தெளிவாக விளக்கிட வேண்டும்.
* நோயாளியை முழுமையாகப் பரிசோதித்த பின், நோய் தீர்மானம் மற்றும் சிகிச்சை குறித்து முறையான சிகிச்சைத் திட்டம் தயாரிக்க வேண்டும்.
* அறுவைச் சிகிச்சைக்கு முன்பாகத் தேவையான இரத்தப் பரிசோதனை, பல் மருத்துவ எக்ஸ்ரே, இருதயத்துடிப்பு வரைவி போன்றவைகளைச் செய்திடல் வேண்டும்.
* நோயாளிக்கு நீண்டகால நோய்த் தொற்றுகள் ஏதாவது இருந்தால், அது குறித்த தகவல்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். நோயாளி தொடர்பான கூடுதல் தகவல்களை இருதய நோய் வல்லுநர் அல்லது நோயாளியின் குடும்ப மருத்துவரைக் கலந்தாலோசித்திட வேண்டும்.
இவை தவிர, முகச் சீரமைப்பு அறுவைச் சிகிச்சை செய்வதற்கு முன் கீழ்க்கண்ட வழிமுறைகளை பல் மருத்துவ வல்லுநர் பின்பற்றிட வேண்டும்.
* நோயாளியின் குடும்ப நண்பர், பாதுகாவலர் அல்லது பெற்றோர் அல்லது உடன் பிறந்தோர் அல்லது கணவன் மனைவி மருத்துவமனைக்கு அழைத்து வரச் செய்தல் வேண்டும்.
* அறுவைச் சிகிச்சையின் போது, மருத்துவர் பொதுவான மயக்க மருந்து கொடுத்து நோயாளியை அறுவை சிகிச்சை முடியும் வரை மயக்க நிலையிலேயே வைத்திருக்க வேண்டும்.
* நோயாளி மயக்கத்தில் இருக்கும் போது, பல் மருத்துவ வல்லுநர் தேவைப்படும் இடத்தில் ஒன்றோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட கீறல்களை இடக்கூடும்.
* அறுவைச் சிகிச்சை செய்யும் வல்லுநர், அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான கிருமி நீக்கம் செய்யப்பட்ட சிறிய சிறப்புக் கருவிகளைப் பயன்படுத்திட வேண்டும்.
* அறுவைச் சிகிச்சை செய்யும் வல்லுநர், அறுவைச் சிகிச்சைக்குப் பின்பு, கீறல்களுக்குத் தையலிட்டு அதனை மூடி, பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்.
* முகச் சீரமைப்பு அறுவைச் சிகிச்சையினைச் செய்து கொள்பவருக்கு இரத்தப் போக்கு (bleeding), முக நரம்புகள் சேதம், நோய்த் தொற்று, சிறு தீற்றல்கள் (brushing), உலர் சாக்கெட் (இரத்த உறைவு தோன்றாமை) , வீக்கம் (Swelling),வாய் மற்றும் முகம் மரத்துப் போதல், பல் வேரின் சிறுபகுதி சாக்கட்டில் தங்குதல் போன்ற சில பக்க விளைவுகள் ஏற்படலாம் என்றும், அறுவைச் சிகிச்சை முடிவுற்ற தகவல், அறுவைச் சிகிச்சைக்குப் பின், அதிலிருந்து முழுமையாகக் குணமாகத் தேவையான நாட்கள், பின்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவைகளை அறுவைச் சிகிச்சை வல்லுநர்கள் விளக்கிட வேண்டும்.
|
பல் கொட்டும் கனவுகள்
பரந்தாமன், வேலூர்.
முகச் சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்வதற்கு அதிகப் பணம் செலவாகும் என்கிறார்கள், உண்மையா?
மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:
முகச் சீரமைப்பு அறுவைச் சிகிச்சைக்குத் தற்போதைய நிலையில், அவர்களுடைய சிகிச்சைக்கேற்ப 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 30 இலட்சம் ரூபாய் வரை செலவாகும். மேல் தாடை அல்லது கீழ்தாடை அறுவை சிகிச்சையாக இருப்பின், ரூபாய் 1.50 இலட்சம் முதல் 3 இலட்சம் வரை செலவாகிறது. இதே போன்று, இரண்டு தாடைகளுக்கான அறுவைச் சிகிச்சைக்கு 7 இலட்சம் ரூபாய் வரை செலவாகிறது. அறுவைச் சிகிச்சை முறை, செயற்ப்கை பல் அல்லது தாடை பொருத்துதல், பொருத்தமான மயக்க மருந்து பயன்படுத்துதல், மருத்துவமனையில் தங்கல், அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தையக் கவனிப்பு போன்றவை மேலும் செலவை அதிகரிக்கும். சில வகை முகச் சீரமைப்பு அறுவைச் சிகிச்சைக்குக் காப்பீடுகள் இருக்கின்றன. இதனையும் பயன்படுத்திக் கொள்ளலாம். பல்வேறு வசதிகள் கொண்ட மிகப்பெரிய மருத்துவமனைகளில் இச்செலவுத் தொகை அதிகமாக இருக்கும்.
|
மேலும், முகச் சீரமைப்பு அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளும் போது,
* துருத்திய தாடைகளும் துருத்திய பற்களும் முகவலி, தலைவலி மற்றும் பல் வலியைப் பரிசளிக்கும். முக மறுசீரமைப்பு அறுவைச் சிகிச்சை மூலம் இந்த வலிகளை முழுமையாக நீக்கலாம்.
* முக மறுசீரமைப்பு அறுவைச் சிகிச்சைக்குப் பின் கடித்தல், மெல்லுதல், பேசுதல் போன்ற செயல்பாடுகள் மேன்மையடையும்.
* முகத்தில் அல்லது வாயில் ஏற்பட்ட நோய்த் தொற்றை அல்லது பழுதைக் களைய, முக மறுசீரமைப்பு அறுவைச் சிகிச்சை தேவையாக இருக்கும்.
* முக மறுசீரமைப்பு அறுவைச் சிகிச்சை செய்வதன் மூலம், பல் வரிசை நேராக ஒழுங்குபடுத்தப்படுவதுடன் முகத்தின் அழகு மேம்படும்.
என்பதையும் விளக்கி முகச் சீரமைப்பு அறுவைச் சிகிச்சையினை நோயாளிகளுக்கு எடுத்துச் சொல்லி அவர்களின் பயத்தை முற்றிலுமாகப் போக்கிட வேண்டும்.